Monday, May 28, 2018

கம்போடியா - அங்கோருக்கு சென்ற கதை -2

17.மே.2018

கம்போடியாவிற்கும் மலேசியாவிற்கும் 1 மணி நேர வித்தியாசம் உள்ளது. உதாரணமாக, மலேசியாவில் காலை 7 மணி என்றால் கம்போடியாவில் காலை 6 மணி. நாங்கள் வந்திறங்கியபோது காலை மணி 7:50. சிறிய விமான நிலையம் தான் சியாம் ரீப் விமான நிலையம். அன்று காலையில் 10க்கும் குறைவான விமானங்களே அங்கு கண்களில் தென்பட்டன.

அந்தக் காலை வேளையிலேயே சூரியக் கதிர்கள் சுட்டெரிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளே நுழையும் போதே திரு.சீனி எங்களுக்காகக் காத்திருந்தார். மலேசிய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்குக் கம்போடியா செல்ல விசா தேவையில்லை. ஆனாலும் பாஸ்போர்ட் சோதனையையும் அவரே எங்கள் அனைவருக்கும் செய்து கொடுத்தார். பின்னர் எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தோம்.

வெளியே வந்ததும் எங்களை சேலை அணிந்த இரண்டு கம்போடிய இளம் பெண்கள் வரவேற்றனர். ஒருவர் சோ கிம், மற்றொருவர் சோ பிம். அவர்களுக்கு வணக்கம் கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

விமான நிலையத்தின் வாசலில் ஒரு சிற்பம் வைக்கப்பட்டிருந்தது. மன்னன் 2ம் ஜெயவர்மனின் சிற்பம் அது. மன்னன் 2ம் ஜெயவர்மனின் (கி.பி. 770 - 835). பெயர் கம்போடிய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பெயர். கி.பி.9ம் தூற்றாண்டு தொடங்கி கி.பி 15ம் நூற்றாண்டுவரை தெற்கியக்காசியாவில் புகழ்பெற்றுத் திகழ்ந்த க்மேர் அரசினை உருவாக்கித் தொடக்கிய மாமன்னன் என்ற சிறப்பு இம்மன்னனையே சாரும். இந்த மன்னனுக்குப் பரமேஸ்வரா என்ற பெயரும் உண்டு. முதலில் இந்திரபுரம் என்ற பெயரில் தனது தலைநகரை மெக்கோங் நதிக்கரையில் அமைத்தான். பின்னர் ஹரிஹராலயா என்ற பெயரில் தலைநகரை அமைத்து பின்னர் மகேந்திரபர்வதா அல்லது மகேந்திரபர்வதம் என்ற மலைப்பகுதியில் தனது தலைநகரை அமைத்தான். இன்று ப்னோம் குள்ளன் உள்ள இடம் தான் மகேந்திரபர்வதம்.

2ம் ஜெயவர்மன் தன்னை தேவராஜா பிரகடனப்படுத்திக் கொண்டான். இவன் ஜாவா (இந்தோனீசியாவிலிருந்து) வந்தவன் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நன்றி - : Encyclopedia Britannica

தொடரும்..
சுபா






No comments:

Post a Comment