Saturday, September 1, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 15


இயற்கையே ஒரு இந்திர லோகம்

லா பல்மா தீவில் கணிசமான அளவிற்கு ஜெர்மானியர்கள் குடியேறியிருக்கின்றார்கள். அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் பலர் தொழில் உருவாக்கிக் கொண்டு உணவகங்கள், வாடகைக் கார் நிறுவனங்கள், வாழை அவாக்காடோ தோட்டப் பயிர் உற்பத்தி,  விற்பனை என்ற வகையில் வருமானத்த்தை ஈட்டிக் கொள்ளும் வகையில் ஒரு சிலர் இத்தீவுக்கு குடியேறியிருக்கின்றனர். லா பல்மாவை விட மயோர்க்கா தீவில் ஜெர்மானியர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம் என்றே சொல்லலாம். விளையாட்டுக்கு ஜெர்மானியர்கள் மயோர்க்காவை ஜெர்மனியின் ஒரு பகுதி என்றே சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அங்கே ஜெர்மனிய மக்கள் உள்ளனர். சுற்றுலா, நல்ல வெயில், அருமையான நீண்ட கடற்கரைகள், இத்தாலிய, ஸ்பெயின், மற்றும் பல வகை நாடுகளின் உணவுகள் ஆகியவை இங்கு கிடைப்பதே இந்த  ஸ்பெயின் தீவுகளை நோக்கி ஜெர்மானிய சுற்றுலா பிரியர்கள் செல்வதற்கு  முக்கிய  காரணம்.

இந்த வடக்குப் பயணத்தில் கீழ் நோக்கிச் சென்று லா பல்மா தீவின் வடமேற்கு முனையிலிருந்து கடலும் வானும் இணையும் காட்சியை கண்டு ரசித்த உடன் மீண்டும் திரும்பும்  எண்ணத்துடன் நடக்க ஆரம்பித்தோம். அங்கே மேலும் ஒரு சிறிய நடைபாதை 3 கிமீதூரத்திற்கு உள்ளதாக அறிவிப்பு பலகை இருந்ததால் அதனையும் பார்த்து வரலாமே என அந்தப் பாதையில் நடக்கலானோம்.

இது  மலைக்கு மேல் நோக்கிய ஒரு பயணம் ஆகையால் களைப்பு அதிகரித்தது. ஆனாலும் பார்க்க  வேண்டும் என்ற ஆவல் களைப்பை மறக்கச் செய்து விடும் அல்லவா?

நடந்து வரும் வழியில் ஓங்கி வளர்ந்திருந்த ட்ராகன் மரங்களைப் பார்த்துக் கொண்டும் அங்குள்ள வீடுகளை அதன் அழகை மிக நேர்த்தியாக அவ்வீடுகள் மலை சரிவில் கட்டப்பட்டுள்ள விதத்தை ரசித்துக் கொண்டு நடந்தோம். இடையில் சற்று களைப்பேற்படவே  நாங்கள் கொண்டு வந்த வாழைப் பழத்தை சாப்பிட்டு சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் நடக்கலானோம். சற்று நேரத்தில் பார்க்க வேண்டிய அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே சிறு உணவகம் இருப்பதாக ஒரு குறிப்பு இருந்தது. பக்கத்திலேயே பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறைந்த குகைகளும், நீர்த்தேக்கங்களும் இங்கிருப்பதாகக்  குறிப்பு இருந்தது. ஆச்சரியம் மேலிட அப்பகுதி நோக்கி நடந்தோம்.



அழகான  மணல் பாதை. இரு பக்கங்களிலும் பூச்செடிகள். எல்லாமே பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. மலர்கள் என்னென்ன வர்ணங்களிலெல்லாம் இருக்குமோ அத்தனை வர்ணங்களிலும் புதுப் புது கலவை வர்ணங்களிலும் மலர்கள் நிறைந்து காணப்பட்டன. ஆங்காங்கே பழ மரங்கள், பப்பாளி, அவக்காடோ, வாழை, மா மரம் என பல வகை மரங்கள். அலு வேரா செடிகள் முற்களைத் தாங்கிக் கொண்டிருந்தாலும்  மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தன.



சற்று நடந்தால் ஒரு சிறு கடை. அங்கே ஒரு இளம் பெண் மிக வித்தியாசமான ஹிப்பி உடைத் தோற்றத்தில் மிக நளினமாக  வந்து எங்களை வரவேற்றார். ஜெர்மானியப் பெண் ஆனால் உடையும் அலங்காரமும் ஜெர்மானிய தாக்கம் கொஞ்சமும் இன்றி  இருந்தது. கடையில் தாவரங்களால் செய்யப்பட்ட சோப்பு, முக க்ரீம், அலு வேரா ஜேம், சில வகை செடிகளின் வேர்கள் என அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் ஏதும் சாப்பிட விரும்புகின்றோமா என்று கேட்டவுடன் அங்கே இருந்து ஏதும் பாணங்கள் அருந்தலாம் என்று தோன்றவே அவர் அழைத்துச் சென்ற சிறு குடிலுக்குச் சென்றோம் .

அங்கே மூலையில் ஒரு இளம் பெண் அவளும் ஹிப்பி உடையில் கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு இளைஞன் பாடிக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் 2 இளம் பெண்கள் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லோருமே ஹிப்பி உடை.. முடி அலங்காரத்தில்! நாங்கள் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தவுடன் மெனு கார்டை பார்த்து வாழை, அலுவேரா, பப்பாளி கலந்த பழச்சாறு இரண்டு ஆர்டர் செய்து கொண்டோம்.



குடிலைச் சுற்றிலும் மலர் கொடிகள். குடிலிற்குள் இந்த அழகிய இளைஞர்கள். அருகிலேயே ஒரு நீரோடை. கண்ணுக்கு எட்டிய தூரத்திலேயே நீல நிற கம்பளம் விரித்தார்போல அட்லாண்டிக்  சமுத்திரம். அங்கு அமர்ந்து பழச்சாறு அருந்திக் கொண்டிருந்தபோது இந்திரலோகம் என்பது இது தானோ என்றே எனக்கு தோன்றியது. ஏறக்குறைய அறைமணி நேரம் அங்கிருந்தோம். அங்கிருந்து விடைபெற்று நடந்து சென்று பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ள  பெல்மாக்கோ குகை (Belmaco cave ) பகுதிகளைப் பார்த்துக்  கொண்டு நடந்தோம். இப்பகுதியில் தான் மாஸொ  இனக்குழு மன்னர்கள் வாழ்த்திருக்கின்றார்கள்.ஆங்காங்கே குகைகள். அவை சேதப்படுத்தாமல் அப்படியே பாதுகாப்பாக உள்ளன. சில கதவுகள் கொண்டு மூடி வைத்தும்  பாதுகாக்கப்படுகின்றன.




பெரும் பாறையின் ஒரு பகுதியில் பாறையில் கீறிய ஓவியங்களையும் பார்த்து மகிழ்ந்தோம். இவை லாபல்மா தொல்லியல் துறையினால் பாதுக்கக்கப்படும் ஒரு பகுதியாக உள்ளது. பெல்மாக்கோ குகைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள http://lapalmaisland.sheilacrosby.com/2011/04/11/belmaco-cave-the-royal-palace-in-mazo/ இந்த வலைப்பதிவு உதவும். இங்கே பாறையில் கீறப்பட்டுள்ள வடிவங்கள் இன்னமும் தெளிவாகவே உள்ளன. இவை பெரும்பாலும் ஒரு நத்தை வடிவத்தைப் போல ஒரு புள்ளியிலிருந்து வளர்ந்து வரும் வட்ட வடிவம் போன்ற வகையில் தீட்டப்பட்ட ஓவியங்களாக உள்ளன. மேலும் சில இடங்களிலும் இவ்வகைப் பாறை ஓவியங்கள் இருக்கின்றன. ஆர்வமுள்ளோர் இவ்வலைப்பதிவை வாசிக்கலாம். http://lapalmaisland.sheilacrosby.com/2011/04/07/archeology-at-the-roque-de-los-muchachos/




மனித நடமாட்டம் மிகக் குறைவாக இருந்த போதும் இயற்கை சூழ்ந்திருக்கும் இந்தப் பகுதியில் கழித்த சில மணி நேரங்கள் மனதை விட்டு அகலாத  அனுபவமாகி நிலைத்து விட்டது!





















தொடரும்...

சுபா

No comments:

Post a Comment