Friday, August 24, 2018

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -1



பாய்ந்துவரும் சிங்கம் போன்ற தோற்றத்துடன் உலக வரைப்படத்தில் இடம்பெறும் நாடு நோர்வே. அடுத்த மூன்று நாட்களுக்கு நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் ஒரு வரலாற்றுத் தேடுதல் பயணம்.
ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு நோர்வே.
நோர்வேஜியன் கடல் ஒரு புறமும் சுவீடன், பின்லாந்து, ரஷியா ஆகிய நாடுகளை நில எல்லைகளாகவும், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நடுகளைக் கடல் எல்லையாகவும் கொண்டது நோர்வே.
நோர்வே நாட்டைப் பற்றி குறிப்பாகச் சில செய்திகள்.
நோர்வே நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக நோவேகியன் மொழியும் சாமி (வடக்குப்பகுதியில்) மொழியும் உள்ளன. இவை தவிர குவேன், ரொமானி, ரோமானுஸ் ஆகிய மொழிகளும் இங்கு சிறுபாண்மையினத்தோரின் அதிகாரப்பூர்வ மொழியாகளாக உள்ளன. நோர்வேயின் அதிகாரப்பூர்வ மதம் சீர்திருத்த கிருத்தவ மதம் (லூத்தரன் ப்ரொட்டஸ்டன்). மக்களாட்சியுடன் கூடிய பாராளுமன்றம் உள்ளது. அதிகாரப்பூர்வ மன்னராக இன்று 5ம் ஹரால்ட் இருக்கின்றார். 2ம் உலகபோர் காலத்தில் ஜெர்மானிய ஆட்சிக்குட்பட்டு பின் 1945ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி முதல் சுதந்திர நாடாக Kingdom of Norway என அழைக்கப்படுகின்றது.
நோர்வே நாட்டில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
ஓஸ்லோ உலகின் விலையுயர்ந்த நகரங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. உணவு, உடைகள், பொருட்கள் என எல்லாமே இங்கு விலை அதிகம்.
வைக்கிங் என்ற சொல்லும் கடற்கொள்ளையர்கள் பற்றி பேசினாலும் உடனே நோர்வே நாட்டு மனிதர்கள் - இரண்டு கொம்புகளுடன் கூடிய இரும்புத் தலைக்கவசம் அணிந்த மனிதர்கள் தான் நம் மனக்கண் முன் வருவார்கள். இங்கு தான் அடுத்த சில நாட்கள் இருக்கப்போகின்றேன். இணைய வசதி கிடைக்கும் போதெல்லாம் முடிந்த அளவு தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன்.
-சுபா

No comments:

Post a Comment