இரண்டாவது நடைப்பயணம்
லா பல்மா கனேரித் தீவுக் கூட்டத்தில் அடங்கும் ஒரு தீவு என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தீவு முழுமைக்குமே எரிமைகளால் உருவாக்கப்பட்டது என்றால் மிகையாகாது. கனேரி தீவுக் கூட்டத்தில் இன்றைக்கும் இயங்ககூடிய எரிமைலைகள் (Active Volcano) இருப்பது இந்தத் தீவில் எனலாம். இந்தத் தீவு 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகக் கருதப்படுகின்றது. 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தீவின் மத்தியில் உள்ள டாப்ரியாண்டே எரிமலை வெடித்து கல்டேரா டி டாப்ரியண்டே என்ற மலைப்ரதேசத்தை உருவாக்கியது. இந்த கல்டேரா டி டாப்ரியண்டே பகுதியில் தான் எங்கள் முதல் நடைப்பயணம் அமைந்தது என்பதை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
லா பல்மாவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்புக்கள் பற்றிய செய்திகளும் சுவாரசியமானவை. அவை நிகழ்ந்த ஆண்டு விபரங்களைப் பார்ப்போம்
- 1470-1492 மொண்டானோ குமாடா (Montaña Quemada)
- 1585 எல் பாசோ பகுதிக்கு அருகில் உள்ள டாஹுயா (Tajuya near El Paso)
- 1646 சான் மார்ட்டின் எரிமலை (Volcán San Martin)
- 1677 சான் அண்டோனியோ எரிமலை (Volcán San Antonio)
- 1712 எல் சார்கோ (El Charco)
- 1949 சான் ஹுவான் டூரானேரோ, ஹோயோ நேக்ரோ (Volcán San Juan, Duraznero, Hoyo Negro )
- 1971 தெனெகூயா எரிமலை (Volcán Teneguía)
இந்தத் தீவின் கொஞ்சம் தெற்குப் பகுதியில் அமைந்திருப்பது சான் ஹூவான் எரிமலை, அதற்குக் கீழே தான் தெனெகூயா எரிமலை உள்ளது. 1971ல் வெடித்து நெருப்புக் குழம்புகளை வீசிய எரிமலை இது. செக்கச் செவேல் என இருக்கின்றது இந்த எரிமலை வெடித்த மையப் பகுதி.
இந்த எரிமலை பகுதியில் தான் எங்கள் இரண்டாவது நடைப்பயணம் அமைந்தது. அதாவது சான் ஹுவான் எரிமலையின் தெற்குப் பகுதியிலிருந்து தொடங்கி லா பல்மாவின் தெற்கு முனைப்பகுதியான சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ் வரை 13 கிமீ நடையாக நடந்து சென்று மீண்டும் சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ் தெற்கு முனையிலிருந்து வடக்கு நோக்கி எங்கள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் வரை பயணம். ஆக 26 கிமி தூர ஒரு நாள் பயணமாக இது அமைந்தது.
கீழே தெற்கு நோக்கி இறங்கி வருவது சுலபம். மீண்டும் மேல் நோக்கி நடப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மடங்கு நேரம் தேவைப்பட்டது.
ஒரு வகையில் இது திட்டமிடாத ஒரு பயணம் என்று தான் சொல்வேன். சான் ஹுவான் எரிமலையைப் பார்க்கச் செல்லலாம் என நினைத்துச் சென்று பின்னர் இந்த இடத்தின் அழகில் மயங்கி தெனெகூயா எரிமைலையை நடந்தே சென்று காண்போமே என்று செய்த ஒரு முயற்சி. ஏறக்குறைய எங்கள் நடைப்பயணத்தின் இறுதிப் பகுதியில் மிகுந்த சோர்வு ஏற்பட்டாலும் அந்த அனுபவம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மகிழக்கூடியதாக உள்ளது. எனது லா பல்மா நடை பயணத்திலேயே இப்பயணத்தையே நான் மிக மிக ரசித்த ஒரு பயணம் என்றும் கூட சொல்வேன்.
ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்ற ஒரு அழகு உண்டு. எரிமலை, அது சுற்றியுள்ள நிலப்பகுதி, அங்கு வளரும் தாவரங்கள் அனைத்துமே தனித்துவம் வாய்ந்தவை. உலகமே அதிசயம் தான். அதில் எரிமலைகளும் அவற்றின் சுற்றுப் புறங்களும் அதிசயமோ அதிசயம் என்று தான் வியக்கத் தோன்றுகிறது.
