வந்த வேலையைப் பார்ப்போமா??
27.12.2012
ரோய்ட்ட பற்றியும் சொல்லியாயிற்று, உணவு பற்றியும் கொஞ்சம் சொல்லியாயிற்று. சரி.. வந்த வேலையைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டாமா? :-)
எங்கள் க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் உடைகளை அணிந்து கொண்டு அதற்குத் தேவையான காலணி, ஸ்கீ ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். எங்கள் தங்கும் விடுதி இருந்த இடத்திலேயே பெரிய பனித்திடல். அதிலே இவ்விளையாட்டிற்கென்று தேவைப்படும் இரண்டு கோடுகள் போன்று அமைந்த பாதையை அமைத்து வைத்திருந்தார்கள். ஆனால் அப்பகுதி சற்று மலையும் மேடுமாக அமைந்திருக்க எனக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. முதல் நாள் சற்று சம தரையான பகுதியில் செல்வது விளையாட்டை ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்குவதற்குச் சற்று நம்பிக்கை தருவதாக அமையும் என்று நினைத்தேன். பீட்டருக்கு இதில் பிரச்சனையில்லை. சிறு வயது முடல் இவ்விளையாட்டைப் பழகியவர் என்பதால் எந்த மாதிரியான இடங்களிலும் விளையாட்டைத் தொடங்கி விடலாம். ஆக எனக்கு உகந்ததாக ஒரு இடம் தேடிச் செல்வோம் என நினைத்து வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.
பலகையில் .. இறைவனை வணங்கி Tannheimertal உங்களை வரவேற்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருகாமையிலுள்ள பனி நிறைந்த பகுதிகளைப் பற்றியும் கொஞ்சம் முதல் நாளே நாங்கள் விசாரித்து வைத்திருந்தோம். அதனால் ரோய்ட்ட நகரிலிருந்து 13 கிமீ தூரத்தில் உள்ள Tannheimertal என்ற பகுதிக்குச் செல்வது நல்ல முடிவாக இருக்கும் என்று இருவருக்கும் தோன்றியது.
இறுதியாக 2011 டிசம்பர் க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் போன அனுபவம் என்பதால் முதலில் மனதிற்குள் சிறு நடுக்கம் இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக ஸ்கீ வழுக்கி ஓட ஆரம்பித்தால் வேகம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும் சென்ற ஆண்டின் பயிற்சியின் அனுபவத்தை மறக்காததால் ஓரளவிற்குத் தொடர்ந்து பயணிக்க முடிந்தது. நான் ஏறக்குறைய சமதரை சிறு மேடுகள் சிறு பள்ளங்கள் போன்ற பாதையிலேயே பயணித்து சென்று கொண்டிருந்தேன். ஏறக்குறைய 4 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததும் இன்றைக்கு இது போதும் என்று மனதில் தோன்றியது. பனியிலும் இந்தப் பயணத்தைல் வேர்வையால் நனைந்து கரைந்திருந்தேன்.
க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் ஸ்கீ
அலுத்துப் போய் வரும் போது அந்த அலுப்பை போக்கவும், குளிருக்கு இதமாக இருக்கவும் தேனீர் சாப்பிடுவது மிகப் பொறுத்தமாக இருக்கும் என நினைத்து அங்கு அருகாமையில் இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் நுழைந்து அமர்ந்தேன். அதற்குள் பீட்டரும் தனது பயணம் முடித்து விட்டு வந்து சேர இருவரும் மூலிகை தேனீர் வாங்கிக் கொண்டோம். முதல் நாள் சாதனையே பெரிதாயிற்றே! கொண்டாட வேண்டாமா நான்? அன்றைய தினத்தின் பெருமிதமான இந்த சாதனைக்காக எனக்குப் பிடித்த கைஸர்ஸ்மார்ன் இனிப்பு வகை உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தேன்.
இன்றைய நாளின் சிறப்பு என்னவென்றால், எந்த நிலையிலும் நான் பனியில் சறுக்கி கீழே விழவில்லை.
முதன் முதலில் க்ரோஸ் கண்ட்ரி ஸ்கீயிங் செய்த அனுபவத்தை நினைத்துப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகின்றது. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு முறை என்று கீழே விழுந்து விடுவேன். கடந்த 6 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சில நாட்கள் பயிற்சி என்ற வகையில் கீழே விழும் நிலை குறைந்து ஸ்கீ போர்டில் உறுதியாக நிற்கும் தைரியமும் நிதானமும் வந்திருந்தமைக் கண்டு எனக்கே ஆச்சரியம் தான்.
இந்த முதல் நாளில் 4 கி.மீ. தூரம் செல்ல ஏறக்குறைய 90 நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். இது எனக்கு திருப்தியளிக்கவில்லை என்பது உண்மை. ஆனாலும் முதல் நாள் தானே என்று ஒரு சமாதானம் செய்து கொண்டேன் :-)
Tannheimertal
Tannheimertal ரோய்ட்ட நகரின் பிரசித்தி பெற்ற ஒரு ஸ்கீ விளையாட்டு மையமும் கூட. இங்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து பயிற்சி எடுத்துக் கொள்வதும் விளையாட்டுக்காக வருவதும் என்று மக்கள் கூட்டம் நிறைந்ததாக அமைந்திருந்தது. இந்த நகரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இணையத்தில் இந்த ஊரின் பெயரைத் தட்டச்சு செய்து வாசித்துப் பார்க்கலாம். அருகாமையில் உள்ள பல நாடுகளிலிருந்து இங்கே சுற்றுலா பயணிகள் வந்து நிறைந்து விடுகின்றனர். வாகனங்களின் எண் பலகையைப் பார்த்தாலே எந்த நாட்டிலிருந்து வந்துள்ளார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது.
தொடரும்.....
சுபா
No comments:
Post a Comment