Tuesday, February 19, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 9


கோட்டைக்கு நடைப்பயணம்

நடந்து சற்று நேரத்தில் முதல் கோட்டையான ஏரன்பெர்க் கோட்டையை வந்தடைந்தோம். இந்தக் கோட்டையின் கிழ்ப்பகுதி 12ம் நூற்றாண்டு முதல் உப்பு விநியோகத்திற்கு மிக முக்கிய இடமாக அமைந்திருந்தமையும் தெரிந்து கொண்டேன்.  இந்த உப்புக்கிடங்கு அறை பல நூற்றாண்டுகள் ஆகியும் கூட இன்னமும் நல்ல  நிலையிலேயே இருப்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.



முதல் கோட்டையான இந்த ஏரன்பெர்க் கோட்டையின் காலம் 13ம் நூற்றாண்டு. இந்த ஏரன்பெர்க் கோட்டை ஏனைய எல்லா அரண்மனைகளைப் போன்றும் சில போர் கால நிகழ்ச்சிகளுக்கும் மாறுதல்களுக்கும் உட்பட்டிருக்கின்றது.  1546ம் ஆண்டில் ஒரு முறையும் 1703ம் ஆண்டில் ஒரு முறையும் நிகழ்ந்த போரில் இந்தக் கோட்டை ஓரளவுக்கு சேதம் அடைந்தது.  இந்த முதல் கோட்டைக்குச் செல்லும் வழிப் பாதையிலே ஆங்காங்கே சில குகைகளைக் காண முடிகின்றது. சில சிறியன. பொந்து போன்ற வடிவிலானவை. சில ஒரு மனிதர் நுழைந்து பதுங்கிக் கொள்ளும் அளவு, சில பெரிய குகைப்பாதைகள்..  என வித்தியாசங்களில்!





அதில் ஒரு குகைக்குப் பெயர் The Golden hole. இந்த சிறு பொந்திற்குள் பொக்கிஷம் குவிந்து கிடப்பதாகவும் நல்ல நேர்மையான மனம் உள்ளவர்கள் கையை உள்ளே விட்டு பார்த்தால் அந்தப் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்றும் இங்கே வழக்கில் ஒரு கதையும் இருக்கின்றது. தீய குணம் கொண்டவர்களாக இருந்தால் கையை உள்ளே விடும் போது பொக்கிஷம் கிடைக்காதாம். அதற்குப் பதிலாக பாம்பு வந்து கையைக் கடித்து விடுமாம். இங்கேயும் இப்படி வழக்கில் சில நம்பிக்கைகள்!



ஊருக்கு ஊர் இப்படி நாட்டுப்புற கதைகள்.. அவை ஆசிய நாடுகளாக இருந்தாலும் சரி ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி.. மனிதர்கள் இவ்வகையான கதைகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பதைத் தான் இவ்வகை பயண அனுபவங்கள் வழி தெரிந்து கொள்கின்றோம்.



பொந்துக்குள் கையை விட்டு ஏன் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கோட்டை சிதலமடைந்த நிலைதான் என்றாலும் பேரழகு. மலை உச்சியிலிருந்து கீழே பார்க்கும் போது ரோய்ட்ட நகர், அதனை ஒட்டி அமைந்த சிறு கிராமங்கள் அனைத்தும் பனி போர்த்திய பாற்கடலில் முளைத்த வீடுகள் போல காட்சியளித்துக் கொண்டிருந்தன.




முதல் கோட்டையைப் சென்றடைந்து அதனைச் சுற்றிப்பார்த்து அதன் பின்னர் அடுத்த கோட்டையையும் சென்று பார்க்க ஆவல் ஏற்பட்டதால் அடுத்த கோட்டையையும் பார்க்க நடந்தோம். மலை மேல் இருக்கும் இந்தக் கோட்டை அதிக தூரம் என்பதால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிச்சயமாகத் தேவைப்படும் என்பதை அறிந்திருந்தோம். ஆனாலும் இந்த மலையின் உயரத்தில் இருக்கும் கோட்டையயும் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் கொட்டிக்கிடந்த பணியையும் பொருட்படுத்தாது நடந்தோம்.


இந்த இரண்டாம் கோட்டையின் பெயர் ஷ்லோஷ்கோப்ஃ கோட்டை (Schlosskopf). இந்தக் கோட்டைக்கு பிரத்தியேகமான ஒரு சிறப்பு உண்டு. அதாவது. ஆஸ்திரியாவின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு கோட்டையென்றால் அது இதுதான்.  இந்தக் கோட்டை 1704ம் ஆண்டில் தான் முதலில் கட்டப்பட்டது. 18ம் நூற்றாண்டின் ஆஸ்திரிய வரலாற்றில் பல அரசியல் நிகழ்வுகளைச் சந்தித்த கோட்டை இது எனக் குறிப்பிடப்படுகின்றது.



1740ம் ஆண்டில் அரசி மரியா தெரேசா தனது 23ம் வயதில்  தனது தந்தையான பேரரசர் ஆறாம் கார்லிடமிருந்து ஆட்சிப் பொருப்பை எடுத்துக் கொண்டு பேரரசியாக முடி சூடி இந்தக் கோட்டையில் வசித்து ஆட்சி செய்திருக்கின்றார். இவரது ஆட்சி 40 ஆண்டு காலங்கள் நீடித்திருக்கின்றது.  இந்தப் பேரரசியார் தனது ஆட்சி காலத்தில் தான் அப்போதைய ஆஸ்திர ராஜியத்தில் 6லிருந்து 8வயது தொடங்கும்  ஆண் பெண் குழந்தைகள் எல்லோருக்கும் கட்டாயக் கல்வி தேவை என சட்டமாக்கி அமுலுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். இவர் 29.நவம்பர் 1780 ஆண்டில் தமது 63ம் வயதில் தான் ஆட்சியில் இருக்கும் போதே இறந்தார்.

இரண்டு கோட்டைகளையும் பார்த்துப் பரவசம் அடைந்து மீண்டும் நடந்து கீழே வந்தடைவதற்கு மாலை ஐந்து மணியாகி விட்டது. அன்றைய நாளில் கோட்டையின் வாசலில் ஆரம்பித்து மீண்டும் கீழே வாகனம் இருக்கும் இடம் வரும் வரை ஏறக்குறை 17 கிமீ தூர நடை.

முதல் நாள் மேற்கொண்ட  க்ரோஸ் கண்ட்ரீ ஸ்கீயிங் பயணத்தில் உடல் அலுத்துப் போய் இன்று நடக்கவே முடியாதோ என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இது மகா ஆச்சரியம் தான். நமது உடலில் நமக்குத் தெரியாமலேயே எவ்வளவு அளப்பறிய சக்தி இருக்கின்றது என்று அச்சமயம் உணர்ந்தேன்.

சுபா


Wednesday, February 6, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 8

கோட்டைக்குச் செல்வோமா?

29.12.2012

முதல் இரண்டு நாட்களும் க்ரோஸ் கண்ட்ரீ ஸ்கீயிங் சென்றிந்தமையால் உடலில் அசதி நன்கு தெரிந்தது. அதனால் இடையில் ஒரிரு நாள் ஓய்வெடுக்கலாம் என்று முடிவு செய்து அருகாமையில் பார்க்க என்ன இருக்கின்றது என்று தேடினோம். ரோய்ட்ட நகரின் Ehrenburg பகுதியில் பழமையான அரச கோட்டைகள் இருக்கின்றன. மலைமேல் இருக்கும் இந்தக் கோட்டைகளைச் சென்று இந்த நாளில் அவற்றை பார்த்து வரலாமே என முடிவெடுத்துக் கொண்டோம்.



அதற்கு முன்னர் எங்கள் தங்கும் விடிதியினர் எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த குதிரை வண்டி பிராயணம் காலையில் இருந்தது. 10 பேர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டி ஜல் ஜல் என்று மணிச்சத்தம் ஒலிக்க எங்களை அந்தப் பனி அடர்ந்த பகுதியில் உலா அழைத்துச் சென்றது. அந்தக்காலத்தில் ராஜ குடும்பத்தினர் எப்படிச் செல்வார்களோ அப்படி ஒரு அமைப்பு அந்த வண்டிக்குச் செய்திருந்தனர். நல்ல திடகாத்திரமான இரண்டு கருப்பு நிறக் குதிரைகள். அவை இரண்டும் நடக்கும் போதே உடலின் சூடு தரும் ஆவி பறக்க குதிரைகள் செல்வதை அந்த ஒரு மணி நேரத்து குதிரை வண்டி பிரயாணத்தில் அனுபவித்து மகிழ்ந்தேன். பனி படர்ந்த மலையடிவாரத்திலேயே பயணித்து ரோய்ட்ட நகரின் எல்லை வரை சென்று பின்னர் மீண்டும் தங்கும் விடுதி இருக்கும் இடம் வரை வந்து சேர்ந்ததும் எங்களை இறக்கி விட்டார் குதிரை வண்டிக்காரர்.



தங்கும் விடுதி வந்து உடைகளை மாற்றிக் கொண்டு கோட்டையைப் பார்க்க புறப்பட்டோம். நாங்கள் இருந்த தங்கும் விடுதியிலிருந்து Ehrenburg மலையின் அடிவாரப்பகுதி ஏறக்குறைய 7 கிமீ தூரம் தான்.  வாகனத்தில் பயணித்து சில நிமிடங்களில் கோட்டை வாயில் பகுதியை அடைந்து விட்டோம்.

இந்தக் கோட்டையின் அடிப்பகுதியில் ஒரு அருங்காட்சியகம், உணவகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையின் அடிவாசல் பகுதியில் நுழைவாயில் மட்டுமே உள்ளது. கோட்டைக்கு சென்று பார்க்க விரும்புவோர் கால்நடையாக மலையில் நடந்து மட்டுமே செல்ல முடியும்.

நாங்கள் நினைத்து வந்ததோ வாசல் பகுதியிலேயே கோட்டை இருக்கும் அல்லது கோட்டை வரை வாகனத்திலேயே சென்று விடலாம் என்று. ஆனால் அதற்கு வழியில்லை என்பது தெரிந்து விட்டது. நடந்து தான் செல்ல வேண்டும். ஆக அடுத்து நாங்கள் எதிர்பார்க்காமலேயே, திட்டமிடாமலேயே ஒரு நடை பயணம் என்று முடிவானது.

இரண்டு வெவ்வேறு மலைகளின் மேல் இரண்டு கோட்டைகள் என்ற வகையில் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பேரரசர் கட்டியிருக்கின்றார். ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானது. முதல் கோட்டையைச் சென்று பார்த்து விட்டு உடம்பில் மேலும் வலுவிருந்தால் அடுத்த கோட்ட்டைக்குச் செல்லலாம் என முடிவெடுத்துக் கொண்டோம்.

முதல் கோட்டையை விட அடுத்த கோட்டை மிக உயரத்தில் இருந்தது. அதனால் முதலில் எளிதான கோட்டையைச் சென்று பார்ப்போம் என நடக்க ஆரம்பித்தோம்.



மலைப்பாதை.. இலைகள் கொட்டிக் கிடந்தாலும் பாதை முழுக்க பணி நிறைந்து கிடந்தது.

சாதாரணமாக மலையின் செங்குத்தான நடைப்பாதையில் நடப்பதையும் விட இது சற்று சிரமமாகத்தான் அமைந்திருந்தது. 30 நிமிடத்தில் கோட்டையை அடைந்து விட முடியும் என்று கீழே தகவல் போடப்போட்டிருந்ததை நம்பி நடந்த நாங்கள் ஏறக்குறைய 45 நிமிடங்கள் கழித்தே கோட்டையை அடைந்தோம்.


அவ்வப்போது சறுக்கி சறுக்கி விடும் பாதையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டே சென்றாலும் இருபக்கமும் நிறைந்திருந்த ஊசி இலை மரங்களின் அழகு அப்பாதையில் செல்வோரை கணகளையும் கருத்தையும் கவர்ந்து இழுத்து விடும் தன்மை உடையதாக இருந்தது.  குளிரின் பனியைத்தாங்கிக் கொண்டு அதன் நீரைத் தேக்கி அந்த நீரை சிறு துளிகளாக்கி சொறிந்து கொண்டிருந்தன அந்த ஊசி இலை மரங்கள். மெல்லிதான சூரிய ஒளிக் கீற்றில், அப்போது  தூறிக் கொண்டிருந்த சாரலும் சொட்டு சொட்டாக விழும் இந்த பனித்துளிகளும் தரையை மட்டும் நனைக்க வில்லை. அக்காட்சி என் மனதையும் நனைக்க அதன் ரம்மியமான அழகில் நான் மனம் கரைந்து கொண்டிருந்தேன்.



தொடரும்..

சுபா

Saturday, February 2, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 7


ஆஸ்திரிய கிராமங்கள்

கிராமத்து வாழ்க்கை என்பது, அது எந்த  நாடாக இருந்தாலும் சரி, நினைக்கும் போதே மனதில் ஒரு அமைதியையும் எளிமையயும்  உருவாக்கக் கூடிய தன்மை வாய்ந்தது. கிராமம் என்றாலே பரந்து விரிந்து காணப்படும் மலைகள், பசுமையைக் காட்டி நிற்கும் புல்வெளிகள், வயல்கள், மரங்கள், செடி கொடிகள்,  வீட்டு வளர்ப்பு பிராணிகள் என நம் கண் முன்னே வந்து நிழலாடும் இல்லையா? அந்த வகையில் ஆஸ்திரியாவில் கிராமங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை நான் அறிந்த வகையில் இந்தப் பதிவில்
பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த ஆண்டின் எங்களது பனிக்கால விடுமுறையிலும் சரி இந்த 2012 ஆண்டு பயணத்திலும் சரி,  இரண்டிலுமே கிராமப்புறத்தில் அமைந்த தங்கும் விடுதியில் இருக்கும் வாய்ப்பு அமைந்ததனால் கிராமப்புறச் சூழலை சில நாட்கள் நேரடியாகத் தங்கியிருந்து அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் மக்களின் வாழ்க்கை முறை, தொழில், அன்றாட நடப்புக்கள் என சில விஷயங்களை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடிந்தது.



டிரோல் மானிலத்தின் கிராமங்கள் என எடுத்துக் கொண்டால் அனைத்துமே மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்திருக்கும் கிராமங்களே. இங்கே பொதுவாக காடுகள் நிறைந்து இருப்பதால் மலைப்பகுதிகளின்
தாழ்வான பள்ளத்தாக்குப் பகுதிகளில் கிராமங்கள் அமைந்திருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமங்கள் என்ற வகையில் சின்ன சின்ன கிராமங்கள், அவற்றை ஒருங்கினைக்கும் ஒரு சிறு அல்லது பெரு
நகரம் என்ற வகையில் கிராமப் புறங்களைக் காண முடிகின்றது.

டிரோல் மானிலத்தின் பெரும்பாலான கிராமங்கள் சுற்றுப்பயணிகளை மையமாக வைத்து இயங்கி வரும் வர்த்தகத்தைப் பின்னனியாகக் கொண்டுள்ளன. தங்கும் விடுதிகள், சுற்றுப்பயணிகளுக்கான ஸ்கியிங்,
நோர்டிக் வாக்கிங், நோர்டிக் ஸ்கீயிங், க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங், ஸ்னோ போர்ட் விளையாட்டுக்களை மையமாக வைத்து இயங்கும் வர்த்தகங்களாக இவை அமைந்துள்ளன. அந்த வகையில், பயிற்சி நிலையங்கள், விளையாட்டு உடைகள் பொருட்களுக்கான விற்பனை மையங்கள், உணவு விடுதிகள்
என்பவை பெருமளவில் காணப்படுகின்றன. இவை தவிர்த்து குதிரை ஏற்றப் பயிற்சிமையங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என்பன போன்ற சிறு தொழில் மையங்களும் உள்ளன. இவை தவிர்த்து காடுகளை மையமாக வைத்து இயங்கும் மர ஆலைகள் இங்கு அமைந்திருக்கின்றன. பிராணிகள் வளர்ப்பு,  விவசாயம்,   போன்றவையும் சீஸ், இறைச்சி வத்தல்கள் (மாடு, பன்றி, செம்மறி ஆடுகள்)  தயாரிப்பு மையமும் இங்கே குடும்பத் தொழில் என்ற வகையிலும் சிறிய பெரிய வர்த்தகங்கள் என்ற வகையிலும் இயங்கி
வருகின்றன.



ஒரு சர்வ சாதாரண நாளில் வருடத்தின் எல்லா நாட்களிலுமே குதிரைகளில் செல்பவர்களையும், ஜல் ஜல் என்று மணியடித்துக் கொண்டு சுற்றுப் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் குதிரை வண்டிகளையும்,
வயலில் ஏதாகினும் பணி புரிந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் இங்கே காணலாம்.


ஆஸிதிரிய பாரம்பரிய வகை வீடுகளின் கட்டிட அமைப்பில் கட்டப்படும் புதிய வீடுகள்

கிரமப்புற வீடுகளில் பெரும்பாலானவை இன்னமும் பழங்கால வடிவத்தை மாற்றாமல் ஆனால் அதே சமயம் நல்ல முறையில் பராமரிக்கப்படும் வகையிலேயே அமைந்துள்ளன. ஆங்காங்கே சிலஅப்பார்ட்மெண்ட்களையும் புதிய கட்டிடங்களையும் காண முடிந்தாலும் பழமை மாறாத வீடுகளே அதிகமாக நிறைந்துள்ளன. புதிதாகக் கட்டப்படும் வீடுகள் கூட பழங்கால கட்டிட அமைப்பில் உள்ளவாறு கட்டியுள்ளதையும் காணலாம்.



பணியில் உலா

ஆஸ்திரிய கிராமங்களில் சில மணி நேரங்கள் நடந்தால் குதிரை வாசனையும் காடுகள் மரங்கள் வயல்களின் இயற்கை மனமும் நமது நாசியைத் துளைப்பதை உணர முடியும். எந்த நாடாக இருந்தாலும் அந்தந்த நாட்டின் மண்ணின் மணம் மாறுமா என்ன?

தொடரும்...

சுபா

Wednesday, January 30, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 6


மீண்டும் பனியில் பயணம்

சென்ற பதிவில் ஆஸ்திரிய கிராமங்களில் உள்ள தேவாலயங்கள், சிறு கோயில்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். வேறு சில தகவல்களுக்குச் செல்வதற்கு முன்னர் இரண்டாம் நாள் விளையாட்டு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

28.12.2012 

முதல் நாள் க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங்   Tannheimertal பகுதியில் அமைந்தது. Tannheimertal பகுதி ஸ்கீயிங் விளையாட்டிற்கு உகந்த ஓர் இடம் என்றாலும் க்ரோஸ் கண்ட்ரீ ஸ்கீயிங் விளையாட்டில் இன்னமும் ஆரம்ப நிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்குச் சற்று சிரமமான மலைப்பகுதி என்றே சொல்ல வேண்டும். இதற்கு பதிலாக Tannheimertal  பள்ளத்தாக்குப் பகுதிக்கு 5 கிமீட்டர் முன்னதாக அமைந்துள்ள Wesselwaengle  கிராமம் எனக்கு உகந்ததாக இருக்கும் என்று மனதில் தோன்றியது. இதற்குக் காரணம் இங்கே பணி கொட்டிக் கிடக்கும் திடலானது மிகப் பரந்தும், இடைவெளியில்லாமலும், அதே சமயம் அதிக மேடுகளும் பள்ளங்களும் இல்லாமல் இருந்தமையே.




அதனால் முதல் நாள் அனுபவத்தை மனதில் நினைத்துக் கொண்டு மறு நாள் Wesselwaengle  கிராமத்திற்குச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இங்கேயும் சிறியவர்களும் பெரியவர்களும் பயிற்சி செய்ய மிக நல்ல வாய்ப்பு அமைந்திருந்தது. நான் குறைந்தது 2 மணி நேரமாவது இன்று பயணிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சீராக அமைக்கப்பட்ட ஒரு பனிப்பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதில் பயணித்துக் கொண்டே பனியின் அழகு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கும் ஊசி இலை மரங்களையும் குடில்களையும்  ரசித்துக் கொண்டும், திடீரென்று கண் முன்னே தோன்றும் நாய் சறுக்கல் வண்டியைப் பார்த்து வியந்து கொண்டும் மெதுவாகவே என் பயணத்தைத் தொடங்கினேன்.




