Monday, June 11, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 11

அங்கோரில் சில நாட்கள் - 11
17.மே.2018
ஆக் யோம் புராதனக் கோயிலிருந்து புறப்பட்டு ஒரு புதிய கோயிலை எங்களுக்குக் காட்டுவதற்காக எங்கள் பயண வழிகாட்டி திரு.பெய் எங்களை அழைத்துச் சென்றார். மலைப்பகுதியிலிருந்து நகர்ப்பகுதியை வந்தடைந்தோம்.

வழியில் வரும் போது திரு.பெய் எங்களுக்கு கம்போடியா பற்றிய சில தகவல்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். முதல் நாள் தூக்கம் போதாமையால் எனக்கு அலுப்பு கூடிக்கொண்டேயிருந்தாலும் அவர் கூறிய சுவாரசியமான செய்திகளைக் கேட்டுக் கொண்டும் எனது குறிப்பு நூலில் எழுதிக் கொண்டும் பாதி தூக்கத்தோடு நான் பயணம் செய்து கொண்டிருந்தேன். கம்போடியாவில் கிபி 6ம் நூற்றாண்டு வாக்கில் பெண்கள் செய்த புரட்சி ஒன்றைப் பற்றி அவர் குறிப்பிட என் பாதி தூக்கமும் உடனே கலைந்தது. சுவாரசியமான கதை அது.

புரட்சி இல்லையேல் பெண் விடுதலை ஏது?

உலகம் முழுவதுமே பெண்களுக்கான சுதந்திரம் என்பது விடுதலை புரட்சிகளால் தான் உருவாக்கப்பட்டது. இறுக்கமான ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கான சிந்தனைச் சுதந்திரம், செயல்படும் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், முடிவெடுக்கும் சுதந்திரம் என எல்லாமே போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் பின்னர் தான் சாத்தியப்பட்டிருக்கின்றன.

இந்தக் கதையும் அப்படித்தான். திருமணத்திற்கு ஆண் வீட்டாருக்குப் பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்கும் வழக்கம் தான் முன்பு இருந்திருக்கின்றது. இதனை எதிர்த்துத் தகர்த்தெறியும் வகையில் ஒரு முயற்சி கி.பி.6ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கின்றது. இதன்படி க்மெர் பெண்கள் பலமானவர்களா ஆண்கள் பலமானவர்களா என்பதே இப்போட்டி.

இப்போட்டியில் யார் அதிகம் மணலைத் திரட்டி உயர்ந்த மலையை உருவாக்குகின்றனரோ அவர்கள் வெற்றியாளர்கள். ஆக, இருபாலரும் மண்திரட்டி மலையை உருவாக்கத் தொடங்கினர். இருள் மறைந்து சூரியன் வருவதற்குள் மலைகள் உருவாக்கம் முடிந்து விட வேண்டும். பெண்கள் ஒரு பகுதியில் விளக்கினைக் கட்டி வெளிச்சம் வந்து விட்டது போல ஆண்களை நம்ப வைத்து விடுகின்றனர். ஆண்களும் அதனை நம்பி மலை உருவாக்கும் பணியை விட்டு விடுகின்றனர். பெண்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் மேலும் மணலைச் சேர்த்து உயரமான மலையை உருவாக்கி வெற்றியாளர்களாக ஆகின்றனர். வெற்றி பெற்றதால் பெண்கள் இனி ஆண்களுக்கு வரதட்சணை தரவேண்டியதில்லை என்று முடிவாகின்றது. அன்றிலிருந்து திருமணத்திற்குப் பெண்கள் வர தட்சணை கொடுக்கும் பழக்கமும் கம்போடியாவில் இல்லாது ஒழிந்தது.

கம்போடியாவில் பெண்கள் செய்த இந்த எளிய புரட்சியைக் கூட நம் தமிழ் சமூகத்தில் நாம் இன்னும் செய்யவில்லையே. இது அவமானமல்லவா?

ஒரு ஆணைத் திருமணம் செய்ய ஒரு பெண் இவ்வளவு வரதட்சணை தரவேண்டும் என்ற பெண்களைத் தரம் தாழ்த்தும் ஒரு விசயத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு அதனை மரபாக நினைத்து நடைமுறையில் இன்னமும் வரதட்சணையை வளர்க்கும் நம் தமிழ் மக்களின் சிந்தனையைப் பற்றி பேசிக் கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது. இன்று வரையில் தமிழகத்திலும் சரி, இலங்கையிலும் சரி, புலம்பெயர்ந்த ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளிலும் சரி, படித்து வேலையிலிருந்தாலும் பெண்கள் வீட்டார் வரதட்சணையை மகிழ்ச்சியோடு கொடுக்கின்றனர்; மாப்பிள்ளை வீட்டார் கூச்சமின்றி வாங்கிக் கொள்கின்றனர்; இருவாலருக்கும் எந்த வித அவமான உணர்வும் இன்றி. (மலேசிய சிங்கைச் சூழலில் வரதட்சணை என்பது ஏறக்குறைய வழக்கிலிருந்தே மறைந்து விட்டது.)

ஆங் செக், ஆங் சோம் (Ang Chek and Ang Chom) கோயிலை வந்தடைந்தோம். பெண் தெய்வங்கள் கருவறையில் வழிபடப்படும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு கோயில் இது.

ஆங் செக், ஆங் சோம் இருவரும் கம்போடிய இளவரசிகள் என்றும் இவர்கள் பௌத்த மடாலயத்தை உருவாக்கியவர்கள் என்றும் திரு.பெய் விளக்கமளித்தார். இந்த வெண்கலச் சிற்பங்கள் இரண்டும் சிலை கடத்தல்காரர்களால் திருடப்படும் அபாயத்திலிருந்து பல ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டு பின்னர் 1990ம் ஆண்டு இக்கோயில் நகர மையத்தில் எழுப்பப்பட்டு இங்கு இந்த இரு பெண் துறவிகளின் சிற்பங்களும் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஊதுபத்திகளின் மணம் நிறைந்து, இனிய இசைக்கருவிகளின் இசைப்பின்னனியில் இங்கு தெய்வீகத்தன்மை நிலவுவதை அனைவருமே உணர்ந்தோம்.












தொடரும்..
சுபா

Friday, June 8, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 10


17.மே.2018
தோன்லே சாப் ஏரி அமைந்திருக்கும் வெஸ்ட் பரே பகுதியிலிருந்து ஏறக்குறைய 1 கி.மி. தூரத்தில் ஆக் யோம் கோயில் இருக்கின்றது. (நேற்றைய பதிவில் அங்கு பதியப்பட்ட சிறிய விழியப் பதிவை இணைத்திருந்தேன்) சிதலமைடைந்த ஒரு கோயில் இது. கி.பி7ம் நூற்றாண்டிலிருந்து கிபி.9ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் கட்டப்பட்டதென்றும் அங்கோர் வாட் கட்டமைப்பிற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னதான கட்டமைப்பு என்றும் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

1935ம் ஆண்டு ஜோர்ஞ் ட்ரூவ (George Trouve) என்னும் பிரஞ்சு தொல்லியல் அறிஞர் தமது குழுவினருடன் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது இங்குப் புதையுண்டு கிடந்த இக்கோயிலை மீட்டெடுத்தார். மண்ணாலும், செங்கற்களாலும், கற்பாறைகளாலும் கட்டப்பட்ட கோயில் இது. 100மீட்டர் சுற்றளவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் கிடைத்த ஒரு கல்வெட்டு கம்ஹிரேஸ்வர (கம்பீரேஸ்வரர்) கடவுளுக்கு கி.பி.1001ல் கொடுக்கப்பட்ட நிவேந்தங்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. தொடர்ந்து இரு நூற்றாண்டுகளுக்கு இக்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டுச் செய்திகளைப் பற்றியும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

கிழக்குப் பார்த்து அமைந்திருக்கும் எஞ்சிய வாசல் பகுதியில் கி.பி.704, கி.பி.717 ஆகிய காலகட்டங்களின் செய்திகளைக் கூறும் கல்வெட்டுக்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவை இக்கோயிலின் இறைவனான கம்ஹிரேஸ்வர கடவுளுக்கு வழங்கப்பட்ட அன்னதானங்கள் பற்றிய செய்தியைக் குறிப்பிடுகின்றன. அதில் குறிப்பாக கோயிலுக்காக வழங்கப்பட்ட அரிசி, கால்நடைகள் (மாடு), துணி, ஊழியர்கள் பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன.

இங்கு அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்ட போது கண்டெடுக்கப்பட்ட இறைவடிவங்களில் 6 வெண்கல சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு இந்துக் கடவுள்களின் சிலைகள். ஏனைய நான்கு புத்தரின் சிலைகள். இவை 9 லிருந்து 35 செண்டிமீட்டர் உயரம் கொண்டவை. அவற்றுள் ஒரு சிவலிங்க வடிவமும், பெரிய புத்தர் சிலையும், பெரிய நாகர் நிலையும் கண்டெடுக்கப்பட்டன. (Encyclopedia of Ancient Asian Civilizations)

ஆக, முதாலாம் ஜெயவர்மன் இக்கோயிலின் ஆரம்ப நிலை வடிவத்தை அமைத்து பின்னர் க்மெர் பேரரசை உருவாக்கிய இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி.770-834) இதனை மேலும் பெரிதாக்கி அமைந்திருக்கலாம். இன்று இக்கோயில் அதன் சிறப்பினை இழந்து காட்சி தந்தாலும் இது உருவாக்கப்பட்ட காலத்தில் இது மிகச் சிறந்த வடிவமைப்புடன் இருந்த ஒரு கோயில் தான் என்பதை அதன் இன்றைய சிதைவுண்ட வடிவம் காட்டத்தவறவில்லை.

கி.பி 11ம் நூற்றாண்டில் அப்போதைய க்மெர் பேரரசன் முதலாம் சூரியவர்மனின் ஆணையின் படி வெஸ்ட் பரே (West Barray) நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு அவன் காலத்துக்குப் பின்னர் அவனது மகன் 2ம் உதயவர்மன் காலத்தில் அப்பணி நிறைவு செய்யப்பட்டது. இது 8 கிமீ நீளம் கொண்ட ஒரு அணை. இது கட்டப்பட்டபோது வெஸ்ட் பரே அணையின் தெற்குப் பகுதி தடுப்பு அரண் உடைந்ததால் அக் யூம் கோயில் அந்த வெள்ளத்தில் மூழ்கியது. 1935ம் ஆண்டு பிரஞ்சுத் தொல்லியல் அறிஞர் ஜோர்ஞ் ட்ரூவ இதனைக் கண்டுபிடித்து இக்கோயில் மீட்கப்பட்டு இக்கோயிலின் வரலாறு முறையாக கண்டறியப்பட்டு அத்தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டன. இன்று இக்கோயில் இதுவரை அறியப்பட்ட கோயில்களில் கம்போடியாவின் மிகப் பழமையான கோயில் எனக் குறிப்பிடப்படுகின்றது. அங்கோர் நகரின் நீண்ட வரலாற்றுக்குச் சிறப்பும் பெருமையும் சேர்க்கும் ஒரு கோயிலாகவும் இது அமைகின்றது.
https://www.efeo.fr/biographies/notices/trouve.htm









தொடரும்..
சுபா

Thursday, June 7, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -9

அங்கோருக்குச் சென்ற கதை - 9
17.மே.2018

தொன்லே சாப் ஏரியிலிருந்து நாங்கள் ஒரு புராதனக் கோயிலைப் பார்க்கப் புறப்பட்டோம். இன்று கம்போடியாவில் காணக்கிடைக்கின்ற கோயில்களில் மிகப் பழமையானது இக்கோயில். ஆக் யோம் (Ak Yum) என்பது இக்கோயிலின் பெயர். இதனை க்மெர் மன்னன் முதலாம் ஜெயவர்மன் கட்டியதாக விக்கிப்பீடியா குறிப்பு (https://en.wikipedia.org/wiki/Ak_Yum) ஆய்வாளர் Helen I Jessup (2004) அவர்களின் Art & Architecture of Cambodia என்ற நூலின் அடிப்படையில் குறிப்பிடுகின்றது. முதலாம் ஜெயவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி 657-690. ஆக, இந்தக் காலகட்டத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். எங்களுடன் வந்த எங்கள் பயண வழிகாட்டி இது இரண்டாம் ஜெயவர்மன் கட்டிய கோயில் எனக்குறிப்பிட்டு கி.பி 8ம் நூற்றாண்டு எனக் குறிப்பிட்டார். ஆக, இக்கோயிலைப் பற்றிய காலத்தை உறுதி செய்வதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்பதை அறியமுடிகின்றது. ஆயினும் மிகப் பழமையான கோயில் இது என்பதில் ஐயமில்லை.

படிக்கட்டுக்கள் போல கட்டப்பட்டு சற்றே பிரமிட் வடிவில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே சீரான அளவிலான செங்கற்களும் கருங்கல்லும் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வலைப்பக்கம் (https://www.siemreapcambodia.org/angkor-temp…/prasat-ak-yum/) இங்குள்ள கல்வெட்டுக்களின் குறிப்புக்களின் படி இது இந்துமதக் கடவுளான கம்பீரேஸ்வரருக்கு அமைக்கப்பட்ட கோயில் எனக் குறிப்பிடுகின்றது.

பிரமிட் போன்ற அமைப்பு தொன்மையான கோயில் கட்டுமான அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பண்டைய நாகரிகங்களில் குறிப்பாக எகிப்திய, தென் அமெரிக்க மாயன் வழிபாடுகளில் இதே போன்ற கட்டுமானத்தைக் காண்கின்றோம். இந்த செங்கல் அமைப்பு தமிழகத்து செங்கற்றளிகளை நினைவு படுத்துவதாக இருக்கின்றது. தமிழகத்தின் செங்கல் உருவாக்க முறைகளைக் கற்று இக்கோயில் கட்டுமானத்தை உருவாக்கியிருக்கலாம் என்ற எண்ணம் எழுகின்றது.

தோழர் மலர்விழி பாஸ்கரன் எங்கள் பயண வழிகாட்டி விளக்கியபோது அதனைப் கைப்பேசியில் பதிவாக்கினார். அப்பதிவைக்காணலாம். 


தொடரும்..
சுபா

Wednesday, June 6, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -8

அங்கோருக்குச் சென்ற கதை - 8

17.மே.2018

தொன்லே சாப் ஏரிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான வீடுகள் என் கவனத்தை ஈர்த்தன. அவை ஒரு வகை நீண்ட வீடுகள். நிலத்திலிருந்து ஏறக்குறைய  இரண்டிலிருந்து மூன்று அடி உயரமாக அமைக்கப்பட்டவை. கால்கள் வரிசையாக அமைக்கப்பட்டு அவற்றின் மேல் உயரத்தில் நீண்ட பலகையால் அமைக்கப்பட்ட வீடுகள் தொடர்ச்சியாக இருப்பது போன்ற கட்டுமானம். அதுமட்டுமன்றி சாதாரணமாக நாம் காணும் தனி வீடுகளைப் போலன்றி இவை நீளமாக , பல குடும்பங்கள் இணைந்து வாழும் வகையில் இந்த நீண்ட வீடுகள்  அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டிலேயே  இரண்டு பேருக்கு மேல் இருந்தால் சண்டையும் சச்சரவும் முளைத்து விடும். இந்த நீண்ட வீடுகளில் எப்படி மக்கள் சமாளிக்கின்றனரோ என யோசித்துக் கொண்டேன். :-)

தொன்லே சாப் ஏரிப் பகுதி மட்டுமல்ல, கம்போடியாவின் பல பகுதிகள் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் செய்தியை நாம் செய்தி ஊடகங்களின் வழி அறிந்திருப்போம். இதுதான் வீடுகள் இப்படி கால் வைத்து உயரமாக அமைக்கப்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணம்.

ஏரியின் மீன்பிடித்தல் தொழில் முக்கியத் தொழில். அதோடு இணைந்த வகையில் விவசாயமும் இம்மக்களின் முக்கியத் தொழிலாகும். படகுகளில் ஆண்கள் ஏரிக்குள் சென்று வலைவீசி மீன் பிடித்து வருவதும், ஏரிக்கரையில் பெண்கள் மீன்களை உலர வைத்து கருவாடுகள் தயாரிப்பதும் இங்கு ஏரிக்கரையோர மக்களின் அன்றாட வாழ்க்கையாக இருக்கின்றது. 

கம்போடிய மக்கள் தொகையில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் கம்போடிய க்மெர் மக்களாகும். இதற்கு அடுத்த எண்ணிக்கையில் வியட்நாமியர்கள் ஏறக்குறைய 8 விழுக்காட்டினர் கம்போடியாவில் வாழ்கின்றனர். பிரான்சின் கட்டுப்பாட்டில் கம்போடியா சில காலங்கள் இருந்தமையால் இங்கு பிரஞ்சு மக்களும் சிறிய எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.  இவர்களோடு சீனர்களும் சாம் இன மக்களும் சிறுபாண்மையில் இங்கு வசிக்கின்றனர்.  

உலகின் வறுமையான நாடுகளில் கம்போடியாவும் ஒன்று. ”என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?” எனக் கேட்கத் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் பேரரசாக இருந்த கம்போடியா இன்று மாபெரும் வீழ்ச்சியை அனுபவித்து சிறிது சிறிதாக மீண்டு வருகின்றது. மக்களின் மீட்சியும் நாட்டின் பொருளாதார மீட்சியும் ஆளும் அரசாங்கத்தின் கைகளில் தான் இருக்கின்றது.








