தமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். தமிழகத்திலே தான் எத்தனை எத்தனை இடங்கள் உள்ளன.. பார்த்து ரசித்து இப்படி படம் பிடித்துப் போட்டு கதை சொல்ல..!
திருமலைப் பகுதியில் முதலில் பாறை ஓவியங்களைப் பார்க்கப் போகின்றோம் என்பதாகத்தான் என் மனதில் பதிவாகியிருந்தது. ஆனால் அங்கு சென்று வந்த பின்னர்
- பாண்டியர் காலத்து மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்
- ஆலயத்தின் குடைவரைக் கோயில்
- குகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள்
- முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியன்
- கோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள்
- பாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள்
- அங்கு சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள்
- அந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம்
என பல விஷயங்களை அங்கிருந்த சில மணி நேரங்களில் தெரிந்து கொண்டோம்.
எங்களின் இந்த களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். (குறிப்பு : மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை யாதவர்கள் குலக் கண்ணன்)
கோயிலில் இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குறிப்பிடவே அங்கே நடக்கலானோம். அவருக்கு காலில் வலி தோன்ற அவரை கீழே அமரச் சொல்லி விட்டு காளைராசன். நா.கண்ணன், நான் மூவரும் மேலே செல்ல ஆயத்தமானோம். எங்கள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலரும் ஓடி வந்தனர். கோயிலில் எங்களைச் சந்தித்த இரண்டு இளைஞர்கள் வேறு எங்களுடன் இணைந்து கொண்டனர்.
பாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலை பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாக பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பாறைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.
முதலில் ஒரு பாறையைக் கண்டோம். அதில் நான் கிருஷ்ணகிரியில் பார்த்த வகை குறியீடுகள் என்றில்லாமல் முழு மனித உருவத்தின் சிலை. தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற வடிவம். எகிப்தில் 2 வார கால பயணம் மேற்கொண்டு பல பழம் ஆலயங்களைச் சென்று பார்த்து வந்த எனக்கு உடனே இது அதே வடிவில் இருப்பதைக் காட்டியது. வித்தியாசம் இல்லாமல் அதே உருவம். எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாக கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில் இங்கே ஓரிரண்டு சித்திரங்கள். ஆச்சரியப்பட்டுப் போனேன்.
சித்திரம் - அதன் மேலெயே சிலர் பெயர்களை எழுதியுள்ளனர்
பின்னர் அவற்றைப் பார்த்து மேலும் அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டு நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகள் கூட அழகாக இருக்குமா என வியக்க வைத்த ப்ரமாண்டமான வடிவத்தில் அமைந்த பாறைகள். அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம்.
எனது காரைக்குடிக்கான முதல் நாள் பயணத்திலேயே டாக்டர்.வள்ளி ஒரு சமணப்படுகை உள்ள குகையின் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று விளக்கியிருந்தமையால் என்னால் அந்தப் பாறைகளின் வடிவத்தை உடனே அறிந்து கொள்ள முடிந்தது. மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடிய செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கபப்ட்டிருந்த படுகைகள் என அனைத்தையும் நானே பார்த்து அறிந்து வீடியோவிலும் கேமராவிலும் பதிந்து கொண்டேன்.
சமணப் படுகைகள் இருந்த தரைப்பகுதியைப் பொறுப்பற்ற மக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை? நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படி பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்?
இப்படி யோசித்து பேசிக் கொண்டிருகும் போதே எங்களை நோக்கி பாறைகளில் ஏறி காவல்துறை உடையணிந்த போலீஸ்காரர்கள் இருவர் வந்து கொண்டிருந்தனர். ஏன் இவர்கள் இங்கு வருகின்றனர் என்று ஆச்சரியத்துடன் பார்த்து நின்றோம்.
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment