Sunday, March 11, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 10


கிரிஷ்ணகிரியில் புலியட்டைக்குட்டை என்ற சிற்றூரில் பாறை ஓவியங்களை நாங்கள் பார்க்கச் சென்ற போதும் மிக ரம்மியமான மலைப் பகுதியைக் கடந்து செல்லும் வாய்ப்பு அமைந்தது. மிக மிக உறுதியான பெரிய பாறைகள் நிறைந்த மலைப்பகுதி அது. இப்பகுதி ஆந்திர மானிலத்திற்கு அருகாமையில் இருக்கின்றது.



இந்தப் புலியட்டைக் குட்டை பகுதியில் இருக்கும் பாறை ஓவியங்கள் இங்கிருப்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆசிரியர் திரு.முருகானந்தம். இவர் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லியல் துறை ஆய்வாளர் டாக்டர் ராஜவேலு அவர்களிடம் 7 நாட்கள் கல்வெட்டு தொல்லியல் ஆய்வு பயிற்சி ஒன்றினை மேற்கொண்டிருந்த போது கள ஆய்வுக்காக இப்பகுதியைத் தேர்ந்தெடுத்து இங்கு ஏதேனும் தொல்லியல் சான்றுகள் இருக்குமா என்று தேடியிருக்கின்றார். அப்போது இவருக்கு இந்த கற்பாறை தென்பட்டிருக்கின்றது.


ஆசிரியர் முருகானந்தம்

உடனே இவர் டாக்டர் ராஜவேலு அவர்களுக்குத் தெரிவித்து அவரும் மற்றும் சிலரும் வந்து பார்த்து இவை பெருங்கற்கால ஓவியங்கள் தாம் என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

இந்தப் பகுதிக்கு எங்களை திரு.முருகானந்தம் உடன் வந்திருந்து அழைத்துச் சென்று காட்டினார்.



கற்பாறைகள் நிறைந்த மலை. உறுதியான மிகப் பெரிய பாறைகள். ஆங்காங்கே பனை மரங்கள். இயற்கையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இந்தப் பகுதிக்கு உள்ளே செல்ல பாதை இல்லை. பாறைகளின் மேல் ஏறித்தான் சென்று பார்க்க வேண்டும். ஆக புதர்களைக் கடந்து சென்று ஒரு வழியாக இந்தப் பாறை இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு நாங்கள் பார்த்த காட்சி எங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பாறை முழுதும் அவ்வளவு ஓவியங்கள். மிக நேர்த்தியான குறியீடுகள் அவை.


நா.கண்ணன், சுபா, ப்ரகாஷ்

இவற்றைப் பார்த்து நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். அவற்றை விரைவில் ஒரு பிரத்தியேகப் பதிப்பாக வெளியிட நினைத்திருக்கின்றேன். இவை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

தொடரும்..

அன்புடன்
சுபா

2 comments:

விச்சு said...

வாழ்த்துக்கள் சுபா. கிருஷ்ணகிரிக்கு அருகில் மல்லிநாயனபள்ளி என்ற ஊரில்தான் நானும் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன். ஆனால் இதுபோன்று கேள்விப்பட்டதில்லை. நம்மிடையே நிறைய இடங்கள் இப்படி மறைக்கப்பட்டு கிடக்கின்றன. நீங்கள் வெளிக்கொண்டு வாருங்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Dr.K.Subashini said...

நன்றி விச்சு. உண்மைதான் .. பல இடங்களையும் சென்று பார்க்கும் போது நமது வரலாற்று சான்றுகள் ஆங்காங்கே இருப்பதைப் பார்த்து மலைத்துப் போகாமல் இருக்க முடிவதில்லை. ஆனால் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக பலருக்கு இல்லாமலிருப்பது தான் வேதனை.

Post a Comment