தொடரும்..
சுபா

Monday, June 4, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -7

அங்கோருக்குச் சென்ற கதை - 7
17.மே.2018
பட்டுத்தொழிற்சாலையிலிருந்து எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது. கம்போடியாவின் இயற்கை வளங்களில் ஒன்று தொன்லே சாப் ஏரி. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய ஏரி இது. கம்போடியத் தலைநகரான புனோம்பெண்ணிலிருந்து அங்கோர் வாட் வரை விரிந்திருக்கும் பெரிய ஏரி. விமானத்தில் சியாப் ரீப் நகரை அடையும் போதே மேலிருந்து தொன்லே சாப் ஏரியை பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன். ஆனால் முதல் நாளே இந்த ஏரிக்குச் சொல்வோம் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. எதிர்பாராத விசயங்கள் நம் வாழ்வில் நடப்பது தான் நம் வாழ்வின் சுவாரசியம், அல்லவா?
தென்கிழக்காசியாவின் மிக நீண்ட நதி மெக்கோங் நதி. சீனா, மியன்மார், லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய ஆறு நாடுகளைக் கடந்து சீனப் பெருங்கடலில் கலக்கின்றது மெக்கோங் நதி. சில ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சென்றிருந்தபோது மொக்கோங் நதியைக் கடந்து சீன நிலப்பரப்பைப் பார்த்துக் கொண்டே படகுச் சவாரி செய்து லாவோஸ் சென்றடைந்தேன். மிக அடர்ந்த நதி. அதன் நீரோட்டத்தின் வேகம் அச்சமூட்டும். இந்த மெக்கோங் நதியை தொன்லேசாப் ஏரியுடன் இணைக்கும் நதியும் தொன்லே சாப் நதி என்றே அழைக்கப்படுகின்றது.
கம்போடியா விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த ஏரி எனலாம். உள்ளூர் தேவைக்கான பாதிக்கும் மேற்பட்ட விவசாயத்தேவைகளுக்கு இந்த ஏரியே அடிப்படையாக அமைந்திருக்கின்றது. இந்த ஏரியில் பிடிக்கப்படும் மீன்கள் கம்போடிய மக்களின் உணவுத்தேவைக்கும் பங்களிக்கின்றது.
தமிழகத்தின் பண்டைய பல்லவ, சோழ மன்னர்களைப் போல ஏரிகளை சீரமைத்து, நீர்க்கால்வாய்களைச் சீரமைத்து விவசாயத்திற்குத் தேவையான நீர்வளத்தை கம்போடியாவின் பண்டைய க்மெர் பேரரசை ஆண்ட மன்னர்களும் செய்திருக்கின்றனர். விவசாயம் தான் மக்களின் வாழ்வாதாரம் என்பதைப் புரிந்து கொண்டதன் பலனாக அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு நாட்டின் நீர்வளங்களிளை மேம்படுத்தியிருக்கின்றனர்.
தொன்லே சாப் ஏரியைப் பார்த்த போது சென்னையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு அழிக்கப்பட்ட ஏரிகள் தான் என் நினைவிற்கு வந்தன. எத்தனை ஏரிகளும் குளங்களும் நீர் நிலைகளும் நிறைந்த பூமி தமிழகம்? இன்று இவை ஏன் பராமரிக்கப்படுவதில்லை? நாட்டின் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை சீர்படுத்தி ஏரிகளைத் தூர்வாரி, ஆறுகளைச் செழிப்பாக்கி பாதுகாக்க வேண்டிய பெறும் பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. ஆனால் நாமோ காவேரி நீர் இன்று கிடைக்குமா நாளை கிடைக்குமா என்றல்லவா போராடிக் கொண்டிருக்கின்றோம். தமிழகத்தில் இயற்கையாக அமைந்த எல்லா நீர்நிலைகளையும் மழைக்காலம் வருவதற்கு முன் மேம்படுத்தி வைத்தால் தமிழக விவசாயத்துக்கு அது மிக உதவுமல்லாவா? இதை ஏன் யோசிக்க வேண்டியவர்கள் யோசிப்பதில்லை???















தொடரும்..
சுபா

Saturday, June 2, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -6

அங்கோருக்குச் சென்ற கதை -6
17.மே.2018
பட்டுச் சேலை, பட்டு வேட்டி, பட்டு சட்டை என விரும்புவோர் ஒரு முறை எப்படி பட்டு நூல் நெய்யப்படுகின்றது எனப் பார்த்தால் இனி பட்டாடைகளை உடுத்துவதற்கு முன் ஒன்றுக்கு பல முறை யோசிக்கத்தான் செய்வார்கள். பட்டு நூலைத் தயாரிக்க நூற்றுக்கணக்கான பட்டுப்புழுக்களைக் கொதிக்கும் நீரில் போட்டு அவை மிதக்கும் போது ஒரு மரக்கம்பினால் சுற்றி சுற்றி எடுக்கும் போது அதன் உடலிலிருந்து வருகின்ற நீர் திரிந்து நூலாகின்றது. பின்னர் இதனை நூலாக்கி, அதில் வர்ணம் சேர்த்து பின் அதனை வேண்டும் வடிவில் பட்டுத்துணியாக உருவாக்குகின்றனர். இப்படி உருவாக்கப்படுகின்ற பட்டு தொழிற்சாலையில் தான் எங்களின் பயணத்தின் முதல் நிகழ்ச்சி தொடங்கியது.
சியாம் ரீப் நகரிலேயே இந்தப் பட்டு தொழிற்சாலையும் அதனை ஒட்டிய கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையமும் இருக்கின்றது. பட்டு நூல் உற்பத்தி, நூல் பிரித்தல், வர்ணம் ஏற்றுதல், நூலை தறியில் வைத்து அதனை துணி ஆக்குவது போன்ற அனைத்து பணிகளையும் பெண்களே செய்கின்றனர். இந்த தொழிற்சாலைக்குள்ளேயே ஒரு அருங்காட்சியகமும் இருக்கின்றது. பட்டு பண்டைய காலம் தொட்டு எவ்வாறு அரச வம்சத்தினரால் பயன்படுத்தப்பட்டது, எவ்வகை ஆடை அணியும் விதம் அரச குடும்பத்தின் படிநிலைக்கேற்றவாறு மாறுபடுகின்றது, சிற்பங்களில் இப்பட்டாடைகளைக் கட்டியிருக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிற்பக்கலை வடிவமைப்பு, அவற்றின் நுணுக்கங்கள் போன்ற தகவல்கள் இங்கே புகைப்படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன. (விரிவாக ஒரு அருங்காட்சியகப் பதிவில் இதனை பின்னர் விளக்குகிறேன்)
இதே போன்ற பட்டாடை உருவாக்கும் தொழிற்சாலைக்கு ஓரிரு ஆண்டுகட்கு முன்னர் நான் தாய்லாந்து சென்றிருந்த போது நேரில் சென்று பார்த்தேன். ஆக அந்த அனுபவமும் நினைவிற்கு வந்தது. இங்கு புழுக்களை வளர்க்கும் இடம், புழுக்களுக்குத் தீனியாக அளிக்கப்படும் கூன் பை (Khun PAI) என்ற தாவர வகையில் சிலவற்றை தோட்டமாகப் போட்டு வளர்ப்பதையும் எங்களுக்குக் காட்டினார்கள்.
சீனா தொடங்கி ஏனைய கிழக்காசிய நாடுகளில் பட்டு உற்பத்தி என்பது மிக நீண்டகாலமாக வழக்கில் இருக்கின்றது. தமிழகத்தில் பட்டாடை விழாக்களுக்கும் பண்டிகை நாட்களிலும் அணிந்து மகிழ்வது வழக்கமாகி விட்டது. ஆயினும் ஆசிய நாடுகளின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஆடை என்றால் அது பருத்தி ஆடைதான். ஆக பருத்தி ஆடையையே அதிகமாக அணிந்து மகிழ்வோம்.
குறிப்பு- நான் இந்தப் பதிவில் அணிந்திருக்கும் ஆடையும் பருத்தியினால் நெய்யப்பட்ட ஆடைதான்

தொடரும்..
சுபா













Friday, June 1, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -5

17.மே.2018

கட்டுமரம் உணவகம் சென்று சேர்ந்தோம். நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு உணவகம் அது. வாசலில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு நடராஜர் சிலை வைக்கப்பட்டு மலர்கள் தூவி அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனியாக ஒரு பாத்திரத்தில் தாமரை மலர்களும் இருந்தன.

என்னுடன் வந்த மலர்விழிக்குப் பசியில்லை என்று சொல்லி விட்டார். எனக்கு காப்பி சாப்பிட்டே ஆகவேண்டும் என்று ஆவல். ஆக காபி சாப்பிட்டு விட்டு திரு.ஞானம் அவர்களைப் பார்த்து அறிமுகப்படுத்திகொண்டு பின்னர் அருங்காட்சியகம் சென்று விடலாம் என்ற நினைப்போடு கட்டுமரம் உணவகத்திற்குள் நுழைந்தோம்.

ஆரம்பமே நல்ல வரவேற்பு. உணவகத்தில் பணிபுரியும் ஒரு இளைஞர் அன்புடன் வரவேற்றார். ”கிச்சடி இருக்கின்றது அக்கா. சாப்பிடுங்கள்” என்ற அன்பான உபசரிப்பைத் தட்டிக் கழிக்க மனம் வரவில்லை. கிச்சடியோடு மணக்கும் சாம்பார் வேறு. இந்த சாம்பாருக்காகவே கட்டுமரம் உணவகத்திற்கு மீண்டும் மீண்டும் செல்லலாம் எனச் சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு ருசி. பரங்கிக்காய், கம்போடிய முருங்கை, தக்காளி எல்லாம் கலந்து சுவையாக இருந்தது. ஏன் கம்போடிய முருங்கை எனச் சொல்கின்றேன் என்றால், அது நாம் பழக்கப்பட்ட சுவையில் இல்லை. சற்று கடினமாகவே இருந்தது. உணவகத்தில் பனிபுரியும் அந்த இளைஞர் மதுரைக்கு அருகே நத்தம் என்ற ஊரிலிருந்து வந்தவர் என்று தெரிந்தது. இது மதுரை நத்தம் பகுதி கைவண்ணம் போலும் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட்டு விட்டு புறப்பட வந்த எங்களை திரு.ஞானம் வந்து வரவேற்றார். நாங்கள் சுற்றிப்பார்க்க ஒரு வேன் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி காலை 10 முதல் மதியம் 2 வரை நன்றாக சில இடங்கள் சென்று பார்த்து வாருங்கள் எனக் கூறி ஒரு கம்போடிய வழிகாட்டியையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். சற்று நேரத்தில் மேலும் சில விருந்தினர்களும் எங்களுடன் இணைந்தனர். மலேசியாவிலிருந்து வந்திருந்த நண்பர் ராஜா பிள்ளை, அவரது நண்பர், திருச்சியிலிருந்து வந்திருந்த உளவியல் மருத்துவர் கார்த்தியாயினி அவரது குடும்பத்தார் என அனைவரும் புறப்பட்டோம்.

வாசலுக்கு வரும் போது வேகமாக ஒரு பெண்மனி உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர்தான் திருமதி.தாமரை. இந்த உணவகத்தின் உரிமையாளர்களில் ஒருவர். சிரித்த முகம். எல்லோரையும் அன்புடன் வரவேற்கும் பாங்கு, எந்த அழுத்தமும் இல்லாமல் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஆடி ஓடி பணிபுரியும் பண்பு என.. இவரைப் பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துவிடக்கூடிய குணம். பாண்டிச்சேரியில் வளர்ந்தவர் கம்போடியாவில், ஒரு புதிய நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கின்றார் என்ற ஆச்சரியத்திற்கும் மேலாக வியக்க வைத்தது இவர் மூன்று முறை உலகம் சுற்றி வந்தவர் என்ற செய்தி.

இவரோடு நேரில் பழகிய அடுத்தடுத்த நாட்களில் இவரது பரந்த உலகப் பயண அனுபவமும், பல தரப்பட்ட மக்களைச் சந்தித்த அனுபவமும் இவரிடம் அன்பையும் நேசத்தையும் அதிகரித்திருக்கின்றது என நினைத்துக் கொண்டேன். நாம் இருக்கும் தெருவிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்வதற்கே இன்னமும் சில பெண்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பெண்களால் இது முடியுமா? பெண் இதைச் செய்யலாமா என கேள்வி எழுப்புவோரும் இன்றும் உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் தாமரை உலகம் சுற்றிய தாமரையாகத் திகழ்கின்றார் என்பதும் கம்போடியாவில் கட்டுமரம், தாமரை என்ற பெயர்களில் இரண்டு உணவங்களின் உரிமையாளர்களில் ஒருவர் என்ற செய்தியும் ஏனைய பெண்களுக்கும் ஒரு உந்துதலாக அமையும் அல்லவா?

தொடரும்..
சுபா