சமணப்படுகைகள் உள்ள பாறையைக் கண்டு வர செல்லும் போது தெப்பக்குளத்தை மீண்டும் கடந்து சென்றோம். தெப்பக்குளத்தில் வானின் நீல நிறமும் அதில் நிறைந்திருக்கும் மேகங்களின் பிரதிபலிப்பும் கண்களுக்கு விருந்தாகிப் போக அதனை எனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன்.
சமணப்படுகைகள் இருக்கும் பாறை இந்தக் கோயிலிருந்து சற்று தூரம்தான் அதனால் நடந்தே சென்று விடுவோம் என்று சொல்லி நடக்கலானோம். அருகாமையில் தான் இப்பாறைகள் இருக்கின்றன. வெயில் அதிகரித்ததனால் சற்று அயர்ச்சியை தர ஆரம்பித்தது. அதோடு பாறைகளின் மேல் ஏற சற்று சிரமமாகிப்போனது டாக்டர் வள்ளி அவர்களுக்கு. ஆனாலும் எல்லோருமாகச் சேர்ந்தே நடந்து சென்றோம்.
பாறை பகுதியிலிருந்து குன்றக்குடி குடவரைக் கோயில் முழுதுமாக மிக அழகாக தெரிந்தது. சிறிய கோயிலாகினும் எவ்வளவு கலை நயத்துடன் இதனை கட்டியிருக்கின்றனர் என்ற பிரமிப்பு மனதில் எழுந்தது.
பாறையைக் கடந்து மேலே சென்று அக்கோயில் இருக்கும் பகுதியை அடைந்த்தோம். முன்னர் சமணப்பள்ளியாக இருந்த அவ்விடம் தற்சமயம் ஒரு சிறு கோயில் போல இருக்கின்றது. முதலில் தெரிவது ஒரு சிறிய பிள்ளையார் கோயில். இதனைக் கடந்து சென்றால் சமணப்பள்ளி அமைந்துள்ள குகையை அடையலாம்.
வாசலில் பைரவர் சிலை வைத்து வேல் நட்டு வைத்து தற்சமயம் கூட வழிபாடு நடைபெற்று வருவதற்கான தடயங்கள் தெரிந்தன. வாசல் பகுதியைக் கடந்து குகைக்குள் சென்றோம். அங்கே வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் சமணப்படுகைகளைக் காட்டி எனக்கு விளக்கமளித்தார் டாக்டர்.வள்ளி. இந்தப் பதிவை இன்றைய மண்ணின் குரலில் இணைத்து வெளியிட்டிருக்கின்றேன். அதனை http://voiceofthf.blogspot.de/ 2012/11/blog-post_17.html சென்று கேட்கலாம். முழு பதிவையும் இங்கே காணலாம்.
பாறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. கண்ணாடியில் பார்த்தால் வாசிக்கக்கூடிய அமைப்பில் திருப்பி எழுதப்பட்ட எழுத்துக்கள் இவை. பாறையைச் சுற்றி அமைத்திருக்கும் காடி மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருப்பதையும் பார்த்தோம்.
சமணப்படுகைகள் உள்ள பகுதிகளில் பலர் கிறுக்கியும் சேதப்படுத்தியும் வைத்துள்ளனர். இது கண்டிக்கப்பட வேண்டிய செயல். நமது புராதண சின்னங்களின் அருமை பெருமை தெரியாத சிலரது நடவடிக்கைகளால் இந்த வரலாற்றுச் சான்றுகள் தினம் தினம் சேதப்பட்டுக் கொண்டேயிருப்பது வேதனை அளிக்கும் விஷயம். பொது மக்களுக்கும் இவற்றை பேணிக்காக்க வேண்டிய அவசியம் இருப்பதை பல வகையில் தெளிவு படுத்த வேண்டிய கடமை நமக்குண்டு.
இந்தக் குகை அமைந்திருக்கும் பகுதி சிறு வனமாக காட்சியளிக்கின்றது. பாறைகளில் வளர்ந்திருக்கும் மரங்கள் கொள்ளை அழகாய் சிற்பங்களைப் போலவே அமைந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
எனது அனுபவத்தில் நான் முதலில் நேரில் கண்ட ஒரு சமணப்படுகை இது தான். அந்த ஆச்சரியத்திலேயே அங்கே நின்று இயற்கையின் எழிலை ரசித்துக் கொண்டிருந்தேன்.
தொடரும்...
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment