என்றாவது ஒரு நாள் சுற்றிப் பார்க்கச் செல்ல வேண்டும் என நான் மனதில் வைத்திருக்கும் பட்டியலில் உண்மையிலேயே அயர்லாந்து இடம்பெறவில்லை. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் எனக்கு இங்கு ஜெர்மனியில் அறிமுகமான பெண்மனி ஒருவர் அவ்வப்போது தனது முந்தைய அயர்லாந்து பயணத்தைப் பற்றியும் இரண்டு வாரங்கள் தாம் சைக்கிளில் பயணம் செய்து மக்களையும் ஊர்களையும் சுற்றிப் பார்த்து வந்ததையும் கூறிக் கொண்டிருந்தது மனதில் சிறிய அளவில் ஒரு ஆசையை உருவாக்கி விட்டது என்று தான் சொல்வேன். அவர் சொன்ன விசயங்களிலிருந்து குறிப்பாக ரிங் ஆஃப் கேரி பகுதிக்குச் சென்று பார்த்து வர வேண்டும் என எனக்கு ஆசை எழுந்தது.
ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்னர் அப்பெண்மனி சுற்றிப்பார்த்த போது இருந்த அனுபவத்தை விட நிச்சயம் இப்போது சற்று மாறுபட்டதாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இருந்தாலும் "ஏன்.. ஒரு முறை விடுமுறையை அயர்லாந்தில் கழித்தால் என்ன" என்ற எண்ணம் 2011ம் ஆண்டு ஆரம்பத்தில் மனதில் வலுவாக பதிந்து விட்டது. அப்புறம் என்ன..? பயணத்திற்கான தேதியை உறுதி செய்து பயண டிக்கெட்களையும் வருட ஆரம்பத்திலேயே முன்பதிவு செய்து வாங்கி வைத்து விட்டேன். எப்போதுமே பயணங்களை முன்னராகவே திட்டமிடுதலில் சில நண்மைகள் உண்டு. அலுவலகத்தில் விடுமுறை எடுப்பது, தேவையான தகவல்களைத் திரட்டுவது என்பதற்கு முன்னேற்பாடுகள் மிக அவசியம்.
கோடை காலத்தில் செல்வது உகந்ததாக இருக்கும். ஜெர்மனிக்கும் மேலே அமைந்திருப்பதால் நிச்சயமாக குளிர் நிறைந்த நாடாகத் தான் இருக்கும் என்பது என் எண்ணம். அதனால் கணமான பெரிய ஜாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டு செல்வதை விட கோடை காலம் சுற்றுப் பயணத்தை எளிமையாக்கும், எளிதான ஆடைகளை அணிந்து அதிகம் பயணிக்கலாம் என்ற எண்ணம் மனதில் எனக்கு இருந்தது.
எனது நீண்ட நாள் அலுவலக நண்பரும் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ஆண்ட்ரியாஸ் அயர்லாந்தின் பிரியர். ஜெர்மானியரான இந்த நண்பர் 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஓராண்டு அயர்லாந்தின் ஷானென் (Shannon) நகரில் தனியாக ஒரு கம்பெனி நடத்திய அனுபவம் உள்ளவர். அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இன்னமும் ஷேனென் நகரிலேயே இருக்கின்றார். வருடத்திற்கு இரண்டு முறையாவது ரைன் ஏர் (Ryan Air) விமானச் சேவையில் ஷானென் சென்று வருவது ஆண்டிரியாஸின் வழக்கம். திரும்பி வந்து என்னிடம் தனது படத்தொகுப்புக்களைக் காட்ட அவர் மறப்பதில்லை. அப்போதெல்லாம் கூட என்னை அயர்லாந்து ஈர்க்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் மிகக் குளிரான நாடாக இருக்குமோ என்ற ஒரு வித உண்மையற்ற அச்சம் தான்.
பல வேளைகளில் உண்மை நிலைய அறியாமலேயே கற்பனையிலேயே நாம் ஏதேதோ நினைத்து அச்சப்பட்டுக் கொண்டும் தயக்கப்பட்டுக் கொண்டுமிருப்போம். ஆனால் உண்மை நிலையை அறிய நாம் நேராகச் சென்று பார்ப்பது மிக உதவும். இதனால் அய்யங்களைத் தெளிவு செய்து கொள்ள முடிகிறது. அதிலும் ஏதோ ஒரு அனுமானத்திலேயே வாழ்ந்து விடுகின்ற போக்கினால் பல வேளைகளில் நாம் இழப்பது அதிகம் என்பதை அனுபத்தின் மூலம் நான் அறிவேன். ஆக அயர்லாந்துக்கானப் பயணம் ஒரு வழியாக ஏற்பாடாகியது.
தொடரும்
சுபா
சுபா
No comments:
Post a Comment