அங்கோரில் சில நாட்கள் - 26
21.மே.2018
ஹாலிவூட் புகழ் நடிகை ஏஞ்சலீனா ஜோலி, லாராக்ராஃப்ட் பாத்திரப்படைப்பாக டோம் ரெய்டர் திரைப்படத்தில் தனது துப்பறியும் வீர சாகசங்களைச் செய்யும் ஒரு இடமாக கம்போடியாவின் அங்கோர் நகரும் காட்டப்படும். அப்படத்தில் வருகின்ற ”தா ப்ரோம்” கோயில் தான் எனது இந்தக் கம்போடிய பயணத்தில் நான் இறுதியாகக் கண்டு மகிழ்ந்த க்மெர் பேரரசின் பழங்கோயில்.
தா ப்ரோம் கோயில் அங்கோர் தோம் வளாகத்திலிருந்து ஏறக்குறைய 1 கிமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. பாயோன் கோயிலின் கட்டுமான அமைப்பினை ஒத்த கட்டுமான அமைப்பு கொண்ட கோயில் இது. இது கட்டப்பட்டபோது இக்கோயில் “ராஜவிகாரா’ என அழைக்கப்பட்டது. கி.பி 12ம், 13ம் நூற்றாண்டினைச் சார்ந்த இக்கோயிலும் பாயோன் கோயிலைக் கட்டிய மாமன்னன் 7ம் ஜெயவர்மனின் ஒரு கலைப்படைப்பே.
இது உருவாக்கப்பட்டபோது இந்த ராஜவிகாரை மகாயாண பௌத்த மடாலயமாகச் செயல்பட்டு வந்தது. இங்கு ஒரு பல்கலைக்கழகமும் செயல்பட்டு வந்தது. இதன் தலைமைப் பேராசிரியராக இருந்தவர் மன்னன் 7ம் ஜெயவர்மனின் மனைவி இந்திராதேவி.
இக்கோயில் 1992ம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் ஒரு வரலாற்றுச் சின்னமாக பட்டியலில் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. இக்கோயிலில் இந்திய தொல்லியல் துறை (ASI) ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.
கி.பி15ம் நூற்றாண்டில் க்மெர் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் அங்கோர் நகரில் இருந்த கோயில்கள் பராமரிப்பின்றி சிதலமடையத்தொடங்கின. 21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தொடங்கப்பட்ட École française d'Extrême-Orient என்ற பிரஞ்சு ஆய்வு அமைப்பு இப்பகுதி கோயில்களைப் புணரமைப்பது, தொல்லியல் அகழ்வாய்வுகளில் ஈடுபடுவது எனச் செயல்படத்தொடங்கியது. இதன் விளைவாக அங்கோர் கோயில்கள் காடுகளிலிருந்து மீட்கப்படும் பணிகள் தொடங்கின. ஆயினும் தா ப்ரோம் கோயிலில் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தோற்றம் பிரம்மாண்டமான காட்சியாக இயற்கையாகவே அமைந்திருப்பதால் அதனை அப்படியே விட்டுவைத்து பாதுகாப்பது என்ற முடிவெடுக்கப்பட்டு இக்கோயில் இன்று மரங்கள் சூழக் காட்சியளிக்கின்றது. இந்திய தொல்லியல் துறை (ASI) இக்கோயிலின் புணரமைப்புப் பணியில் பெரும்பங்காற்றி, 2013ம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான கோயிலின் சிதலமைடைந்த பகுதிகளை மீட்டதாகவும் அறியமுடிகின்றது.
தா ப்ரோம் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள அடர்ந்த காடுகளில் ராட்சத வகை மரங்கள் சூழ்ந்திருக்கின்றன. இந்த பௌத்த மடாலாயத்தின் பல பகுதிகளை ராட்சத மரங்களின் வேர்கள் சுற்றி வளைத்துப் பின்னியிருக்கின்றன. இவ்வளவு பெரிய வேர்களா என திகைக்க வைக்கின்றது இங்கு நாம் காணும் காட்சி.
ஒருபகுதியில் மரத்தின் வேர்களே அருவியிலிருந்து விழும் நீர் போல, நீர்வீழ்ச்சிக்காட்சியாக அமைந்திருக்கின்றது. ஓரிடத்தில் அப்சரசுகளைத் தங்கள் ராட்சதக் கைகளுக்குள் வைத்திருப்பது போல மாபெரும் வேர்கள் சிற்பங்கள் நிறைந்த பாறைகளில் படர்ந்து விரிந்திருக்கின்றன. தா ப்ரோம் மடாலயத்தின் ஒரு பகுதியின் மீது படர்ந்திருக்கும் ராட்சத வேர்கள் ஒரு முதலை தவழ்ந்து கூறையின் மீதேருவது போலக் காட்சியளிக்கின்றது. இப்படி ஒவ்வொரு மரமும் இக்கோயிலைத் தமக்குப் பிடித்த வகையில் ஆக்கிரமித்து தனதாக்கிக் கொண்டிருக்கும் காட்சியை இங்கே முழுதும் காண முடிகின்றது.
தா ப்ரோம் இயற்கையோடு இணைந்து நமக்களிக்கும் காட்சி சொல்லில் வடிக்க இயலாததோர் அழகு. சில உணர்வுகளை விளக்க சொற்களால் இயலாது. அதே போல சில காட்சிகளை ரசிக்கத்தான் முடியும். அந்த ரசனையின் ஆழத்தை விவரிக்க மொழியால் இயலாது என்பதை தா ப்ரோம் ராஜவிகாரைக்கு வருவோர் நிச்சயம் உணர்வார்கள்.
நம்மை வியப்பில் ஆழ்த்தியது போலவே டோம் ரெய்டர் புகழ் ஏஞ்சலினா ஜோலியும் இந்த பிரம்மாண்டத்தில் தன் மனதை நிச்சயம் இழந்திருப்பார் படப்பிடிப்பின் போது.
குறிப்புக்கள்:
The Civilization of Angkor by Charles Higham
தொடரும்..
சுபா
சுபா
No comments:
Post a Comment