அயர்லாந்து மக்கள் தொகையில் ஏறக்குறைய 87% விழுக்காட்டு மக்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தோராக இருக்கின்றனர். எனது பயணத்தின் போது கிழக்கு, மேற்கு, தெற்கு மைய அயர்லாந்து என சென்ற இடங்கள் அனைத்திலும் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயங்கள் பல கண்களுக்குத் தென்பட்டன. ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்களின் உள்ளேயும் சென்று பார்த்து அவற்றின் வரலாற்றுப் பின்னனிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பினையும் இப்பயணத்தில் என்னால் பெற முடிந்தது. அப்படி நான் சென்று பார்த்த தேவாலயங்களில் ஏனைய ஐரோப்பிய தேவாலயங்களில் இருக்கும் குறியீடுகளிலிருந்து மாறுபட்ட வடிவங்களில் அமைந்த குறியீடுகளை அங்கே பரவலாகக் காணக்கூடியதாகவும் இருந்தது.
இதனைப் பற்றி அறிந்து கொள்ள நான் விசாரித்தபோது அயர்லாந்தின் கத்தோலிக்க சமயம் என்பது அங்கே முன்னரே வழக்கில் இருந்த செல்ட்டிக் பண்பாட்டிற்குள் உள்வாங்கப்பட்ட கத்தோலிக்க மதத்தின் ஒரு வடிவம் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இது, செல்ட்டிக் பண்பாடு, பாரம்பரியம் என்பன என்ன என்ற எனது தேடுதலை தொடக்கி வைத்தது. அதற்காக இச்சுற்றுப்பயணத்திலேயே செல்ட்டிக் பண்பாட்டையும் வரலாற்றையும் விளக்கும் இரண்டு நூல்களை பயணத்தில் இருந்த வேளையிலேயே ஒரு நூலகத்தில் வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். அதில் ஒன்றின் பெயர் The Celts. இதன் ஆசிரியர் Peter Berresford Ellis. இன்னொரு நூல் How the Irish saved Civilization. இதனை எழுதியவர் Thomas Cahill. இந்த நூல்கள் ஐரோப்பாவில் செல்ட்டிக் பாரம்பரியத்தின் வளர்ச்சி, வரலாறு, நிகழ்ந்த மாற்றங்கள், அயர்லாந்து இன்று செல்ட்டிக் மரபை பின்பற்றும், அதாவது இந்த மரபு இன்றும் வாழும் வகையில் இருக்கும் விசயங்களை விளக்குவதில் சிறந்த பங்களிப்பதாக உள்ளதை வாசிக்கையில் உணர்ந்தேன்.
அயர்லாந்தின் வரலாறு பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்த வரலாறு. அன்று கலைக்கும், பண்பாட்டிற்கும், வீரத்திற்கும், ஆளுமைக்கும் நிகழ்ந்த இந்த தொடர் மாற்றங்கள் இன்று வேற்று வகையில் நிகழ்கின்றன. இப்போது மையப் பொருளாக அயர்லாந்தை ஆக்கிரமித்திருப்பது பொருளாதார நிலைத்தன்மையும் இந்த நாடு காணும் ஏற்றத் தாழ்வும் எனச் சொல்லலாம்.
அயர்லாந்தின் அகழ்வாய்வு, தொல்லியல் ஆய்வுகள் ஆகியனவற்றின் சான்றுகள் தருகின்ற குறிப்புக்கள் கிமு.6000 ஆண்டு வாக்கில் அயர்லாந்தில் மக்கள் குடியிருந்தமைக்குச் சான்று தருகின்றன. இக்காலகட்டத்தில் வேட்டைத் தொழில் செய்வோர் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர். பின்னர் கற்காலத்தில், அதாவது கி.மு 3000 வாக்கில் அயர்லாந்து மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு என சிறுகச் சிறுக நாகரிக வளர்ச்சி பெர்றவர்களாகப் பரிமாணம் பெற்றனர். இதற்குச் சான்றுகளாக இங்கே இன்றும் காணக்கிடைக்கின்ற ஈமக்கிரியை கல்வட்டங்கள், கல்திட்டைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஏறக்குறைய கி.மு 1500 வாக்கில் அயர்லாந்து நாகரிக வளர்ச்சியைக் காணும் வகையில் கட்டுமாங்கள், நகர்ப்புற அமைப்பு, கோட்டைகள் அமைப்பு என்ற வகையில் வளர்ச்சி அடைந்தது. இதற்குச் சான்றாக Inishmore பகுதியில் இருக்கும் Dun Aengus கோட்டையின் எச்சங்களும் Grianan of Aileach பகுதியில் இருக்கும் Donnegal கோட்டைகளின் சிதைந்தை பகுதிகளையும் குறிப்பிடலாம். இதற்கு ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் அயர்லாந்துக்குச் செல்ட்டிக் பாரம்பரியத்தைப் பின்பற்றும் இனக்குழுவினரின் வருகை அமைகின்றது. இது நிகழ்ந்த காலகட்டம் ஏறக்குறைய கி.மு. 6 எனக் குறிப்பிடலாம். செல்ட் இனக்குழு மக்கள் மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். மத்திய ஐரோப்பா என நான் குறிப்பிடுவது இன்றைய ஆஸ்திரியா, ஹங்கேரி, ரோமேனியா ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பகுதிகளைக் குறிப்பிடுவது.
இப்படி வந்த செல்ட்டிக் மக்கள் நாகரிகத்தில் உயர்ந்தவர்களாகவும் அதாவது இரும்பு போன்ற உலோகங்களினால் கருவிகள் செய்யக்கூடியவர்களாக இருந்தனர். தங்கள் வாழ்விடத்தை மிகுந்த பாதுகாப்பு அறன் போன்ற கோட்டைகளைக் கட்டி, அதிலும் வட்ட வடிவிலான கோட்டைச் சுவர்களை எழுப்பி இவர்கள் வாழ்ந்து வந்தனர். செல்ட் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான உலோகக் கருவிகளும் ஏனைய சில சான்றுகளும் டப்ளின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொடரும்...
1 comment:
நல்லதோர் ஆய்வுக்கட்டுரை போல ஆழ்ந்து எழுதப்பட்ட பதிவு. நன்றி.
Post a Comment