Monday, May 28, 2018

கம்போடியா - அங்கோருக்கு சென்ற கதை -1


அங்கோருக்கு சென்ற கதை -1
17.மே.2018
கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள ஆவல் இருந்தாலும் அலுவலகப் பணிகள் ஏராளம் இருந்ததால் இறுதி வரை செல்வது தொடர்பாக என்னால் முடிவு செய்ய முடியாமலேயே இருந்தது. ஆயினும் அங்கோர் வாட் கோயிலும் நண்பர் ஒரிசா பாலுவின் தூண்டுதலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது. நான் நேராக கம்போடியா செல்லாமல் மலேசியா சென்று அங்கிருந்த சில பணிகளையும் முடித்து ஏர் ஏசியா விமானச் சேவையின் வழி கம்போடியாவின் அங்கோர் வாட் அருகே உள்ள விமான நிலையமான சியாம் ரீப் நகருக்குச் செல்வதற்கு பதிவு செய்திருந்தேன். என்னுடன் கோலாலம்பூரில் வசிக்கும் மதுரைக்காரப் பொண்ணு மலர்விழியும் ஒரே நேரத்தில் பயணித்ததால் பயணம் சுவாரசியமாக அமைந்தது.
கோலாலம்பூரில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து டாக்சி பிடித்து, விமான நிலையம் சென்று சேர்ந்து, அங்கு கடமைக்காக ஒரு ரொட்டியும் கசக்கும் காப்பியும் அருந்தி விட்டு விமானத்திற்குள் சென்றோம்.
ஏர் ஏசியா விமான நிறுவனத்தையே நடிகர் ரஜினிகாந்த் குத்தகைக்கு எடுத்தது போல விமானத்திற்குள் எல்லா இடங்களிலும் ”கபாலி” அமர்ந்திருந்தார். கபாலி படம் வந்தபோது ரஜினிகாந்த் ரசிகையாக இருந்தேன். கடந்த சில மாதங்களாக அவர் செய்கின்ற அரசியல் காமெடிகளால் ரஜினிகாந்த் மீது எனக்கிருந்த ஈர்ப்பு காணாமல் போய்விட்டது. ஆனாலும் எல்லா இடங்களிலும் போஸ் தரும் கபாலியைப் பார்த்துக் கொண்டே விமானத்தில் தூங்கிப் போனோம்.
தொடரும்..
சுபா









No comments:

Post a Comment