Friday, June 28, 2019

வாஷிங்டன் - விர்ஜீனியா: - Space Shuttle Discovery

Space Shuttle Discovery
39 முறை பூமிப்பந்தை சுற்றி வந்த நாசா உருவாக்கிய டிஸ்கவரி .1984-2011, வரை 30 ஆண்டுகள் வின்கல சேவையில் இந்த விண்கலம் இருந்தது. எடை 73176kg.


வாஷிங்டன் - விர்ஜீனியா: - வானியல் அருங்காட்சியகம்

வின் மற்றும் வானியல் அருங்காட்சியகம், விர்ஜீனியா மாநிலம்.
Black Bird -அமெரிக்க வான்படையின் SR71A.
உலகின் மிக அதிவேக ஜெட் வகை போர் விமானம். 
எடை 21,216 கிலோ
வேகம் 3620km/h
1999 ஆம் ஆண்டு இதன் சேவை நிறைவுற்றது.




















வாஷிங்டன் - விர்ஜீனியா: - முயல்

வாஷிங்டன் டிசியில் நண்பர் ஸ்ரீதரன் வீட்டுத் தோட்டத்தில் வந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு முயல்.





Thursday, June 27, 2019

வாஷிங்டன் - விர்ஜீனியா: - IDA airport.

..at Washington DC IDA airport..
டல்லஸ் விமான நிலையத்தில்.. 7:49 மணி நேர பயணம் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இருந்து.







சிக்காகோ நோக்கி - இப்போது..

Subashini Thf updated her cover photo.
சிக்காகோ நோக்கி - இப்போது.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆண்டு விழா, 10ம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்காக இன்று வட அமெரிக்கா செல்கின்றேன்.
வருகின்ற ஜூலை 4ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்பும் இடம் பெறுவதில் மகிழ்கின்றேன்.
10ம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஐரோப்பிய ஆவணப்பாதுகாப்பகங்களில் உள்ள அரிய ஓலை மற்றும் காகித ஆவணங்கள் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரையை 7ம் தேதி மதியம் சமர்ப்பிக்கின்றேன்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆண்டு விழா நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையும் ட்ரடிஷனல் இந்தியா அமைப்பும் இணைந்து கைத்தறி விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2ம் முறையாக நடத்துகின்றோம்.
இணையமர்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இவ்வாண்டு செயல்பாடுகள் திட்டங்கள் பற்றி விவரிக்கின்றேன்.
அத்துடன் கீழடி தொடர்பான தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கியுள்ள காணொளி வெளியீடு காண்கின்றது.
4 நாட்கள் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முழுமையாக நான்கு நாட்களும் மாநாட்டு வளாகத்தில் நான் இருப்பேன். நண்பர்களைச் சந்தித்து உரையாட வாய்ப்பமைந்தால் மகிழ்வேன்.
-சுபா



Monday, April 22, 2019

ரொமேனியா பயணம் - 23- சிந்தனைகள்

நான்கு நாட்கள் ருமேனியாவின் தலைநகர் Bucharest மற்றும் துறைமுகப்பட்டினம் Constanta என இந்த ஈஸ்டர் விடுமுறை நல்ல வகையில் கழிந்தது.
புக்கரெஸ்ட் நகரில் இருந்த நான்கு நாட்களும் இந்த இன மக்களின் இன்றைய நிலையை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது. கம்யூனிஸ ஆட்சிக்குப் பின்னர் பல மாறுதல்களைச் செய்ய வேண்டும் என முயற்சித்தாலும் பொருளாதார மேம்பாடுகளைச் சரியாக முன்னெடுக்காத நாடு என்றே எண்ணத் தோன்றுகிறது.
நாட்டின் மொத்த மக்கள் தொகை 20 லட்சம். ரொமேனியர்களில் பலர் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் புலம் பெயர்ந்து விட்டார்கள். அங்கேயே வேலை செய்து கொண்டு தங்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உள்ளூரில் வேலை இல்லா திண்டாட்டமும் உயர்வாகவே இருக்கின்றது.
தொழில் வாய்ப்பும் குறைவு.. தொழில்நுட்ப வளர்ச்சியும் குறைவு...இந்த சூழலில் ருமேனிய மக்களின் பொருளாதார மேம்பாடு என்பது பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. வணிகம் சிறப்பாக இல்லாததால் அயல் நாட்டு மக்களையும் காண முடியவில்லை. குறிப்பாக ஏறக்குறைய எல்லா தலைநகரங்களிலும் இருக்கும் சீனர்கள், சீனர்களின் கடைகள் இங்கு ஒன்றை கூட நான் பார்க்கவில்லை.
அடிப்படையில் மக்கள் மிக அன்பாக பழகுகிறார்கள். தெரியாத விஷயங்களை கேட்டால் உடன் வந்து தயங்காமல் உதவுகின்றார்கள். ஆசிய மக்களைப் போன்று நண்பர்களுடன் கூடி மகிழ்ந்து உறவாடும் மக்களாக இவர்கள் இருக்கின்றார்கள். இது மேற்கு ஐரோப்பிய கலாச்சாரத்தில் இருந்து சற்று மாறுபட்டதாகவே இருக்கின்றது.
மிகத் தீவிரமாக அமெரிக்க மோகம் வளர்ந்து வருவது இங்கு தெரிகின்றது. இது ரொமேனியா மக்களின் பண்டைய கலாச்சார பண்புகளை மறக்கச் செய்துவிடும் என்று அபாயமும் தெரிகின்றது.
இங்கு உள்ள அருங்காட்சியகங்கள் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறவேண்டும். இங்குள்ள அரும்பொருட்கள் ஐரோப்பிய வரலாற்று மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் புராதன சின்னங்களாக இருக்கின்றன.
புக்கரெஸ்ட் விமான நிலையம் சிறியது. ஆகையினால் பயணிகள் அலைமோதிக் கொண்டு இருப்பதைக் காண முடிகின்றது. இந்த நாட்டில் பெருமளவில் பொருளாதார மேம்பாடு நிச்சயமாக தேவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெற்றிருப்பதால் இதற்கான சாத்தியக்கூறுகள் படிப்படியாக நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அழகிய இயற்கை சூழல், எனக்கு பிடித்த வகையில் பல அருங்காட்சியகங்கள், குறைந்த விலையில் பொதுப் போக்குவரத்து என்பது கவர்ச்சிகரமான அம்சங்கள்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும் கூட அத்தகைய சூழலிலும் தங்கள் தாய்மொழி மேல் மிகுந்த ஈடுபாட்டுடனும் பற்றுடனும் இந்த மக்கள் இருக்கின்றார்கள் என்பது இவர்கள் மேல் மேலும் உயர் மதிப்பை அளிக்கின்றது. நாட்டின் எல்லா இடங்களிலும் ருமேனிய மொழியிலேயே எல்லா செய்திகளும் வழங்கப்படுகின்றன. ருமேனிய மொழிக்கு அடுத்து தான் ஜெர்மானிய மொழி மற்றும் ஆங்கில மொழியில் சில விளக்கங்களை ஆங்கங்கே காணமுடிகின்றது.
சுற்றுலாத்துறை எனும் பொழுது இந்த நாடு குறிப்பாக புகாரஸ்ட் நகரம் மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக முக்கிய இடங்கள் இருக்கும் பகுதிகளுக்கான விளம்பரங்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு இடத்தையும் தேடி கண்டுபிடித்து செல்வதில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஜெர்மனியில் ஊற்றாகி ஐரோப்பாவின் 10 நாடுகளை கடந்து பயணிக்கும் டனுப் நதி ரொமேனியாவின் நிலத்தை வளப்படுத்தும் ஒரு நதி. ரொமேனியாவைக் கடந்து கருங்கடலில் இந்த நதி கலக்கிறது.
மீண்டும் வாய்ப்பு அமைந்தால் இந்த நாட்டின் வட பகுதி மலைப்பிரதேசங்கள் சென்று பார்த்து வர வேண்டும்... இதன் ஒரு பகுதியாக இருந்து இன்று தனி நாடாக விளங்கும் மால்டோவா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது.
-சுபா


ரொமேனியா பயணம் - 22- ஐரோப்பிய கலைப்படைப்புகள்

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாமன்னர் முதலாம் கார்லின் ஆட்சி ரொமேனிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. அவருடைய அரண்மனை வளாகம் முழுவதும் இன்று ரொமேனிய கலை அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அரண்மனை வளாகம். ஒருபக்கம் ஐரோப்பிய கலைகள். மறுபக்கம் ரொமேனிய நாட்டிற்கே உரித்தான கலைகள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு இங்கு அரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 70,000 ஆகும்.
3 மணி நேரங்களை இந்த அரண்மனையின் வளாகத்தின் உள்ளே செலவிட்டேன். அரண்மனையின் கட்டிடம், அதன் அமைப்பு, பளிங்கினால் செய்யப்பட்ட மாளிகையின் பல்வேறு பகுதிகள் ... என மாளிகையே ஒரு அருங்காட்சியகம் தான் எனலாம். அதில் வைக்கப்பட்டிருக்கின்ற அரும்பொருட்கள் உலகின் மிகச் சிறந்த ஓவியர்களது கைவண்ணத்தில் உருவானவை.
ஐரோப்பிய கலைப்படைப்புகள் எனும்போது பழமையான கிருத்துவ மத பின்னணி கொண்ட கலைப்படைப்புகள் என்பன ஒரு புறம். அதற்கு மாற்றாக பதினைந்தாம் நூற்றாண்டில் கிளர்ந்தெழுந்த renaissance புரட்சியின் காலத்தில் தோன்றிய புதிய கலைப்படைப்பு பாணிகள்... அவற்றின் சார்பில் எழுந்த படைப்புகள்... என்பது ஒருபுறம். அந்தவகையில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கலை பள்ளிகளில் உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் மன்னர் முதலாம் கார்ல் அவர்களின் சேகரிப்பில் இருந்தன. அவற்றைக் கொண்டுதான் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ரொமேனிய நாட்டின் பிரபுக்கள் சிலர் சேகரிப்பில் இருந்த கலை படைப்புகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறத் தொடங்கின.
இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களும் கலைப்பொருட்களும் ஒவ்வொரு தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய renaissance புரட்சி என்பது இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் தொடங்கியது. பண்டையகால ஓவிய மரபில் அன்னைமேரி, குழந்தையைத் தூக்கிக் கொண்டிருக்கும் அன்னை மேரி, இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் ஏற்றப்பட்டஓவியம், தேவதைகள் வானில் பூச்சொரிதல், இயேசு கிறிஸ்து, அன்னை மேரி குழந்தையை தாங்கிக் கொண்டிருக்கும் போது அவரைக் காண வரும் தூதுவர்கள் என்பது போன்றே மீண்டும் மீண்டும் ஓவியங்கள் அமைந்திருக்கும். பண்டைய ஐரோப்பியக் கலை படைப்புகள் பெரும்பாலும் சோக நிகழ்வை வெளிப்படுத்துவனவாகவும் இருக்கும்.
இந்த பாணியிலிருந்து மிகப்பெரிய மாற்றத்தை கிபி 15ஆம் நூற்றாண்டில் ரெனைசான்ஸ் சீர்திருத்த காலம் உருவாக்கியது. பல்வேறு புதிய விஷயங்களை, இயற்கை, கட்டிடங்கள், அலங்காரம், மனித உடல், சிந்தனைப் புரட்சி, மறைமுகமான வெளிப்பாடுகள்... என்ற வகையில் இக்காலகட்டத்தில் புதிய கலை படைப்புகள் உருவாக்கம் கண்டன. அந்த வகையில் லியனாடோ டா வின்சி, மைக்கலாஞ்சலோ, ரபேல் போன்றோரை நாம் குறிப்பிடலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்கள் விலை மதிப்பிட முடியாதவை. அத்தனை அரும்பொருட்கள் இந்த அரண்மனைக்குள் உள்ளன. மன்னர் கட்டிய அரண்மனையில் இன்று மன்னரின் வாரிசுகள் இல்லை என்றாலும் அவர் சேகரித்த அரும்பொருட்களள் இங்கே இருக்கின்றன.
இந்த அரண்மனைக்கு எதிர்புறத்தில் மன்னர் முதலாம் கார்ல் அவர்களின் சிலை மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இது கார்ல் பல்கலைக்கழகத்தின் முன்னே அமைந்துள்ளது. மன்னரின் பெயரிலேயே இந்த பல்கலைக்கழகமும் பெயரிடப்பட்டுள்ளது. ரொமேனியாவின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் ஒரு அங்கமாக இந்த அருங்காட்சியகத்தை நிச்சயமாகக் கூறலாம்.
-சுபா