பயணத்தொடர்..(2011)
ப்ராங்க்பெர்ட் விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய 2 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் டப்ளினை வந்தடைந்தேன். ஏர் லிங்குஸ் அயர்லாந்தின் விமான நிறுவனம். நான் பயணித்த விமானத்தில் பணி நிமித்தம் பயணிப்பவர்களும் குடும்பத்தினரைக் காணச் செல்பவர்களும் என ஏறக்குறைய விமானம் நிரம்பி இருந்தது.
டப்ளினை வந்திறங்கியவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயண வழிகாட்டி நிச்சயமாகக் காத்திருப்பார் என்ற எண்ணம் மனதில் இருந்தது. பணம் மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்று உறுதியானவுடன் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தேன். நான் பதிவு செய்திருந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயர் பலகையை கையில் ஏந்திக் கொண்டு ஜொஅன்னா நின்று கொண்டிருந்தார். எனக்கு முன்னரே பயணித்து வந்திருந்த எட்டு பேர் அவர்கள் பயணப் பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தனர். . எங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் பெயரைக் கேட்டு பதிவு அட்டையை சரிபார்த்துக் கொண்டு எங்களை அழைத்துக் கொண்டு பேருந்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் ஜொஅன்னா.
பேருந்தில் எங்களை ஏற்றி விட்டு வாகனமோட்டியிடம் நாங்கள் செல்ல வேண்டிய தங்கும் விடுதி இருக்கும் இடம் பற்றிய விளக்கம் சொல்லி விட்டு நாங்கள் இன்று நாள் முழுதும் எங்களுக்குப் பிடித்த வகையில் பொழுதை போக்கலாம் என்று சுதந்திரத்தையும் வழங்கி விட்டு விடைபெற்றுக் கொண்டார். முப்பது நிமிட நேர பயணத்தில் டப்ளின் நகரின் தொழிற்சாலை பகுதி நிறைந்த இடங்களில் பயணிப்பது ஒரு வித அலுப்பாக இருந்தது.
எங்களுக்கு 2 நாட்கள் டப்ளின் நகரில் தங்க வழக்கப்பட்டிருந்த தங்கும் விடுதி அமைந்திருந்தது ஒரு தொழிற்பேட்டை அமைந்த பகுதி. சற்று ஏமாற்றமாகிப் போனது எனக்கு. சுற்று முற்றும் கட்டிடங்களும் நிறுவனங்களும். சரி. அதிகம் வறுத்தப்பட வேண்டாம் என சமாதானம் செய்து கொண்டு தங்கும் விடுதிக்குள் சென்று பெயர் பதிவுகளைச் சரியாக செய்து அறைக்கான சாவியை எல்லோரும் பெற்றுக் கொண்டோம். என்னுடன் சேர்ந்து வந்திருந்த ஏனையோருக்கும் எனக்கும் தங்கும் விடுதியினர் வரவேற்கும் முகமாக ஐரீஷ் காப்பி வழங்கினர். இது வரை இதனை அருந்த வாய்ப்பமைந்ததில்லை. நானும் தேடிப்போய் வாங்கி அருந்தியதில்லை. சுவை கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு கலவையாக இருந்தது. சுவை பிடிக்காததால் அதனை வைத்து விட்டு அறைக்குச் சென்று தயார்படுத்திக் கொண்டு ஏற்கனவே கொண்டு வந்திருந்த அயர்லாந்து சுற்றுப்பயண வழிகாட்டி புத்தகத்தில் டப்ளின் சென்று என்னென்ன பார்த்து வரலாம் என்று தேடி போடிருந்த சிறு பட்டியலை சரிபார்த்துக் கொண்டேன்.
ஜொஅன்னா எங்களிடம் தந்திருந்த தகவலின் படி 79a பேருந்தில் ஏறி ட்ரினிடி காலோஜ் நிறுத்ததில் இறங்கிக் கொண்டால் எல்லா முக்கிய இடங்களையும் கட்டிடங்களையும் பார்த்து வரலாம். ஆக, உடனே தயாராகி தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்டு 79a பேருந்து எடுத்து டப்ளின் நகருக்குப் பயணித்தேன். என்னுடன் முதலில் விமான நிலையத்தில் சந்தித்த மற்றொரு ஜோடியும் இணைந்து கொண்டனர். இரண்டு அடுக்கு பஸ். மேலே ஏறி அமர்ந்து கொண்டதால் சாலைகளையும் வீடுகளையும் வீடுகளின் தோற்றத்தையும் பார்த்துக் கொண்டு செல்ல முடிந்தது. மேலும் பழைய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களை ஆங்காங்கே காண முடிந்தது. நகருக்கு சற்று அருகாமையில் செல்லும் வழியிலேயே கண்ணில் ஒபிலிஸ்க் ஒன்றும் தென்பட்டது
அதிபர் மாளிகை தோட்டத்தில் இருக்கும் ஒபிலிஸ்க்
டப்ளினில் எங்கள் தங்கும் விடுதி
டப்ளின் வரைபடம் - அருங்காட்சிகம், அரண்மனை ஆகிய பகுதிகளைச் சுட்டுகின்றது.
No comments:
Post a Comment