மீண்டும் பனியில் பயணம்
சென்ற பதிவில் ஆஸ்திரிய கிராமங்களில் உள்ள தேவாலயங்கள், சிறு கோயில்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். வேறு சில தகவல்களுக்குச் செல்வதற்கு முன்னர் இரண்டாம் நாள் விளையாட்டு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
28.12.2012
முதல் நாள் க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் Tannheimertal பகுதியில் அமைந்தது. Tannheimertal பகுதி ஸ்கீயிங் விளையாட்டிற்கு உகந்த ஓர் இடம் என்றாலும் க்ரோஸ் கண்ட்ரீ ஸ்கீயிங் விளையாட்டில் இன்னமும் ஆரம்ப நிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்குச் சற்று சிரமமான மலைப்பகுதி என்றே சொல்ல வேண்டும். இதற்கு பதிலாக Tannheimertal பள்ளத்தாக்குப் பகுதிக்கு 5 கிமீட்டர் முன்னதாக அமைந்துள்ள Wesselwaengle கிராமம் எனக்கு உகந்ததாக இருக்கும் என்று மனதில் தோன்றியது. இதற்குக் காரணம் இங்கே பணி கொட்டிக் கிடக்கும் திடலானது மிகப் பரந்தும், இடைவெளியில்லாமலும், அதே சமயம் அதிக மேடுகளும் பள்ளங்களும் இல்லாமல் இருந்தமையே.
அதனால் முதல் நாள் அனுபவத்தை மனதில் நினைத்துக் கொண்டு மறு நாள் Wesselwaengle கிராமத்திற்குச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இங்கேயும் சிறியவர்களும் பெரியவர்களும் பயிற்சி செய்ய மிக நல்ல வாய்ப்பு அமைந்திருந்தது. நான் குறைந்தது 2 மணி நேரமாவது இன்று பயணிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சீராக அமைக்கப்பட்ட ஒரு பனிப்பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதில் பயணித்துக் கொண்டே பனியின் அழகு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கும் ஊசி இலை மரங்களையும் குடில்களையும் ரசித்துக் கொண்டும், திடீரென்று கண் முன்னே தோன்றும் நாய் சறுக்கல் வண்டியைப் பார்த்து வியந்து கொண்டும் மெதுவாகவே என் பயணத்தைத் தொடங்கினேன்.
எனக்குப் பின்னால் வந்த சிலர் கூட என்னத் தாண்டி வேகமாகச் சென்று விட்டனர். ஆனால் நான் நிதானமாக எனக்கு எவ்வளவு முடியுமோ அந்த வேகத்தில் பயணித்தால் போதும் என்று முடிவெடுத்துக் கொண்டு பணியில் சறுக்கி சறுக்கி நடை பயணம் செய்தேன்.
நான் தேர்ந்தெடுத்த பாதை 12 கிமீ தூரம் உடையது. ஒவ்வொரு 2 கி.மீ தூரத்திலும் சிறு பலகையில் எவ்வளவு தூரம் தாண்டி வந்துள்ளோம் என்ற குறிப்பு இருப்பதால் அவ்வப்போது 2 கி.மீ தூரம் முடியும் போது மனதில் ஒரு பெருமிதம் தோன்றும். ஏறக்குறைய 9 கி.மீ தூரம் வந்ததும் மிகவும் அலுத்து விட்டது. ஆனாலும் நிறுத்தப்போவதில்லை என்று மனதில் முடிவு செய்து கொண்டேன். சிறு ஓய்வுக்காக ஒரு குடிலுக்குச் சென்று 10 நிமிடங்கள் இருந்து தேனீர் அருந்தி விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினேன்.
ஸ்கீயில் பொறுத்தப்பட்ட காலணியுடன்
சில வேளைகளில் அந்த நீண்டு பரந்து விரிந்த பனி போர்த்திய திடலில் நான் மட்டுமே தனியாக இருப்பதை உணர்வேன். மலைகளின் இடையே.. பனி நிறைந்த பள்ளத்தாக்கில் நான் மட்டும். அந்த வேளையில் என மனம் முழுமைக்கும் அமைந்தியும் ஆனந்தமும் நிறைந்திருந்ததை உணர்ந்தேன்.
ஏறக்குறைய மூன்றே முக்கால் மணி நேரத்திற்குப் பின்னர் நான் ஆரம்பித்த பகுதியை வந்தடைந்தேன். சரியாக 12 கி.மீ தூரத்தை இந்த நாளில் முடித்திருந்தேன். இது மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது; ஆனால் உடலுக்கு அல்ல. பனியோடு பனியாகி கரைந்திருந்த என் மனத்தோடு அந்தக் குளிரிலும் என் உடல் முழுக்க வியர்வையால் நனைந்து போயிருந்தது.
தொடரும்...
சுபா
No comments:
Post a Comment