திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு அளித்தது. அந்தப் பசுமையான சூழல், காலை நேரத்து அமைதி, இனிமையான தென்றல், அங்கிருந்த மக்களின் அன்பு அனைத்தும் என் உள்ளத்தில் நிறைவினை ஏற்படுத்தின.
தியானம் செய்ய பெரிய பெரிய ஆலயங்களைத் தேடிச் செல்பவர்கள் இப்படி ஊருக்கு ஒதுக்குப் புறமாக தேவலோகமாகத் தெரியும் இவ்வகைக் கோயில்களைக் கண்டு கொள்வதில்லையே என்ற எண்ணம் தோன்றினாலும் அதேசமயம் மக்கள் கூட்டம் அலைமோதாமல் அமைதியாக தெய்வ தரிசனம் செய்ய இவ்வகைக் கோயில்களும் தேவை தான் என்றே மனதில் தோன்றியது.
எங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் அந்த யாதவர் குல மக்களுக்கும் எங்கள் நடவடிக்கைகளில் ஆர்வம் வந்திருக்கும் போல. சற்று இளைப்பாறி விட்டு நாங்கள் புறப்பட நினைக்கையில் பக்கத்திலேயே மேலும் ஒரு பாறை இருப்பதாகவும் அங்கேயும் பாறை சித்திரங்கள் இருக்கின்றன என்றும் கூறி நாங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அந்தப் பாறையில் இருந்த சித்திரங்களைப் பார்த்து புகைப்படமாகவும் விழியப் பதிவாகவும் பதிவு செய்து கொண்டோம். இப்பதிவைப் புத்தாண்டு வெளியீட்டில் http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_29.html காணலாம்.
திருமலைக்கு வந்து விட்டு அவர்கள் குலசாமிக் கோயிலைப் பார்க்காமல் செல்வது எப்படி என்று ஒரு பெரியவ்ர் கேட்க அங்கே அருகாமையில் இருந்த அவர்களின் குலதெய்வமான மடையக் கருப்பு சாமி கோயிலுக்கு வாகனத்திலேயே புறப்பட்டோம். கோயிலின் முன் பக்கமே மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. வேலி போட்டது போல பெரிய அரசமரம் ஒன்றினை சுற்றி அருவாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான அருவாள்கள். பக்கத்தில் ஒரு சிறிய கோயில். கோவிலின் உள்ளேயும் அருவாள்கள்.இங்கு வருபவர்கள் தங்கள் நேர்த்திக்கடனைத் தீர்க்க கோயிலில் அருவாள் அல்லது மணி வாங்கி இப்படி வைப்பது வழக்கம் என்று தெரிந்து கொண்டேன். கோயில் சிறப்புக்களை விளக்கும் மண்ணின் குரல் வெளியீட்டில் விரிவாக இக்கோயிலைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம். (மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை மடையக்கருப்பு சாமி)
இங்கே வந்த எங்களுக்குக் குடிக்க சுவை பானமும் சாப்பிட பிஸ்கட்களும் அதற்குள் வாங்கி வந்து விட்டார்கள். சாப்பிட்டுக் கொண்டே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சற்று நேரத்தில் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.
எங்கள் பயணத்தில் அடுத்து நாங்கள் நாட்டரசன் கோட்டைக்குச் செல்வோம் என முடிவெடுத்தோம். அதற்கு முன்னர் அருகாமையில் ஏதாகினும் உணவகங்கள் இருக்குமா என தேட ஆரம்பித்தோம். எங்கு பார்த்தாலும் சற்று அமர்ந்து சாப்பிடும் வகையில் நல்ல உணவகங்களைக் காணவில்லை. வாகனத்தில்லேயே பயணித்து சிவகங்கை நகருக்கு வந்து சேர்ந்தோம். அங்கே வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு அருகில் இருந்த ஒரு உணவகத்திற்குள் சென்று சாப்பிட நினைத்து நடக்கையில் எங்கள் கண்களையும் கருத்தையும் ஒரு அழகிய கட்டிடம் ஈர்த்தது. அதனை நோக்கி நடந்தோம்!
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment