Thursday, November 12, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 8

7ம் நாள் - ரோண்டா



அண்டாலூசியாவின் இயற்கை அழகை பிரதிபலிக்கும் நகரங்களில் ரோண்டா முக்கிய இடத்தைப் பெறுகிறது. எஸ்டாபோனாவிலிருந்து ஏறக்குறைய 70 கி.மீ தூரத்தில் உள்ள நகரம். மலைகளைச் சுற்றி வளைந்து செல்ல வேண்டியுள்ளதால் ஏறக்குறைய ஒன்றேகால் மணி நேரம் பயணத்திற்கு தேவை.







வரலாற்று ஆசிரியர்கள் இந்த நகரில் 25,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மக்கள் இங்கு வாழ்ந்துள்ளமையை இங்குள்ள குகை சித்திரங்கள் மற்றும் பல தடயங்கள் வழி நிருபிக்கின்றனர்.







ஏறக்குறைய 50 கி.மீ தூரத்திற்கு பயணம் மலைகளைச் சுற்றியே. பரந்து விரிந்த மலைகள். தற்சமயம் இங்கு மிக விரிவாக கோல்வ் விளையாட்டு மையமும் அதனைச் சார்ந்த சுற்றுப்பயனமும் அடிவாரப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன. வழியில் செல்லும் போது ஆங்காங்கே கோல்வ் பந்துகளை விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகளைப் பார்த்தவாரே பயணித்தோம்.







ரோண்டாவின் இயற்கை எழிலை அதிகரிப்பது மலைத்தொடரும் அதன் பாறைகளும். ஒன்றை அடுத்து மற்றொன்று என மலைகள் தொடர்ந்து பரவி மிகப் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன. முதலில் கொஞ்சம் பச்சை பசேலென இந்த நிலத்துக்கே உரிய தாவர வகைகளுடன் மலைகள் காட்சியளிக்கின்றன. படிப்படியா மேலே உயர செல்லச் செல்ல பெறும் பாறைகள் வெள்ளை கற்களாய் ஜொலிக்க மிக அழகான மலத்தொடராக உயர்ந்து நிற்கின்றன.





Wednesday, November 11, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 7

6ம் நாள் - மலாகா



மலாகா விமான நிலையத்தில் நாங்கள் வந்திருங்கியிருந்தாலும் 6ம் நாள் வரை இந்த நகரத்திற்கு நாங்கள் வரவில்லை. மலாகா ஒரு பழம் நகரம். உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ பிறந்த நகரம். பல நூற்றாண்டுகளாக ஸ்பெயினின் முக்கிய துறைமுகமாக விளங்கி வருகின்றது இந்த நகரம்.







நகரின் உள்ளே வந்ததுமே வாகனத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நடக்கத் தொடங்கினோம். மலாகாவின் எல்லா முக்கிய இடங்களையும் சுற்றுலா பேருந்து ஏறி சுற்றி வரலாம். இதற்கு 8 யூரோ கட்டணம்.







இதில் அமர்ந்து ஒவ்வொரு இடங்களாக பார்க்க ஆரம்பித்தோம். இடையில் சில நிறுத்தங்களில் இறங்கி பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டு மீண்டும் பேருந்தில் ஏறி அடுத்த இடத்திற்குச் செல்லலாம்- ஒரே கட்டணத்தில்.







முதலில் நாங்கள் பார்க்க விரும்பிய இடம் அரேபிய கோட்டையான அல்கஸாபாவும் கிப்ரால்பாரோவும். இது 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்ட ஒரு கோட்டை.







இந்த கோட்டையைச் சுற்றி பார்த்த பின்னர் அடுத்ததாக மெட்ரோபோலிட்டன் தேவாலத்திற்குச் சென்றோம். மிக மிகப் பிரமாண்டமான தேவாலயம். இந்த தேவாலயம் ஒரு மசூதியின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. மசூதி இடிக்கப்படு பின்னர் இந்த தேவாலயம் கிறிஸ்துவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கேயும் மூல விக்ரகம் அன்னா மரியா தான்.










இந்த தேவாலயம் நுண்கலைக்கு ஒரு எடுத்துக் காட்டு. மிக உயரமான மதில்கள். சுவர்களில் அலங்கார விலக்குகள்; பூஜைக்குரிய சிறப்பிடம்; அங்கு பாதிரியார்கள், தேவாலய முக்கியஸ்தர்கள் அமர்வதற்கான இடங்கள் போன்றவை ஒவ்வொன்றும் திட்டமிடப்பட்டு செதுக்கிய வடிவங்கள். எனது கேமராவில் படங்கள் எடுத்து எனக்கு அலுத்துப் போய்விடும் அளவிற்கு ஒவ்வொரு முக்கிய இடங்களாக எனது கேமாராவில் கிளிக் செய்து கொண்டேன். ஆனால் நேரில் பார்ப்பதில் இருக்கும் அனுபவத்தில் ஒரு சிறிதளவினைத்த்தான் புகைப்படங்களில் பார்க்கும் போது கிடைக்கின்றது.










இந்த தேவாலயத்தில் பூஜைகளும் நடந்து வருகின்றன; இது வெறும் சுற்றுலா மயம் மட்டுமல்ல.







இதனைப் பார்த்த பிறகு சற்று நடந்து துறைமுகம் அருகில் வந்து சேர்ந்தோம். பல சிறிய பெரிய கப்பல்கள். மலாகாவின் வியாபார பலத்தையும் ஆளுமையையும் இவை காட்டுவனவாக அமைந்திருந்தன.







பிறகு மீண்டும் பேருந்தில் ஏறி மலாகா நகர மையத்திற்குள் வந்து சேர்ந்தோம். சாலைகளின் இரு பகுதிகளிலும் கடைகள். இங்கு மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட பொருட்கள் மிகப் பிரசித்தி பெற்றவை. தோல்பைகள், காலணிகள் போன்றவற்றை நல்ல விலைக்கு வாங்கி மகிழலாம்.







நடந்த களைப்பில் மதிய உணவை ஒரு உணவகத்தில் முடித்த பின்னர் மேலும் தொடர்ந்து சில இடங்களைப் பார்க்க நடந்தோம். மாலை முழுவதும் வேறு பல இடங்களையும் பார்த் பின்னர் அன்றைய திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் எஸ்டாபோனா திரும்பினோம்.








Tuesday, November 10, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 5

5ம் நாள் - மரபெயா



இன்று புத்தகத்தை வாசிப்பதிலும் ஓய்வெடுப்பதிலும் சில மணி நேரங்கள் கழிந்தன. நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வாகனம் கொஞ்சம் பிரச்சனை செய்ததால் அதனை மாற்ற வேண்டியிருந்தது. மரபெயாவில் இந்த வாகன நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு கிளை இருந்ததால் அங்கு செல்வது என முடிவு செய்து மதியம் பயணித்தோம்.







மரபெயா எஸ்டபோனாவிலிருந்து ஏறக்குறைய 16 கிமீ தூரத்தில் உள்ள மற்றொரு கடற்கரை நகரம். புவஞ்ஞிரோலாவை விட மிக நேர்த்தியாக இந்நகரம் உள்ளது என்றே சொல்லலாம். சுற்றுப் பயனிகளை மையமாக வைத்து வர்த்தகங்கள் இயங்குகின்றன. பொருட்களின் விலையும் இங்கு சற்று அதிகம் என்றே தோன்றுகின்றது. அதோடு இங்கு சவூதிய அராபிய ஷேக்குகள் பலர் தங்கள் விடுமுறை இல்லங்களை வைத்துள்ளனராம். அதிகமாக இந்த நகரில் பயணிக்காவிட்டாலும் மதிய உணவை முடித்து வாகனத்தையும் மாற்றிக் கொண்டு மீண்டும் எங்கள் தங்கும் விடுதிக்குத் திரும்பினோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மரபெயாவிற்கு மாலையில் வந்திருந்தோம். ப்ளமின்கோ எனும் நாட்டியத்தைக் கண்டு ரசிக்க.







ப்ளமின்கோ நாட்டியம் மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு நாட்டியம். ஏழிலிருந்து எட்டு பேர் கொண்ட குழுவினர். அதில் நான்கு நடனக்காரர்கள்; 4 இசைக்கலைஞர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.







