நாங்கள் நாட்டரசன் கோட்டைக்கு வந்து சேரும் போதே மாலை நெருங்க ஆரம்பித்திருந்தது. வெயில் தணிந்து இதமான சூழலாக இருந்தது.
இதுவும் பழமை வாய்ந்த ஒரு ஆலயம்தான் என்பதைக்கோயில் அமைப்பில் இருந்தே காண முடிந்தது. முதலில் ஆலயத்தின் கண்ணுடைய நாயகி அன்னையின் கோயிலில் வழிபாடை முடித்துக் கொண்டோம்.
கோயிலில் முன்புறத்திலேயே தெப்பக்குளம் ஒன்றும் அமைந்துள்ளது. நீர் நிறைந்து அத்தெப்பக்குளம் மிகத் தூய்மையாகக் காட்சியளித்தது. துள்ளிக் குதித்து விளையாடும் மீன்களை குளத்தின் கரையிலேயே கண்டு மகிழ்ந்தேன்.
இந்தக் கோயிலின் உள்ளேயும் சுற்றுப்புறத்தையும் மிக நேர்த்தியாகவும் தூய்மையாகவும் பாதுகாத்து வருகின்றனர். இச்சிறு நகருக்கு சிறப்பு சேர்க்கும் ஒரு சைவைத் தலமாக இக்கோயில் அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
கோயிலில் கற்றூண்களில் கவின்மிகு சிலைகளைச் செதுக்கியிருக்கின்றனர். தேவாரப்பாடல்களில் வரும் புராணக் கதைகளை மையமாகாக் கொண்ட உருவச் சிலைகளை அவற்றில் காண முடிந்தது. அத்துடன் கலைநயம் மிக்க ஆடல் மகளிர், இசைக் கருவி வாசிக்கும் பெண்டிர் வடிவங்களும் சிலைகளாக அத்தூண்களில் காட்சியளித்துக் கொண்டிருந்தன.
கோயிலுக்குச் சென்று வழிபாட்டினை முடித்து வரும் போது சில பெண்கள் ஆலயத்திற்குள் தூண்களைச் சுத்தம் செய்து, தரையைக் கூட்டிப் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களிடம் சென்று என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று வினவியபோது தினம தினம் அவர்கள் கோயிலுக்கு வந்து கோயிலின் எல்லா பகுதிகளையும் இப்படிச் சுத்தம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் விஷயம் தெரிய வந்தது. அவர்களின் அற்பணிப்பு மனதிற்கு மகிழ்ச்சியளித்த்தது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் பொது மக்களே தங்கள் கோயில்களைப் பாதுகாத்துப் போற்றி வந்தால் ஆலயங்களைச் நிச்சயமாகச் சிறப்புற பாதுகாக்கலாம்.
நாட்டரசன் கோட்டையில் பூஜையை முடித்து விட்டு பின்னர் அங்கே உள்ள நா.கண்ணனின் உறவினர் ஒருவர் மேற்பார்வையில் இருக்கும் ஒரு பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபட்டு அவர்கள் இல்லத்திலும் தேனீர் அருந்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம், காரைக்குடிக்கு.
தொடரும்...
சுபா
1 comment:
இப்படி ஒவ்வொரு ஊரிலும் பொது மக்களே தங்கள் கோயில்களைப் பாதுகாத்துப் போற்றி வந்தால் ஆலயங்களைச் நிச்சயமாகச் சிறப்புற பாதுகாக்கலாம்.
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
Post a Comment