Sunday, March 20, 2016

அயர்லாந்தின் அழகில்..! கெல்ஸ் நூல் (The book of Kells) - 7



சென்ற பதிவில் ட்ரினிட்டி காலேஜ் நூலைப் பற்றியும் கெல்ஸ் நூல் பற்றியும் ஓரிரு வரிகள் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த நூலகத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்த அரும்பொக்கிஷம் கெல்ஸ் நூல். அதனைப் பர்றி இப்போது சொல்கிறேன்.

கெல்ஸ் நூல் (The book of Kells) எனப்படும் கிறிஸ்துவ கோஸ்பல் பாடல்கள் கொண்ட நூல் பற்றி ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இது 9ம் நூற்றாண்டில் முழுதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நூல்.

எழுதிய நூல் என்று சொல்வதை விட வடிவமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நூல் என்று சொல்வது மிகப் பொருந்தும். இன்னூலில் லத்தின் மொழியில் புதிய டெஸ்டமனில் உள்ள நான்கு கோஸ்பல்கள் அடங்கியுள்ளன. இவற்றுடன் பல வாசகங்கள் ஓவியங்கள் நிறைந்துள்ள ஒரு கலை நயம் மிக்க நூல் இது.



இந்த நூல் கெல்ட்டிக் பாரம்பரியத்தில் ஊறிய கிறிஸ்துவ பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டது. இந்த நூலின் காலம் ஏறக்குறை கி.பி 800 அல்லது அதற்கும் முந்தைய ஆண்டுகளாக இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.



இந்த நூலின் சிறப்பு என்று சொன்னால் கோஸ்பல் பாடல்களையும் விளக்கங்களையும் வாசகங்களையும் சுற்றிலும் தீட்டப்பட்டுள்ள கவின்மிகு ஓவியங்கள் எனலாம். கெல்ட்டிக் பாரம்பரியத்தின் தாக்கத்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக உள்ளமையே இந்த நூலின் சிறப்பு.
புக் ஆஃப் கெல்ஸில் அடங்கியுள்ள ஓவியங்கள் கிறிஸ்துவ பாரம்பரிய சின்னங்களை உள்ளடக்கியதாகவும் அதே வேளை கெல்ட்டிக் பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னங்களான மனித உருவங்கள், மிருகங்கள், சுற்றி வளைத்து சூழும் பாம்பு, மாய உருவங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது. அதோடு செல்ட்டிக் பாரம்பரியத்தின் அடிப்படை சின்னமான கெல்ட்டிக் முடிச்சு மிகத் தெளிவான கவர்ச்சியான வர்ணங்களில் நூல் முழுதும் இடம் பெறுகின்றது. இந்த நூல் எந்த அளவிற்கு புதிதாக அயர்லாந்துக்கு ஆறாம் நூற்றாண்டில் நுழைந்த கிறிஸ்துவ சமயம் அயர்லாந்தின் பாரம்பரிய கெல்ட்டிக் வழக்கங்களை உட்கொண்டு வளம் பெறுகின்றது என்பதற்கு சான்றாகவும் அமைகின்றது.
நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த நூல் தற்சமயம் டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் (Trinity College Library) பாதுகாக்கப்படு வருகின்றது.


அயர்லாந்தின் மிகப் பெரிய பொக்கிஷமாக இந்த நூல் இன்று கருதப்படுகின்றது. புக் ஆஃப் கெல்ஸ் நூல் மிகப் பிரபலமானதாகவும், மிக நுணுக்கமாகவும் தயாரிக்கப்பட்ட ஒரு நூல் என்பதும் முக்கிய குறிப்பாகும். ஐயோனா தீவு, மற்றும் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் மடம் அமைத்து இங்கு கிற்ஸ்துவ மதத்தைப் பரவச் செய்த பாதிரிமார்களின் அரிய ஒரு கலைப்படைப்பு இந்த நூல்.

இந்த நூலின் அசல், ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் உள்ளது என மேலே குறிப்பிட்டேன். இதனை அச்சு வடிவத்தில் பதிப்பித்திருக்கின்றனர். மிகக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மட்டுமே இவை பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. 1990ஆம் ஆண்டின் ஒரு கட்டுரையின் படி ஒரு நூலின் 1990 ஆம் விலை $18,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இன்னூலின் விலை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பலாம்.

சரி. இந்த நூல் எப்படி ட்ரினிட்டி கோலேஜ்க்கு வந்தது என அடுத்து பார்ப்போம்.

புகைப்படங்கள்
1.நூலில் உள்ள ஒரு பக்கம்
2.கெல்ட்டிக் குறியீடுகளோடு கலந்து வடிக்கப்பட்ட எழுத்துக்கள்
3.கெல்ட்டிக் குறியீடுகள்

No comments:

Post a Comment