கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுலோவாக்கியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடு. 2004ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான பொருளாதார அனுகூலங்களை அதிகமாக அநுபவித்து வரும் நாடு இது எனச் சொல்லலாம்.
பெரிய ஐடி நிறுவனங்களின் கால் செண்டர்களும் சேவை நிலையங்களும் இங்கே காளான்கள் போல முளைத்தன. நான் பணிபுரியும் ஹ்யூலட் பெக்கார்ட் நிறுவனத்தின் ஐரோப்பிய சேவை மையமும் இங்கு தொடங்கப்பட்டது. அந்த பணிக்காக 2005ம் ஆண்டு ஒரு முறை ப்ராட்டிஸ்லாவா வந்திருந்தேன். பின்னர் 2009ம் ஆண்டு 3 நாட்கள் ட்ரெய்னிங் அளிப்பதற்காக இங்குள்ள அலுவலகம் வந்திருந்தேன். அந்த நினைவுகள் மனதில் இருக்கின்றன.
இன்று சுலோவாக்கியா ஜெர்மனி, பிரான்சு போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளின் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் ஆலைகளைக் கொண்டிருக்கின்றது. வோக்ஸ்வாகன், சிட்ரஒன் போன்ற கார் உற்பத்தி தொழிற்சாலைகள் இங்கிருந்தே இயங்குகின்றன.
யூரோ விற்க்கு மாறியதனால் மேலும் பல அனுகூலங்களை சுலோவாக்கியா அனுபவிக்கின்றது. ஆனால் இன்னமும் குரோன் புழக்கத்தில் தான் செக் நாடு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஹங்கேரியும் யூரோவிற்கு இன்னமும் மாறவில்லை.
முன்னர் ஹங்கேரி சுலோவாக்கியாவை 10 நூற்றாண்டுகள் ஆட்சி செய்து அதன் கீழ் வைத்திருந்தது. பேரரசாக ஹங்கேரிய அரசு திகழ்ந்தது. ஆனால் இன்றோ ஐரோப்பாவின் ஏழை நாடுகள் வரிசையில் ஹங்கேரியும் இருக்கின்றது.
வாழ்க்கை உயர்வதும் தாழ்வதும் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, நாடுகளுக்கும் பொருந்தும்.!
No comments:
Post a Comment