Sunday, April 12, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -3


​எத்தியோப்பிய  விமான நிலையத்தில் ஜொஹான்னாஸ்பர்க் நகர் நோக்கி எங்கள் விமானம் புறப்பட்டது.



அடிஸ் அபாபா.. விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்



அடிஸ் அபாபா.. விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்​

எனக்கும் தோழி இந்துவுக்கும் இடையில் இருந்த இருக்கையில்  ஒரு ஆப்பிரிக்க இளம் பெண் வந்து அமர்ந்தார். ​கையில் தொலைபேசி.. அதில் பாட்டுகேட்டுக் கொண்டு தன்னை மறந்து தலையசைத்து ரசித்து அந்த  மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தார் அந்தப் பெண்.


​அடிஸ் அபாபா.. விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

நான் என் கையோடு எடுத்துச் சென்றிருந்த ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.  நூலின் பெயர் பண்டைய தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்பது.  இது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஒரு தரமான வெளியீடு. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் இராசு.பவுன் துரையின் நூல். நூலாசிரியர் பல ஆண்டுகளாக தொல்வடிவங்களின் குறியீடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் எனபதனை நூலின் அறிமுகப் பகுதியிலிருந்து தெரிந்து கொண்டேன்.

இந்த நூலில் குறியீடுகளை ஆய்வு செய்யும் முறை, தமிழக நிலப்பரப்பில் காணப்படும் பாறை வரைவுகள், குறியீடுகள் பற்றிய செய்திகள்,  தொல்வடிவங்களின் குறியீடுகள், மட்பாண்ட வரைவுகள்  சிந்துவெளி நாகரிக குறியீடுகளுடன் தமிழக நிலப்பரப்பில் காணப்படும் குறியீடுகளின்  தன்மை ஒப்பீடு, குறியீடுகள் அவை பேசும் மொழி என்ற வகையில் நூல் செல்கின்றது.

ஏறக்குறைய 6 மணி நேர பயணம் என்பதால் வாசிப்பில் மூழ்கியிருந்தேன். இடையில் விமானத்தில் வீடியோ பார்க்க இந்துவுக்கு உதவி தேவைப்பட்டதால் அவர் என்னை உதவி கேட்க சட்டென்று எங்கள் இடையில் அமர்ந்திருந்த அப்பெண் எந்தத் தயக்கமும் காட்டாது தானே வீடியோ ஆரம்பித்து சினிமா படம் தென்பட உதவினார். அந்தப் பெண்ணிற்கு இயற்கையாகவே உதவும் மணப்பாண்மை. அதிலும் பிறர் ஏதும் நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்பி தானே முன் வந்து உதவினாள். இந்து மகிழ்ச்சியாக ஒரு ஹிந்தி படத்தை பார்த்து ரசிக்கத் தொடங்கி விட்டார்.

இடையில் மீண்டும் எங்களுக்கு உணவு கிடைத்தது. ஆப்பிரிக்க உணவு. சாதமும் மொச்சை, கீரை சேர்த்த கெட்டிக் குழம்பும். ரசித்து சாப்பிட்டேன். கொஞ்சம் சீரகம் சோம்பு மிளகு சேர்த்திருந்தால் சுவை தூக்கலாக இருந்திருக்கும். ஆனாலும் ஆப்பிரிக்க உணவு இதுதான் என்பதை அறிந்து கொண்டு சுவைக்கவும் வேண்டும் அல்லவா..?

 சாப்பிட்டுக் கொண்டே அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். தான் நைஜீரியாவில் இருந்து வந்த பெண் என்றும் ஜொஹான்னஸ்பெர்கிற்கு கல்லூரி படிப்பு முடித்து இண்டர்ன்ஷிப் செய்ய செல்வதாகவும் கூறினார். என்னைப் பற்றி விசாரித்தார். தொடர்ந்து சிறிது நேரம் பேசி விட்டு நான் என் நூலில் மூழ்கினேன்.


​காபி கடையில்

ஜொஹான்னஸ்பெர்கில் தரையிறங்கிய பின்னர் ஒரு காபி கட்டாயம் தேவை என்று தோன்றியது.  விமான நிலையத்தில் ஒரு உணவகத்தில் நானும் இந்துவும் காபி ஆர்டர் செய்து அருந்தினோம். அந்த உணவகத்தில் எக்ஸ்ட்ரா லார்ஜ் அளவில் மஃப்பின் விற்பனை செய்து கொண்டிருந்தனர். திரும்பி வரும் போது கட்டாயம் வாங்கி சாப்பிட வேண்டும் என்று நானும் இந்துவும் சொல்லிக் கொண்டோம்.


நாங்கள் பயணம் செய்த குலுலா விமானம்




​ஜொஹான்னஸ்பெர்க்  - விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

சில மணி நேரங்களில் நாங்கள் அடுத்து பயணம் செய்ய வேண்டிய குலுலா விமானம் தயாராக, அதில் ஏறி டர்பன் நகருக்குப் பயணமானோம். ஏறக்குறைய 1 மணி நேர பயணம் அது.


​ஜொஹான்னஸ்பெர்க்  - விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

எனக்கும் இந்துவுக்கும் இடையில் ஒரு தமிழ்பெண். 16 வயது உள்ள பெண் வந்து அமர்ந்தார். அவர் எங்களுடன் இடைக்கிடையே பேசிக்கொண்டேயிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. தாம் குடும்பத்தாருடன் டர்பன் நகரில் ஓய்வை கழிக்கச் செல்வதாகவும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தாம் தமிழர் என்பது தெரியும் ஆனால் ஒரு சில வார்த்தைகளைத் தவிர  தமிழ் பேசத் தெரியாது என்று சொன்னார். தமிழ்படம் பார்ப்பார்களாம். இந்திய உடைகளை அணிந்து கொள்வார்களாம். தமிழ் மொழி பேச்சு மட்டும் வழக்கத்தில் இல்லாமல் மறைந்து விட்டது என்று சொன்னார். தமிழ் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளதா எனக் கேட்டேன். இருக்கின்றது என மிக நளினமாக தலையாட்டினார். தொடர்ந்து என்னைப்பற்றியும் என் தொழில், நான் டர்பன் செல்லும் நோக்கம் என பேசி தெரிந்து கொண்டார்.

விமானத்தின் மேலிருந்து டர்பன் நகரை பார்த்து ரசித்துக் கொண்டே டர்பனில் மாலை 6.10 வாக்கில் தரையிறங்கினோம். எங்கள் பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது எங்களை அழைத்துச் செல்ல ஏற்பாட்டாளர்கள் காத்திருப்பர் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வெளியே வந்தபோது ஒரு சிறு அதிர்ச்சி..

​​தொடர்வோம் நம் பயணத்தை,  டர்பனுக்கு....

Saturday, April 11, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -2

எத்தியோப்பிய விமானப் பணிப் பெண்களும் ஆண்களும் தமிழர்களை ஒத்த முகச்சாயலிலும்  உடல் சாயலிலுமே தென்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள். இவர்களுக்கு இந்திய ஆடைகளை உடுத்தி சாலையில் நடக்கச் சொன்னால் தமிழ் பெண்கள் என்றே எல்லோரும் ஒத்துக் கொள்வர். தலைமுடி வகையில் மட்டும் ஒரு சிறு வித்தியாசத்தைக் காண்கின்றேன். அடர்த்தியான கூந்தல் வகை இவர்களது. பெரும்பாலானோர் தோலின் நிறம் கருமையாகவும் ஒரு சிலருக்கு நிறம் மாநிறமாகவும் இருக்கின்றது. இது தென்னிந்தியர்களின் தோலின் நிரத்தை ஒத்த வகையிலேயே இருக்கின்றது.




விமானத்தில் நான் சைவ உணவு பதிந்திருந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்தபோது அதிசயப்பட்டேன். பாஸ்மதி அரிசி போல ஆனால் இன்னமும் நீளமான வடிவில் அரிசி.


பயிற்றங்காய் வருவல் அதற்கு மொச்சை, மேலும் சில கடலை வகைகள் சேர்த்த குழம்பு. உணவின் சுவையும் மலேசிய இந்திய உணவு சுவையை ஒத்ததாக அமைந்திருந்தது. நான் ஸ்டுட்கார்ட் நகரில் சாப்பிட்டு பழகிய மடகாஸ்கர் அல்லது தென்னாப்பிரிக்க உணவின் சுவையை விட இது மிக நன்றாக நமது இந்திய உணவு போல இருந்தது.

எத்தியோப்பிய மக்களின் உணவும் உடல் தோற்றமும் தென்னிந்திய மக்களின் உடல் தோற்றத்தை ஒத்திருப்பது போலவே அவர்களது அங்க அசைவுகளும் முக பாவனைகளும் கூட நமக்கு பரிச்சயமான வகையிலேயே இருந்தன. மிகுந்த சுவாரசியத்துடன் என் கண்ணில் தென்படும் ஒவ்வொரு எத்தியோப்பியர்களையும் நான் என மனதில் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன்.

விமானத்தின் கேப்டன் நடந்து வந்து ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். நான் இருக்கும் பகுதிக்கு வந்த போது இரவு வணக்கம் சொல்லிவிட்டு சிறிது நேரம் இருந்து கதை பேசிச் சென்றார். நலல் உயரமான உருவம். எனக்கு ஒரு தமிழரிடம் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்ற உணர்விலேயே பேசினேன் என்று தான் சொல்வேன். எங்கள் பயண நோக்கம் பற்றி அறிந்து கொண்ட பின்னர் எத்தியோப்பிய நாட்டிற்கு  ஒரு முறை வந்து சுற்றிப் பார்த்துச் செல்லுமாறு கூறினார்.

