Thursday, January 20, 2011

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 3

இன்று பாரீஸுக்கு புகழ் சேர்க்கும் லூவ்ரெ பொருட்காட்சியகத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.



The Musee du Louvre என்ற பெயர் கொண்ட இந்தப் பொருட்காட்சியகம் உலகப் புகழ்பெற்ற ஒன்று. உலகின் தலை சிறந்த பல முக்கிய கலைப்பொருட்களைக் இது காட்சிக்கு வைத்துள்ளது.



இந்தப் பொருட்காட்சியகத்தின் முதல் வடிவம் முதன் முதலில் 1190ல் மன்னர் பிலிப் ஆகுஸ்ட் அவர்களால் ஒரு பாதுகாப்பு கோட்டையாக கட்டப்பட்டது. பின்னர் இந்தக் கட்டிடத்தில் பெரும் அளவு மாற்றம் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் கொண்டுவரப்பட்டு விஸ்தாரமாக்கப்பட்டது. இங்கு ஐரோப்பிய கலைப்பொருட்கள் மட்டுமின்றி ஆப்பிரிக்க, ஆசிய, அமெரிக்க, நாடுகளிலிருந்தும் சேகரிக்கபப்ட்ட பல வரலாற்றுச் சான்றுகள், கலைப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.





லூவ்ரெ செல்வதற்கு மெட்ரோ 1 அல்லது 7 மூலம் பயணிக்கலாம். எனது தங்குமிடத்திலிருந்து 1ம் எண் மெட்ரோ எடுத்து பயணித்து ஒபிலிஸ்க் இருக்கும் concorde மெட்ரோ நிலையத்தில் இறங்கி அங்கிருந்தே நடந்து சென்றேன். இதை விட உடனே லூவ்ரெ செல்ல நினைப்பவர்கள் Palais Royal Musee du Louvre நிலையத்தில் இறங்கிக் கொள்வது நன்று. மெட்ரோ நிலையத்திலிருந்து வெளி வந்த உடனேயே நேராக லூவ்ரே கட்டிடத்தைப் பார்க்கலாம்.



நான் concorde மெட்ரோ நிலையத்தில் இறங்கி ஒபிலிஸ்க் பார்த்து முடித்தபின் இடது பக்கத்தில் அமைந்துள்ள பூந்தோட்டத்தில் நடக்கத் தொடங்கினேன். இந்தப் பூந்தோட்டம் கலை அழகு மிக்கது. ஆங்காங்கே வெள்ளை நிறத்திலான உயர்ந்த கலைச் சிற்பங்கள் உள்ளன. ஆனாலும் டிசம்பர் மாதக் குளிர் என்பதால் பூக்களையும் பசுமையையும் காணவில்லை. வசந்தஹ் காலத்திலும் கோடை காலத்திலும் இப்பகுதி நிச்சயம் மிக ரம்மியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


பூந்தோட்டத்தைக் கடந்து மேலும் நடந்து வரும் போதே லூவ்ரெ வாசலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்ணாடி பிரமிட்டை பார்க்கலாம். இந்தப் பிரமிட்டையும் லூவ்ரேவையும் டான் ப்ரவுனின் (Dan Brown) நாவல் டாவின்சி கோட் (Da Vinci Code) படித்தவர்களும் இப்படத்தைப் பார்த்தவர்களும் மறந்திருக்க முடியாது. உலகப் பிரசித்தி பெற்ற லியோனார்டோ டா வின்சியின் (Leonardo da Vinci) மோனாலிசா ஓவியம் இங்கு தான் உள்ளது!




இந்தக் கண்ணாடி பிரமிட் லூவ்ரேவிற்கு மிகப் புதிய சேர்க்கை என்றே சொல்ல வேண்டும். 1989ம் ஆண்டு இம் பெய் என்ற ஒரு ஆர்க்கிடெக்ட் இந்த பிரமிட்டை வடிமைத்தார். இந்தp பிரமிட்டின் சிறப்பு என்னவென்றால் இது முழுமைக்கும் இரும்பினாலும் கண்ணாடியாலும் மட்டுமே கட்டப்பட்டது.


