Friday, November 6, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 5

4ம் நாள்: கஸாரஸ்







கஸாரஸ் எங்கள் தங்கும் விடுதியிலிருந்து (எஸ்டாபோனாவிலிருந்து) வடக்கு நோக்கி ஏறக்குறைய 30 நிமிட பயணத்தில் அமைந்துள்ள ஒரு சற்று மலைப்பாங்கான நகரம். இந்த நகரமும் வெள்ளை கிராமங்களுக்குப் பிரசித்தி பெற்ற ஒன்று.







இந்த வெள்ளை கிராமத்தில் வீடுகளுக்கிடையே நடப்பது மிக சுவாரசியமான ஒரு அனுபவம். வாகனத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நடக்க ஆரம்பித்தோம். வீடுகளைச் சுற்றி படிகள். படிகளில் அடுத்தடுத்து இறங்கி கீழே சென்றால் சிறிய நகரம். அங்கிருந்து மேலும் படிகளில் சுற்றி வளைந்து நடந்து மேலேறினால் ஒரு பழம் கோட்டை. இந்த கோட்டை 12ம் நூற்றாண்டில் ரோமானியர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்டது. இப்போது கோட்டையின் சிதிலமடைந்த பகுதியே பிரமாண்டமாக தூரத்திலிருந்து பார்த்தாலும் காணும் வகையில் அமைந்துள்ளது.







இந்த கோட்டையின் அருகில் ஒரு 12ம் நூற்றாண்டு தேவாலயமும் உள்ளது. இதன் பழைய மண்டபத்தை மாற்றி புதிய தேவாலயம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் தனிச் சிறப்பு என்னவென்றால் இங்கிருந்து பார்த்தால் கீழுள்ள மலைத்தொடர்கள், கிப்ரால்டா, மற்றும் ஆப்பிரக்க கண்டத்தின் உச்சி வரை ஒருவர் காணலாம். முன்னர் இது தற்காப்புக்கு மிக முக்கியமன ஒரு பகுதியாக இருந்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.




இந்த நகரில் எங்களை மிகக் கவர்ந்த மற்றொரு விஷயம் இங்கு இக்கோட்டையை ஒட்டி அமைந்திருக்கும் புதைகுழிகள். ஜெர்மனியில் இடுகாடு (cemetry) மிக அழகாக ஒரு பூந்தோட்டம் போல பராமரிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். பல முறை அங்கு நடப்பதற்காகச் சென்றிருக்கிறோம். இங்கு மிக வித்தியாமசமாக, இந்த வெள்ளை கிராமத்து வீடுகள் போலவே அடுக்கடுக்காக வெள்ளைச் சதுரங்கள்.







ஒருவரது பூதவுடலைத் தாங்கிய பெட்டியை இந்த சதுரங்களுக்குள் வைத்து மூடி வைத்து விடுகின்றனர். ஒவ்வொரு சதுர அறைக்கும் ஒரு எண்; தங்கும் விடுதி எண் போல. அதன் முகப்பில் இறந்தவரின் பெயர் திகதி, சில குறிப்புக்கள் இப்படிப் சில செய்திகள். அதோடு பூக்களினால் அலங்கரித்து இந்த இடத்தை மிக அழகாக பராமரித்தும் வருகின்றனர்.







இது அதிசயமான ஆனால் மிக அழகான ஒரு இடம். இந்த நகரத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இங்கு வந்து நேரில் காண வேண்டிய ஒன்று என்றும் சொல்லலாம்.







ஆலீவ் எண்ணெயில் சமைக்கப்பட்ட பதார்த்தம், ஆலீவ் விதைகள் சாலாட்டுடன் உணவில் சேர்த்து உண்பது என்பது இங்குள்ள சமையல் கலையாக இருக்கின்றது. இத்தாலி, கிரேக்கம் போன்று ஆலீவ் எண்ணை இங்கு சமையலில் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. ஒரு வகையில் ஆலீவ் எண்ணையில் சமைத்து பழகியவர்களுக்கு வேறு மாற்று எண்ணையை சமையலில் உபயோகிப்பதில் நிச்சயமாக விருப்பம் இருக்காது. எனக்கும் இது பொருந்தும். ஆலீவ் எண்ணெய் உணவு பதார்த்தங்களோடு கலந்து சிறந்த சுவையை வழங்கக்கூடியது. இந்த நகரில் ஆங்காங்கே சாலைகளில் வீடுகளில் ஆலீவ் மரங்கள் உள்ளன. பச்சை மற்றும் பழுத்த கரும் ஆலீவ்களை மரத்தில் பார்க்க முடிகின்றது.