அடிஸ் அபாபா விமான நிலையம் மிகச் சிறியது. நாங்கள் வந்திறங்கிய சமையம் அதிகாலையாக இருந்தமையால் பயணிகள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியோதயம் ஏற்பட்டதில் மிகத் தெளிவாக பகல் வெளிச்சத்தில் நகரை பார்க்க முடிந்தது.



இந்த நாடு பாலைவனப்பகுதிக்கும் கீழே அமைந்திருப்பதால் வெயில் இருந்தாலும் மிக அதிகமான் வெப்பத்தை நான் உணரவில்லை. ஏறக்குறைய 24லிருந்து 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம். வெளியே சென்று பார்க்க வாய்ப்பு அமைந்திருந்தால் மேலும் எத்தியோப்பியா பற்றி அறிந்து கொள்ள முயற்சித்திருப்பேன். ஆனால் ஒரு முறைபிரத்தியேகமாக இந்த நாட்டிற்கு சென்று வர வேண்டும் என்று மனதில்  ஆவல் வந்துள்ளது.. வாய்ப்பு அமைந்தால் எத்தியோப்பியா பற்றியும் இம்மக்கள் பற்றியும் மேலும் நேரில் அறிந்து கொள்ள அது உதவலாம்.

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 1


​காந்தி வாழ்ந்த இடத்தில் .. ஷுலு இனக்குழு மக்களின் குழந்தைகளோடு

​உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர் திரு.மிக்கி செட்டி அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி வந்திருந்த பொழுதில்,  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள தமிழாசிரியர் பட்டமளிப்பு விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள செயலவைக் குழு தேர்தல் நிகழ்விலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அலுவலக பணிகளுக்கிடையேயும் எனது முனைவர் பட்ட ஆய்வுக்கிடையேயும் இதனை சாத்தியப்படுத்த முடியுமா என்ற ஒரு அய்யம் மனதில் இருந்து கொண்டிருந்தது. ஆயினும் இந்த இயக்கத்தின் செயலவைக் குழுவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பயணத்திற்கு திட்டமிட்டேன்.

இந்த இயக்கத்தில் பல ஆண்டுகள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், நான் ஜொஹான்னஸ்பெர்க் நகருக்கு டிக்கட் போடவேண்டுமென்று தகவல் சொல்லிவிட்டார். ஆக அங்கு செல்ல விமானத்தை தேடிய போது எத்தியோப்பியன் விமானத்தில் குறைந்த நேர இடைவெளி.  அத்தோடு பயணக்கட்டணமும் கணிசமான விலை என்ற வகையில் டிக்கட் அமைந்தது. நானும் தோழி இந்துவும் பயணத்திற்கு டிக்கட்டை பதிந்து கொண்டோம். இதைப் பற்றி அந்த பொறுப்பாளரிடம் குறிப்பிட்ட போது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில் சென்றால் இபோலா காய்ச்சல் வந்து இறந்து விடுவீர்கள் என்று கூடுதல் 'இன்மொழி' கூறினார்.

என்ன செய்வது ..? இப்படியும் சில மனிதர்கள்!

எத்தியோப்பியன் விமான பயண விபரங்களைப் பார்த்தபோது தினம் ஒரு விமானம் எத்தியோப்பியா செல்வதை அறிந்து கொண்டேன். ஜெர்மனியில் கணிசமான எண்ணிக்கையில் எத்தியோப்பியர்களும் ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகளைச் சேர்ந்தோரும் இருக்கின்றனர். விமானத்தில் பயணித்தாலே இபோலா நோய் வரும் என நினைப்போரை என்ன செய்வது? எல்லாம் அறியாமை தான் காரணம். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என வருந்திக் கொண்டதோடு மட்டுமல்லாது அந்த நபருக்கும் இபோலா பற்றியும் அனைத்துலக விமானப்பயணத்தில் கடைபிடிக்கப்படும் சுகாதார முறைகள் பற்றியும் சற்று விளக்கியும் கூறினேன்.


​விமானப் பயணத் தகவல்

ஆனால் பின்னர் டர்பனில் தான் நிகழ்வு என்று உறுதியானதும் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு ஒரு பயண டிக்கட் கூடுதலாக பதிவு செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. குலுலா விமான சேவையகத்தில் இதற்கான  டிக்கட்டை  எனக்கும் இந்துவிற்கும் பதிந்து கொண்டேன்.

