Tuesday, March 8, 2016

அயர்லாந்தின் அழகில்..! இன்றைய அயர்லாந்து - ஓர் அறிமுகம் - 3

அயர்லாந்து எனக் குறிப்பிடும் போது வடக்குப் பகுதியான வட அயர்லாந்து நீங்கிய பகுதியே அயர்லாந்து என்று அழைக்கப்படுவது. இத்தீவில் வட கிழக்குப் பகுதி யுனைட்டட் கிங்டம் (ஐக்கிய ராஜ்ஜியம்) ஆட்சிக்குட்படுத்தப்பட்ட பகுதி. இது நீங்கலாக உள்ள ஏனைய பகுதிகளே அயர்லாந்து என்பதாகும்.


அயர்லாந்து கொடியின் வர்ணம் மூன்று நேர் கோடுகளாக அமைந்தது. முதல் பகுதி பச்சை நிறத்திலும், நடுப்பகுதி வெள்ளை நிறத்திலும் கடைசிப்பகுதி ஆரஞ்சு நிறத்திலும் என அமைந்திருக்கும். அயர்லாந்து அரசின் விளக்கப்படி இந்தக் கொடியில் முதலில் உள்ள பச்சை நிறம் கேலிக் பாரம்பரியத்தை விளக்குவதாகவும், வெள்ளை நிறம் அமைதியை உணர்த்துவதாகவும், இதன் ஆரஞ்சு நிறம் வில்லியம் ஆஃப் ஓரஞ் (William of Orange) அரசரைப் பின் தொடர்பவர்களைக் குறிப்பதாகவும் உள்ளது.

வில்லியம் III & II (1650 - 1702) ஓரஞ் நாசவ் (House of Orange-Nassau) பாரம்பரியத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். 1689ம் ஆண்டு முதல் இவர் வில்லியம் III என்ற பெயருடன் இங்கிலாந்து அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளையும் ஆட்சி செய்தவர். ஸ்கோட்லாந்தின் அரசராக இவரது பெயர் வில்லியம் II என வழங்கபடுவதால் இவருக்கு வில்லியம் III & II என்ற இரண்டு பெயர் குறிப்புக்களுமே உள்ளன. வட அயர்லாந்திலும் ஸ்கோட்லண்ட் நாட்டிலும் இவர் பில்லி அரசர் (King Billy) என அழைக்கப்பட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 5.11.1688ல் வில்லியம் இங்கிலாந்தை முற்றுகையிட்டு ஜேம்ஸ் அரசர் II & VII இடம் இருந்து நாட்டைக் கைப்பற்றி இங்கிலாந்து, ஸ்கோட்லாந்து அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் ஆட்சி செய்தார். இவர் மனைவி மேரி II (Mary II) இவருடன் இணைந்து தான் இறக்கும் வரை ஆட்சி நடத்தினார். இவர்கள் இணைந்து நடத்திய ஆட்சி பொதுவாக வில்லியம் மேரி (William and Mary) ஆட்சி என குறிப்பிடப்படுகின்றது.




அயர்லாந்து ஒரு தீவு. ஐரோப்பாவிலேயே மூன்றாவது பெரிய தீவு என்பதும் உலகிலேயே இருபதாவது பெரிய தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் ரீதியாக இத்தீவு இரண்டு மாபெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதி (Northern Ireland) யுனைட்டட் கிங்டம் ஒரு பகுதியாகவும் தெற்கும் ஏனைய பகுதியும் அயர்லாந்து குடியரசு (Republic of Ireland) எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 6.4 மில்லியன் ஆகும். இதில் ஏறக்குறைய 4.6 மில்லியன் மக்கள் தெற்குப் பகுதி அயர்லாந்தின் குடியரசிலும் மீதம் 1.8 மில்லியன் மக்கள் வடக்கு அயர்லாந்திலும் வசிக்கின்றனர்.

தொடரும்..


No comments:

Post a Comment