Friday, August 24, 2018

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -7










ஓஸ்லோவில் தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. இங்குள்ள 5 தமிழ்ப்பள்ளிக்கூடங்களில் ஒரு பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு இன்று அமைந்தது. ஏறக்குறைய 650 மாணவர்கள் இப்பள்ளியில் தமிழ், நடனம் வாத்திய இசைக்கருவிகள் இசை எனக் கற்கின்றனர்.
அன்னை பூபதி பெயரில் இந்த அமைப்பு நடைபெறுகின்றது. இன்று வகுப்பு நடக்கும் வேளையில் சென்று கண்டேன். ஓரிரு ஆசிரியர்களுடன் சற்று உரையாடினேன். பள்ளி பொறுப்பாளர்களுடன் தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் தொடர்பான சிறிய கலந்துரையாடலாகவும் அமைந்தது.
சொந்தக் கட்டிடத்தில் தமிழ்ப்பள்ளி நடக்கின்றது. புலம்பெயர்ந்தாலும் தமிழ் மொழியை மறக்காத இவர்களது செயல்பாடுகளைப் பாராட்டுகின்றேன்.
-சுபா

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -6








ஓஸ்லோ ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு தோழி சுஜா அழைத்துச் சென்றிருந்தார். இன்று வரலட்சுமி பூஜை நடந்து கொண்டிருந்தது. இப்போது இருக்கும் கோயிலுக்கு மாற்றாக பெரியு புதிய கோயில் கட்டிடம் தயாராகி வருகிறது. அதன் புகைப்படங்களையும் இங்கு காணலாம்.
ஓஸ்லோ நகரில் 2 கோயில்கள் இருப்பதாக அறிந்தேன். ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் தவிர அம்மன் ஆலயம் ஒன்றும் உள்ளது.

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -5



நோபல் பரிசு வளாகத்தில்..
2014ம் ஆண்டிற்கான அமைதிக்கான பரிசுபெற்ற இருவரில் ஒருவரான மலாலா யூசோபியின் புகைப்படம் இந்த அரங்கின் வாசல் பகுதியைச் சிறப்பிக்கிறது.
*The Nobel Peace Prize 2014
Kailash Satyarthi and Malala Yousafzai “for their struggle against the suppression of children and young people and for the right of all children to education

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -4













Nobel Peace Center - ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தான் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ம் தேதி உலக அமைதிக்காகச் செயலாற்றியோரில் சிறந்த சேவையாளருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. ஓஸ்லோ நகராண்மைக் கழக மண்டபத்தில் அந்தப் பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெறுகிறது.
இந்தக் கட்டிடம் 2005 பழைய ரயில் நிலையத்தை மாற்றி அமைதிக்கான நோபல் பரிசினைச் சிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட நினைவு மண்டபமும் அருங்காட்சியகமுமாகும். 1901ம் ஆண்டு தொடங்கி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒவ்வொருவரைப் பற்றிய தகவல்களும் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டமைக்கான காரணங்களும் இங்கு வழங்கப்பட்டுள்ளன.
நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் போபெல் அவர்களின் பெயரால் வழங்கப்படும் உலகின் தலைச்சிறந்த ஆய்வாளர்களுக்கும் சாதனை படைத்தோருக்கும் வழங்கப்படும் ஒரு உயரிய விருது. சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் பிறந்தவர் இவர். தனது மறைவுக்குப் பின்னர் அவரது உழைப்பில் சேகரித்த சொத்துக்கள் அனைத்தும் ஒரு அறக்கட்டளைக்கு வழங்கி அதன் வழியாக திறன்படைத்த ஆய்வாளர்களைக் கவுரவிப்பதற்காகவும் சிறப்பிப்பதற்காகவும் 1901ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப் படுகின்றது.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஓஸ்லோ நகரில் வழங்கப்படுகின்றது. அறிவியல், உளவியல், இலக்கியம், மருத்துவம் ஆகிய ஏனைய ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டின் தலைனகரான ஸ்டோக்ஹோம் நகரில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-சுபா

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -3


ஓஸ்லோ.. சில காட்சிகள்
நாடாளுமன்றக் கட்டிடம்
நகராண்மைக் கழக கட்டிடம்
சாலைக்காட்சிகள்..














ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -2

ஓஸ்லோ வந்தடைந்து விட்டேன். OSL கார்டெமோன் ஓஸ்லோ விமான நிலையத்தின் காட்சி.
ஓஸ்லோ - நோர்வே நாட்டின் தலைநகர்.
ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட நகர் இது. கி.பி 1040ம் ஆண்டு மன்னன் ஹரால்ட் ஹர்டாடாவினால் உருவாக்கப்பட்ட நகர் இது. நோர்வே நாட்டின் அரசு தொடர்பான முக்கிய அலுவல்களுக்கும் பொருளாதார தொடர்புகளுக்கும் முக்கியம் வாய்ந்த ஒரு நகர் ஓஸ்லோ. உலக நாடுகளில், மக்கள் வாழ்வதற்கு சிறந்த ஒரு நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நகரம் என்ற பெருமையும் ஓஸ்லோவிற்கு உண்டு.
ஓஸ்லோ நகரில் மட்டும் 106 அருங்காட்சியகங்கள் உள்ளன. எதற்குச் செல்வது எதனை விடுவது என்பது குழப்பமான காரியம் தான். பட்டியல் தயாரித்து வைத்திருக்கின்றேன். தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
-சுபா










ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -1



பாய்ந்துவரும் சிங்கம் போன்ற தோற்றத்துடன் உலக வரைப்படத்தில் இடம்பெறும் நாடு நோர்வே. அடுத்த மூன்று நாட்களுக்கு நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் ஒரு வரலாற்றுத் தேடுதல் பயணம்.
ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு நோர்வே.
நோர்வேஜியன் கடல் ஒரு புறமும் சுவீடன், பின்லாந்து, ரஷியா ஆகிய நாடுகளை நில எல்லைகளாகவும், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நடுகளைக் கடல் எல்லையாகவும் கொண்டது நோர்வே.
நோர்வே நாட்டைப் பற்றி குறிப்பாகச் சில செய்திகள்.
நோர்வே நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக நோவேகியன் மொழியும் சாமி (வடக்குப்பகுதியில்) மொழியும் உள்ளன. இவை தவிர குவேன், ரொமானி, ரோமானுஸ் ஆகிய மொழிகளும் இங்கு சிறுபாண்மையினத்தோரின் அதிகாரப்பூர்வ மொழியாகளாக உள்ளன. நோர்வேயின் அதிகாரப்பூர்வ மதம் சீர்திருத்த கிருத்தவ மதம் (லூத்தரன் ப்ரொட்டஸ்டன்). மக்களாட்சியுடன் கூடிய பாராளுமன்றம் உள்ளது. அதிகாரப்பூர்வ மன்னராக இன்று 5ம் ஹரால்ட் இருக்கின்றார். 2ம் உலகபோர் காலத்தில் ஜெர்மானிய ஆட்சிக்குட்பட்டு பின் 1945ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி முதல் சுதந்திர நாடாக Kingdom of Norway என அழைக்கப்படுகின்றது.
நோர்வே நாட்டில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
ஓஸ்லோ உலகின் விலையுயர்ந்த நகரங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. உணவு, உடைகள், பொருட்கள் என எல்லாமே இங்கு விலை அதிகம்.
வைக்கிங் என்ற சொல்லும் கடற்கொள்ளையர்கள் பற்றி பேசினாலும் உடனே நோர்வே நாட்டு மனிதர்கள் - இரண்டு கொம்புகளுடன் கூடிய இரும்புத் தலைக்கவசம் அணிந்த மனிதர்கள் தான் நம் மனக்கண் முன் வருவார்கள். இங்கு தான் அடுத்த சில நாட்கள் இருக்கப்போகின்றேன். இணைய வசதி கிடைக்கும் போதெல்லாம் முடிந்த அளவு தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன்.
-சுபா