முதல் நாள் மட்டுமல்ல.. முழுமையாக இந்தப் பயணத்தில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் எங்கள் பயணத்தின் போது எல்லா இடங்களிலும் கணக்கற்ற செம்மறி ஆடுகளைப் பார்த்து அதிசயித்த நான் எங்கள் பயண வழிகாட்டியான ஜொஅன்னாவிடம் இங்கு மக்கள் தொகையை விட செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே என்று சொன்ன போது அவர் அதை ஆமோதித்து தெற்கு பகுதி நாடான அயர்லாந்து குடியரசில் 5.0 மில்லியனுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உள்ளன எனத் தெரியப்படுத்தினார்.
மக்கள் தொகையை விட செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை இங்கு அதிகம் என்பது ஆச்சரியம் தரும் விஷயமல்லவா?
அயர்லாந்தின் தலைநகரம் டப்ளின். 2000ம் ஆண்டுகளின் வாக்கில் மிகத் துரிதமாக கணினி தொழில்நுட்பம் வளர்ச்சி கண்ட சமையத்தில் ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக கால் செண்டர்கள் உருவாகிய இடம் டப்ளின் தான். உலகின் பல முக்கிய வர்த்தக நிறுவனங்கள், குறிப்பாக கணினி தொழில்நுட்ப வர்த்தக நிறுவனங்கள் டப்ளின் நகரில் தங்கள் கால் செண்டர், கஸ்டமர் செர்வீஸ் செண்டர் ஆகியவற்றை இங்கு தொடங்கின. மிகப் பிரபலமாக 2000ஆம் ஆண்டு முதல் 2006 ம் ஆண்டு வரை இங்கே கால்செண்டர்களின் ஆதிக்கம் மிகவும் வலுவாக இருந்தது என்று சொல்லலாம். டப்ளின் நகரின் வளர்ச்சியிலேயே கடந்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் நடந்துள்ளது என்பதையும் எங்கள் சுற்றுலா வழிகாட்டியின் விளக்கங்கள் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.
அயர்லாந்தின் மக்கள் தொகையில் 87%க்கு மேற்பட்டோர் கத்தோலிக்க கிற்ஸ்துவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏறக்குறைய 3% ப்ராடஸ்டண்ட் கிறிஸ்துவர்களும் சிறிய எண்ணிக்கியிலான முஸ்லீம்களும் ஏனைய மத்த்தினரும் இங்கு உள்ளனர். இதில் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பின்பற்றும் கிறிஸ்துவம் பண்டைய கெல்ட்டிக் பண்பாட்டை உள்வாங்கிய ஒரு தனித்துவம் கொண்ட கத்தோலிக்க சமயம் என்பதை அங்கு நேரில் சென்ற இடங்களிலெல்லாம் அறிந்து கொள்ள முடிந்தது.
முதல் நாள் விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் உடனே ஒரு சந்தேகம் வந்தது எனக்கு. இங்கு எந்த வகை பணம் புழக்கத்தில் உள்ளது? உடனேயே பணம் மாற்றிக் கொள்ள வேண்டுமா ? என்று. விமான நிலையத்தில் பணம் மாற்றிக் கொள்ளும் இடத்தில் வந்து விசாரித்ததில் அயர்லாந்தில் யூரோ பணமே புழக்கத்தில் உள்ளது என்றும் வடக்கு அயர்லாந்து செல்ல வேண்டுமென்றால் மட்டுமே அதற்கு பணம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிந்து கொண்டேன். இந்தப் பயணம் முழுதுமே வடக்குப் பகுதி தவிர்த்த அயர்லாந்து நாட்டில் மட்டுமே என்பதால் பணம் மாற்ற வேண்டுமே என்ற அந்தக் கவலையை விட்டு சற்று சூழலை ரசிக்க ஆரம்பித்தேன்.
தொடரும்..!
No comments:
Post a Comment