லூவ்ரே மண்டபத்தின் சுவர்களை மிகுந்த கலை நயத்தோடு அமைத்திருக்கின்றனர். சுவற்றில் வரிசை வரிசையாக சிலைகள். ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டது. இவை பெறும் பாலும் 16ம் 17ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.



லூவ்ரெ உலகப் பிரசித்தி பெற்ற பல கலைப் பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. மோனாலிசா ஓவியத்தைப் பற்றி முதலில் குறிப்பிட்டேன். இது தவிர்த்து,
- 1435ம் ஆண்டின்ன் பிரசித்தி பெற்ற Madonna of the Chancellor Rolin, 15ம் நூற்றாண்டின் ப்ளெமிஷ், டச்சு, ஜெர்மானிய, ஆங்கிலேய ஓவியர்களின் பல பிரசித்தி பெற்ற ஓவியங்கள் இங்குள்ளன.
- பிரமிக்க வைக்கும் இத்தாலிய ஓவியங்கள் , கி.பி 1200 முதல் 1800 வரையிலான, பற்பல ஓவியங்கள் இங்கு தேதி வாரியாக குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
ஓவியங்கள் மட்டுமல்ல- கலைச் சிற்பங்கள், அதிலும் பண்டைய ப்ளெமிஷ், ஜெர்மானிய, ப்ரென்ச்சு கலைவடிவங்கள் பல இந்த லூவ்ரெவில் உள்ளன.
- லூவ்ரேவின் சிறப்பை மேலும் உயர்த்துவது இங்குள்ள கிரேக்க, எகிப்திய கலை வடிவங்கள். இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது உலகின் மிகப் பழமையான மெசப்பொட்டாமியன் நாகரிகத்தின் அதிகாரப்பூர்வ கட்டளைகள் அடங்கிய நூலான
ஹம்முரபி கட்டளைகள் (Code of the Babylonian King Hammurabi). இது கி.மு 1700 என குறிப்பிடப்படுகின்றது.




இப்படி பலப் பல கலைப் பொருட்கள், பழம் நூல்கள், வரலாற்றுச் சான்றுகள் இங்கு வைக்கபப்ட்டுள்ளன.

இங்குள்ள கலைப் பொருட்களை பார்த்து முடிக்க ஒரு நாள் நிச்சயம் போதாது. பண்டைய வரலாற்று தகவல்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு லூவ்ரெ ஒரு பொக்கிஷம்.

Sunday, December 19, 2010

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 2

பாரீஸ் நகரின் உள்ளே பயணிப்பவர்கள் வாகனத்தில் செல்வதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. எல்லா இடங்களிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாது. ஆனால் மெட்ரோ நம்பகரமான பொது போக்குவரத்து சாதனம். கையில் மெட்ரோ தொடர்பு வரைபடம் வைத்திருத்தல் மிக அவசியம். பாரீஸ் மெட்ரோ வரைபடம் இங்கே காணலாம். http://www.aparisguide.com/maps/metro.htm

எனது தங்கும் விடுதி Le Meridien Montparnasse அமைந்திருந்த இடம் Montparnasse பகுதியில். ஹோட்டலிற்கு அருகிலேயே ஒரு மெட்ரோ ஷ்டேஷனும் இருப்பதால் எனது பயனம் வெகு சுலபமாகவே அமைந்திருந்தது. மெட்ரோ எண் 13ல் Gaite ஷ்டேஷனில் இறங்கினால் 3 நிமிடத்தில் ஹோட்டலை அடைந்து விடலாம். எனது அலுவலக பணி அமைந்திருந்த இடமான Saint-Denis Porte de Paris க்கு மெட்ரோ 13 லியே பயணித்து 35 நிமிடத்தில் அடைந்து விடலாம். ஆக தினமும் பயணிக்க மெட்ரோ மிகச் சுலபமாகவும் வசதியாகவும் அமைந்திருந்தது.

பாரீஸிலுள்ள முக்கிய இடங்களில் சிலவற்றை பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கின்றேன். முதலில் Place de la Concorde எனப்படும் பகுதி. இப்பகுதியை அடைய Gaite ஷ்டேஷனிலிருந்து பயணித்து 1ம் எண் மெட்ரோ எடுத்து Concorde ஷ்டேஷனில் இறங்க வேண்டும். இப்பகுதி மிகப் பிரமாண்டமான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளைச் சந்தித்த ஒரு பகுதி. முதலில் இங்கே நம்மை வரவேற்பது இங்கு வானை நோக்கி நிமிர்ந்து நிற்க்கும் எகிப்திய ஒபிலிஸ்க்.




இந்த ஒபிலிஸ் 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பண்டைய எகிப்தின் வரலாற்றுச் சின்னம். எகிப்து நாட்டின் லுக்ஸோர் (Luxor) நகரிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டது.

அப்போதைய மன்னர் லூயிஸ் பிலிப் அவர்களுக்கு எகிப்திய வைசராய் முகம்மது அலி 1836ல் அளித்த பரிசுப் பொருள் இது. அப்போது இவர் எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு வைசராயாக பதவி ஏற்றிருந்தவர். இதே எகிப்திய வைசராய் தான் பிரித்தானிய மியூஸியத்தில் உள்ள கிளியோபாத்ராவின் ஊக்கு ஒன்றினையும் பரிசாக அளித்தவர். எகிப்து போன்ற பழமை வாய்ந்த வரலற்று நாகரிகத்தை உடைய நாடுகளுக்கு இவ்வகையான் இழப்புக்கள் பல முறை நிகழ்ந்துள்ளன என்பது வேதனை தரும் விஷயம் தான்.

சரி. இந்த ஒபிலிஸ்க்கை பார்ப்போம். நான்கு புறமும் எகிப்திய ஹிரோகிலிப்ஸ் (hieroglyphics) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பண்டைய எகிப்திய கலாச்சாரத்தின் சின்னம் இது.




இந்த 250 டன் எடையுள்ள ஒபிலிஸ்க்கை இங்கே கொண்டு வந்து சேர்த்து அதனை இப்பகுதியில் பதித்த வேலை பற்றிய விளக்கம் இந்த ஒபிலிஸ்க்கின் கீழ் பகுதியிலேயே பொறிக்கப்பட்டிருக்கின்றது.



இந்த ஒபிலிஸ்க்கின் கூர்மையான மேல் பகுதி பிரமிட் போன்ற அமைப்பு 6ம் நூற்றாண்டு வாக்கில் எகிப்திலேயே திருடப்பட்டு காணாமல் போய்விட்டதாம். பல ஆண்டுகள் இந்த மேல் பகுதி இன்றியே காணப்பட்ட இந்த ஒபிலிஸ்க்கின் மேல் பிரமிட் பகுதியை 1998ல் தங்கத்தால் வடிவமைத்து மாற்றம் செய்துள்ளது ஃப்ரான்ஸ் அரசாங்கம்.




ஒபிலிஸ்க் என்பது எகிப்திய தேவ பாஷையில் தேஜேன் (Tejen) எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தீய சக்திகளிடமிருந்து காக்கும் தன்மை வாய்ந்ததாக பண்டைய எகிப்திய மக்களால் நம்பப்பட்டது. பண்டைய எகிப்திய கலாச்சாரத்தில் ஒபிலிஸ்க்குகள் ஆலயத்தில் வைப்பதற்காக உருவாக்கபப்ட்டவை. ஒபிலிஸ்க்குகள் எப்போதும் இரண்டாகவே தயாரிக்கப்படுமாம். இரண்டு ஒபிலிஸ்க்குகளை ஆலயத்தில் நட்டு வைப்பதுவே வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒபிலிஸ்க் சூரியக் கதிர்களை பிரதிபலிக்கும் ஒன்றும் கூட. சூரியக் கடவுள் RA பொறிக்கப்பட்ட ஒப்லிஸ்க் பாரிஸிலும் இருந்து அங்கு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.