எங்களின் பயணம் 4 விமான நிலையங்களில் உலாவும்  வகையில் 3 விமானங்களில் பயணம் என்ற வகையில் அமைந்தது. இப்படி ஒரு பயணத்தை இது நாள் வரை நான் என் வாழ் நாளில் செய்த்தில்லை. எல்லாம் புது அனுபவம் என நினைத்து பயண ஏற்பாட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டேன்.

  • ஃப்ராங்பர்ட் நகரிலிருந்து எத்தியோப்பிய விமானத்தின் வழி முதலில் அதன் தலைநகரான அடிஸ் அபாபாவிற்குப் பயணம்
  • அடிஸ் அபாபாவிலிருந்து ஜொஹான்ன்ஸ்பெர்க்
  • பின்னர் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு 

என பயணம் இருந்தது.


​ஃப்ராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எஹ்ட்தியோப்பிய விமானம்

எனது வாகனத்தில் ஃப்ராங்பர்ட் விமான நிலையம் வரை பயணம் செய்து அங்கு விமான நிலைய கார் பார்க்கில் வாகனத்தை விட்டு விட்டு எத்தியோப்பிய விமானத்தில் நானும் இந்துவும் அடிஸ் அபாபா நோக்கி புறப்பட்டோம்.​

தொடர்வோம் நம் பயணத்தை டர்பனுக்கு....

சுபா

Saturday, March 28, 2015

படம் சொல்லும் தமிழகம் 2013 - 13

2013ல் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயம் நான் கோவிலூருக்குச் செல்வதற்கு முன்னர் காரைக்குடியில் எடுத்த புகைப்படம். அதிகாலை நேரத்து புத்துணர்ச்சியுடன் படத்தில் டாக்டர்.சந்திரமோகனும் டாக்டர்.காளைராசனும்.


படத்தின் பின்னால் இருப்பது ஒரு செட்டினாட்டு இல்லம். ஆனால் தற்சமயம் இது ஒரு வர்த்தகக் கூடமாக மாறியிருக்கின்றது. பழனிச்சாமி பாத்திரக் கடையும் வலது புறத்தில் ஒரு அடகுக்கடையும் ஏனைய சில கடைகளும் உள்ளே இருக்கின்றன. மழை பேய்ந்து ஓய்ந்த நேரம். சாலையில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது.  சாலையோரத்து காய்கறிக்கடை. ஒரு ஆட்டோ ரிக்‌ஷா.. சில மோட்டார் சைக்கிள்கள். அதிகாலை நேரத்து இளம் வெயிலுடன்.

Wednesday, March 18, 2015

படம் சொல்லும் தமிழகம் 2015 - 13



சேலை அணியும் போது அதற்கு ஏற்றார்போல வர்ணங்களில் வளையல்கள் அணிவது பெண்களுக்குப் பிடித்த விஷயம். வண்ண வண்ண வளையல்களைப் பிடிக்காத பெண்களும் இருப்பார்களா என்ன..?

இம்முறை ஜனவரி மாதம் சென்னையில் இருந்த சமயம்  கிடைத்த சிறிய இடைவேலையில் சந்தைக்குச் சென்று சாலை ஓரக் கடைகளில் வளையல்கடைக்காரரிடம் வளையல் வாங்கிக் கொண்டேன். பல வர்ணங்களில்..சந்தைக் கடைகளில் பேரம் பேசி வாங்குவதே மகிழ்ச்சி. நாம் வாங்குவதால் வியாபாரிகள் முகத்தில் எப்படி மகிழ்ச்சி ஏற்படுகின்றதோ அதற்கு பல மடங்கு மகிழ்ச்சி வாங்கிக் கொள்ளும் நமக்கும் ஏற்படுகின்றது தான்.

Saturday, March 7, 2015

(Trier) ட்ரியா - ரோமானிய பழம் நகரம் + கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊர் - 2

ட்ரியா நகரில் எடுத்த சில புகைப்படங்கள்.. மேலும் சில இங்கே..

போர்ட்ட நீக்ராவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

















நகர மையத்திற்குள் செல்லும் போது எடுத்த   சில புகைப்படங்கள்

ஃபாஹ்வெர்க் வகை வீடுகள்


விடது புறத்தில் கார்ல் மார்க்ஸ் இல்லம்
சந்தைகக்கடைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றது


கார்ல் மார்க்ஸ் சிலை 



சந்தையில் விற்பனை 


கிறிஸ்மஸ் மார்க்கெட்



தேவாலயத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்










தேவாலயத்தின் உள்ளே உள்ள ஆர்கன் இசைக்கருவி




ஏசு பெருமானின் ஒரு சால்வைத்துணி இருப்பதாகச் சொல்லப்படும் இடம்








அரச மாளிகை பகுதி