எங்களின் 13 கிமீ தெற்கு நோக்கிய பயணத்தில் ஆரம்பத்தில் ஒரு குழுவினர் எங்களுக்கு எதிர்பக்கமாக நடந்து செல்வதைப் பார்த்தோம் . அதற்குப் பின்னர் இடையில் ஒரு ஜோடி எங்களைப் போலவே நடந்து சென்றனர். மற்றபடி அந்த 13 கி.மீ தூர பயணத்தில் நாங்கள் மட்டுமே அப்பகுதியில் என்ற வகையில் ஒரு தனிமை. ஸ்டார் ட்ரேக்ஸ் படத்தில் பார்ப்போமே, அப்படி ஏதோ ஒரு புதிய ப்லேனட்டிற்கு வந்து நாங்கள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றோமோ என சில நேரம் தோன்றியது!
எரிமலை வெடிப்பின் போது வெடித்துச் சிதறிய கற்களும் நெருப்புக் குழம்புகளும் பளபளக்கும் கருப்பு நிறமானவை. உலோகம் கலந்து இருப்பவை. பல பெரிய கருங்கல் பாறைகள் ஆங்காங்கே. கட்டி கட்டியாக சிறு பாறைகள், பெரிய பாறைகள்.. மகா பெரிய பாறைகள் என பாறைகளிலேயே அத்தனை விதம். ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. பார்த்து உணர்ந்து அனுபவிக்கத்தான் வேண்டும் என்று சொல்வேன்.
சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ், அதாவது லா பல்மாவிற்குத் தெற்கு முனைப்பகுதியில் ஒரு புகழ்பெற்ற உணவகம் இருப்பதாகவும் அங்கே நல்ல க்ரோக்கேட்டுகள் கிடைப்பதாகவும் அறிந்தேன். ஆக க்ரோக்கெட்டுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆங்காங்கே மனதை தொட்டுச் செல்லும் காட்சிகளைப் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டு ஆர்வத்துடன் நடந்தேன். ஏறக்குறைய மதியம் 2 மணியளவில் தெற்கு முனைக்கு வந்து விட்டோம்.
உணகத்தைத் தேடினால் அவர்கள் சியாஸ்டா சென்று விட்டார்கள். சியாஸ்டா என்பது ஸ்பெயினில் மக்கள் மதிய கடைகளை அடைத்து ஓய்வெடுக்கும் ஒன்று. ஆக பெரிய ஏமாற்றத்துடன் கடற்கறை பகுதியில் சற்று நடப்போம் என நினைத்து சாலினாஸ் பகுதியில் இறங்கி நடந்தோம். என்ன ஆச்சரியம்! அங்கே ஒரு வாகனத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி உணவு தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தார். மேலும் ஒரு வாகனமும் அங்கு நின்று கொண்டிருந்தது. இரண்டு இளைஞர்கள் அந்த வாகனக் கடையோரம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
நாங்கள் அமர்ந்து க்ரோக்கெட், அவித்த உருளைக்கிழங்குடன் மோஹோ, கேக் ஆகியவற்றை வாங்கி உண்டு பசியாற்றிக் கொண்டோம். உணவுக் கடைக்காரர் ஒரு நெதர்லாந்துப் பெண்மனி. ஜெர்மன் மொழி பேசுபவர். ஸ்பானிஷ் ஜெர்மன் இரண்டு மொழிகளும் பேசுவது அங்கு விற்பனை செய்ய உதவுகின்றது என்று நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த அமைதியான சூழலில் அந்த நடுத்த்தர வயது பெண்மணி மாத்திரம் தனியாக இருந்து கொண்டு லா பல்மாவின் தெற்கு முனையில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டு கையில் நூல் பின்னிக் கொண்டு அமைதி நிறைந்த முகத்துடன் அங்கே தனது உணவகத்தை கவனித்துக் கொண்டிருப்பது வியக்க வைத்தது.
சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ் பகுதியில் உப்பு உற்பத்தி ஆலை உள்ளது. தீவின் தெற்கு முனை. அங்கே குவியல் குவியலாக உப்புக்கள். அதனைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.
தொடரும்..
அன்புடன்
சுபா
2 comments:
எரிமலையில் தனிமையான அனுபவங்கள். உணவகத்தில் உள்ள பெண்மணியைப்பற்றி நீங்கள் விவரித்தவிதம் அருமை.
கருத்துக்களுக்கும் உங்கள் ரசிப்புத் தன்மைக்கும் நன்றி :-)
Post a Comment