17.மே.2018
நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த தங்கும் விடுதி சொக்காரோத் (Sokha Roth). பெயரைக் கேட்டால் சொக்கா என்ற நமக்கு அறிமுகமான சொல் நினைவுக்கு வரவே அடிக்கடி திருவிளையாடல் தமிழ்த்திரைப்படத்தில் சொக்கா சொக்கா என வசனம் பேசிய நாகேஷ் தான் மனக்கண்ணில் வந்து போனார்.
இது ஒரு நான்கு நட்சத்திர தங்கும் விடுதி. தியானத்தில் இருக்கும் சாக்கியமுனியின் சிற்பம் ஒன்று வாசலில் வைக்கப்பட்டிருக்கின்றது. நுழைவாசலில் அப்சரஸுகள், அதாவது அழகிய தேவதைகள் இருவரின் மரத்தாலான சிற்பங்கள் நுழைவாயிலை அலங்கரிக்கின்றன. இதற்கு முன்புறத்தில் தாமரை மலர் போன்ற கல்தொட்டிகள் இரண்டு வைக்கப்பட்டு அதில் தாமரைச்செடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. தாமரை மலர்கள் பௌத்தத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. எப்படி காவி பௌத்தத்தின் சின்னமோ அதே போல தாமரை மலரும் பௌத்தத்தின் சின்னங்களில் ஒன்று, ஆனால் இன்றோ காவி, தாமரை என்ற இரு சொற்களுமே நமது சிந்தனையில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை நினைவூட்டுவதாக அமைந்திருப்பது காலத்தின் கோலம்.
காலையில் தங்கும் விடுதி வந்து பொருட்களை வைத்து விட்டு உடனே சியாம் ரீப் நகரில் இருக்கும் அங்கோர் தேசிய அருங்காட்சியகம் சென்று வர திட்டமிட்டிருந்தேன். ஆனால் காலையில் திரு.ஞானம் அவர்கள் தொலைபேசியில் அழைத்து கட்டுமரம் உணவகத்திற்கு வந்து காலை உணவு சாப்பிட்டுச் செல்ல அழைத்தார். இந்த அன்பான அழைப்பை ஏற்று அருகிலேயே இருக்கும் அந்த உணவகத்திற்குச் சென்றோம்.
கட்டுமரம் என்ற பெயர் மனதில் இனம்காணாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கம்போடிய மண்ணில் தமிழில் அதுவும் பண்டைய தமிழரின் கடல் வழி வணிகத்தின் மிக முக்கியக் குறியீடான கப்பல் பற்றிய சொல் இது. கட்டுமரம் என்ற இச்சொல் ஆங்கிலத்திலும் அதே ஒலியோடு Catamaran என்ற சொல்லாக புழக்கத்தில் உள்ளது. எரிசக்தி பயன்பாடு அற்ற வகையில் காற்றின் வேகம், காற்று செல்லும் திசை, காற்றின் அழுத்தம் என்பதை மட்டுமே கொண்டு கடலின் ஆழமும் அகலமும் தூரப்பார்வையும் கொண்ட பண்டைய தமிழர் பயன்படுத்திய ஒரு கலம் இது. இந்தப் பெயர் உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த எனக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியது என்பது பலரும் இப்பெயரை அவ்வப்போது சொல்லிச் சொல்லி மகிழ்ந்ததிலிருந்து தெரிந்தது.
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment