Friday, March 6, 2015

(Trier) ட்ரியா - ரோமானிய பழம் நகரம் + கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊர்

​ஜெர்மனியில் பல சிறு நகரங்கள் உலகப் புகழ் நிறைந்த வரலாற்றைப் பின்னனியாகக் கொண்டு திகழ்பவை. வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை என எந்த மானிலத்திற்குச் சென்றாலும் அல்லது இந்த நாட்டின் எந்த எல்லைக்குச் சென்றாலும் ஏதாவது ஒரு வரலாற்றுச் சிறப்புச் செய்தியை வருவோருக்கு வழங்க குறையேதும் வைப்பதில்லை இந்த நாடு.




இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த சிறிய நகரம் தான் ட்ரியா. மோசல் நதியின் கரையோரங்களில் அமைந்த நகரங்களில் ஒன்று இது. மோசல் நதிக்கரையோரம் என்பது எழில் தவழும் ஒரு பகுதி. காணும் இடமெங்கும் மலைப்பாங்கான இடங்களில் திராட்சை தோட்டங்கள் நிறைந்திருக்க, ஆங்காங்கே பல கோட்டைகள் செல்லும் பாதைகளில் தென்படுவதைக் கண்டு ரசிக்கலாம்.

ஸ்டுட்கார்ட் நகரிலிருந்து ஏறக்குறைய 320 கிமீ தூரத்தில் இந்த நகரம் இருக்கின்றது. ஒரு காலத்தில் ரோமானியப் பேரரசின் வடபகுதியில் தலை நகரமாக விளங்கிய சிறப்பு கொண்டது ட்ரியா எனும் போது இந்த நகரின் தனிச்சிறப்பினை ஓரளவு நம்மால் ஊகிக்க முடியும். ட்ரியாவின் எல்லையில் அமைந்திருக்கும் சிறிய ஐரோப்பிய நாடு லுக்ஸெம்பர். ஆக ஏறக்குறைய 20 கிமீ தூரத்தில் ஜெர்மனியிலிருந்து லுக்ஸம்பெர்க் சென்று விடலாம். இரு நாடுகளுக்குமான எல்லை  நகரமாக அமைந்திருக்கின்றது ட்ரியா.



ரோமானியப் பேரரசு தமது ஆட்சியை விரிவாக்கியபோது ஜெர்மானிய நிலப்பகுதியில் முதலில் உருவாக்கிய நகரம் ட்ரியா. கி.மு.1ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நகரம் இது. இந்த நகரில் இன்றளவும் வானை நோக்கி நிமிர்ந்து நிற்கும் நகரின் கத்தீட்ரல் தான் ஜெர்மனியின் மிகப்பழமையான கத்தீட்ரல்.கிபி.2ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.




இந்த நகரின் நுழைவாயில் கதவு  Porta Nigra  என அழைக்கபப்டுவது. கி.பி 1ம் நூற்றாண்டு எனக் கணக்கிடப்படப்படும் இந்த எல்லைக்கதவு நகரின் மையப்பகுதி நுழைவாயிலாக அமைந்திருக்கின்றது. ஒரு வகை கருமையான கற்களால் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருப்பதால் இதற்கு இப்பெயர் வழக்கில் நிலைத்து விட்டது.




பல நூற்றாண்டுகளாக பல வரலாற்று நிகழ்வுகள் இந்த சிறு கோட்டையில் நடைபெற்றிருக்கின்றன. தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகள் கத்தோலிக்க மதஸ்தாபனத்தின் தொடர்பு மையமாகவும் திகழ்ந்த்து வந்தது. அதன் பின்னர்.    1802ல் நெப்போலியன் போனபார்ட் இந்த கோட்டையோடு இணைக்கப்பட்டிருந்த தேவாலயத்தையும்  சமய மடத்தையும் கலைக்க, அதன் பின்னர் இந்த கட்டிடம் மீண்டும் ரோமானிய அரசின் முந்தைய வடிவத்திற்கே மீண்டது.




1986ம் ஆண்டு போர்ட்டா நிக்ரா யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அறிய சின்னம் என தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.





ட்ரியாவில் ரோமானியப் பேரரசு அமைத்த கோட்டையின் தடையங்களை ஓரளவே காண முடிகின்றது. ஆயினும் இங்கே அரச குடும்பத்தினர் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட தெப்பக்குளம் ஒரு அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.




சுடுநீர் குளம் ஒரு பகுதியிலும் குளிர்ந்த  நீர் குளம் மற்றொரு பகுதியிலும் என இரண்டு பெரிய குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குளங்களில் நிலையான நீர் தேக்கம் என்றில்லாமல் தேவைப்படும் போது நீர்பாய்ச்சி விடும் வகையில் சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. வித்தியாசமான ஒரு தெப்பக்குள கட்டுமானம் இது என்பதில் ஐயமில்லை.




நகரின் மையத்திலேயே க்ளேடியேட்டர்கள், அதாவது வீரர்கள் போரிடும் மைதானமும் இருக்கின்றது. வட்ட வடிவ மேடையில் வீரர்களுக்கிடையே யுத்தம் நடக்கும் போது பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க என மேல் பகுதியில் வட்டமாக அமரும் இருக்கைகளை கற்களாளேயே வடிவமைத்திருக்கின்றனர். இவ்வகை மிகப் பெரிய ஆம்ஃபிதியேட்டர்களை, கிரேக்கம், இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகளில் நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.




ட்ரியாவின் அரச மாளிகையும் பூந்தோட்டமும் மிக நல்ல வகையில் பராமரிக்கப்படும் நிலையில் இருப்பவை. 12ம் நூற்றாண்டு கட்டிடமாகிய இதன் முன் புறத்தில் நல்லதொரு பூந்தோட்டம் இருக்கின்றது. அதன் இருபக்க சாலைகளிலும் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் அற்புதப் படைப்புக்கள்.









இந்த நகரில் தான் 19ம் நூற்றாண்டின் சிறந்த தத்துவ மேதைகளில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் பிறந்தார். உலக அரசியல் சித்தாந்தங்களில் மாற்று சிந்தனையை வெளிப்படுத்தி புதிய அரசியல் தத்துவம் ஒன்றினை படைத்த சிறப்பு இவரைச் சாரும். இவரது பிறந்த இல்லம் இருப்பதும் இப்பகுதியில் தான்.




20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் இந்த கட்டிடம் எந்த முக்கியத்துவமும் பெறாத நிலையில் தான் இருந்தது. 1928ம் ஆண்டில் SPD  அரசியல் கட்சி இந்த கட்டிடத்தை வாங்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டது. ஹிட்லரின் நாஸி ஆட்சியின் போது இந்தக் கட்டிடம் ஒரு அச்சு ஆலையாக அமைக்கபப்பட்டிருந்தது. அதன் பின்னர் 1947ம் ஆண்டு மேமாதம் 5ம் தேதி இந்த கட்டிடம் ஒரு அருங்காட்சியகமாக உருமாற்றம் கண்டது. அது முதல் தொடர்ந்து அருங்காட்சியகமாகவே இருந்து வருகின்றது. ஒருவருடத்திற்கு ஏறக்குறைய 32,000 வருகையாளர்கள் இந்த அருங்காட்சியகம் வந்து செல்கின்றனர் என்று அருங்காட்சியகக் குறிப்பில் உள்ளது.



இந்த நகருக்கு நான் சென்ற ஆண்டில் நவம்பர் மாத இறுதியில் வாகனத்திலேயே பயணம் மேற்கொண்டிருந்தேன். மோசல் நதிக்கரையின் ஓரத்திலேயே பனி மூட்டங்களுக்கிடயே பயணித்து செல்வதே புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. நகரின் வரலாற்று சிறப்புக்கள், தேவாலயம், ரோமானிய நாகரிகத்தின் பழமைச் சின்னங்கள், கார்ல் மார்க்ஸ் பிறந்த இல்லம் என ஒரு நாள் சுற்றிப்பார்த்து அடுத்த நாள் லுக்ஸெம்பெர்க் சென்று வந்தேன்.

லுக்ஸெம்பர்க் பயணக் குறிப்பை மற்றுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா

Friday, February 27, 2015

பாரீசீல் இன்று - விமான நிலைய சம்பவம் 27.2.2015

இன்று மதியம்.. 2 மணி வாக்கில்.. ஒரு வார கால அலுவலக பயணம் முடித்து பாரீசிலிருந்து ஸ்டுட்கார்ட் திரும்ப பாரீஸ் CDG விமான நிலையத்தில் செக் இன் செய்துவிட்டு ஒரு சிறிய உணவகத்தில் சாண்ட்வீச் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து ஒரு மேசையில் அமர்ந்து  அலுவலகப் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தேன்.

விமான நிலையத்தில்   Free WIFI  இணையத் தொடர்பு கிடைத்ததில் நேரத்தை வீணாக்காமல் சில பணிகளைமுடித்து விடலாம் என மூழ்கியிருந்த வேளையில்..

திடீரெனெ ஒரு பரபரப்பு.

சில காவல் அதிகாரிகள் கையில் நீண்ட துப்பாக்கியை ஏந்தியவண்ணம் மெதுவாக நடந்து வர சில விமான நிலைய  அதிகாரிகள் அவர்களுக்கு முன்னே வந்து கொண்டிருந்தனர். நான் அமர்ந்திருந்த பகுதியில் பலர் இருந்தார்கள். சிலர் சாப்பிட்டுக் கொண்டும்.. குழந்தைகளை மடியில் வைத்து தூங்க வைத்துக் கொண்டும்.. கதை பேசிக் கொண்டும்.. கணினியில் படம் பார்த்துக் கொண்டும் பாட்டு கேட்டுக் கொண்டும் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்கள் உலகில் மூழ்கியிருந்தோம்.

விமான நிலையாதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து மிக அமைதியாக மிகப் பணிவுடன்.. 'இப்பகுதியை உடனடியாக மூடுகின்றோம். தயவு செய்து காலி செய்யவும்'.  என குறிப்பிட்டனர். வரிசையாக முப்பதுக்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள்.. ஒவ்வொருவர் கையிலும் துப்பாக்கி..



வேறு எதுவும் கேட்காமல் ஒவ்வொருவரும் தத்தம் உடமைகளை எடுத்துக் கொண்டு அந்த இடத்தைக் காலி செய்தோம்.  வரிசையாக ஏர்போர்ட் கடைகளுக்குள் சென்று அவர்களிடமும் தெரிவிக்க கடைகளை இழுத்து மூடத்தொடங்கி விட்டனர் ஊழியர்கள்.

சற்று தூரம் நடந்த எனக்கு என்ன விஷயம் என கேட்டு தெரிந்து கொள்வோம் என ஆவல்..

ஒரு அதிகாரியை நெருங்கி ஆங்கிலத்தில் பேசி என்ன நடக்கின்றது.. என விசாரித்தேன்.

நாங்கள் அமர்ந்திருந்த  பகுதிக்கு அருகில் ஒரு பயணப் பை, உரிமையாளரில்லாமல் தனியாக இருந்திருக்கின்றது. அறிவிப்புக்கள் தந்த பின்னரும் யாரும் அதனைக் கோராத நிலையில் இது ஒரு பயங்கரவாத சதித்திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாமோ என சிலருக்கு ஐயம் வர அதிகாரிகளைத் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆக அந்தப் பையினுள் ஏதேனும் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற ஐயத்தில் அதனை அப்புறப்படுத்த வெடி குண்டு நீக்கும் பணி அதிகாரிகளும் காவல் துறையினரும் வந்து சேர்ந்து விட்டனர்.



இவ்வாண்டு ஜனவரி மாதம்  பாரீசை உலுக்கிய charlie hebdo  விஷம் உடனே ஞாபகத்திற்கு வந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடக்குமோ என்ற எண்ணம் மனதில் தோன்றாமல் இல்லை.  ஆயினும் காவல் அதிகாரிகள் இருக்கும் தைரியத்தில் செக்க்யூரிட்டி க்ளியரன்ஸ் செய்து விட்டு உள்ளே வந்து விட்டேன். அதனை அடுத்து 2 மணி நேரங்கள் ..   எந்த செய்தியும் கிடைக்கவில்லை..  நான் ஊர் திரும்ப வேண்டிய விமானமும் வந்து சேர களைப்பு மிகுதியுடன்.. கடநத் 5 நாட்களின் கூடுதல் பணிச் சுமை தந்த களைப்பும், அதோடு குளிரும் சேர விமானத்திலேயே தூங்கி விட்டேன்.

இன்றைய பயண அனுபவம் .. இதுவும் ஒரு வித்தியாசமான வகை அனுபவமாகவே அமைந்தது..!

குறிப்பு- என் செல்போனில் எடுத்த புகைப்படங்கள்.

Thursday, January 8, 2015

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 14

உலகின் மிக அழகான பகுதியில் சில மணி நேரங்களைக் கழிக்க விருப்பமா..? ஒரு சில பெயர்களைத் தான்  பட்டியலிடவேண்டும் எனச் சொன்னால்அதில் கண்டிப்பாக சுக்கோத்தை நேஷனல் பார்க் பெயரை நான் குறிப்பிடுவேன். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் ஒரு பகுதியாக இது உள்ளது. 

இப்பகுதியே 11 லிருந்து ம் 14ம் நூற்றாண்டு வரை மிகப் புகழ்பெற்று விளங்கிய சுக்கோத்தை பேரரசின் தலைநகரமாக விளங்கிய பகுதி. கோட்டை மதில் சுவர் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு பகுதி இது . 2 கிமீ தூரம் தூரம் கிழக்கிலிருந்து மேற்கு வரையும் 1.6கிமீ தூரம் வடக்கிலிருந்து தெற்கு வரையும் இந்த மதில் சுவர் சுற்றி வளைத்துள்ள பகுதிக்குள் அடங்கும். 




இந்த நேஷனல் பார்க் உள்ளே வாகனங்கள் செல்ல முடியாது. பயணிகள் பயணிக்க வாடகை சைக்கிள் வண்டிகள் உள்ளன. அல்லது கால்நடையாக செல்லலாம். எது விருப்பமோ அந்த வகையில் இந்தப் பகுதியை சுற்றி வலம் வரலாம். உள்ளே சென்று பார்க்க கட்டணம் தேவை. 

எங்கள் பயண வழிகாட்டி எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சைக்கில் என ஏற்பாடு செய்து விட்டார். கட்டணமும் முன்னரே கட்டியிருந்தமையால் எல்லோரும் ஒரு இடத்திலிருந்து இணைந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். 
உள்ளே  நுழைந்ததுமே ஒரு சுவர்க்கபுரிக்குள் நுழைந்து விட்ட பிரமிப்பு. 




புத்த விகாரைகளின் கலை அழகில் உள்ளே வரும் ஒவ்வொருவரும் மனதைப் பறிகொடுப்பர். அப்படி ஒரு வார்த்தைகளால் விவரிக்க இயலாத அழகு அப்பகுதி. 

ஆங்காங்கே பசுமையான புல் தரைகள்.  அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்த விகாரைகள். பார்க்கும் இடமெல்லாம் புத்தரின் எழில் மிகு வடிவச் சிலைகள். அமர்ந்த  நிலையில்.. நின்ற நிலையில்.. தியான வடிவில்..




மிகப் பெரிதாக.. பெரிதாக.. சிறிதாக.. மிகச் சிறிதாக.. பல் வேறு அளவுகளில்.. பார்க்கும் இடமெல்லாம் புத்தர் சிலைகள்.

