நாங்கள் திருச்சி பஸ் நிலையம் வந்து சேரும் போது ஏறக்குறைய இரவு பத்தரை மணியாக இருக்கலாம். பஸ் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போதே காளைராசன் கொடுத்திருந்த மாணவரின் எண்ணில் தொடர்பு கொண்டு திருச்சி வந்து விட்டமையைத் தெரிவித்துக் கொண்டேன்.
பஸ்ஸை விட்டு இறங்கும் போதே அந்த மாணவர் ஓடிவந்து உதவி செய்து எனது பெரிய பெட்டிகளை இறக்கி உதவினார். கண்ணனும் முன் இருக்கையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டார். கீழே இறங்கியவுடனேயே எனக்கு காரைக்குடி செல்லும் பஸ் எங்கே இருக்கின்றது என்ற எண்ணம் வந்து விட்டது. ஆக தாமதிக்காமல் அந்த மாணவரிடம் சொன்னேன். அவர். கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் இருவரும் இங்கே சாப்பிட்டு விட்டு நிதானமாகச் செல்லலாம். பஸ் இருக்கும் என்றார். எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் அந்த மாணவரிடம் உணவு வேண்டாம். நாம் உடனடியாக அடுத்து புறப்பட இருக்கும் பஸ்ஸை எடுத்து விடுவோம் என்று அவருக்கு எனது அவசரத்தை விளக்க முயற்சித்தேன். அவருக்கு உள்ளூர காளைராசன் மேல் பயம் இருக்கும் போல. சார் நீங்கள் இருவரையும் மன நிறைவுடன் சாப்பிட வைத்துத்தான் திருச்சியிலிருந்து காரைக்குடி பஸ்ஸில் ஏற்றி அழைத்து வர வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். அதனால் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்க முயன்றார்.
சுற்றிலும் பார்த்தால் ஆங்காங்கே சில பஸ்கள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. கண்ணனும் சரி. காளைராசன் பிறகு மன வருத்தப்படுவார். ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டு விட்டுச் சொல்வோம் என்று அவர் பங்கிற்குச் சொல்லி வைத்தார். எனக்கோ எப்போது முதலில் காரைக்குடி பஸ் வரும். முதலில் அந்த பஸ்ஸை எடுத்து காரைக்குடிக்குச் சென்று சேர்ந்து கொஞ்சம் படுத்துத் தூங்கினால் நன்றாக இருக்குமே என்பதே மனதில் வந்து வந்து போய் கொண்டிருந்தது. அதனால் மிக உறுதியாக அந்த மாணவரிடம் காளைராசன் சாரிடம் நான் பேசி விளக்கிவிடுகின்றேன். அவர் வருத்தப் படமாட்டார் நாம் முதலில் காரைக்குடிக்குச் சென்று சேர்வோம். அங்கே இருக்கும் நாளில் திருப்தியாகச் சாப்பிட்டுக் கொள்ளலாம். என்றேன். அதற்கு அந்த மாணவர் சரி மேடம் .. வாழப் பழங்களாவது வாங்கி வந்து விடுகின்றேன், இருங்கள் என்று சொல்லி விட்டு காத்திராமல் ஓடி விட்டார். பயணம் செய்யும் நாங்கள் பசியால் வாடக்கூடாது என்ற மனத்துடன் எங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் காளைராசனின் அன்பை நினைத்து மனம் நிறைந்தது.
பெட்டிகளை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு எப்போது அந்த மாணவர் வருவார் என பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பஸ் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அதில் மேலே காரைக்குடி என்று பெயர் போடப்பட்டிருந்தது. ஆஹா.. காரைக்குடிக்கு பஸ் புறப்படுகின்றதே என்று சொல்லி கண்ணன் எங்கே என்று தேடினால் அவரைக் காணவில்லை. இந்த மாணவரையும் காணவில்லை. அந்த பஸ்ளில் பயணம் செய்யக் காத்திருந்த சில பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த கண்டக்டரிடம் சென்று முதலில் இது காரைக்குடிக்குச் செல்கின்றதா எனக் கேட்டுக் கொண்டேன். அவர் உறுதி செய்தவுடன் எனது பெட்டி, கண்ணனின் பெட்டி எல்லாவற்றையும் ஏற்றி வைத்துக் கொண்டிருக்கும் போதே கண்ணன் வந்து சேர்ந்தார். அவசரம் அவசரம் என கண்டக்டர் விரட்ட நான் அந்த மாணவரைத் தேடிக் கொண்டே பஸ்ஸில் ஏறி விட்டேன். கண்டக்டரிடம் இன்னும் ஒருவர் வந்து விடுவார் கொஞ்சம் பொருங்கள் என்று சொன்னால் அவருக்கு பஸ் செல்ல வேண்டுமே என்ற ஆதங்கம். அவர் புலம்ப ஆரம்பிக்கும் நேரத்தில் நல்ல வேளையாக அந்த மாணவர் ஓடி வந்து சேர்ந்தார். எங்களைப் பார்த்து அவரும் பஸ்ஸிற்குள் ஓடி வந்து ஏறிக் கொள்ளவும் பஸ் புறப்பட்டது.
சரியான நேரத்தில் வந்து சேர்ந்தாரே இந்த மாணவர் என்று நினைத்து மனதிற்குள் திருப்தி. இல்லையென்றால் ஏற்றி வைத்த பெட்டிகளையெல்லாம் இறக்கி விட்டு மீண்டும் 1 மணி நேரம் அடுத்த பஸ்ஸிற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
பஸ்ஸில் ஏறிய உடனேயே விருந்தோம்பல் ஆரம்பித்து விட்டது. அந்த மாணவர் கொடுத்த வாழைப் பழங்களை வாங்கி சாப்பிட்டுக் கொண்டோம். அப்போது கண்ணனுக்கு பவளா கொடுப்பதாகச் சொல்லியிருந்த வெஜிடபிள் பிரியாணி ஞாபகத்திற்கு வந்து விட்டது போலும். என்னிடம் பவளா சொன்ன மாதிரி அந்த வெஜிடபிள் பிரியாணியைக் கொண்டு வந்திருக்கலாம். இல்லையா என்று கேட்டு வைத்தார். கண்ணணை அந்த பிரியாணி ஏங்க வைத்து விட்டது என்பது தெரிந்தது.
பழங்களைச் சாப்பிட்டு அந்த மாணவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவுடன் சற்று தூங்க வேண்டும் என்று தோன்றியதில் கண்ணயர்ந்து விட்டோம். ஆனால் தூங்குவது சாதரண காரியமாக இல்லை. பஸ் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தது. கட கட கட என பயங்கர சத்தம். பஸ்ஸில் இருந்த ஓரிரண்டு கண்ணாடி ஜன்னல்கள் எப்போது நொருங்கி விழப்போகின்றன என்ற பீதி வந்து விட்டது. சாலைகளில் பாதை சரியாக இல்லை என்பதை அந்த இரவிலும் பஸ் ஓடும் நிலையைப் பார்த்தே புரிந்து கொள்ள முடிந்தது. அப்படி ஒரு சத்தத்துடனான பஸ் பயணத்தை என் வாழ் நாளில் இதுவரை நான் அனுபவித்ததில்லை. பயணங்களில் எனக்கு ஏற்படாத ஒரு வித பயம் என மனதை வந்து பற்றிக் கொண்டு விட்டது. ஆனாலும் வேறு வழியில்லை. பஸ்ஸில் ஏறிவிட்டோம். இறங்க முடியாது. பஸ் காரைக்குடி செல்கின்றதோ வேறு எங்கே செல்கின்றதோ.. அங்கே போய் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மனதிற்குள் சமாதானம் சொல்லிக் கொண்டு தூங்க முயற்சித்து தோல்வி கண்டு கொண்டிருந்தேன். இப்படியே சில மணி நேரங்கள் அவை பல மணி நேரங்களாக எனக்கு மனதில் தோன்றின.
அந்த நீண்ட நெடிய பயணத்தில் ஒரு வழியாக பஸ் காரைக்குடிக்கு வந்து விட்டது. பஸ் நிறுத்தம் வருவதற்கு முன்னரே அந்த மாணவரே காளைராசனுக்குத் தொலைபேசியில் அழைத்து நாங்கள் வருவதை அறிவித்து விட்டார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் இறங்கிக் கொண்டோம். அங்கே காளைராசனும் பின்னர் எங்களுக்கும் நண்பராகிப் போன அவரது கல்லூரி நண்பர் முனைவர் சந்திர மோகனும் ஒரு வாகனத்துடன் எங்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் இருவரையும் அந்த 4 மணி காலை வேளையில் சந்தித்து சிறிது நேரம் பயணம் பற்றி பேசி அங்கிருந்து அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். அங்கே எங்களுக்காக நல்ல அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய கட்டிடம். மிக நேர்த்தியான அறைகள். எங்களுக்கு முன்னரே பாலுவும் வந்து விட்டதாகவும் அவரும் அங்கு தங்கியிருப்பதாகவும் அறிந்து கொண்டோம். எனக்கு களைப்பு அதிகமானதால் நான் எல்லோரையும் மறு நாள் சந்திப்பதாக்ச் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன்.
திருச்சியிலிருந்து காரைக்குடி பயணம் பயங்கரமானதாக அமைந்து அந்த வேளையில் எனக்கு மனதில் பீதியை ஏற்படுத்தினாலும் இப்போது நினைக்கும் போது மிக்ச சுவாரசியமான ஒரு நிகழ்வாகத்தான் தோன்றுகின்றது. அந்த கட கட கட எனும் பஸ் சத்தம் கூட நினைத்துப் பார்க்கும் போது அன்று கேட்டது போலவே மனதில் இப்போதும் ஒலிக்கின்றது.
தொடரும்...
சுபா
No comments:
Post a Comment