எனக்குப் பின்னால் வந்த சிலர் கூட என்னத் தாண்டி வேகமாகச் சென்று விட்டனர். ஆனால் நான் நிதானமாக எனக்கு எவ்வளவு முடியுமோ அந்த வேகத்தில் பயணித்தால் போதும் என்று முடிவெடுத்துக் கொண்டு பணியில் சறுக்கி சறுக்கி நடை பயணம் செய்தேன்.

நான் தேர்ந்தெடுத்த பாதை 12 கிமீ தூரம் உடையது. ஒவ்வொரு 2 கி.மீ தூரத்திலும் சிறு பலகையில் எவ்வளவு தூரம் தாண்டி வந்துள்ளோம் என்ற குறிப்பு இருப்பதால் அவ்வப்போது 2 கி.மீ தூரம் முடியும் போது மனதில் ஒரு பெருமிதம் தோன்றும். ஏறக்குறைய 9 கி.மீ தூரம் வந்ததும் மிகவும் அலுத்து விட்டது. ஆனாலும் நிறுத்தப்போவதில்லை என்று மனதில் முடிவு செய்து கொண்டேன். சிறு ஓய்வுக்காக ஒரு குடிலுக்குச் சென்று 10 நிமிடங்கள் இருந்து தேனீர் அருந்தி விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினேன்.


ஸ்கீயில் பொறுத்தப்பட்ட காலணியுடன்

சில வேளைகளில் அந்த நீண்டு பரந்து விரிந்த பனி போர்த்திய திடலில் நான் மட்டுமே தனியாக இருப்பதை உணர்வேன்.  மலைகளின் இடையே.. பனி நிறைந்த பள்ளத்தாக்கில் நான் மட்டும். அந்த வேளையில் என மனம் முழுமைக்கும் அமைந்தியும் ஆனந்தமும் நிறைந்திருந்ததை உணர்ந்தேன்.



ஏறக்குறைய மூன்றே முக்கால் மணி நேரத்திற்குப் பின்னர் நான் ஆரம்பித்த பகுதியை வந்தடைந்தேன். சரியாக 12 கி.மீ தூரத்தை இந்த  நாளில் முடித்திருந்தேன். இது மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது; ஆனால் உடலுக்கு அல்ல. பனியோடு பனியாகி கரைந்திருந்த என் மனத்தோடு அந்தக் குளிரிலும் என் உடல் முழுக்க வியர்வையால் நனைந்து போயிருந்தது.


தொடரும்...

சுபா

Sunday, January 27, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 5


கோயிலும் இங்குண்டே..!

ஆஸ்திரியாவைப் பற்றி எழுதி வரும் போது, இன்றைய நாளில் ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு உலகப்புகழ் மிக்க ஒரு கலைஞரைப் பற்றி குறிப்பிடுவது மிகத் தகும் இல்லையா? மோஸார்ட் எனப் பரவலாக அழைக்கப்படும் Wolfgang Amadeus Mozart பிறந்த தினம் இன்று. இன்றைய தேதியில் 1756ம் ஆண்டு பிறந்தவர். இவரது புகழை பலரும் அறிவோம். ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் மானிலத்தில் பிறந்தவர். வாய்ப்பு அமைந்தால் ஒரு தனிப்பதிவிவ்ல் இவரைப் பற்றி குறிப்பிடுகின்றேன்.

சரி.. இன்றைக்கு கோயில்களைப் பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நன்மொழி நம் வழக்கில் உள்ளது. இது தமிழ் தேசத்திற்கு மட்டும்  பொருந்திய உண்மையா என்றால் இல்லை என்பதாகவே அமைகின்றது எனது பயண அனுபவங்கள். உலகில் தோன்றியுள்ள அனைத்து சமூகத்திலும் இறை நம்பிக்கை எனும் ஒன்று அடிப்படையில் மனதில் அமைந்திருக்கின்ற ஒரு பண்பாக இருக்கின்றது. எங்கெல்லாம் மனித சமூகம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவரவர் மத வழிபாட்டிற்குத் தேவைப்படும் கோயில்களுக்குக் குறைச்சல் இல்லை என்பதை எனது பல விரிவான அயல் நாட்டுப் பயணங்களில் பார்த்து குறித்து வைத்துள்ளேன்.

கிராமத்து சாலையோரத்துக் கோயில்

அந்த வகையில் ஜெர்மனியின் பவேரிய மானிலமாகட்டும், அதன் தொடர்ச்சியாக அமைந்த நிலப்பரப்பில் அடங்கியுள்ள ஆஸ்திரியாவாகட்டும், எல்லா பெரிய நகரங்களிலும் சரி, சிற்றூர்களிலும் சரி தேவாலயங்களைக் காணலாம்.

எங்கள் தங்கும் விடுதி Hotel Talhof  இருந்த இடம் Wangle என்ற கிராமம். நாங்கள் தங்கியிருந்த கிராமத்தின் மிகப் பெரிய நகர் என்றால் அது ரோய்ட்ட நகர் தான். இதன்  அருகாமையில் அமைந்த சிறு நகரங்களாக Breitenwang, Ehenbichl, Pflach, Hoefen, Weissenbach ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.  இந்த சிறு நகரங்களில் பல சிறு கிராமங்கள் அடங்கியிருக்கின்றன.

ரோய்ட்ட நகர் Wangle கிராமத்திலிருந்து 5 கிமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இங்கு ஒரு நாள் நடைப்பயணம் சென்று வந்த போது வேங்க்லெ கிராமம் அதனையடுத்து வரும் லேஹெஷவ் கிராமங்களை நன்கு பார்த்து ரசிக்க முடிந்தது. ரோய்ட்ட நகரில் 13ம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றும் மேலும் சில பழமை வாய்ந்த தேவாலயங்களும் இருக்கின்றன. அவை இன்றும் புணரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு நல்ல நிலையில் அமைந்திருக்கின்றன.


ரோய்ட்ட நகரில் அமைந்துள்ள தேவாலயம்

லேஹெஷவ் கிராமத்திலும் ஒரு பெரிய  தேவாலயம் இருக்கின்றது. 5 கிமீட்டர் தூரத்திற்குள்ளேயே ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தேவாலயங்கள் எனப் பார்க்கும் போது தேவாலயங்கள் இங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.

வாங்க்லே கிராமத்து எல்லைச்சாமி கோயில்

இந்தப் பெரிய தேவலாயங்களை விட என்னை வெகுவாகக் கவர்ந்தவை சாலை ஓரங்களில் அமைந்திருக்கின்ற சிறு கோயில்கள். தமிழகத்தில் காணக்கூடிய எல்லைச்சாமி கோயில், கிராம தேவதைகள் கோயில் போல இவை இருக்கின்றன. ஒரு கிராமம் ஆரம்பிக்கின்ற எல்லையின் ஆரம்பத்தில் பொதுவாக இவ்வகை சிறு எல்லைச்சாமி தேவாலயங்கள் இருக்கின்றன. சில இடங்களில் கிராமங்களின் மத்தியிலும் கூட இவை அமைந்திருக்கின்றன. ஒரு கிராமத்திற்கு ஒரு சிறு கோயில்தான் என்ற கணக்கு இல்லாத வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூட சில தென்படுகின்றன.


மற்றொரு சாலையோரத்து கோயில் முகப்பு

பொதுவாக இவ்வகை எல்லைச்சாமி கிராம தெய்வ கோயில்களில் வழிபாட்டிற்கு அமைந்திருப்பது சிலுவையில் சார்த்தப்பட்ட ஏசுவின் உருவமாகவோ அல்லது மேரி மாதா கையில் குழந்தையைக் வைத்திருப்பது போன்ற சிலையாகவோ அமைந்திருக்கின்றது. அதிலும் பார்க்கையில் ஏசுவின் சிலைகள் தான்  மிக அதிகமாக பல சிற்றூர்களில் காணக்கூடியதாக அமைந்திருக்கின்றன. தெய்வ நம்பிக்கை எனும் ஒரு விஷயம் ஆசிய  நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் கூட கிராம மக்களின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒரு அங்கத்தை வகிக்கின்றது என்பது உண்மை!

தொடரும்....

சுபா

Thursday, January 24, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 4


வந்த வேலையைப் பார்ப்போமா??

27.12.2012

ரோய்ட்ட பற்றியும் சொல்லியாயிற்று, உணவு பற்றியும் கொஞ்சம் சொல்லியாயிற்று. சரி.. வந்த வேலையைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டாமா? :-)

எங்கள் க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் உடைகளை அணிந்து கொண்டு அதற்குத் தேவையான காலணி, ஸ்கீ ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். எங்கள் தங்கும் விடுதி இருந்த இடத்திலேயே பெரிய பனித்திடல். அதிலே இவ்விளையாட்டிற்கென்று தேவைப்படும் இரண்டு கோடுகள் போன்று அமைந்த பாதையை அமைத்து வைத்திருந்தார்கள். ஆனால் அப்பகுதி சற்று மலையும் மேடுமாக அமைந்திருக்க எனக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. முதல் நாள் சற்று சம தரையான பகுதியில் செல்வது விளையாட்டை ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்குவதற்குச் சற்று நம்பிக்கை தருவதாக அமையும் என்று நினைத்தேன்.  பீட்டருக்கு இதில் பிரச்சனையில்லை. சிறு வயது முடல் இவ்விளையாட்டைப் பழகியவர் என்பதால் எந்த  மாதிரியான இடங்களிலும் விளையாட்டைத் தொடங்கி விடலாம். ஆக எனக்கு உகந்ததாக ஒரு இடம் தேடிச் செல்வோம் என நினைத்து வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.


