ஊத்தங்கரையில் காலை உணவு விருந்துக்குப் பின்னர் எங்களை திரு.கவி செங்குட்டுவன் தாம் முன்னர் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
முதல் நாள் மாலை கிருஷ்ணகிரி வந்து சேர்ந்த ஸ்வர்ணா தன் குழந்தையுடனும் மாமனாருடனும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார். நாங்கள் சென்ற நேரம் பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருந்தது. பள்ளி வளாகத்தைச் சுற்றிக் காட்டி பின்னர் பள்ளியின் ஆசிரியர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் திரு.கவி செங்குட்டுவன்.
உணவு வேளைக்கு மணி அடிக்கப்பட்டதும் சத்துணவு சாப்பிட மாணவர்கள் வரிசையாக வந்து அமர்ந்து கொண்டனர். அவர்களுக்குச் சாதம், சாம்பார் காய்கறிகள் என உணவு வழங்கப்பட்டது. நாங்கள் வகுப்பறைக்குச் சென்று அங்குள்ள கல்வி உபகரணங்களையும் பார்த்து ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்.முதலில் மாணவர்கள் எங்களை கல்வித்துறை அதிகாரிகள் என்று நினைத்து விட்டனர் என்பது தெரிந்தது. அவர்களில் சிலர் மிகுந்த ஆர்வத்துடன் எங்களைப் பார்ப்பதும் பின்னர் சிரிப்பதும் தலையைக் குனிந்து கொள்வதும் என இருந்தனர்.
மற்றொரு பகுதியில் சில உயர் நிலைப் பள்ளி மாணவர்களும் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். மாணவர்களில் பலரும் உடன் சில கேள்விகளுக்கு சட் செட்டென்று பதிலளித்து பின்னர் என்னையும் சில கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது மிகவும் சுவாரசியமாக இருந்தது.
பேச்சின் இடையே அவர்கள் பிற்காலத்தில் என்னவாக தொழில் புரிய ஆசைப்படுகின்றனர் என்று கேட்டேன். பெரும்பாலோர் தமிழ் ஆசிரியர், அறிவியல் ஆசிரியர், கணித ஆசிரியர் வரலாறு ஆசிரியர், போலீஸ் , கலெக்டர், என்ற வகையில் தங்கள் எதிர்கால விருப்பத்தைத் தெரிவித்தனர். மற்ற பல தொழில் பற்றிய போதிய அறிமுகம் குறைவாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பள்ளியில் மிகச் சிறப்பாக மூலிகைத் தாவரங்கள் பயிரிடப்பட்டு பாதுகாக்கப்படுவதையும் ஆசிரியர்கள் காட்டினர். மாணவர்களே இதனைப் பராமரிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டபோது அகம் மகிழ்ந்து போனேன்.
பள்ளிக்கூடம் முழுவதும் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றது. குப்பைகளைப் பிரித்து தனியாக அவற்றை ஓரிடத்தில் கொட்டி வைக்கின்றனர். எவை இயற்கையான குப்பை எவை தனியாகப் பாதுகாக்கப்பட வேண்டிய குப்பை என அதற்குப் பெயரிட்டு மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் ஆசிரியர்களின் பண்பை பாராட்டித்தானே ஆக வேண்டும்.
முதலில் தயங்கித் தயங்கி பேசிய மாணவர்கள் சிறிது நேரம் உரையாடிய பின்னர் மிகுந்த ஆர்வத்துடன் எங்களை சுற்றிக் கொண்டு எங்களுக்கு கைகுலுக்கி வணக்கம் செலுத்தி தொடர்ந்து விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். நேரமாகி விட்டதால் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைபெற முயன்றோம். ஆனால் மாணவர்களின் அன்புத் தொல்லை எங்களை நகர விடவில்லை. அவர்களை விட்டு பிரிய மனம் இல்லாமல் அனைவரும் பிரிந்தோம் என்பதே உண்மை.
தொடரும்...
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment