Monday, April 27, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -8

விருந்து நிகழ்ச்சியின் போது இடையில் நண்பர் ஒருவர் ஒரு பெரியவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்தான் திரு.செல்வன் கவண்டர். டர்பன் நகரில் இயங்கும் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையின் தலைவராக இயங்கி வருபவர்.

அவரோடு உரையாடியதில் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலை பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த எம்டிடிஎஸ் மண்டபத்தின் வலது புறத்தில் உள்ளது இந்தப் பாடசாலை. கட்டிடத்தின் இரண்டு மாடிகளில் தமிழ்ப்பாடசாலையின் வகுப்புக்கள் இருக்கின்றன.



பாடசாலையைச் சென்று பார்க்கலாமா என நான் வினவிய உடன் சற்றும் தயங்காது என்னை அழைத்துக் கொண்டு சென்றார் திரு.செல்வன் கவண்டர்.  மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ஒரு திருவள்ளுவர் சிலையை வைத்திருக்கின்றனர். இந்தப் பள்ளி வகுப்பறையை திரு.நடேசன் ஒடையார் என்பவர் திறந்து வைத்தார் என்ற தகவலை முன்வாசல்பகுதியில் உள்ள அறிவிப்பில் காண முடிந்தது.





மாடியில் ஏறிச்சென்று பள்ளியின் அறைகளை எனக்கு காட்டினார். பிறகு மேல்மாடியில் இருக்கும் அலுவலக அறைக்கும் என்னை அழைத்துச் சென்று அங்குள்ள புகைப்படங்களைக் காட்டி விளக்கினார்.




1936ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையும் அதற்கு அடிப்படையாக இருக்கும் தமிழ்ச்சங்கமும். தொடர்ந்து பல தமிழார்வளர்களின் முயற்சியால் தமக்கென்று ஒரு கட்டிடம், மண்டபம் என மிகச் சிறப்பாக இன்று வளர்ந்திருக்கின்றது இந்த மியர்பேங்க் தமிழ்ச்சங்கமும் தமிழ்ப்பாடசாலையும்.




மீண்டும் விருந்து நடைபெறும் இடத்திற்கு வந்து அங்கு நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்ததில் சில மணி நேரங்கள் கழிந்தன. தமிழிசை பக்திப்பாடல்கள் முடிந்து தமிழ் சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர் இசைக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் பாடிய ஏ.ஆர். ரகுமானின் வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே என்ற பாடல் மிக இனிமையாக இருந்தது. பாடகர்கள் அனைவருமே தமிழ் பேசத்தெரியாத நிலையிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு பாடுகின்றார்கள். ஆனாலும் உச்சரிப்பில் தவறுகளை அதிகமாகக் காணமுடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இத்தகைய இசைக்கலை ஆர்வம் நிறைந்த இளைஞர்களைக் காண்பதில் மனதிற்கு உவப்பாகவே இருந்தது.

தொடரும்..

No comments:

Post a Comment