கால் பாதங்களை இசைக்கேற்ப தரையில் தட்டி ஆடுவதே இதன் அடிப்படை. அழகிய பெண்களும் ஆண்களும். நளினமான உடல் கட்டுடன் நேர்த்தியான உடையணிந்து இந்த நடனத்தை ஆடுகின்றனர். ஒவ்வொரு முறை ஆடும் போதும் அவர்கள் தங்கள் மனதில் தோன்றிய வகையில் ஆடுகின்றனர். இசைக் கலைஞர் பாடும் இசையில் இலயித்து தங்களை மறந்து இவர்கள் ஆடுவது நன்றாகத் தெரிகின்றது.










நாங்கள் சென்ற இந்த நாட்டிய நிகழ்ச்சி ஒரு குடிசைத் தொழில் போன்ற அமைப்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு இடம். வருகையாளர்கள் அமர சிறிய நாற்காலி தருகின்றனர். அருந்துவதற்கு பானமும் வாங்கிக் கொள்ளலாம். 90 நிமிட நாட்டியத்தை நம்மை மறந்து பார்த்து ரசிக்கலாம். ஸ்பெயின் அதிலும் அண்டாலூசிய செல்பவர்கள் ஒரு முறை ப்ளாமின்கோ நடனத்தை பார்த்தே ஆக வேண்டும். விக்கிபீடியாவில் ப்ளமென்கோ பற்றி அறிய http://en.wikipedia.org/wiki/Flamenco.







ப்ளமென்கோ நாட்டியம் ஆடும் பெண்கள் அணியும் ஆடைகள் மிக அழகானவை. உதாரணத்திற்கு சில படங்கள். இவை புவஞ்ஜிரோலா தெரு கடைகளில் எடுக்கப்பட்ட படங்கள்.









Friday, November 6, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 5

4ம் நாள்: கஸாரஸ்







கஸாரஸ் எங்கள் தங்கும் விடுதியிலிருந்து (எஸ்டாபோனாவிலிருந்து) வடக்கு நோக்கி ஏறக்குறைய 30 நிமிட பயணத்தில் அமைந்துள்ள ஒரு சற்று மலைப்பாங்கான நகரம். இந்த நகரமும் வெள்ளை கிராமங்களுக்குப் பிரசித்தி பெற்ற ஒன்று.







இந்த வெள்ளை கிராமத்தில் வீடுகளுக்கிடையே நடப்பது மிக சுவாரசியமான ஒரு அனுபவம். வாகனத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நடக்க ஆரம்பித்தோம். வீடுகளைச் சுற்றி படிகள். படிகளில் அடுத்தடுத்து இறங்கி கீழே சென்றால் சிறிய நகரம். அங்கிருந்து மேலும் படிகளில் சுற்றி வளைந்து நடந்து மேலேறினால் ஒரு பழம் கோட்டை. இந்த கோட்டை 12ம் நூற்றாண்டில் ரோமானியர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்டது. இப்போது கோட்டையின் சிதிலமடைந்த பகுதியே பிரமாண்டமாக தூரத்திலிருந்து பார்த்தாலும் காணும் வகையில் அமைந்துள்ளது.







இந்த கோட்டையின் அருகில் ஒரு 12ம் நூற்றாண்டு தேவாலயமும் உள்ளது. இதன் பழைய மண்டபத்தை மாற்றி புதிய தேவாலயம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் தனிச் சிறப்பு என்னவென்றால் இங்கிருந்து பார்த்தால் கீழுள்ள மலைத்தொடர்கள், கிப்ரால்டா, மற்றும் ஆப்பிரக்க கண்டத்தின் உச்சி வரை ஒருவர் காணலாம். முன்னர் இது தற்காப்புக்கு மிக முக்கியமன ஒரு பகுதியாக இருந்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.




இந்த நகரில் எங்களை மிகக் கவர்ந்த மற்றொரு விஷயம் இங்கு இக்கோட்டையை ஒட்டி அமைந்திருக்கும் புதைகுழிகள். ஜெர்மனியில் இடுகாடு (cemetry) மிக அழகாக ஒரு பூந்தோட்டம் போல பராமரிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். பல முறை அங்கு நடப்பதற்காகச் சென்றிருக்கிறோம். இங்கு மிக வித்தியாமசமாக, இந்த வெள்ளை கிராமத்து வீடுகள் போலவே அடுக்கடுக்காக வெள்ளைச் சதுரங்கள்.







ஒருவரது பூதவுடலைத் தாங்கிய பெட்டியை இந்த சதுரங்களுக்குள் வைத்து மூடி வைத்து விடுகின்றனர். ஒவ்வொரு சதுர அறைக்கும் ஒரு எண்; தங்கும் விடுதி எண் போல. அதன் முகப்பில் இறந்தவரின் பெயர் திகதி, சில குறிப்புக்கள் இப்படிப் சில செய்திகள். அதோடு பூக்களினால் அலங்கரித்து இந்த இடத்தை மிக அழகாக பராமரித்தும் வருகின்றனர்.







இது அதிசயமான ஆனால் மிக அழகான ஒரு இடம். இந்த நகரத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இங்கு வந்து நேரில் காண வேண்டிய ஒன்று என்றும் சொல்லலாம்.







ஆலீவ் எண்ணெயில் சமைக்கப்பட்ட பதார்த்தம், ஆலீவ் விதைகள் சாலாட்டுடன் உணவில் சேர்த்து உண்பது என்பது இங்குள்ள சமையல் கலையாக இருக்கின்றது. இத்தாலி, கிரேக்கம் போன்று ஆலீவ் எண்ணை இங்கு சமையலில் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. ஒரு வகையில் ஆலீவ் எண்ணையில் சமைத்து பழகியவர்களுக்கு வேறு மாற்று எண்ணையை சமையலில் உபயோகிப்பதில் நிச்சயமாக விருப்பம் இருக்காது. எனக்கும் இது பொருந்தும். ஆலீவ் எண்ணெய் உணவு பதார்த்தங்களோடு கலந்து சிறந்த சுவையை வழங்கக்கூடியது. இந்த நகரில் ஆங்காங்கே சாலைகளில் வீடுகளில் ஆலீவ் மரங்கள் உள்ளன. பச்சை மற்றும் பழுத்த கரும் ஆலீவ்களை மரத்தில் பார்க்க முடிகின்றது.



Thursday, November 5, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 4

மிஹாஸ்



புவன்ஜிரோலாவிலிருந்து அடுத்து எங்கள் பயணம் மிஹாஸ் நோக்கியது. மிஹாஸ் நகரத்தை புவன்ஜிரோலாவிலிருந்து 20 நிமிடத்தில் சென்றடைந்தோம். சற்று மலைப்பாங்கான இடம். நகரின் உள்ளே நுழையும் போது வெள்ளை வர்ணத்திலான குடியிருப்புப் பகுதிகளைத் தூரத்திலிருந்தே பார்க்கமுடிந்தது.







அண்டாலூசியாவிற்கு அதிலும் மலாகாவிற்கு வரும் அனைவரும் இந்த சிறிய நகரத்தைப் பயன பட்டியலில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும். வெள்ளை நிரத்தில் வர்ணம் பூசப்பட்டு பூக்களும் செடி கொடிகளும் அலங்கரிக்க காட்சியளிக்கும் இந்த குடியிருப்புப் பகுதிகளே மிகப் பெரிய ஒரு ஈர்ப்பு. இந்த நகரில் சுற்றுலா பயணிகளைக் கவரும் பல அம்சங்கள் உள்ளன. உதாரணமாக ஆங்காங்கே காணப்படும் அழகுப் பொருட்கள் பீங்கான் (porcelain) சமையல் மற்றும் அலங்கார கைவினைப் பொருட்கள் போன்றவை இங்கு வருகையளிக்கும் சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்லும் போது எடுத்துச் செல்ல நல்ல ஞாபகச் சின்னம்.







குதிரை வண்டிகளில் மட்டுமல்ல சவாரி, கழுதை டாக்ஸிகளிலும் இங்கு உண்டு. ஒவ்வொரு கழுதைக்கும் ஒரு அட்டை தலையில் கட்டப்பட்டு அதில் அந்தக் கழுதையின் பதிவு செய்யப்பட்ட டாக்சி எண் உள்ளது. 15 நிமிட சாவரியில் மிஹாஸின் வெள்ளை கிராமத்து சாலைகளைப் பார்த்தவாரே பவனி வரலாம்.







