குன்றக்குடி மடத்திலிருந்து இந்தக் குடவரை கோயில் இருக்கும் இடம் வரை செல்லும் வழிகளில் சில வீடுகளைக் கடந்து செல்ல வேண்டும். வழியில் குன்றக்குடி அருள்மிகு ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் தைப்பூசம், சித்திரா பௌர்ணமி போன்ற விஷேஷ நாட்களில் கோலாகலமாக அலங்கரிக்கபப்ட்டு காவடி எடுப்பவர்கள் இங்கிருந்து காவடிகளைத் தூக்கிச் செல்வதும் வழக்கம் என்றும் கேள்விப்பட்டேன். இக்கோயில் பிள்ளையார்பட்டி கோயிலுடன் ஒப்பிடுகையில் சிறிய கோயில் தான். ஆனாலும் ஆலயத்தின் முன் வாசல் புறத்தில் அமைந்துள்ள மண்டம் தான் சித்திரக் கூடமாக இருக்கின்றது. இந்த மண்டபத்தில் தீட்டப்பட்டுள்ள சித்திரங்களைப் பற்றிய பதிவு ஒன்றினை அண்மையில் மண்ணின் குரலில் வெளியிட்டிருந்தேன். இதுவரை பார்த்திராதவர்கள் இங்கே சென்று அப்படங்களைக் காணலாம்.
கோயிலைக் கடந்து சற்றே நடந்தால் ஒரு பெரிய கோட்டை சுவர் ஒன்றிருப்பதும் அதில் வாசல் கதவு இருப்பதும் காணத்தெரியும். இப்பகுதிக்குள் தான் குன்றக்குடி குடவரை கோயில் உள்ளது.
கதவைத் திறந்து எங்களுடன் இருந்து கோயிலை முழுதுமாக சுற்றிக் காட்டவென்று குன்றக்குடி மடத்திலிருந்து எங்களுக்கு உதவிக்கு ஒருவரை அனுப்பியிருந்தார்கள். அவர் எங்களுடன் கோயில் முழுவதையும் சுற்றிக் காட்டியதோடு இருட்டாக இருந்த பகுதிகளில் விளக்கை ஏற்றி வைத்து எங்களுக்குச் சிற்பங்கள் நன்கு தெரியும் வண்ணம் உதவியும் செய்தார்.
குடவரை கோயிலின் அழகு வெளியிலிருந்து பார்த்தாலும் கூட உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்ததாக உள்ளது. என்ன கலை நயம் என்று சொல்லி சொல்லி வியந்து வெளியிலேயே சிறிது நேரம் இருந்து ரசித்துக் கொண்டிருந்தோம்.
உள்ளே செல்லச் செல்ல வியப்பு அதிகரித்தது. அவ்வளவு ப்ரமாண்டமான சிற்பங்கள். ஒரே கோயிலுக்குள் மூன்று கோயில்கள் இருக்கின்றன. துர்க்கை, சிவன், விஷ்ணு, ஹரிஹரன் போன்ற தெய்வங்களுக்கும் சுவர்களிலேயே செதுக்கிய ப்ரமாண்டமான சிலைகள். மூலப் ப்ரகாரத்தில் சிவ லிங்க வடிவம்.
இக்குடவரைக் கோயிலின் சுவர்கள் முழுக்க கல்வெட்டுக்கள் இன்றும் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
இக்கோயில், சுற்றுப்புறம். தெய்வ வடிவங்கள், சிற்பங்கள் கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் படங்களோடு மேலும் டாக்டர் வள்ளி அவர்கள் தரும் ஒலிப்பதிவு விளக்கமும் இவ்வாண்டின் தொடக்கத்தில் நமது வலைப்பக்கத்தில் மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்பட்டது. அவற்றைக் காணவும் ஒலிப்பதிவைக் கேட்கவும் இங்கே செல்க!
கோயிலை முழுதுமாகச் சுற்றிப் பார்த்து பதிவுகளையும் மேற்கொண்ட பின்னர் நாங்கள் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு அருகாமையில் அமைந்திருக்கும் சமணப்படுகைகளைப் பார்வையிட புறப்பட்டோம். பாறைகளைக் கடந்து நடக்க வேண்டும். வெயிலும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அனைவரும் சற்றே வேகமாக அப்பறைகள் உள்ள பகுதி நோக்கி நடக்கலானோம்.
தொடரும்..
1 comment:
Excellent Photo
I missed this place. I went for a wedding, just above the temple. no one told me about this carvings.
Post a Comment