அன்புடன்
சுபா

Saturday, December 18, 2010

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 1

நண்பர் ஆண்டோ பீட்டரின் துணைவியார் ஸ்டெல்லாவின் அண்ணன் ஸ்டெபி பாரிஸில் சில ஆண்டுகளாக இருக்கின்றார். இதுவரை அவரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. எப்போது பாரீஸ் சென்றாலும் அலுவலக வேலைகளை முடித்து சற்று பக்கத்திலேயே ஏதும் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடுவது தான் வழக்கம். ஸ்டெபியிடம் தொலைபேசியில் பேசும் போதெல்லாம் வந்தால் கட்டாயமாக பார்க்க வேண்டுமென்று அடிக்கடி சொல்வார். ஆக, இந்த முறை பாரீஸ் செல்லும் போது எப்படியும் நேரம் ஒதுக்கி அவரை பார்த்து வர வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். முதல் நாள் செவ்வாய்கிழமை வேலை அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ஸ்டெபியைக் காணும் வாய்ப்பு அமையவில்லை. மறுநாள் மாலை ஏழு மணி அளவில் வேலையை முடித்துக் கொண்டு அவரைச் சந்திக்கலாம என் ஏற்பாடு செய்து அழைத்தேன். எனது வேலை அமைந்திருந்த இடம் Saint-Denis Porte de Paris மெட்ரோ ஸ்டேஷனுக்கு அருகில். ஆக அங்கேயே சந்திப்பதாக முடிவாகியது. என்னுடன் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்பெயினிலிருந்து வந்திருந்த மற்றொரு நண்பரும் வருவதாக குறிப்பிட்டதால் இருவரும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு விரைந்தோம்.



அறிமுகப்படுத்தி பேசிக் கொண்டபின்னர் எங்கே போகலாம் என்று யோசித்தோம். பாரீஸில் தமிழர்கள் குழுமியுள்ள லா சப்பெல் (La Chappele )சென்று அதிக நாட்களாக இருக்கும். அதனால் இங்கே செல்லலாமே என்று கேட்க அவருக்கும் அதில் சந்தோஷம்.




பாரிஸில் இப்பகுதி தமிழர்களின் வியாபார தலம் என்றால் அதனை மறுக்க முடியாது. நிறைய தமிழர்கள் நடத்தும் கடைகளும், ஹிந்து ஆலயங்களும் இங்கு உள்ளன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நா.கண்ணனும் நானும் இங்குள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் சமைய சொற்பொழிவு செய்வதற்காகச் சென்றிருந்தோம். ஒரு கட்டிடத்தின் உள்ளே அமைந்திருக்கும் ஆலயம் இது. முறையாக பூஜைகள் வழிபாடுகள், திருவிழாக்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. கோடை காலத்தில் அதிலும் விநாயகர் சதுர்த்தி இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டும் வருகின்றது.




சாலையின் இரு பக்கங்களிலும் இலங்கைத் தமிழர்களின் அபார முயற்சியில் பல கடைகள் உறுவாகியிருக்கின்றன. சேலை துணி மணி வகைககள், மளிகைப் பொருட்கள், உணவு விடுதிகள், தொலைபேசி அட்டை விற்பனை கடைகள், இறைச்சிக் கடைகள் என ப்ரெஞ்ச், தமிழ் ஆங்கிலத்தில் பெயர் அட்டைகளோடு கடைகளை சாலையில் பார்க்கலாம்.




ஸ்டெபியின் நண்பர் ஒருவர் இந்திய திரைப்பட வீடியோ படங்களின் கடை ஒன்றினை வைத்திருக்கின்றார். அவரது கடைக்கு என்னை அழைதுச் சென்றிருந்தார் ஸ்டெபி. எந்த படம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளை வேறு. எனக்கு எதனைத் தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை. வேண்டாம் என்று மறுத்தாலும் ஏதாவது ஒரு வீடியோ படமாவது நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டனர். நீங்களே தேர்ந்தெடுத்துத் தாருங்கள் என்று சொல்ல 2 வீடியோ - ஒரு டிவிடியில் என்றவாறு நான்கு தமிழ் திரைப்படங்கள் கொண்ட டிவிடி - களவாணி, அகங்காடித் தெரு, பாண்டவர் பூமி,பசங்க என்று நான்கு படங்கள் எனக்கு கிடைத்தன.




இந்தக் கடைக்கு ப்ரெஞ்ச் மக்களும் வந்து டிவிடி வாங்கிச் செல்கின்றனர். ஒரு பகுதி முழுதும் ப்ரெஞ்ச் சப் டைட்டில் உள்ள போலிவூட் டிவிடிக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நான் கடையில் இருந்த போதே இரண்டு ப்ரெஞ்ச் காரர்கள் டிவிடி கதையை விற்பனையாளரிடம் கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டிருந்தார்.

நான்கு புதிய படங்களின் டிவிடிக்கள் கிடைத்த சந்தோஷம் எனக்கு. சரி அங்கிருந்து புறப்பட்டு சாப்பிடச் செல்லலாம் என முடிவாகியது. அங்கிருந்து சற்று தூரம் சென்றால் தமிழ் நாட்டின் புகழ் மிக்க உணவகமான சரவணபவன் எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. சரவணபவன் உணவகத்தில் உணவருந்தும் வாய்ப்பை நழுவ விடலாமா..?




சாதம் இட்லி வடை என தமிழ் நாட்டு ஸ்பெஷல் உணவை சுவைத்து சாப்பிட்டோம். எனது அலுவலக நண்பருக்கும் தமிழ் உணவின் இது முதல் அனுபவம். அவருக்கு மெது வடையும் தேங்காய் சட்னியும் மிகவும் பிடித்து விட்டது.

நல்ல உணவருந்தி பிறகு சற்று லா சாப்பல் பகுதி கடைகளை பார்த்து விட்டு புறப்பட்டோம். குளிர் மிக அதிகமாகிக் கொடிருந்தாலும் சாலையில் மக்கள் போக்குவரத்து கொஞ்சமும் குறையவில்லை. பாரீஸ் மெட்ரோவின் சேவை பிரமாதம் ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒரு மெட்ரோ என நமது பயணத்தை சுலபமாக்குகின்றது.

அடுத்து தொடர்ந்து Notre-Dame, conciergie, concorde, Pyramid, Musee de louvre ஆகியவற்றின் படங்களையும் நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கின்றேன்.

அன்புடன்
சுபா

Tuesday, November 24, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 13

14 நாட்கள்  பயணம். மலாகாவிலிருந்து இப்போது என் விமானம் மயோர்க்கா சென்று பின்னர் அங்கிருந்து ஸ்டுட்கார்ட் வந்து சேர்ந்தேன்.





ஸ்பெயின் நகரின் தீவுகளான க்ரான் கனேரியா, டெனரிபா, லா கொமேரா ஆகியவற்றிற்கு நான் முன்னரே பயணித்திருக்கிறேன். இருந்த போதிலும் அண்டலூசிய பயணம் மிக முக்கியமான, மறக்க முடியாத ஒரு பயணம் என்றே நான் நினைக்கிறேன். எனக்கு அடிப்படையிலேயே சரித்திர வரலாற்று பின்னனி, தொல்பொருள் ஆய்வு, ஒரு இனத்தின் மரபு பற்றிய விஷயங்கள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் இருப்பதால் மிகப் பிரமாண்டமான சரித்திரப் பின்னனியைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் என் கவனத்தைக் கொள்ளை கொண்டதில் எந்த சந்தேகமுமில்லை. மீண்டும் ஒரு முறை அண்டலூசிய செல்ல எனக்கு திட்டம் இருக்கிறது. அதன் பொழுது அண்டாலூசியாவின் தலை நகரமான செவியா, மற்றும் காடிஸ் மற்றும் சரித்திரப் புகழ்பெற்ற கோர்டோபா நகரங்களுக்குச் செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது சாத்தியப்பட்டால் அடுத்த அண்டலூசிய பயணக் கட்டுரையும் நிச்சயம் உருவாக்கம் பெரும்.



குறிப்பு: முதல் இரண்டு ஸ்பெயின் வரைப்படங்களைத் தவிர ஏனைய படங்கள் உரிமை சுபாஷினி .

Monday, November 23, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 12

அதனைத் தொடர்ந்து செல்லும் போது நுணுக்கமான கைவினைப் பொருட்கள் செய்யும் சிறிய பட்டறைகள்; அவற்றில் தொடர்ந்து வேலை நடந்து கொண்டிருப்பதையும் காணமுடிந்தது. இந்த இஸ்லாமியக் கோட்டைக்குள் முதலில் சுற்றுப் பயணிகளை வரவேற்கும் மண்டபம் அன்னா மரியா தேவாலயம். 1492ல் கிரானாடா முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து கத்தோலிக்க ஆட்சியாளர்கள் வசம்
வீழ்ந்திருக்கின்றது. அப்போது தொடங்கி பல இஸ்லாமிய கட்டிடங்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அல்ஹம்ராவும் விதிவிலக்கல்ல.







இந்த தேவாலயத்தை அடுத்து பிரமாண்டமான ஒரு மாளிகை. இது தற்போது தொல்பொருள் கண்காட்சி ஆய்வு நிலையமாக பாதுகாக்கப்பட்டு பல அரும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.







இந்த மளிகையை அடுத்து பூந்தோட்டத்தைக் கடந்து நடந்தால் மேலும் சில கோட்டைகள். போர் வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட கட்டிடங்கள். இவற்றின் ஓரமாக அழகிய பூந்தோட்டம்.







இவையெல்லாவற்றையும் பார்த்த பின்னர் அடுத்ததாக அரண்மனைக்குச் செல்ல வேண்டும். அரண்மனை மட்டுமே ஒரு குட்டி நகரம் போல இருந்ததை உள்ளே நுழைந்ததும் பார்த்து வியந்தேன். பூந்தோட்டம். விதம் விதமான மலர்கள். கண்களைக் கொள்ளை கொள்ளும் காட்சி. இதனைக் கடந்து வந்தால் அரண்மனை மாளிகைகள். ஒன்றை அடுத்து ஒன்றாக.







இந்த அரண்மனை மாளிகை ஒவ்வொன்றும் கலை நயத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. http://en.wikipedia.org/wiki/Alhambra




இஸ்லாமிய சமய சின்னங்கள், அராபிய எழுத்துக்கள், மலர்கள் இலைகள் என பல்வேறு சின்னங்கள் மிக நுணுக்கமாக சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.







சுவர்கள் மட்டுமல்ல; தூண்கள், மதில்கள், நடை பாதை என எல்லா பகுதியுமே கலை வண்ணம் காட்டி பிரமிக்க வைப்பவை.







மாளிகைக்கு இடையிடையே பூந்தோட்டங்கள், அழகிய குளங்கள். பார்த்தது போதும் என நினைத்து நடந்தால் மேலும் சில பகுதிகள். மீண்டும் பெரும் தோட்டம், மேலும் மாளிகைகள் என 4 மணி நேரம் அரண்மனையைச் சுற்றுவதிலேயே கழிந்தது.







அல்ஹம்ரா கோட்டையை மட்டுமே ஒரு நாள் என்னால் தரிசிக்க முடிந்தது. இந்தக் கோட்டை மட்டுமல்லாது கிரானாடா அதன் வெள்ளை கிராமத்திற்கும், இயற்கை அழகிற்கும், சரித்திர சுவடுகளுக்கும் மிகப் புகழ் பெற்ற ஒரு நகரம். இப்பகுதிக்கு சென்ற என் பயணம் மறக்க முடியாத ஒரு இனிய அனுபவமாகவே அமைந்தது.







கிரானாடாவிலிருந்து எஸ்டாபோனா பயணம் மீண்டும் ஏறக்குறைய 240 கிமீ பயணம்.




கிராணாடா பயனத்திற்குப் பின்னர் இரண்டு நாட்கள் மீண்டும் எஸ்டாபோனா நகரிலேயே என் பொழுதை கழித்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டேன்

Friday, November 20, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 11

12ம் நாள் - கிரானாடா



கிப்ரால்டாவில் என் பயணம் சோர்வை ஏற்படுத்தியதால் இடையில் ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் கிரானாடா நோக்கி என் பயணத்தைத் திட்டமிட்டோம்.







எஸ்டாபோனாவிலிருந்து கிரானாடா ஏறக்குறைய 240 கி.மி தூரம். கிராணாடா அதன் பெயர் எதிரொலிப்பது போல (Grand, Granada) பிக பெரிய ஒரு நகரம். நகர் முழுதையும் சுற்றிப் பார்க்க குறைந்தது 4 நாட்கள் தேவைப்படும். ஆனால் இந்த நகரின் மிகப் பிரசித்தி பெற்ற அல்ஹம்ரா கோட்டையை மட்டும் பார்த்து வருவது என்பது தான் நோக்கமாக இருந்ததால் ஒரு நாள் பயணம் மேற்கொண்டோம். எஸ்டாபோனாவிலிருந்து வடக்கு நோக்கிய பயணம். மலைபகுதியைக் கடந்து செல்லும் போது சாலையின் இரு பகுதியிலும் ஏக்கர் ஏக்கராக ஆலிவ் மரங்கள். இப்படி ஒரு பெரும் ஆலிவ் பயிரீட்டை நான் இதுவரைப் பார்த்ததில்லை என்பதால் ஆச்சரியத்திலும் அதன் அழகிலும் என்னை மறதேன் என்றுதான் சொல்ல வேண்டும்.




கிரானாடா சரித்திர புகழ்பெற்ற ஒரு நகரம். ஸ்பெயின் வருபவர்கள் அனைவரும் கான விரும்பும் ஒரு நகரம். சியாரா நவேடா மலச்சிகரங்களின் பனிமலத்தொடரை ஒட்டி அமைந்த நகரம் இது. கிரானாடா டாரோ நதி இரண்டாகப் பிரிக்கும் இரண்டு மலைத்தொடர்களான அல்ஹம்ரா அல்பைசின் இரண்டையும் கொண்டுள்ளது. அல்பைசின் மிகப் பழமை வாய்ந்த ஒரு நகரம். 2300 ஆண்டுகளுக்கு முன்னரே எலிபிர்ஜெ (Elibyrge) எனச் சொல்லப்படும் குடியினர் இபேரியன் (Iberian) நாகரிகத்தை இங்கு தோற்றுவித்துள்ளனர். இப்பகுதி முழுவதுமே பல்பவேறு தருணங்களில் ரோமானியர்கள், அரேபியர்கள், கத்தோலிக்க ஆட்சிக்குட்படுத்தப்பட்டவை. போர், மற்றும் மதம் சார்ந்த விஷயங்கள் விட்டுச் சென்றுள்ள தடங்கள், இன்னமும் அழியாமல் பாதுகாக்கப்படுவது பெறும் சிறப்பு.







அல்ஹம்ரா - இந்த அரச நகரம் அரேபியர்கள் காலத்தில் கட்டப்பட்டது. மிகப் பிரமாண்டமான கோட்டை. சொர்ண மலை (Cerro de la Sabika) எனும் மலையில் இந்த பெறும் கோட்டை அமைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் கட்டிடக் கலை பெறுமைக்கு மிகப் பெரிய சான்றாக இந்த கோட்டை இன்று விளங்குகின்றது. இந்தக் கோட்டையின் கட்டுமான பணி முன்னூறு ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. அரேபிய சித்திரக் கலை கட்டுமானக் கலையை மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட சுவர்கள், விசாலமான தோட்டம் என ஒரு குட்டி நகருக்குள் பிரவேசிப்பது போன்ற அனுபவத்தை இந்தக் கோட்டை வழங்குகின்றது.







இந்தக் கோட்டையைச் சுற்றிப்பார்க்க 13 யூரோ கட்டணம். காலை 8 மணியிலிருந்து இங்கு சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படுகின்றது. விடுமுறை காலங்களில் இந்த கோட்டைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் முன்னதாகவே இணையத்தின் வழி நுழைவுச் சீட்டு எடுத்துக் கொள்வதற்கும்
வாய்ப்புள்ளது.




உள்ளே நுழையும் போது முதலில் நீளமான பச்சை பசேலென கம்பளம் விரித்தார் போன்ற புல்வெளியும் தோட்டமும்.





Wednesday, November 18, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 10

10ம் நாள் - கிப்ரால்டா







இடையில் இரண்டு நாட்கள் ஓய்வின் போது கடற்கரை அழகை ரசிப்பதிலும் புத்தகத்தை வாசிப்பதிலும் எங்கள் பொழுதுகள் கழிந்தன.



எங்கள் பயணப் பட்டியலில் இருந்த அடுத்த நகரம் கிப்ரால்டா. கிப்ரால்டா ஸ்பெயினின் ஒரு தீபகற்பமாக இருந்தாலும் இது இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நகரம்(நாடு). துறைமுகம் பாதுகாப்பு போன்ற முக்கிய காரணங்களுக்காக இந்த சிறிய தீபகற்ப பகுதியை இங்கிலாந்து ஸ்பெயினிற்கு விட்டுக் கொடுக்காமல் தானே வைத்திருக்கின்றது.







எஸ்டாபோனாவிலிருந்து ஏறக்குறைய 120 கிமி தூரத்தில் கிப்ரால்டா உள்ளது. உள்ளே செல்ல பாஸ்போர்ட் நிச்சயமாக வேண்டும். ஸ்பெயின் மொழியிலிருட்ந்து ஆங்கிலத்திற்கு எல்லாமே எனும் திடீர் மாற்றத்தை நன்றாக உணர முடிந்தது.







கிப்ரால்டா ஒரு மிகச் சிறிய நாடு என்று தான் சொல்ல வேண்டும். ஒரு நாளில் ஏறக்குறைய எல்லாவற்றையும் பார்த்து விடலாம். உள்ளே பாதுகாப்பு பகுதியைத் தாண்டி வாகனத்தைச் செலுத்தியதுமே குறுகிய சாலைகளைக் கடந்து கிப்ரால்டா பாறையில் அமைந்துள்ள பகுதிகளைக் காண முடிவெடுத்து பயணித்தோம்.







St.Michael's Cave - இந்த குகை பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் இருந்ததற்கான தடயங்களைக் கொண்ட ஒரு பகுதி.








குகையின் உள்ளே பிரமாண்டமாக இயற்கையாக உருவாகியுள்ள stalactites மற்றும் stalagmites இயற்கையின் அதிசயத்திற்கு ஒரு உதாரணம்.








இங்கு குகையின் உள்ளே கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன என்ற கேள்வியுற்றபோது மலைப்பாக இருந்தது.







இந்தக் குகையைப் பார்த்து கீழே வரும் போது சாலையில் குரங்குகளின் பவனியையும் ரசிக்கலாம். இவை மிக அன்பான குரங்குகள் என்று தான் சொல்ல வேண்டும்.







யாரையும் தொந்தரவு செய்யாமல் கொழு கொழுவென்று மிகப் பெரிதாக குழந்தை குடும்பம் என்று கூட்டமாக சுவர்களில் சாலை ஓரத்தில் அமர்ந்து கொண்டு இவை இருப்பதை ரசிக்காமல் செல்ல முடியாது.







இதனை அடுத்து மூரிஷ் கோட்டை, போர் குகை, தேவாலயம் எனப் பார்த்து விட்டு கீழே இறங்கி மதிய உணவு சாப்பிட்டு பின்னர் சாலையில் நடந்து வருகையில் அழகான ஒரு யூத சினோகக் மற்றும் ஒரு ஹிந்து ஆலயத்தையும் பார்த்து அன்று மாலையே எஸ்டாபோனா திரும்பினோம்.







கிப்ரால்டா முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் மட்டுமல்லாமல் பல முறை போர் காரணங்களுக்காக முக்கிய பாதிப்பினை எதிர்நோக்கிய ஒரு பகுதியாகவே இருந்திருக்கின்றது. தெற்கு நோக்கினால் ஆப்பிரிக்க கண்டம். துனேசியா, மரோக்கோ என ஆப்பிரிக்க நாடுகள். வடக்கில் ஸ்பெயின் மேற்கில் போர்த்துகல். இந்தப் பகுதி அமைந்துள்ள இடமும் மிக முக்கியமான ஒரு காரணமாக அமைவதால் பல நாடுகள் கிப்ரால்டாவை தங்கள் வசப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டியிருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல.