Monday, November 16, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 9

ரோண்டா மலைப்பகுதியில் அமைந்த ஒரு நகரம். சுற்றுப் பயனிகள் மலைகளின் அழகை ரசிக்க ஏதுவாக இந்தகரின் முக்கியப் பகுதி சாலைகளும் நடைப்பாதைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை அழகை ரசிப்பது மட்டுமல்லாது இசையயும் ரசிக்கும் வகையில் ஆங்காங்கே தென்படும் கலைஞர்கள் வேறு. இவற்றை ரசித்துக் கொண்டு மலைச் சுவரின் அழகினைக் காண முடிகின்றது.







தொடர்ந்து நடந்து வந்தால் 'புதிய பாலம்' உள்ள பகுதியை வந்தடையலாம். 18ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட பாலம் இது. இந்நகரின் மிக முக்கிய சின்னமாகவும் இப்பாலம் அமைகின்றது. பாலத்தின் இருபுரமும் மிகப்பிரமாண்டமான இயற்கைக் காட்சிகள். இதனைப் பார்த்துக் கொண்டே நடக்கும் போது நேரம் செல்வதே தெரிவதில்லை.







பாலத்தின் ஓரத்திலேயே உணவருந்த ஏதுவாக நல்ல உணவகங்கள்.







இந்த உனவகத்திலிருந்து கீழே நோக்கினால் தென்படும் ஆற்றை மூரிஷ் அரசரின் இல்லத்திலிருந்து அடைந்து விடலாம். அங்கு தான் எங்கள் அடுத்த பயனம்.




La Casa del Rey Moro - The Mine, the moorish King's house. - மூரிஷ் அரச இல்லத்தில் பார்ப்பதற்கு இரண்டு மிக முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவது குகை வழியாக இல்லத்திற்குச் செல்லும் பாதை. அடுத்தது ப்ரெஞ்சு கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ள பூந்தோட்டம். குகைப்பாதைக்குச் செல்ல முதலில் நாம் பூந்தோட்டத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும்.







இந்த மூரிஷ் அரச இல்லம் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒன்று. (மூரிஷ் அரசர் அபோமெலிக் (Abomelic)). குகையின் கீழ்பகுதி அரச குடும்பத்தினர் நீராடவும் தனிமையில் இருக்கவும் தகுந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 250 படிகளைத் தாண்டி கீழே வந்தால் இந்த ஆற்றினையும் அதனை ஒட்டியுள்ள மலைகளின் பிரமாண்டமான சுவர்களையும் ரசிக்கலாம்: இந்தகரின் பேரழகில் இதுவும் ஒன்று என்றால் மறுக்க முடியாது.







படிகள் பாம்பு போல வளைந்து வளைந்து வருபவை, முழுதும் இருள் வேறு. ஆனாலும் பாதுகாப்பாக வைத்திருப்பதால் பிரச்சனையின்றி கீழ் பகுதி வரை வந்து செல்ல முடிகின்றது. கீழ்பகுதியை அடைந்ததும் இளம் பச்சையிலான நீரோடையைக் கண்டு ரசிக்க முடிந்தது. இது கொள்ளை அழகு. இதனை சுற்றிப்பார்க்க இருவருக்கு 4 யூரோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.







இந்த குகையின் கீழ்ப்பகுதியில் ஒரு பாதுகாப்பு அரங்கம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதோடு sala de secretos - Room of secrets எனப்படும் பகுதியில் பக்கத்திலே போர்க்கருவிகள் வைக்கும் இடமும் உள்ளது. sala de secretos ல் சுவருக்குப் பின்னர் பேசினால் சுவருக்கு அடுத்த பகக்த்தில் உள்ளவர்களுக்கு கேட்காதாம். இதுவும் ஒரு முக்கிய ரகசிய இடமாக மூரிஷ் மன்னர் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.







கீழே ஆற்றிலிருந்து மேலே செல்ல 60 மீட்டர் உயரம் நடக்க வேண்டும். ரோண்டா மட்டுமல்ல, அண்டாலூசியாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.







இப்பகுதியைக் கடந்து தொடர்ந்து நடந்து வரும் போது இடது புறத்தில் புதிய பாலம் செல்வதற்கான் வழி உள்ளது. இதன் முகப்பில் இருப்பது பிலிப் வளையம் (The Arch of phillip V).







இடது புறம் செல்லாமல் வலது பக்கமாக நடக்க ஆரம்பித்தால் மார்க்கீஸ் மாளிகையைக் (Palace of the marquis de Salvatiera) காணலாம்.







தொடர்ந்து நடந்து வரும் போது இடையிடயே சாலைகளின் இரு பக்கங்களிலும் உள்ள கடைகள், வெள்ளை வர்ணத்திலான வீடுகள் போன்றவற்றைப் பார்த்தவாறே நடந்து நகராண்மைக் கழக கட்டிடம் இருக்கும் இடம் வரைக்கும் வந்தால் இந்தகரின் மிக முக்கிய சின்னமான அன்னை சாந்த மரியா தேவாலயத்தை அடையலாம்.










இந்த தேவாலயம் இந்நகர கட்டிட கலைகளின் மையம் என்று தான் நான் சொல்வேன். இயற்கை அழகை பார்க்கின்ற நம் கண்களுக்கு கலை அழகையும் கொட்டிக் கொடுக்கும் வகையில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது.







தேவாலத்திற்கு நுழைவுக் கட்டனம் 4 யூரோ. உள்ளே செல்லும் போது தேவையான ஒரு ஐரோப்பிய மொழியில் விளக்கம் தரும் கருவியை எடுத்துச் சென்று ஒவ்வொரு பகுதியிலும் விளக்கப்படும் செய்திகளைக் கேட்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.



உள்ளே நுழைந்ததும் முதலில் நம் கண்களில் படுவது 25 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்க பூச்சிலான அன்னை மேரியின் மேடை. நுனுக்கமான கைவேலைப்பாடு, இலைகள் பூக்கள், கனிகள் என பல சின்னங்கள் பொறிக்கப்பட்ட தங்கப் பூச்சிலான மேடையின் நடுவே சாந்தா மரியா (Santa Maria) காட்சியளிக்கும் தோற்றம்.







இந்து ஆலயங்களைப் போல ஒவ்வொரு பக்கத்திலும் பல விக்கிரகங்கள்.





பிரமாண்டமான ஓவியங்கள் சுவர்களில். ஒவ்வொரு ஓவியங்களும் கிற்ஸ்துவ கத்தோலிக்க சமயத்தின் கதைகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளன.





1 comment:

சா.கி.நடராஜன். said...

அருமையான பதிவு

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

Post a Comment