பலகையில் .. இறைவனை வணங்கி Tannheimertal உங்களை வரவேற்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருகாமையிலுள்ள பனி நிறைந்த பகுதிகளைப் பற்றியும் கொஞ்சம் முதல் நாளே நாங்கள் விசாரித்து வைத்திருந்தோம். அதனால் ரோய்ட்ட நகரிலிருந்து 13 கிமீ தூரத்தில் உள்ள Tannheimertal  என்ற பகுதிக்குச் செல்வது நல்ல முடிவாக இருக்கும் என்று இருவருக்கும் தோன்றியது.

இறுதியாக 2011 டிசம்பர் க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் போன அனுபவம் என்பதால் முதலில் மனதிற்குள் சிறு நடுக்கம் இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக ஸ்கீ வழுக்கி ஓட ஆரம்பித்தால் வேகம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.  ஆனாலும் சென்ற ஆண்டின் பயிற்சியின் அனுபவத்தை மறக்காததால் ஓரளவிற்குத் தொடர்ந்து பயணிக்க முடிந்தது.  நான் ஏறக்குறைய சமதரை சிறு மேடுகள் சிறு பள்ளங்கள் போன்ற பாதையிலேயே பயணித்து சென்று கொண்டிருந்தேன். ஏறக்குறைய 4 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததும் இன்றைக்கு இது போதும் என்று மனதில் தோன்றியது. பனியிலும் இந்தப் பயணத்தைல் வேர்வையால் நனைந்து கரைந்திருந்தேன்.


க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் ஸ்கீ

அலுத்துப் போய் வரும் போது அந்த அலுப்பை போக்கவும், குளிருக்கு இதமாக இருக்கவும் தேனீர் சாப்பிடுவது மிகப் பொறுத்தமாக இருக்கும் என நினைத்து அங்கு அருகாமையில் இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் நுழைந்து அமர்ந்தேன். அதற்குள் பீட்டரும் தனது பயணம் முடித்து விட்டு வந்து சேர இருவரும் மூலிகை தேனீர் வாங்கிக் கொண்டோம்.  முதல் நாள் சாதனையே பெரிதாயிற்றே! கொண்டாட வேண்டாமா நான்? அன்றைய தினத்தின் பெருமிதமான இந்த  சாதனைக்காக எனக்குப் பிடித்த கைஸர்ஸ்மார்ன் இனிப்பு வகை உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தேன்.

இன்றைய நாளின் சிறப்பு என்னவென்றால், எந்த நிலையிலும் நான் பனியில் சறுக்கி கீழே விழவில்லை.

முதன் முதலில் க்ரோஸ் கண்ட்ரி  ஸ்கீயிங் செய்த அனுபவத்தை நினைத்துப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகின்றது. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு முறை என்று கீழே விழுந்து விடுவேன். கடந்த  6 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சில நாட்கள் பயிற்சி என்ற வகையில் கீழே விழும் நிலை குறைந்து ஸ்கீ போர்டில் உறுதியாக நிற்கும் தைரியமும் நிதானமும் வந்திருந்தமைக் கண்டு எனக்கே ஆச்சரியம் தான்.

இந்த முதல் நாளில் 4 கி.மீ. தூரம் செல்ல ஏறக்குறைய 90 நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். இது எனக்கு திருப்தியளிக்கவில்லை என்பது உண்மை. ஆனாலும் முதல் நாள் தானே என்று ஒரு சமாதானம் செய்து கொண்டேன் :-)
 

Tannheimertal

Tannheimertal ரோய்ட்ட நகரின் பிரசித்தி பெற்ற ஒரு ஸ்கீ விளையாட்டு மையமும் கூட. இங்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து பயிற்சி எடுத்துக் கொள்வதும் விளையாட்டுக்காக வருவதும் என்று மக்கள் கூட்டம் நிறைந்ததாக அமைந்திருந்தது. இந்த நகரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்  இணையத்தில் இந்த  ஊரின் பெயரைத் தட்டச்சு செய்து வாசித்துப் பார்க்கலாம். அருகாமையில் உள்ள பல நாடுகளிலிருந்து  இங்கே சுற்றுலா பயணிகள் வந்து நிறைந்து விடுகின்றனர். வாகனங்களின் எண் பலகையைப் பார்த்தாலே எந்த நாட்டிலிருந்து வந்துள்ளார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது.


தொடரும்.....

சுபா

Wednesday, January 23, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 3


என்ன சாப்பிடலாம்??

பனி மனிதன்

ஆஸ்திரியாவில் இயற்கை என்னைக் கவர்வதைப் போலவே இங்கு கிடைக்கும் ஆஸ்திரிய உணவு வகைகளும் எனக்கு மிகப் பிடித்தமானவையே. அதிலும் குறிப்பாக இனிப்பு வகைகள்.

ஆஸ்திரியாவை நினைத்தாலே ஒரு சில உணவுகள் மனக்கண்முன் வந்து நின்று அழகு காட்டும். அவை:

  • kaiserschmarrn - கைஸர்ஸ்மான் - இதனை அப்படியே மொழி பெயர்த்தால் பேரரசரின் முட்டாள்தனம் என்பதாக வரும். இது என்ன பெயர் என  யோசிக்கலாம். ஆனாலும் பேரரசர் சாப்பிடும் சிறப்பு உணவாக இது 18ம் நூற்ராண்டு வாக்கில் இருந்திருக்கின்றது. சுவை.. ம்ம்ம்ம் ஒரு முறை சாப்பிட்டவர்கள் மனம் மறுமுறை சாப்பிட நிச்சயம் விரும்பும். 
  • Apfelstrudel - ஆப்ஃபல் ஸ்ட்ரூடல் (ஒரு வகையான ஆப்பிள் பை என்ச் சொல்லலாம்)
  • Germknödel - கெர்ம்க்னோடல் - பார்க்க இட்லி போன்ற வடிவத்தில் இருக்கும். ஆனால்  இனிப்பு கலந்து செய்யபப்டுவது.


கைஸர்ஸ்மான் - தொட்டுக்கொள்ள ஆப்பிள் சாஸ்

இதில் ஆப்ஃபல் ஸ்ட்ரூடலும், கெர்ம்க்னோடலும் வெனிலா சாஸில் மிதக்க வேண்டும். இதன் சுவை அபாரம். மேலே நான் குறிப்பிட்டுள்ள மூன்றும் தவிர்த்த மேலும் பல ஆஸ்திரிய உணவு வகைகள் இங்கே சுற்றுப் பயணிகளைக் கவர்ந்தாலும் என் மனதில் சாப்பிட ஆசையை ஏற்படுத்துவது இந்த மூன்றும் தான்.

எங்கள் தங்கும் விடுதியில் காலை உணவும் மாலை உணவும் நாங்கள் பதிவு செய்திருந்த பேக்கேஜில் சேர்ந்திருந்தமையால் காலை உணவு புஃவே வகையாகவும் மாலை உணவு நான்கு கோர்ஸ் மெனு அடங்கிய உணவாகவும் அமைத்திருந்தார்கள். உணவு ஏற்பாடு மிகச் சிறப்பாக அமைந்து நான் எந்த குற்றம் குறையும் சொல்ல முடியாத வகையில் அமைந்ததும் இந்தப் பயணத்தை எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமைத்திருந்தது என்பது உண்மை.

காலை உணவில் ஜெர்மானிய ஆஸ்திரிய வாகை ப்ரவூன் ப்ரெட் (ஹோல் மீல் ப்ரெட்), விதம் விதமான ரொட்டி, க்ரொஸோன் வகைகள், காய் கறிகள், பழங்கள், காபி டீ வகைகள் அமைந்திருந்தன. கொடுப்பதை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்பதை விட மனதிற்குப் பிடித்த உணவை நானே தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது அது தனிதிருப்திதான்.

மாலை உணவோ நான்கு கோர்ஸ் மெனு. அதாவது முதல் சுற்றில்  சூப், இரண்டாவது சுற்றில் சாலட் வகைகள், மூன்றாவதாக மெயின் டிஷ் இறுதியில் இனிப்பு வகை என நான்கு வகைகளாக அமைத்திருந்தனர். அதில் சூப் சாலட் இரண்டும் சைவ உணவாக வைத்து விட்டு மெயின் டிஷ் வகைகளை மூன்று வகைகளாக  தினமும் அமைத்திருந்தனர். முதல் வகை மாட்டிரைச்சி அல்லது பன்றியிரைச்சி உணவு, இரண்டாவது வகை கோழி, வான்கோழி அல்லது மீன் வகை, மூன்றாவது சைவ உணவு.  ஒவ்வொரு நாளும் முதல் நாள் மாலை நமக்கு ஒரு பட்டியல் தரப்படும். அதில் எந்த வகை உணவு வேண்டும் என்று நாம் குறித்துக் கொடுத்து விட மறு நாள் மாலை நமது தேர்வுக்கேற்ப ஒன்றாம் வகையா இரண்டாம் வகையா மூன்றாம் வகையா என பார்த்து நமக்கு உணவு வழங்கப்படும்.

ஒவ்வொரு நாளும் உணவில் மாற்றங்கள் செய்து மிகக் க்ரியேட்டிவாக மாலை உணவை அமைத்திருந்த பாங்கை பாராட்டாமல் இருக்க முடியாது.  சுற்றுலா பயணிகளுக்கு உணவும் திருப்தியளிப்பதாக அமைந்திருக்க வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொண்ட இந்த தங்கும் விடுதி உரிமையாளர்களைப் பாராட்டியது என் மனம். அதில் மேலும் என் மனதை கவர்வதாக இன்னொன்றும் அமைந்தது. தங்கும் விடுதியின் உரிமையாளர்களில் ஒருவர் -  ஒரு பெண்மனி தினமும் மாலை உணவின் போது எங்கள் ஒவ்வொருவர் மேஜைக்கு அருகிலும் வந்து அன்றைய நாள் சிறப்பாக அமைந்ததா?  எங்கள் பனி விளையாட்டு அனுபவம் எப்படி அமைந்தது?  உணவு திருப்தியாக அமைந்ததா எனக் கேட்டுச் செல்வார். அவரது அழகான சிரித்த முகம் விருந்தினர்களை கவராமல் இருக்காது.