Bullring - காளைவளையம். ஸ்பெயின் காளை பந்தயத்திற்கு புகழ்பெற்ற நகரம். அண்டலூசியாவின் கலைகளில் உலகப் பிரசித்தி பெற்றது காளை அடக்கும் விளையாட்டு. இங்கு காளையை அடக்குவது மட்டுமல்ல; மாறாக அதனை அடக்க முயல்பவர் அதனை ஈட்டியினால் தாக்கி கொல்வதே வழக்கம். இங்கு காளை அடக்கும் காட்சிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுகின்றன
.







போட்டியில் பங்கு கொள்ளும் காளைகள் அவற்றிற்கென குறிப்பிடப்பட்டுள்ள தனி அறைகளில் காத்திருக்கின்றன. போட்டிகளைக் காண ஒவ்வொரு வாரமும் மக்கள் இங்கு கூடுகின்றனர். போட்டி நடைபெறாத சம்யம் இந்த வளையத்தைச் சுற்றிப் பார்க்க 3 யூரோ வசூலிக்கப்படுகின்றது.











மலாகா வைன்(wine) உற்பத்திக்கு மிக பிரசித்தி பெற்ற நகரம். மாலையில் உணவருந்துகையில் சிவப்பு வைன் (dry / sweet) வகை வைன் உணவோடு அருந்துவது இங்குமட்டுமல்ல ஐரோப்பா முழுமைக்கும் உயரிய பண்பாடாகவும் கருதப்படுவது. பொதுவாகவே இரவு உணவின் போது வைன் இருப்பது ஐரோப்பிய கலாச்சாரம். இதில் ஸ்பெயினின் அண்டலூசியா விதிவிலக்கல்ல.







கத்தோலிக்க தேவாலயங்கள் - மிஹாஸ் சிறு நகரிலேயே மூன்று கத்தோலிக்க தேவாலயங்களைப் பார்க்க முடிந்தது. இதற்கு மேலும் கூட சில இருக்கலாம். மூன்றிலும் ஒரு ஒற்றுமையைப் பார்த்தேன். ஏசு கிறிஸ்துவின் சிலைகள் ஆங்காங்கே இருந்தாலும் மேரி அன்னையின் சிலைக்கு பிரதான இடம் கொடுக்கப்பட்டிருப்பது இங்கு ஒரு புதுமை. ஜெர்மனியில் ஏறக்குறைய எல்லா தேவாலயங்களிலும் பிரதான இடத்தில் ஏசு சிலை தான் உள்ளன. அண்டலூசியாவில் ஒரு மாற்றம். அன்னா மரியா (Anna Maria) இங்கு மூலக் கருவறையில் வீற்றிருக்கிறார். இது குறிப்பிடத்தக்க ஒரு வித்தியாசம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.



Tuesday, November 3, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 3

3ம் நாள்: புவன்ஜிரோலா, மிஹாஸ்



சரி நாவலிலிருந்து சுற்றுப் பயண விபரங்களுக்கு வருவோம். மூன்றாம் நாள் எங்கள் திட்டத்தில் புவன்ஜிரோலாவும் மிஹாசும் இருந்தன.







புவன்ஜிரோலா எஸ்டாபோனாவிலிருந்து ஏறக்குறைய 30 கிமி வடக்கே உள்ள கடற்கரை நகரம். எங்கள் தங்கும் விடுதி இருக்கும் எஸ்டாபோனாவிலிருந்து இங்கு செல்ல ஏறக்குறைய 35 நிமிடங்கள் தேவை. எஸ்டாபோனாவிலிருந்து செல்லும் போது புவன்ஜிரோலாவிலிருந்து முதலில் நம்மை வரவேற்பது சோகாயில் மாளிகை (Sohail Castle). சோகாயில் எனும் இப்பெயர் இஸ்லாமியர்கள் இந்த நகரை ஆட்சி செய்த போது இக்கோட்டைக்கு இட்ட பெயர். சோகாயில் என்பது அரபு மொழியில் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் குறிப்பது என்ற குறிப்பும் இந்த கோட்டையின் வாசலில் உள்ள விளக்கச்சுவரொட்டியில் குறிக்கப்பட்டுள்ளது.







கடற்கரையோரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மற்றும் பலர் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். ஏறக்குறைய 12ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட மாளிகை இது. ஒரு பாதுகாப்புச் சுவரும் இந்த மாளிகையைச் சுற்றி உள்ளது. இதுவும் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான். இந்தக் கோட்டையின் ஒரு கோபுரமும் சுவர்களின் பெரும் பகுதியும் பின்னர் நெப்போலியனால் தகர்ப்பட்டுள்ளன. புவன்ஜிரோலா டவுன் ஹால் சரித்திர மாணவர்கள் இந்தக் கோட்டையைத் தற்போது புணரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்தி இக்கோட்டைக்கு மக்களை அழைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் என்ற செய்தியை இங்குள்ள தகவல் மையத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. தற்போது இந்த மண்டபத்தில் பல ஒன்று கூடல் நிகழ்வுகள், இசை நடன நிகழ்ச்சிகள் அவ்வப்போது நிகழ்கின்றன.







புவன்ஜிரோலா சுற்றுலா விடுதிகள் நிறைந்த பகுதி. ஏறக்குறை 10 கிமி தூரத்திற்கு ஒன்றை அடுத்து ஒன்றாக தங்கும் விடுதிகள், சுற்றுலா பயணிகளுக்கான விற்பனைப் பொருட்கள் அடங்கிய வியாபார ஸ்தலங்கள், உணவு விடுதிகள் என கடைகள் வலது புறத்திலும், கடற்கரை மணலில் இதமான சூழலை ரசித்துக் கொண்டிருக்கும் பயணிகளையும் பார்க்க முடிகின்றது. எண்ணிலடங்கா தங்கும் விடுதிகள். ஒன்றை அடுத்து மற்றொன்று. பெரும்பாலும் அபார்ட்மண்ட் வகையிலான தங்கும் விடுதிகள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன.







அடுத்து புவன்ஜிரோலா நகரின் மையப் பகுதி. சாலையின் இரு மருங்கிலும் பற்பல கடைகள். உள்ளூர் மக்களுக்குத் தேவையான பொருட்களும் சுற்றுறுலா பயணிகளைக் கவரும் கடைகளும் பல இங்குள்ளன. அழகான ஆனால் குறுகிய சாலைகள். சாலையின் இரு பகுதியிலும் குட்டையான மரங்களும் ஆங்காங்கே மக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க நாற்காலிகளும் பல சாலையின் இரு பக்கத்திலும் வைக்கப்பட்டு மிக ரம்மியமான காட்சி அளிக்கும் நகர்ப்பகுதி இது.







பழைய சுவடுகளைப் பிரதிபலிக்கும் கோட்டை மதில்கள் இருந்தாலும் பெரும்பாலும் இந்த நகரைச் சுற்றியிருக்கும் அடுக்குமாடி கட்டிடங்கள் சுற்றுப் பயணிகளைக் குறிவைத்து இயங்கும் வர்த்தக நிலையங்கள் இந்த நகரை ஒரு சுற்றுப் பயணிகளுக்கானப் பிரத்தியேக நகரம் என்பதையே காட்டி நிற்கின்றன.






Monday, November 2, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 2





விடுமுறையில் புத்தகங்கள் வாசிப்பதும் எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. இம்முறையை விடுமுறையில் வாசிக்க இரண்டு புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தேன். ஒன்று Sam Bourne எழுதிய The final reckoning மற்றொன்று Dan Brownனின் புதிய நாவல் The lost Symbol. The final reckoning விமானத்திலேயே படிக்கத் தொடங்கி விட்டேன். ஆரம்பமே மிக சுவாரசியமானது. நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு வரும் ஒரு வயதான மனிதர் பாதுகாப்புப் படைகளால் தீவிரவாதி என தவறாக நம்பப்பட்டு கொல்லப்படுகின்றார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் விஷயங்களை மிகச் சுவையாக விவரித்துச் செல்லும் நாவல் இது. இது உண்மை சம்பவங்களை அடிப்படையில் கொண்டு பின்னப்பட்ட நாவல். 2ம் உலகப் போருக்கு முன்னர் 1939, 1940களின் ஆரம்பத்தில் லித்துவானியா, போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் யூத மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஆயிரக் கணக்கான யூதமக்கள் பல்வேறு தருணங்களில் ஆயிரம் ஆயிரமாக கொல்லப்பட வரலாற்று செய்தியைப் படிப்படியாக பல குடியிருப்புக்களில் (ghettoes
) வைக்கப்பட்டிருந்த யூத மக்களைக் குழுக்களாகக் கொன்று குவித்த விதத்தை இந்த நூல் விவரிக்கின்றது. அக்கால கட்டத்தில் அக்குழுக்களில் இந்தக் கொடுமைகளை அனுபவித்த சில இலைஞர்கள் Dam Israel Nokeam (DIN) என்ற ஒரு இரகசிய அமைப்பை உருவாக்கி அதன் வழி செய்திகள் பரிமாற்றம் செய்தது, மற்றும் 2ம் உலகப்போருக்குப் பின்னர் இக்குழுவினர் நாஸி பழைய உயர் அதிகாரிகளில் சிலரை மிகத் தந்திரமாகக் கொன்றது என பல உண்மைத் தகவல்களைச் சில பெயர் மாற்றங்களோடு இந்த நூல் மிக மிக சிறப்பாக விளக்கிச் செல்கின்றது.



இந்த நாவலில் வரும் DIN இயக்கத் தலைவர் உண்மையான யூத குழுவினர் தலைவரான Abba Kovne ஐ மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. யூத மக்களின் மனித உரிமைப் போராட்டம், நாடிழந்து மக்கள் பட்ட கஷ்டங்கள், பின்னர் படிப்படியாக இஸ்ரேல் தனி யூத நாட்டை உருவாக்க நடந்த சில முக்கியச் செய்திகளை மிகக் கொஞ்சம் கதைகளோடும் பல் உண்மைச் சம்பவங்களோடும் சேர்த்து ஆசிரியர் எழுதியிருக்கின்றார். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான கெர்ஷோன் மாட்ஸ்கின் என்பது புனைப்பெயர் என்றாலும் இவரும் ஒரு உண்மையான ஒரு முக்கிய நபரின் சித்தரிப்பு. 2ம் உலகப் போருக்குப் பின்னர் DIN அமைப்பு ஜெர்மானிய நாஸி அதிகாரிகளில் தண்டனைகளிலிருந்து தப்பிய பலரை ஒழிக்க முயன்ற தந்திர முயற்சிகளில் திட்டமிடப்பட்ட 'plan A', 'plan B' எனக் குறிப்பிடப்படும் இரண்டும் மிக விரிவாக இந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன. இதில்
plan B என்பது விஷத்தை உணவில் கலந்து சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ஜெர்மன் நாஸி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதும் அதனால் 2300 ஜெர்மானிய நாஸிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதும் பதிவில் உள்ள உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதில் எத்தனை ஜெர்மானிய நாஸிகள் இறந்தனர் என்ற தகவலை அரசாங்கம் சரியாக வெளியிட வில்லை என்ற போதிலும் DIN செயல்படுத்திய இந்தத் தாக்குதல் ஓரளவுக்கு பாதிப்பை அப்போது ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனாலும் 2ம் உலகப் போருக்குப் பின்னர் முழு கவனமும் தனி இஸ்ரேல் நாடு எனும் ஒருமித்த கருத்தை அடைப்படையாக கொண்டு இயங்கியதால் DIN தனது செயல்பாடுகளைப் படிப்படியாக முடக்கிக் கொண்டது. ஆனாலும் DIN வழி ஏறக்குறைய 50 இளைஞர்களும் இளைஞிகளும் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து இவ்வகைப் பழிதீர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்னும் சரித்திர உண்மையை இந்நாவலைப் படிப்பவர்களுக்ப் புரிய வைத்திருக்கின்றார் நாவலாசிரியர். இவரது முந்தைய வெளியீடான The Last Testament கூட மிக அருமையான ஒரு நாவல்.



ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு சில ஆண்டுகள் சமாதான அமைப்புப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்ற இந்நாவலாசிரியர் தான் சந்தித்த, கேட்ட பார்த்த அனுபவித்த உண்மை சம்பவங்களை நாவலில் திறம்பட சேர்த்து விவரித்து படிப்பவர்களுக்கு நல்ல தகவல் விருந்து அளிக்கக்கூடியவர் என்பது இவரது இரண்டு நாவல்களை வாசித்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.