Friday, July 13, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 22

21.மே.2018

எனது கம்போடிய பயணத்தின் முக்கிய நோக்கம், எல்லோரும் காண விரும்பும் உலக பிரம்மாண்ட கட்டிடக் கலைப்படைப்பான அங்கோர் வாட் கோயிலை நேரில் காண்பதும் அதன் கலை வடிவத்தை நுணுக்கமாக ரசிப்பதும் ஆகும். பயணத்தின் முதல் சில நாட்கள் புனோம் குலேன், அருங்காட்சியகம் மற்றும் உலகத் தமிழர் மாநாடு என அமைந்து விட்டது. மாநாடு முடிந்த மறு நாள் அங்கோர் வாட் கோயிலுக்குச் செல்வது என் திட்டத்தில் இருந்தது.

அங்கோர் எனும் பெயர் கம்போடிய க்மெர் மொழிச் சொல் என்பதையும் அது நமக்கு பரிச்சயமான சமஸ்கிருதச் சொல்லான நகரம் என்பதிலிருந்து உருவான சொல் என்பதனையும் முதல் பகுதிகளில் குறிப்பிட்டிருந்தேன். அதோடு நாகர் வழிபாட்டிலிருந்து இச்சொல் உருவாகியிருக்கலாம் என என் அனுமானத்தையும் பகிர்ந்திருந்தேன்.

கி.பி.9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மன்னன் முதலாம் யசோவர்மன் தனது தலைநகரை இன்றைய சியாம் ரீப் பகுதிக்கு அருகில் அமைத்தான். இதே பகுதியில் க்மெர் அரசின் தலைநகரம் ஏறக்குறைய 500 ஆண்டுகள் அப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களால தலநகராகப் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கு ஆட்சி தொடர்ந்தது. மன்னன் முதலாம் யசோவர்மன் தான் அமைத்த நகருக்கு யசோதபுரம் என தனது பெயரையே சூட்டினான். எப்படி கிரேக்கத்திற்குப் புகழ்சேர்த்த மாமன்னன் அலெக்ஸாண்டர் தான் கைப்பற்றிய நகரங்களில் குறிப்பிடத்தக்கனவற்றிற்கு அலெக்ஸாண்ட்ரியா எனப் பெயர் சூட்டினானோ அதே போல. முதலாம் யசோவர்வனுக்குப் பின் வந்த க்மெர் மன்னர்கள் இப்பகுதியில் மேலும் பல கோயில்களைக் கட்டினர், தங்கள் புகழ்பாடவும், தாங்கள் கடைபிடித்த மதக் கொள்கைகளை க்மெர் ஆட்சியில் விரிவாக்கவும். இக்காலகட்டத்தில் சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் க்மெர் அரசில் முக்கியத்துவம் பெற்றிருந்ததைக் காண்கின்றோம்.

கி.பி.11ம் நூற்றாண்டில் முதலாம் சூரியவர்மன் தமிழகத்தை ஆண்ட ராஜேந்திர சோழனின் உதவியை நாடினான் என்பதையும், அவனது நட்புடனும் துணையுடனும் பலம் பொருந்திய ஸ்ரீவிஜய பேரரசை அடக்கினான் என்பதனையும் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கடாரத்தைச் சோழர் வசமாக்கியதில் கம்போடிய க்மெர் அரசின் தூண்டுதலும் இருந்திருப்பதை வரலாற்றுக் குறிப்புக்களின் வழி அறிய முடிகின்றது. இது மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டியதொரு களமாகும்.

கி.பி.1130க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் மாமன்னன் இரண்டாம் சூரியவர்மனின் ஆட்சியில் தான் இன்று நாம் பிரமிப்புடன் காணும் அங்கோர் வாட் எழுப்பப்பட்டது. வாட் என்பது கோயில் எனப் பொருள்படும். அங்கோர் வாட் ஒரு கோயில் என்பதுடன் இரண்டாம் சூரியவர்மனின் சமாதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மைய தெய்வம் மகாவிஷ்ணு. அங்கோர் வாட்டின் பல பகுதிகளில், நின்ற நெடிய வடிவில், புத்தரைப் போல சாய்ந்த நிலையில், அமர்ந்த நிலையில் என வெவ்வேறு வடிவங்களில் விஷ்ணுவின் சிலைகளை இன்றும் காண்கிறோம்.

கிபி.12ம் நூற்றாண்டு வாக்கில் க்மெர் பேரரசு மேலும் தனது ஆட்சியின் எல்லையை விரிவாக்கி இன்றைய தாய்லாந்தின் வடக்குப் பகுதி மற்றும் லாவோஸின் வடக்குப் பகுதி வரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. க்மெர் பேரரசு சீனாவுடன் வர்த்தகத்தை விரிவாகியிருந்தது. ஆனால் கம்போடிய அரசு பணப்புழக்கத்தை பயன்படுத்தாமல் பண்டமாற்று முறையிலேயே வணிகத்தை நிகழ்த்தி வந்ததை அறிகின்றோம்.

இரண்டாம் சூரியவர்மனுக்குப் பின்னர் வந்த மன்னர்களில், குறிப்பாக வரலாற்றில் முக்கியமாக மேலும் குறிப்பிடப்படும் ஒரு மன்னனாகத் திகழ்ந்தவன் 7ம் ஜெயவர்மன். இவன் காலத்தில் க்மெர் பேரரசு முழுமையாக பௌத்தம் தழுவியது. பௌத்த தெய்வ வடிவங்கள் அங்கோர் வாட் கோயிலை அலங்கரிக்கத் தொடங்கிய காலம் இது. இவனே யசோதரபுரத்திற்குள் அதாவது அங்கோர் நகருக்குள் ”அங்கோர் தோம்” என்ற பிரம்மாண்டமானதொரு பௌத்த கோயிலைக் கட்டினான். இது மட்டுமன்றி ”பாயோன்” என அழைக்கப்படும் பௌத்தக் கோயிலையும் இவனே எடுப்பித்தான். இதுவே பல கோணங்களில் புத்தரின் முகங்களுடன் எழுந்த கோபுரங்களாகக் காட்சி தரும் கோயிலாகும்.

கிபி.13ம் நூற்றாண்டு வாக்கில் சைவ, வைணவ தாக்கங்கள் குறையத்தொடங்கின. க்மெர் அரசு முற்றும் முழுதுமாக பௌத்தத்தை ஏற்றது. தேரவாத பௌத்தம் இங்கு நிலைபெற்று வளர்ச்சி கண்டது.







தொடரும்..

சுபா

குறிப்புக்கள்:
The civilization of Angkor by Charles Higham
Cambodia and Laos, Eyewitness Travel

No comments:

Post a Comment