இவை மட்டுமா.. ஆங்காங்கே தாமரைக் குளங்கள். அத்தாமரைக் குளங்களில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்களும் அல்லி மலர்களும் அதீத அழகின் வெளிப்பாடுகள் என்று சொன்னால் அது மிகையில்லை.




13ம் நூற்றாண்டு வாக்கில் சுக்கோத்தை  புகழின் உச்சியில் இருந்த காலம். இப்பிராந்தியத்தில் மிக முக்கியமான வர்த்தக மையமாகவும் சுக்கோத்தை விளங்கியது.  கைமர் பேரரசின் ஆட்சியும் மிக வலுவுடன் இருந்த காலம் அது. கைமர் அரசின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக பெருக அது சுக்கோத்தை அரசை பாதிக்கத் தொடங்கியது. சில வரலாற்றாசிரியர்கள் சுக்கோத்தை பேரரசின் பலம் 12ம் நூற்றாண்டு வாக்கிலேயே குறைய ஆரம்பித்தது எனக் குறிப்பிடுகின்றனர்.

சில வரலாற்றாசிரியர்கள் சுக்கோத்தை பேரரசே தாய்லாந்தின் ஒருங்கினைக்கப்பட்ட ஒரு பேரரசு என்ற ஆட்சி நிலையை முதன்  முதலில் உருவாக்கியது எனக் குறிப்பிடுகின்றனர். அதற்கு முன் வரை பல சிறிய சிறிய அரசுகள் இன்றைய தாய்லாந்தின் வெவ்வேறு பகுதிகளைத் தனித்தனியாக ஆட்சி செய்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 




மன்னர் ராம் காம்ஹெங் சுக்கோத்தை நகரை மேலும் மிக விரிவாக்கிப் பெரிதாக்கினார். இம்மன்னனின் ஆட்சிகாலத்தில் வடக்கு மேற்கு தெற்கு கிழக்கு என நால் திசைகளிலும் விரிந்து பரவியது இந்தப் பேரரசு. தேரவாத புத்ததை ஆட்சி சமயமாக அதிகாரப்புர்வ சமயமாகப் பிரகடனப்படுத்தினார் மன்னர். 

இந்த மன்னர் அரசியலில் மட்டும் சாதனை புரியவில்லை. இன்றைய தாய் எழுத்தினை வடிவமைத்து 
உருவாக்கியவரும் இந்த மன்னரே. இது 1238ம் ஆண்டில் நிகழ்ந்த  ஒரு வரலாற்று முகியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

இப்படி பல பெருமைகளுடன் செழித்து வளர்ச்சி பெற்று வந்த சுக்கோத்தை அரசு தனது மாட்சியை இழக்கும் துரதிஷ்ட நிலையும் ஏற்பட்டது. அதனை நான் அடுத்த பதிவில் காண்போம்.இப்போது சைக்கிளில் இந்த நேஷனல் பார்க்கை சுற்றி வருவோமே..:-)



Friday, November 28, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 13

மதிய உணவு முடித்து வெளியே வரும் போது மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. அங்கிருந்து எங்கள் பயணம் அடுத்து சுக்கோத்தை நகரை நோக்கிச் செல்வதாக பயணத்திட்டம். சுக்கோத்தை நகரில் ஒரு நாள் இருக்க வேண்டுமென்றால் அங்கே சுக்கோத்தை நகரிலேயே இரவில் தங்கி விடுவதுதான் சிறப்பாக இருக்கும் என்று பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.


​சுக்கோத்தையில் தங்கும் விடுதி

பயண ஏற்பாடு ஒவ்வொன்றும் மிகக் கவனமாக நேர விரயம் ஏற்படா வகையில் திட்டத்தில் பட்டியலிடப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்து வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கவனத்தில் கொண்டு பஸ் ஓட்டுனர், உதவியாளர், எங்கள் பயண வழிகாட்டி ஆகிய அனைவருமே செயல்பட்டனர்.


வாசல் பகுதியில்


ஏறக்குறைய இரண்டரை மணி நேரங்களுக்குப் பிறகு நாங்கள் சுக்கோத்தை நகரை வந்தடைந்தோம். அங்குள்ள  ஹோலிடே இன் ஹோட்டலில் எங்களுக்கான தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுக்கோத்தை மைய நகருக்கு சற்று தள்ளியே இப்பகுதி. ஆகையால் மாலை ஹோட்டலிலேயே இருந்து ஓய்வெடுக்கும்படி எங்கள் பயண வழிகாட்டி தெரிவித்திருந்தார். அங்கே ஜிம், நீச்சல் குளம் ஆகியனவும் இருந்தன. மாலை உணவை சாப்பிட வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற வகையில் ஹோட்டலிலேயே சிறப்பான ரெஸ்டாண்டும் இருந்தது.



கொய் தியாவ் அரிசி மாவினால் செய்யப்பட்ட நூடல் வகை.. மற்றும் காய்கள்

அந்த ஹோட்டல் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல். கலை நயத்துடன் உருவாக்கப்பட்டது. நானும் 1 மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டு சற்று ஓய்வெடுத்த பின்னர் அங்கேயே  மாலை உணவுக்கு சென்றே. என்னுடன் வந்திருந்த மேலும் சிலரும் அங்கிருக்க ஒரு சிலர் என்னுடன் இணைந்து கொண்டனர்.  கொய்தியாவ் வகை நூடல் மெனுவில் இருக்க அதனை நான் ஆர்டர் செய்திருந்தேன். மிக அழகாக வாழை இலையில் சுற்றி வைக்கப்பட்டு பரிமாறப்பட்டது. ரசித்து ருசித்து சாப்பிட்டேன். ஆசிய வகை உணவுகளுக்கு ஈடு சொல்ல உலகில் வேறு உணவே இல்லை என தாராளமாகச் சொல்வேன். தாய்லாந்து உணவின் சுவை தனித்துவம் மிக்கது என்பதில் சந்தேகமில்லை.


காலை உணவு

காலை உணவு பஃபெட் முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கேயே உணவு உண்டு பிறகு சுக்கோத்தை நகருக்குச் செல்ல வேண்டும்.

ஒரு நாள் தான் இந்தஹோட்டலில் எங்கள் வாசம். நாடோடிகள் போல கொண்டு வந்த பைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் எங்கள் பயண பேருந்தின் முன் வந்து நின்று கொண்டோம்.
சரியாக குறிப்பிட்ட நேரத்தில் எங்கள் பேருந்து சுக்கோத்தை நகர மையத்தை நோக்கிப் புறப்பட்டது.

சுக்கோத்தை.. ஒரு சுவர்க்கபுரி. என் வாழ்நாளில் நான் பார்த்து மகிழ்ந்து அங்கேயே இருக்கச் சொன்னால் இருந்து விடக்கூடிய ஒரு நகரம்.. அங்கே கால் பதிந்த நொடிமுதல் நான் 16ம் நூற்றாண்டுக்கே சென்று விட்டேன்.

அனந்தசயனத்தில், தியான வடிவத்தில் . யோக முத்திரையுடன், நின்ற வடிவத்தில், போதனை வழங்கும் வடிவத்தில் புத்தரை நான் பார்த்திருக்கின்றேன். இங்கே.. சுக்கோத்தையில் தான்  நடக்கும் நிலையில் புத்தரின் சிலை இருக்கின்றது. இந்த அற்புத சிலை இருக்கும் சுக்கோத்தை வரலாற்று பூங்காவைக் காண அடுத்த பதிவில் உங்களை அழைத்துச் செல்கின்றேன். இப்போது அந்தச் சிலையை மட்டும் பார்ப்போமே..!


சுக்கோத்தை புத்தரின் அழகிய காட்சி


தொடரும்...
சுபா

Wednesday, November 19, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 7

தோமஸ் பெக்கட் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிரிச்சியடைந்து ஏனைய பாதிரிமார்கள் அவர் கொல்லப்பட்ட இடத்திற்கு விரைந்தனர். இறந்த தோமஸ் பெக்கட்டின் உடலை தூக்கிச் செல்ல எத்தணித்த நான்கு வீரர்களும் அவரது உடலின் மேல் போர்த்தியிருந்த பெரிய அங்கியை நீக்கினர். 




தோமஸ் பெக்கட்டின் முதுகுப்புறத்தின் மேலாடையைத் தாண்டி உடலின் மேலே புழுக்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அவரது முதுகுப் புறமெல்லாம் புண் ரணமாகி சீழ் பிடித்து, மிகக் கோரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அவர் உடலை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து அரசர் ஹென்றியைப் பார்த்து இவ்விஷயத்தைச் சொல்ல தங்கள் குதிரைகளில் இங்கிலாந்திலிருந்து ஃப்ரான்சிற்கு அன்று இரவே அந்நால்வரும் விரைந்தனர்.

கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர், ஏசு கிறிஸ்து ஏனைய மக்களின் துயரைத் தாமே தாங்கி துயரப்பட்ட நிலையை நினைத்து தனக்குத் தாமே தண்டனை வழங்கிக் கொள்ளுதல் என்ற வகையில் உடலை வருத்தும் சில தண்டனைகளைத் தமக்குத் தாமே வழங்கிக் கொள்வது என்பது உண்டு. இதனை ஆங்கிலத்தில்  mortification of the  flesh என்று கூறுவர். தனது உடலை சாட்டையால் அடித்து புண்ணாக்குதல், சாக்கைக் கட்டிக் கொண்டு அதனையே உடையாக அணிந்து கொண்டு வாழ்தல், அடித்து தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளுதல், அடித்து தனது உடலை புண்ணாக்கி கிருமிகளும் புழுக்களும் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட அனுமதித்தல் என்ற வகையில் இந்த தனக்குத்தானே தண்டனை வழங்குதல் என்ற ஒரு சடங்கு மிகச் சிறு பாண்மை குழுவினரால மேற்கொள்ளப்படுவது.


காண்டபரி கத்தீட்ரல்

டான் ப்ரவுனின் டா வின்சி கோட் நூலை வாசித்தோரும் திரைப்படத்தைப் பார்த்தோரும் நிச்சயம் அக்கதையில் வருகின்ற ஒரு நிகழ்வை ஞாபகம் வைத்திருப்பீர்கள். அதில் வில்லனாக வரும் ஒரு இளைஞர் இப்படி தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஒவ்வொரு நாளும் சாட்டையால் தனது முதுகுப்புறத்தைத் தாக்கி தனக்குத் தானே துன்பம் கொடுத்துக் கொண்டு ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வருவார். அதுபோலத்தான் இந்த விஷயத்திலும்.

ஆனால் தோமஸ் பெக்கட் வெளியே மிக சாதுரியமான ஒரு ஆர்ச் பிஷப் என்ற பெயரில் உலா வந்தாலும் தனது சுய வாழ்க்கையில்  ஏசு பிரான் மீது அதீத பக்தி கொண்டு தனது உடலை தானே தண்டித்து ,ஏசு உலக மக்களுக்காக ஏற்றுக் கொண்ட வலியை தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தனது உடலை துன்பபபடுத்தி தினம் தினம் இறைவழிபாட்டில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். இது வெளியில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரது இறப்புக்குப் பின்னர் இச்செய்தி காட்டுத்தீ போல மிக விரைவாகப் பரவியது.


காண்டபரி கத்தீட்ரல் உள்ளே

மன்னர் ஹென்றி இச்செய்தி அறிந்து உடன் காண்டெபெரி திரும்பினார்.  தோமஸ் பெக்கட்டின் பூத உடலைக் காண மக்கள் கூட்டம் பெருகியது. இறைவனின் துன்பத்தைத் தானும் ஏற்றுக் கொண்டவர்.. மக்களுக்காக வாழ்ந்தவர் என்ற வகையில் தோமஸ் பெக்க்ட்டின் புகழ் விரிவாகப் பேசப்பட ஆரம்பித்து.

தோமஸ் பெக்கட்டின் இறுதிச் சடங்குகள் மன்னரால் சிறப்பாக செய்து முடிக்கப்ட்டன. அது முதல் காண்டபரி கத்தீட்ரல் புனித யாத்திரிகர்கள் வந்து செல்லும் தலமாக உருமாற்றம் கொண்டது. ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து மக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க காண்டபெரி நகரின் புகழ் ஐரோப்பா முழுதும் பரவியது.


மன்னர் 4ம் ஹென்றி, மனைவி ஜோஅன்னா

தோமஸ் பெக்கட்டின் பெயரால், தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் பெருக ஆரம்பித்தன. இந்த வகையில் தோமஸ் பெக்கட் காண்டபெரி நகருக்கு தனிச்சிறப்பினை வழங்கிய உத்தமராக மக்களால் இன்றும் கருதப்படுகின்றார்.

சரி.. தோமஸ் பெக்கட் கதையைப் பார்த்து விட்டோம். இந்த ஊரில் இருக்கும் ஏனைய விஷயங்களைப் பற்றி அடுத்து சஸ்பென்ஸ் ஏதும் இல்லாமல் சாவகாசமாகப் பார்ப்போமே..

தொடரும்


சுபா

Monday, November 17, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 6

கதை என்றால் தாம் நாம் எல்லோருக்கும் பிடிக்குமே.. :-)
தோமஸ் பெக்கட் கதையை மீண்டும் தொடர்கின்றேன். தொடரின் முந்தைய பகுதிகளை வாசிக்க விரும்புவோர் ​http://subastravel.blogspot.com வலைப்பூ சென்று வாசிக்கலாம்.

தனது நண்பரான தோமஸ் பெக்கட் ஆர்ச்பிஷப்பாக இருந்தால் தமக்கு மத சம்பந்தப்பட்ட காரியங்களில் ஏதுவாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் மன்னர் ஹென்றிக்கு மனதில் அடிப்படையில் இருந்தமையால்தான் அடிப்படை தகுதிகள் முழுதும் பெறாத தோமஸ் பெக்கட்டை இப்பதவிக்குப் பரிந்துரைத்து போப்பின் சம்மதத்தையும் பெற்று பதவியில் அமர்த்தினார். ஆனால் அதன் பின்னர் நடந்தவை வேறாக அமைந்துவிட்டன.

பல மாற்றங்களை வழிபாட்டு அமைப்பின் மேலாண்மையில் அறிமுகப்படுத்தி மன்னரை விட அதிகாரம் பெறும் வகையில் தனது நிலையை வளர்த்துக் கொண்டு உயர ஆரம்பித்தார் பெக்கட். நிதி விவகாரங்களும் தலைதூக்க ஆரம்பித்தது. மன்னரின் செலவுகளையும் கேள்வி கேட்க ஆரம்பித்தார் பெக்கட். அச்சமயத்தில் பெக்கட்டை அரச ஆணைக்கு உட்படுத்தி விசாரிக்க வேண்டும் என மன்னர் ஹென்றி உத்தரவு பிறப்பிக்க, அதனைப் பார்த்த தோமஸ் பெக்கட் அன்று இரவே காண்டபெரியை விட்டு இங்கிலாந்திலிருந்து பெயர்ந்து ஃப்ரான்சிற்குச் சென்று விட்டார்.

இந்த மனக்கசப்பு தொடரக்கூடாது என நினைத்த மன்னர் ஹென்றி அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய, 1170ம் ஆண்டில் நோர்மண்டியில் மன்னர் ஹென்றியும் தோமஸ் பெக்கட்டும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் விளைவாக நவம்பர் 30ம் தேதி தோமஸ் மீண்டும் காண்டபெரிக்குத் திரும்பி தனது பதவியை ஏற்றுக் கொண்டு ஆர்ச் பிஷப்பாகத் தொடர்ந்தார்.

தோமஸ் பெக்கட் காண்டபெரிக்குத் திரும்பி விட்டாலும் மன்னர் ஃப்ரான்ஸிலேயே அடுத்து சில நாட்கள்  தங்கிவிட்டார். தனது நெருக்கமான வீரர்கள் நால்வரிடம் பேசும் போது தோமஸ் பெக்கட் ஒழிந்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருப்பார் போலும்.... மன்னரின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொண்டு 4 வீரர்களும் தோமஸ் பெக்கட்டை கொலை செய்யும் நோக்கத்துடன் இங்கிலாந்தின் காண்டபெரி நகரை நோக்கி குதிரையில் அன்று இரவே விரைந்தனர்.


ஆர்ச் பிஷப் மாளிகை.. இன்று சற்றே மேம்படுத்தப்பட்ட நிலையில்


ஆர்ச்பிஷப் தோமஸ் பெக்கட்டை பார்த்து மன்னரின் வருத்தத்தைத் தெரிவிப்பதோடு அவரை கொல்லவும் இந்த நான்கு வீரர்களும் தயாராக இருந்தனர். அவர்கள் வந்து சேர்ந்த போது நேரம் இரவாகி விட்டது. நால்வரும் ஆர்ஷ்பிஷப்பின் மாளிகை எதிர்புரத்தில் அமைந்திருக்கும் தங்கும் விடுதியில் தங்க வசதி செய்து கொண்டு அன்று இரவே தோமஸ் பெக்கட்டை கொன்று விடுவது என முடிவு செய்து கொண்டனர்.


மன்னரின் வீரர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதி .. இன்றும்

நால்வரும் இரவு வேளையில் ஆர்ஷ் பிஷப் மாளிகைக்கு வந்து கதவை தட்டி தாம் தோமஸ்பெக்கட்டை அரச ஆணையின் உத்தரவின் படி காண வேண்டும் என காவல் இருப்போரிடம் கேட்க அவர்கள் நால்வரும் ஏதோ பாதகம் விளைவிக்க வந்திருக்கின்றனர் என அறிந்த ஏனைய பாதிரிமார்கள் இந்த நால்வரையும் உள்ளே விட அனுமதிக்கவில்லை. கதவை பெரிய கம்பு கொண்டு தட்டி தட்டி அதிகமாக ஓசை எழுப்ப இந்தச் சந்தம் கேட்டு வந்த தோமஸ் பெக்கட் இந்த நால்வரையும் உள்ளே அனுமதிக்கக் கேட்டுக் கொண்டார். உள்ளே வந்த நால்வரும் தாம் அரச ஆணைப்படி தோமஸ் பெக்கட்டிடம் தனியாகப் பேச வேண்டும் எனக் கேட்க ஏனையோர் செல்லும்படி உத்தரவிட்டு அவர்களைத் தனிமையில் சந்திக்கின்றார் தோமஸ் பெக்கட்.

தனியாக இருக்கும் தமது உயிருக்கு ஆபத்து என்பதை இவர் அறிந்து கொண்டார். ஆயினும் வேறு வழியில்லை. நால்வரது வாளும் தோமஸ் பெக்கட்டின் உடலை கத்தியால் வெட்ட அவர் தலையைத் துண்டித்து கொன்றனர். இது இந்த காத்திட்ரலின் ஒரு பகுதியிலேயே நடந்தது. இந்தப் பகுதி தற்சமயம் தோமஸ் பெக்கட் நினைவு சொல்லும் இடமாக இதே காத்திட்ரலில் இருக்கின்றது.



தோமஸ் பெக்கட் கொல்லப்பட்ட இடம்

கொல்லப்பட்ட தோமஸ்பெக்கட்டின் இறந்த உடலை எடுத்துச் செல்ல தயாராக அவரது ஆடைகளைக் களைய முயன்ற நான்கு வீரர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி ஸ்தம்பித்து நின்றனர். எதனால் அவரகள் அதிர்ச்சியடைந்து ஸ்தம்பித்து நின்றனர் என்பதை அடுத்த பகுதியில் சொல்கின்றேன்...

தொடரும்

சுபா

Tuesday, November 4, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 12

தாய்லாந்தில் முதல் பாதி நாள் பார்த்த காட்சிகளே மனதில் 'எங்கு காணினும் புத்தர்' என்ற சிந்தனையை எழுப்பியிருந்தது. ப்ரா மங்கோன் போபிட் விகாரையைப் பார்த்து விட்டு கடைகளுக்கு இடையே நடந்து உணவுப் பொருட்களைப் பார்த்துக் கொண்டும் சிலவற்றை வாங்கிக் கொண்டும் வந்து பேருந்தில் சிறிது சாப்பிட்டு விட்டு அமர்ந்து விட்டோம். மதிய உணவுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் எங்கள் பயண வழிகாட்டி ஏற்பாடு செய்த்கிருந்தார். அங்கு செல்ல ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகும் என்றபடியால் பேருந்தில் அமர்ந்த வாறு ஒரு பக்க சாலை காட்சிகளை ஓடும் பேருந்திலிருந்தே கவனித்துக் கொண்டு பயணத்திக் கொண்டிருந்தோம்.

மதிய உணவை அக்குறிப்பிட்ட இடத்தில் சாப்பிட்ட பின்னர் எங்கள் பயணம் சுக்கோத்தை நகரை நோக்கிச் செல்வதாக ஏற்பாடு. அயோத்தையாவிற்கும் சுக்கோத்தை நகருக்கும் ஏறக்குறைய 346 கிமீ தூரம். ஆக அந்த வழியிலேயே இடையில் இருக்கும் ஒரு உணவகத்தில் தான் எங்கள் மதிய உனவு ஏற்பாடாகியிருந்தது.

சாலையில் செல்லும் போதே தாய்லாந்தின் பசுமையான நெல் வயல்களை நான் கவனிக்கத் தவறவில்லை. விவசாயம் இன்னாட்டின் அதி முக்கிய தொழில். அரிசு உணவு என்பதே தாய் மக்களின் பிரதான உணவு. இதன் அடிப்படையில் நல்ல நில வளமும் நீர்வளமும் வே|று நிறைந்திருப்பதால் இங்கு விவசாயம் மிகச் செழிப்பாகவே நடைபெறுகின்றது.

தாய்லாந்து அரிசி வகை பற்றி பலர் அறிந்திருக்கலாம். ஐரோப்பாவில் மிகப் பரவலாகக் கிடைக்கும் அரிசி வகைகளில் தாய்லாந்தின் ஜாஸ்மீன் அரிசி மிகப் பிரபலம். ஜெர்மனியில் உள்ள சீன, தாய்லாந்து  வியாட்நாம் உணவகங்களிலும், அவசர உணவகங்களிலும் இந்தத் தாய் வகை ஜாஸ்மீன் அரிசியே மிகப் பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகையாக உள்ளது. இந்த அரிசி வகை பளிச்சென்று வெண்மையாக இருப்பதுடன் சற்றே பிசுபிசுப்புத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். நான் இந்திய வகை சமையலுக்கு இதனைச்  சமைத்து முயற்சித்திருக்கின்றேன். ஆனால் இந்த அரிசி நமது இந்திய குழம்பு வகைகளுக்கு பொருந்துவதாக இல்லை. தாய்லாந்து வகை உணவு அல்லது ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு இவை பொருத்தமாக உள்ளன. சுவையும் சேர்கின்றது.

வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டு வரும் நமக்கு ஆங்காங்கே சாலைகளில் விற்கப்படும் வழிபாட்டு சிலைவடிவங்கள் கண்களுக்குத் தென்படும். சேவல், யானை, காவலாளி, பாம்பு , பொம்மை வடிவங்கள், தெய்வச் சிலை வடிவங்களில் பிரம்மா, விநாயகர், புத்தர் சிலைகள் என பல வடிவங்கள் சாலையோரங்களில் விற்கப்படுவதைக் காணலாம். இதனைப் பார்க்கும் போது திருநெல்வேலியிலிருந்து கயத்தாறு செல்லும் சாலையில் நான் ஒரு முறை பயணித்த போது சாலை ஓரத்தில் விற்கப்படும் மண்பாண்ட வடிவ குதிரை வடிவங்களும் ஏனைய மண்பாண்ட வடிவங்களும் தான் மனதில் நிழலாடின.




ஏறக்குறைய ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் நாங்கள் உணவு உண்ண ஏற்பாடாகியிருந்த உணவகம் வந்து சேர்ந்தோம். வாசலில் பார்த்தால் உணவகம் என்ற அடையாளமே தெரியாமல் ஒரு பூங்காவிற்குள் செல்வது போல தோற்றமளித்தது. பசுமை அழகு கண்களைக் கொள்ளை கொண்டது. இளம் பசுமை அந்த இடத்தின் ரம்மியத்தியத்தை அதிகரித்தது. பூக்கள் அந்த அழகுக்கு அழகு சேர்த்தன. இதற்கிடையே நடுவில் ஒரு தனி இடத்தில் மேசை போடப்பட்டு அங்கே அழகழகாக வரிசையாக உணவுப் பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. சூடான ஜாஸ்மின் அரிசியின் சுவையும் தாய்லாந்து தேங்காய்பால் குழம்பின் மனமும் அந்த நேரத்துப் பசியை அதிகரித்தன.




சாப்பிட்டு விட்டு சற்று அந்தப் பூங்காவை வலம் வந்தேன். உணவகத்தை மிகச் சிரத்தையெடுத்துப் பசுமை நிறைந்த பூங்காவாக்கி இருந்தனர். பூங்காவின் மையத்தில் நம் கண்களுக்கு நன்கு பழகிய ஒரு வடிவம்.. ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் என்னை தூரத்திலிருந்தே கவர்ந்தது.



ஆகா.. என்ன அழகு என வியந்து அருகில் சென்று பார்த்தேன். சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கின்றார் போலும் என பார்ப்பவரை நினைக்க வைக்கும் வகையில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தார்  தொந்திக் கணபதி.

தொடரும்...

சுபா