Thursday, November 5, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 4

மிஹாஸ்



புவன்ஜிரோலாவிலிருந்து அடுத்து எங்கள் பயணம் மிஹாஸ் நோக்கியது. மிஹாஸ் நகரத்தை புவன்ஜிரோலாவிலிருந்து 20 நிமிடத்தில் சென்றடைந்தோம். சற்று மலைப்பாங்கான இடம். நகரின் உள்ளே நுழையும் போது வெள்ளை வர்ணத்திலான குடியிருப்புப் பகுதிகளைத் தூரத்திலிருந்தே பார்க்கமுடிந்தது.







அண்டாலூசியாவிற்கு அதிலும் மலாகாவிற்கு வரும் அனைவரும் இந்த சிறிய நகரத்தைப் பயன பட்டியலில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும். வெள்ளை நிரத்தில் வர்ணம் பூசப்பட்டு பூக்களும் செடி கொடிகளும் அலங்கரிக்க காட்சியளிக்கும் இந்த குடியிருப்புப் பகுதிகளே மிகப் பெரிய ஒரு ஈர்ப்பு. இந்த நகரில் சுற்றுலா பயணிகளைக் கவரும் பல அம்சங்கள் உள்ளன. உதாரணமாக ஆங்காங்கே காணப்படும் அழகுப் பொருட்கள் பீங்கான் (porcelain) சமையல் மற்றும் அலங்கார கைவினைப் பொருட்கள் போன்றவை இங்கு வருகையளிக்கும் சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்லும் போது எடுத்துச் செல்ல நல்ல ஞாபகச் சின்னம்.







குதிரை வண்டிகளில் மட்டுமல்ல சவாரி, கழுதை டாக்ஸிகளிலும் இங்கு உண்டு. ஒவ்வொரு கழுதைக்கும் ஒரு அட்டை தலையில் கட்டப்பட்டு அதில் அந்தக் கழுதையின் பதிவு செய்யப்பட்ட டாக்சி எண் உள்ளது. 15 நிமிட சாவரியில் மிஹாஸின் வெள்ளை கிராமத்து சாலைகளைப் பார்த்தவாரே பவனி வரலாம்.







Bullring - காளைவளையம். ஸ்பெயின் காளை பந்தயத்திற்கு புகழ்பெற்ற நகரம். அண்டலூசியாவின் கலைகளில் உலகப் பிரசித்தி பெற்றது காளை அடக்கும் விளையாட்டு. இங்கு காளையை அடக்குவது மட்டுமல்ல; மாறாக அதனை அடக்க முயல்பவர் அதனை ஈட்டியினால் தாக்கி கொல்வதே வழக்கம். இங்கு காளை அடக்கும் காட்சிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுகின்றன
.







போட்டியில் பங்கு கொள்ளும் காளைகள் அவற்றிற்கென குறிப்பிடப்பட்டுள்ள தனி அறைகளில் காத்திருக்கின்றன. போட்டிகளைக் காண ஒவ்வொரு வாரமும் மக்கள் இங்கு கூடுகின்றனர். போட்டி நடைபெறாத சம்யம் இந்த வளையத்தைச் சுற்றிப் பார்க்க 3 யூரோ வசூலிக்கப்படுகின்றது.











மலாகா வைன்(wine) உற்பத்திக்கு மிக பிரசித்தி பெற்ற நகரம். மாலையில் உணவருந்துகையில் சிவப்பு வைன் (dry / sweet) வகை வைன் உணவோடு அருந்துவது இங்குமட்டுமல்ல ஐரோப்பா முழுமைக்கும் உயரிய பண்பாடாகவும் கருதப்படுவது. பொதுவாகவே இரவு உணவின் போது வைன் இருப்பது ஐரோப்பிய கலாச்சாரம். இதில் ஸ்பெயினின் அண்டலூசியா விதிவிலக்கல்ல.







கத்தோலிக்க தேவாலயங்கள் - மிஹாஸ் சிறு நகரிலேயே மூன்று கத்தோலிக்க தேவாலயங்களைப் பார்க்க முடிந்தது. இதற்கு மேலும் கூட சில இருக்கலாம். மூன்றிலும் ஒரு ஒற்றுமையைப் பார்த்தேன். ஏசு கிறிஸ்துவின் சிலைகள் ஆங்காங்கே இருந்தாலும் மேரி அன்னையின் சிலைக்கு பிரதான இடம் கொடுக்கப்பட்டிருப்பது இங்கு ஒரு புதுமை. ஜெர்மனியில் ஏறக்குறைய எல்லா தேவாலயங்களிலும் பிரதான இடத்தில் ஏசு சிலை தான் உள்ளன. அண்டலூசியாவில் ஒரு மாற்றம். அன்னா மரியா (Anna Maria) இங்கு மூலக் கருவறையில் வீற்றிருக்கிறார். இது குறிப்பிடத்தக்க ஒரு வித்தியாசம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.



Tuesday, November 3, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 3

3ம் நாள்: புவன்ஜிரோலா, மிஹாஸ்



சரி நாவலிலிருந்து சுற்றுப் பயண விபரங்களுக்கு வருவோம். மூன்றாம் நாள் எங்கள் திட்டத்தில் புவன்ஜிரோலாவும் மிஹாசும் இருந்தன.







புவன்ஜிரோலா எஸ்டாபோனாவிலிருந்து ஏறக்குறைய 30 கிமி வடக்கே உள்ள கடற்கரை நகரம். எங்கள் தங்கும் விடுதி இருக்கும் எஸ்டாபோனாவிலிருந்து இங்கு செல்ல ஏறக்குறைய 35 நிமிடங்கள் தேவை. எஸ்டாபோனாவிலிருந்து செல்லும் போது புவன்ஜிரோலாவிலிருந்து முதலில் நம்மை வரவேற்பது சோகாயில் மாளிகை (Sohail Castle). சோகாயில் எனும் இப்பெயர் இஸ்லாமியர்கள் இந்த நகரை ஆட்சி செய்த போது இக்கோட்டைக்கு இட்ட பெயர். சோகாயில் என்பது அரபு மொழியில் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் குறிப்பது என்ற குறிப்பும் இந்த கோட்டையின் வாசலில் உள்ள விளக்கச்சுவரொட்டியில் குறிக்கப்பட்டுள்ளது.







கடற்கரையோரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மற்றும் பலர் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். ஏறக்குறைய 12ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட மாளிகை இது. ஒரு பாதுகாப்புச் சுவரும் இந்த மாளிகையைச் சுற்றி உள்ளது. இதுவும் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான். இந்தக் கோட்டையின் ஒரு கோபுரமும் சுவர்களின் பெரும் பகுதியும் பின்னர் நெப்போலியனால் தகர்ப்பட்டுள்ளன. புவன்ஜிரோலா டவுன் ஹால் சரித்திர மாணவர்கள் இந்தக் கோட்டையைத் தற்போது புணரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்தி இக்கோட்டைக்கு மக்களை அழைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் என்ற செய்தியை இங்குள்ள தகவல் மையத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. தற்போது இந்த மண்டபத்தில் பல ஒன்று கூடல் நிகழ்வுகள், இசை நடன நிகழ்ச்சிகள் அவ்வப்போது நிகழ்கின்றன.







புவன்ஜிரோலா சுற்றுலா விடுதிகள் நிறைந்த பகுதி. ஏறக்குறை 10 கிமி தூரத்திற்கு ஒன்றை அடுத்து ஒன்றாக தங்கும் விடுதிகள், சுற்றுலா பயணிகளுக்கான விற்பனைப் பொருட்கள் அடங்கிய வியாபார ஸ்தலங்கள், உணவு விடுதிகள் என கடைகள் வலது புறத்திலும், கடற்கரை மணலில் இதமான சூழலை ரசித்துக் கொண்டிருக்கும் பயணிகளையும் பார்க்க முடிகின்றது. எண்ணிலடங்கா தங்கும் விடுதிகள். ஒன்றை அடுத்து மற்றொன்று. பெரும்பாலும் அபார்ட்மண்ட் வகையிலான தங்கும் விடுதிகள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன.







அடுத்து புவன்ஜிரோலா நகரின் மையப் பகுதி. சாலையின் இரு மருங்கிலும் பற்பல கடைகள். உள்ளூர் மக்களுக்குத் தேவையான பொருட்களும் சுற்றுறுலா பயணிகளைக் கவரும் கடைகளும் பல இங்குள்ளன. அழகான ஆனால் குறுகிய சாலைகள். சாலையின் இரு பகுதியிலும் குட்டையான மரங்களும் ஆங்காங்கே மக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க நாற்காலிகளும் பல சாலையின் இரு பக்கத்திலும் வைக்கப்பட்டு மிக ரம்மியமான காட்சி அளிக்கும் நகர்ப்பகுதி இது.







பழைய சுவடுகளைப் பிரதிபலிக்கும் கோட்டை மதில்கள் இருந்தாலும் பெரும்பாலும் இந்த நகரைச் சுற்றியிருக்கும் அடுக்குமாடி கட்டிடங்கள் சுற்றுப் பயணிகளைக் குறிவைத்து இயங்கும் வர்த்தக நிலையங்கள் இந்த நகரை ஒரு சுற்றுப் பயணிகளுக்கானப் பிரத்தியேக நகரம் என்பதையே காட்டி நிற்கின்றன.






Monday, November 2, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 2





விடுமுறையில் புத்தகங்கள் வாசிப்பதும் எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. இம்முறையை விடுமுறையில் வாசிக்க இரண்டு புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தேன். ஒன்று Sam Bourne எழுதிய The final reckoning மற்றொன்று Dan Brownனின் புதிய நாவல் The lost Symbol. The final reckoning விமானத்திலேயே படிக்கத் தொடங்கி விட்டேன். ஆரம்பமே மிக சுவாரசியமானது. நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு வரும் ஒரு வயதான மனிதர் பாதுகாப்புப் படைகளால் தீவிரவாதி என தவறாக நம்பப்பட்டு கொல்லப்படுகின்றார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் விஷயங்களை மிகச் சுவையாக விவரித்துச் செல்லும் நாவல் இது. இது உண்மை சம்பவங்களை அடிப்படையில் கொண்டு பின்னப்பட்ட நாவல். 2ம் உலகப் போருக்கு முன்னர் 1939, 1940களின் ஆரம்பத்தில் லித்துவானியா, போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் யூத மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஆயிரக் கணக்கான யூதமக்கள் பல்வேறு தருணங்களில் ஆயிரம் ஆயிரமாக கொல்லப்பட வரலாற்று செய்தியைப் படிப்படியாக பல குடியிருப்புக்களில் (ghettoes
) வைக்கப்பட்டிருந்த யூத மக்களைக் குழுக்களாகக் கொன்று குவித்த விதத்தை இந்த நூல் விவரிக்கின்றது. அக்கால கட்டத்தில் அக்குழுக்களில் இந்தக் கொடுமைகளை அனுபவித்த சில இலைஞர்கள் Dam Israel Nokeam (DIN) என்ற ஒரு இரகசிய அமைப்பை உருவாக்கி அதன் வழி செய்திகள் பரிமாற்றம் செய்தது, மற்றும் 2ம் உலகப்போருக்குப் பின்னர் இக்குழுவினர் நாஸி பழைய உயர் அதிகாரிகளில் சிலரை மிகத் தந்திரமாகக் கொன்றது என பல உண்மைத் தகவல்களைச் சில பெயர் மாற்றங்களோடு இந்த நூல் மிக மிக சிறப்பாக விளக்கிச் செல்கின்றது.



இந்த நாவலில் வரும் DIN இயக்கத் தலைவர் உண்மையான யூத குழுவினர் தலைவரான Abba Kovne ஐ மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. யூத மக்களின் மனித உரிமைப் போராட்டம், நாடிழந்து மக்கள் பட்ட கஷ்டங்கள், பின்னர் படிப்படியாக இஸ்ரேல் தனி யூத நாட்டை உருவாக்க நடந்த சில முக்கியச் செய்திகளை மிகக் கொஞ்சம் கதைகளோடும் பல் உண்மைச் சம்பவங்களோடும் சேர்த்து ஆசிரியர் எழுதியிருக்கின்றார். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான கெர்ஷோன் மாட்ஸ்கின் என்பது புனைப்பெயர் என்றாலும் இவரும் ஒரு உண்மையான ஒரு முக்கிய நபரின் சித்தரிப்பு. 2ம் உலகப் போருக்குப் பின்னர் DIN அமைப்பு ஜெர்மானிய நாஸி அதிகாரிகளில் தண்டனைகளிலிருந்து தப்பிய பலரை ஒழிக்க முயன்ற தந்திர முயற்சிகளில் திட்டமிடப்பட்ட 'plan A', 'plan B' எனக் குறிப்பிடப்படும் இரண்டும் மிக விரிவாக இந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன. இதில்
plan B என்பது விஷத்தை உணவில் கலந்து சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ஜெர்மன் நாஸி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதும் அதனால் 2300 ஜெர்மானிய நாஸிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதும் பதிவில் உள்ள உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதில் எத்தனை ஜெர்மானிய நாஸிகள் இறந்தனர் என்ற தகவலை அரசாங்கம் சரியாக வெளியிட வில்லை என்ற போதிலும் DIN செயல்படுத்திய இந்தத் தாக்குதல் ஓரளவுக்கு பாதிப்பை அப்போது ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனாலும் 2ம் உலகப் போருக்குப் பின்னர் முழு கவனமும் தனி இஸ்ரேல் நாடு எனும் ஒருமித்த கருத்தை அடைப்படையாக கொண்டு இயங்கியதால் DIN தனது செயல்பாடுகளைப் படிப்படியாக முடக்கிக் கொண்டது. ஆனாலும் DIN வழி ஏறக்குறைய 50 இளைஞர்களும் இளைஞிகளும் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து இவ்வகைப் பழிதீர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்னும் சரித்திர உண்மையை இந்நாவலைப் படிப்பவர்களுக்ப் புரிய வைத்திருக்கின்றார் நாவலாசிரியர். இவரது முந்தைய வெளியீடான The Last Testament கூட மிக அருமையான ஒரு நாவல்.



ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு சில ஆண்டுகள் சமாதான அமைப்புப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்ற இந்நாவலாசிரியர் தான் சந்தித்த, கேட்ட பார்த்த அனுபவித்த உண்மை சம்பவங்களை நாவலில் திறம்பட சேர்த்து விவரித்து படிப்பவர்களுக்கு நல்ல தகவல் விருந்து அளிக்கக்கூடியவர் என்பது இவரது இரண்டு நாவல்களை வாசித்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

Sunday, November 1, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 1

ஸ்பெயின் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று; வரலாற்று நோக்கில் மிகப்பல சரித்திர நிகழ்வுகளைக் கண்ட நாடு. அதில் அண்டலூசிய எனும் பகுதி ஏறக்குறைய 17% ஸ்பெயினின் நிலப்பகுதியைக் குறிப்பது (தீவுகளைச் சேர்க்காமல்) அதில் மலாகா ஒரு துறைமுகப்பட்டிணம்.







எங்கள் பயணம் ஸ்டுட்கார்ட்டிலிருந்து மலாகா நோக்கி நேராக தெற்கு நோக்கிச் செல்லாமல் முதலில் ஹம்பெர்க் (ஜெர்மனி) சென்று பின்னர் அங்கிருந்து மலாகா (ஸ்பெயின்) செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டுட்கார்ட்டிலிருந்து ஹம்பெர்க்கிற்கு ஏறக்குறை 800 கிமீ தூரம். அதிலும் வடக்கு நோக்கிய பயணம். பயன நிறுவனத்தின் ஏற்பாடு இது. ஹம்பெர்கிலிருந்து பின்னர் மலாகாவிற்கு பயணம். ஒரு சில பயணிகளை மற்றும் ஏற்றிச் செல்வதற்கு பதிலாக அருகிலுள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து மலாகா பயணிக்கும் பலர் ஹம்பெர்க்கிலிருந்து புறப்படும் வகையில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை விமானத்தில் பயணித்த பல மொழி பேசும் பயணிகளைப் பார்த்த போது புரிந்தது. இதுவும் ஒரு வியாபார உத்தி தானே.







ஏறக்குறைய 3 மணி நேர பயணம். மதியம் 2 மணிக்கு விமான நிலயத்தை அடைந்து பின்னர் அங்கேயே முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்த வாடகைக் காரை எடுத்துக் கொண்டு நான் என் தங்கும் விடுதி நோக்கி புறப்பட்டேன். இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அண்டலூசியா விஸ்தாரமான மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்த பகுதி. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிக்க பேருந்து ரயில் இவற்றிற்கு பதிலாக விட ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்வது சிறப்பு. எங்கள் தங்கும் விடுதி இருக்கும் இடம் எஸ்டாபோனா. இது மலாகாவிலிருந்து ஏறக்குறைய 80 கிமீ தூரம் உள்ள நகரம். இடையிலேயே புவன்ஜிரொலா, மார்பெயா போன்ற சற்றே பெரிய நகரங்களைக் கடந்து கடற்கரையோர நெடுஞ்சாலையில் மத்திய தரைக்கடலை ரசித்த வாரே பயணித்த போது காலையிலிருந்து பயணித்த அலுப்பு மறைந்து விட்டது.







எஸ்டபோன ஒரு சிறிய நகரம்; குறிப்பாக நான் தங்கியிருந்த தங்கும் விடுதி கடற்கரையை ஒட்டிய வண்ணம் அமைந்த ஒரு இடம். காலைத் தழுவ வரும் அலைகளில் நடப்பது, அதிகாலை கடற்கரையில் ஜோகிங் ஓட்டம்,, மாலை நெடுந்தூரம் அலைகளில் நடந்து செல்வது என்று பொதுவாகவே எங்கள் 14 நாள் விடுமுறையின் ஒவ்வொரு நாளின் சில மணி நேரங்கள் கடற்கரை அலைகளோடு கழிந்தன.

Thursday, November 1, 2007

பீஸாவும் பீட்ஸாவும் பார்போமா - இத்தாலி பயணக் குறிப்பு -6

சனிக்கிழமை காலை உணவை முடித்தபின்னர் Pisana Palace லிருந்து check-out செய்துவிட்டு ரோம் நகரத்திற்கு புறப்பட்டு விட்டேன். எனது குறிப்பில் முதலில் இருந்தது Vatican City.



1377- லிருந்து Vatican போப்களின் மடங்களாக இருந்து வருகின்றது. வாட்டிக்கனில் முக்கியமாகப் பார்க்க வேண்டியவை St.Peter's Basilica, Vatican Museums, மற்றும் Sistine Chapel ஆகியவையே. பெப்ரவரி 11, 1929- லிருந்து வேட்டிக்கன் ஒரு தனி மாகாணமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது. ரோமானிய சாம்ராஜ்ஜியம் இருந்த காலத்தில் St.Peter Apostle கொல்லப்பட்டார். இவரது உடல் இந்த இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்குப் பின்னர் Constantine இந்த St.Basilica எனப்படும் உலக பிரமாண்டத்தை அந்த இடத்தில் கட்டினார்.



இப்போது இருக்கும் இந்த Basilica - வை Julius II 1503 - லிருந்து காடினார். இது முழுமையடைய 176 ஆண்டுகள் பிடித்தன. வாட்டிக்கனின் ஒவ்வொரு பகுதியும் இந்த காலகட்டத்தில் முடிவடைந்தன. அதன் பின்னர் தான் Michelangelo தனது 70-வயதில் உலகின் மிகப்பெரிய dome என்று கருதப்படும் இந்த தேவாலயத்தில் dome - ஐ திட்டமிட்டு வடிவமைக்க ஆரம்பித்தார். அவர் இறந்த பின்னரும் அவரது திட்டத்தின் படியே இது முழுமைபடுத்தப்பட்டது.



