பஸ்ஸின் பின் இருக்கையில் நான் குறிப்பிட்ட ஐவரோடு நானும் அமர்ந்திருந்தேன். எனது பெரிய பயணப் பெட்டியை எப்படியோ சமாளித்து பஸ் சீட்டின் கீழ் தள்ளி வைத்து விட்டு எனது பேக் பேக்கை மட்டும் கையில் வைத்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் ஒருவர், 50வயது மதிக்கத்தக்கவர். ஒல்லியான மனிதர்.அவர் அருகில் ஒரு பெண்மணி அவருக்கும் அதே வயதுதான் இருக்கும். நடுத்தர அளவு. இருவரும் ஏதோ அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்பவர்கள் போல.
இருவரும் இடைவிடாது அலுவலகத்தில் உள்ள நபர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மாறி பேச்சு அந்தப் பெண்மணியின் பிள்ளைகள் குடும்ப விஷயம் என்று போய் கொண்டிருந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் கேட்பார்களே என்ற தயக்கம் இல்லாமல் கவலையிலாமல் தொடர்ந்து இந்தப் பேச்சு சுவாரசியமாகப் போய்கொண்டிருந்தது. திடீரென்று யாரையோ கைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த மனிதரின் கைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சில முறை முயற்சி செய்து பார்த்தார். நான் சற்று முன்னர்தான் காளைராசன் கொடுத்திருந்த எண்ணில் திருச்சி மாணவருக்கு என் கைபேசியில் பேசினேன். இதனைக் கவனித்திருப்பார் போல அந்த மனிதர். உடனே என்னிடம் சற்று தொலைபேசி தரமுடியுமா. ஒரு நபருக்கு போன் பேச வேண்டும் என்று கேட்டார். என்னுடைய கைபேசியைக் கொடுத்தேன். அவர் பேச ஆரம்பித்தார். ஏதோ ஒரு விஷயமாக யாரையோ ஓரிடத்தில் மறு நாள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பது பற்றி அந்தப் பேச்சு.
ஏறக்குறைய 10 நிமிஷங்கள் பேசி முடித்த பின் என்னிடம் என் கைப்பேசியை அவர் திருப்பி தரவில்லை. தன் கையிலேயே வைத்திருந்தார். எனக்கு திருப்பி தரவேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல மீண்டும் அந்தப் பெண்மணியிடம் தொடர்ந்து பேச ஆர்மபித்தார். அவராகத் திருப்பித் தரமாட்டார் என்பது தெரிந்து விட்டது. ஆக நானே அவரைக் கூப்பிட்டு என் கைபேசியைத் தரும் படி கேட்டேன். அவர் மீண்டும் அவர் நண்பர் அவரை என் கைபேசியில் கூப்பிடுவார். அதனால் தான் தானே கையில் வைத்திருப்பதாக எனக்கு விளக்கம் அளித்தார். அப்படி போன் அழைப்பு வந்தால் நான் அவருக்குத் திரும்பத் தருவதாகச் சொல்லி என் கைபேசியை நான் வாங்கிக் கொண்டேன்.அந்த பெண்மணியில் அருகில் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது இளைஞன் நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார் போல. அவருக்கு முகத்தில் புன் சிரிப்பு.
இடைக்கிடையே எங்களின் நீளமான பின் இருக்கையில் இறுதியில் அமர்ந்திருந்த ஒரு மனிதர் அவ்வப்போது புலம்பிக் கொண்டு இருந்தார். அவர் அதிகமாகக் குடித்திருந்தார். உடம்பில் போட்டிருந்த சட்டை ஒழுங்காகப் போடப்படவில்லை. மெதுவாக ஏதாவது உளறுவார். திடீரென்று சத்தமாகக் கத்துவார். தன் குடும்பத்துப் பெண்மணிகளைப் பற்றி மிக மோசமான விவரணைகள்; கெட்ட சொற்களில் பெண்களைத் திட்டிக் கொண்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். ஆனால் கண்களைத் திறந்து அந்த மனிதர் யாரையயும் பார்த்ததாகத் தெரியவில்லை. அவர் அருகில் இருந்தவர் அவர் மனைவி. அவர் கத்தும் போது அவரை திட்டி அடக்கி அமைதியாக வைத்திருக்க பெரிய முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் அதிகமாக கவலை, வருத்தம் அவமானம் எல்லாம் தெரிந்தது.
நாங்கள் ந்தக் குடிகாரர் கூறும் மோசமான சொற்களைக் கேட்டு கோபப்படுவோமோ என்ற பயம் போலும். எங்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர் அதிகமாகக் குடித்து விட்டு உளறுவதாகச் சொல்லி வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு எங்களிடம் சொல்லி வைத்தார். அவர் நிலை பரிதாபம்.
அது ஏன் குடித்து விட்டால் மிகக் கேவலமாகப் பேச வேண்டும்? அதிலும் பெண்களை ? மனதிலே அவ்வளவு வெறுப்பும் குரோதமும் ஏன். அந்தக் குடிகாரனை அழைத்துக் கொண்டு செல்லும் அந்த மனைவியை அவன் தெய்வமாக அல்லவா கருத வேண்டும். அப்படிப்பட்ட அந்த மனிதனையும் சகித்துக் கொண்டும் இருக்கின்றாரே என நினைக்கும் போது அப்பெண்ணின் நிலை நினைத்து மனம் கலங்கியது எனக்கு.
தொடர்ந்து அவனது பேச்சும் உளறலும் குறையவில்லை. திடீரென்று எழுந்து நின்று போகப் பார்த்தார் அந்தமனிதர். பஸ் ஆடிய ஆட்டத்தில் தலையில் முட்டிக் கொண்டு விழுந்தார். பஸ் கண்டக்டர் வந்து நன்றாகத் திட்டித் தீர்த்தார். எல்லாமே நாடகம் போல இருந்தது எனக்கு.
எத்தனை விஷயங்கள் ஒரு பஸ்ஸிற்குள்ளேயே நடக்கின்றன. எத்தனை கதைகளுக்கான கரு பஸ்ஸிலேயே கிடைக்கின்றன என்று நினைத்தபோது சுவாரசியமாகவும் இருந்தது. ஆனால் கதை எழுதும் திறனே எனக்கு இல்லாததால் இதனை ஒரு பதிவாக மட்டும் இங்கே பதிகிறேன்.
ஏறக்குறைய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்த நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது. என் அருகில் இருந்த அந்த இருவரும் வழியில் இறங்கி விட்டனர். பஸ்ஸில் என் அருகில் இப்போது மூவர் மட்டுமே. அந்த இளைஞன். அவர் அருகில் குடிகாரரின் மனைவி, அந்தக் குடிகாரர். பஸ்ஸிலும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
தொடரும்....
சுபா
No comments:
Post a Comment