வாட்டிக்கனை முழுமையாக சுற்றிப்பார்க்க 2 நாட்கள் தேவை. உலகின் பல மூலைகளிலிருந்து இங்கு சுற்றுலா பயணிகள் நிரம்பியிருந்தனர். [ உலகின் எந்த சுற்றுலா மையங்களுக்குச் சென்றாலும் ஜப்பானிய சுற்றுலா பயணிகளைப் பார்க்காமல் இருக்க முடியாது. இவர்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கின்றதோ தெரியவில்லை..??..:-)] St.Peter's Basilica தேவாலயத்தில் உட்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு சிலைகளும் கண்களுக்கு விருந்து. மணிக்கணக்கில் அதன் கலை நயத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

அன்றைக்கு மறுநாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக ஆப்பிரிக்க நடனக் குழு ஒன்று அங்கு வந்திருந்தனர். மறுநாள் நடைபெறவிருக்கும் நிகழ்வுக்காக இவர்களின் ஒத்திகை ஒன்றும் வாசலிலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்து விட்டு கோட்டையின் ஒரு மூலையில் வந்து அமர்ந்தேன். எனது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவரை நோக்கி இரண்டு இத்தாலிய காவலர்கள் நெறுங்கிக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்தவுடன் தனது பையைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நழுவ ஆரம்பித்தான் இந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன். அவனைத் தடுத்து நிறுத்தி இத்த்தாலியில் காவலர்கள் விசாரிக்க அது புரியாததால் ஆங்கிலத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர். குரேஷியாவிலிருந்து போதிய பயணச்சீட்டுகளோ விசாவோ இல்லாமல் அகதியாக வந்திருக்கின்றான் இந்த இளைஞன். அவனிடம் தேவையான விஷயங்களை விசாரித்து அவனை தங்களோடே கூட்டிசென்று விட்டனர். சற்று நேரத்தில் எனக்குப் பக்கத்தில் வேறொரு இத்தாலிய வயோதிகர் வந்து அமர்ந்தார். இத்தாலியில் என்னிடம் வேட்டிக்கனின் அழகை விமர்சிக்க ஆரம்பித்தார். எனக்குப் புரியவில்லை என்று ஆங்கிலத்தில் சொன்னவுடன், சைகையிலேயே என்னிடம் மிக சுவாரசியமாக விளக்க ஆரம்பித்தார். [ சைகை மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்காமல் போய்விட்டோமே என்று மனதுக்குள் என்னையே திட்டிக் கொண்டேன்..:-) ] அவரிடம் சற்று உரையாடிவிட்டு, அதாவது சைகையிலேயே பேசிவிட்டு ரோம் நகரின் மற்றொரு அதிசயமான கொலோசியத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

Thursday, October 11, 2007

இத்தாலி - Sardinia - Sept 02-09, 2007



விடுமுறைக்காக நான் எங்காவது செல்லும் போது அதிலும் குறிப்பாக புதிய நாடு அல்லது புதிய இடங்களுக்குச் செல்லும் போது மறக்காமல் குறிப்புக்களைச் சேகரிப்பது வழக்கம். புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் சேகரித்தலும் இதில் அடங்கும். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக் குறிப்புக்களை நோக்கும் போது விடுமுறையின் இனிய நினைவுகள் மனதில் நிழலாடுவது ஒரு தனி சுகம்.


அந்த வகையில் கடந்த வாரம் 7 நாட்கள் கிடைத்த விடுமுறையில் இத்தாலியின் தீவுகளில் ஒன்றான சார்டீனியாவிற்கு சென்றிருந்தேன். இந்த அழகிய தீவின் சில புகைப்படங்களும் தகவல்களும் இதோ.



முதலில் இந்த தீவைப்பற்றிய சிறு குறிப்பு:
தீவின் பெயர் - சார்டீனியா
மக்கள் தொகை - 1,700,000
பயன்பாட்டு மொழி - இத்தாலி, சார்டீனியா



இது இணையத்தில் சுட்ட படம்..:-)

இயற்கையின் அழகு.

தூய்மையான கடற்கறைகள் தான் இந்த தீவிற்கு அதிகமான ஐரோப்பிய சுற்றுப் பயணிகளை கவர்கின்றன.

கால்கியரி (காலியரி என்று சொல்ல வேண்டும்) - இந்த தீவின் தலைநகரின் மையப் பகுதி.



நகரின் மத்தியில் அமைந்திருக்கும் வர்த்தக நிலையங்கள்.




எலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூனை. அதிசயம் தானே!



எலியோடு சேர்ந்து பூனையும் உணவு உண்ணும் காட்சி. (இது பயிற்சி அளிக்கப்பட்ட பூணை தான்.)

பெக்கரீனோ மற்றும் பியோரே சார்டோ சீஸ் வகைகள் இந்த தீவின் சிறப்பு.




ஆலீவ் மரங்களில் ஆலீவ் காய்கள். இந்த தீவு முழுவதும் எல்லா இடங்களிலும் ஆலீவ் மரங்கள் செழித்து வளர்வதை காணலாம்.




ஆலீவ், ஆலீவ் எண்ணெய் மற்றும் உள்நாட்டு வைன். சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வதற்காக.





இந்த தீவின் பழங்குடியினர் நூராகியர்கள். கி.மு.1800லிருந்து கி.மு 500 இந்த மக்களின் நாகரிகம் இந்த தீவில் செழிப்பாக இருந்துள்ளது. அதன் சில சுவடுகள் இப்போதும் இந்த தீவின் பல இடங்களில் அகழ்வாராய்ச்சியின் வழி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படம் ' சு நுராசியி' கிராமத்தைக் காட்டுவது. இங்கே ஒரு அகழ்வாராய்ச்சி நிலையமும் அங்கு கண்டு பிடிக்கப்பட்ட பல தடயங்களும் தொல் பொருள் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.



அகழ்வாராய்ச்சி நிலைய அதிகாரி விளக்கம் தருகின்றார். பின் புறத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோட்டையின் சில பகுதிகள். இந்த அதிகாரி நான் அடிப்படையில் மலேசிய நாட்டைச் சேந்த்தவர் என்று தெரிந்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டார். குறிப்பாக இந்த அகழ்வாராய்ச்சி நிலையத்திற்கு வருகை புரியும் முதல் மலேசியர் நான் என்று கூறி மகிழ்ந்தார். எனக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.



மேலேயுள்ள இந்த வகை சிறிய குட்டி வாகனங்கள் இங்கு பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இவை 3 சக்கரங்களைக் கொண்டவை. பொதுவாக பச்சை மற்றும் நீல நிறத்திலும் ஒரு சில இப்படி பல வர்ணங்களிலும் உள்ளன.



இந்த தீவில் முக்கிய உணவு பீஸாவும் கடல் உணவுகளும் தான். எல்லா சிறிய பெரிய நகரங்களிலும் pizzaria உணவு அங்காடிகள். தொடர்ந்து சில நாட்கள் பீஸா சாப்பிட்டதில் அடுத்த ஒரு மாதத்திற்கு பீஸாவைப் பற்றி நினைக்கக் கூடாது என்றே முடிவெடுத்துவிட்டேன்.




தலைநகரின் ஒரு முக்கிய சாலையில் உள்ள உடைந்த சாலை விளக்கு. ம்ம்ம்.. இங்கேயும் இப்படிச் சில அசம்பாவிதங்கள் !




இங்கு கத்தரிக்காய்கள் நிறையவே கிடைக்கின்றன. அதிலும் பெரிய மாங்காய் அளவில் சில கத்தரிக்காய்கள்.




இந்த தீவின் சீதோஷ்ணத்திற்கு காக்டஸ் செடிகள் நன்றாக வளர்கின்றன. காக்டஸ் மரத்தில் இவ்வளவு அதிகமாக காய்கள் காய்ப்பதை நான் இதுவரை பார்த்ததில்லை. கனேரியத் தீவுகளில் பல வகையான காக்டஸ் பூக்களைப் பார்க்கலாம். ஆனால் இங்கு இந்த காய்கள் ஆச்சரியமாக மிக அதிகமாக வளர்கின்றன. இந்த காகய்களை இந்த தீவு மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த காய்களை பறிப்பதற்காக நீண்ட ஒரு கருவி இருக்கின்றது. இதனைக் கொண்டு இந்த செடியை தீண்டாமலேயே அவர்கள் பரித்துப் பழங்களை வெட்டி அதன் உள்ளிருக்கும் பகுதியை சாப்பிடுகின்றார்கள்.



இவை மிருகக்கட்சிசாலையில் உள்ள பிளாமிங்கோக்கள் அல்ல. சாலை ஓரங்களில், ஏரிக்களில் ஒற்றைக் காலில் நிற்கும் சுதந்திரப் பறவைகள்.



படங்கள்:சுபா