Saturday, July 14, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 23

அங்கோரில் சில நாட்கள் - 23

21.மே.2018

மிகப் பெரிய வளாகத்தைக் கொண்ட ஒரு சமயச் சின்னம் என்றும் உலகின் மிகப்பெரிய இந்து மதக் கோயில் என்றும் வர்ணிக்கப்படும் சிறப்பு பெற்றது அங்கோர் வாட். மாமன்னன் 2ம் சூரியவர்மனால் கி.பி.12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயில் விஷ்ணுவுக்காக முதலில் கட்டப்பட்டது என்றாலும் மன்னர்களின் ஆட்சி மாற்றங்களின் காரணத்தினால் பௌத்த மத வழிபாடு இங்கு படிப்படியாக முக்கியத்துவம் பெற்றது.

மையக்கோயிலில் அமைப்பு தாமரைப்பூவின் இதழ்களை ஒத்த ஐந்தடுக்கு கட்டிட அமைப்பு. இது மேரு மலையை பிரதிபலிப்பது.

பெரிய கோயில் வளாகம் அமைக்கப்பட்டு, அதன் மையப்புள்ளியாகக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே நுழைவதற்கு முன்னர் நாம் காண்பது மிகப்பெரிய குளங்கள். இக்குளங்கள் நீர் நிறைந்து காணப்படுகின்றன. இவையே புராணம் கூறும் பாற்கடல் என்றும் வர்ணிக்கப்படுகின்றது. நடுவே பாலம் அமைந்திருக்கின்றது.

அங்கோர் வாட் கோயில் முழுமையும் சிற்பங்கள் பல சுவர்களை அலங்கரிக்கின்றன. அப்சரசுகள் எனப்படும் தேவதைகளின் உருவங்கள் சுவர்களின் மேல் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 600 மீட்டர் நீளம் கொண்ட வெவ்வேறு சுவறுகளில் மகாபாரதக் கதை, ராமாயணக் கதை, கம்போடிய மன்னர்களின் வரலாறு ஆகியவை புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இது கோயில் சிற்பக் கலைக்கு ஒரு சிகரம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மையக் கோபுரத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் செங்குத்தான கோபுரங்கள் புத்தரின் வடிவங்களைத் தாங்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. படிப்படியாகக் க்மெர் அரசு பௌத்தம் தழுவிய அரசியல் சூழலே இந்த அங்கோர் கோயிலில் பௌத்த மதத் தாக்கத்தை உள்வாங்கி வளர்வதற்கு உருவானதற்கு அடிப்படையாக அமைந்தன.

ஏனைய கம்போடிய கோயில்களைப் போலன்றி அங்கோர் வாட் சூரியன் மறையும் திசை நோக்கிய வகையில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு சூரிய அஸ்தமனத்தை நோக்கியவாறு மேற்கு நோக்கி கட்டப்பட்டிருப்பது மரணத்தைக் குறிக்கும் குறியீடு எனக் கூறப்படுகின்றது.

அங்கோர் கோயிலின் கட்டுமான அமைப்பு தமிழகக் கோயிலின் கட்டுமான அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டது. தனித்துவம் கொண்டது. கம்போடிய மன்னன் 2ம் ஜெயவர்மன் காலத்து கட்டிடக் கலையின் விரிவாக்கத்துடன் திகழும் பிரம்மாண்ட அமைப்பு இந்தக் கட்டிடக் கலை எனலாம். அங்கோர் வாட் அமைப்பு க்மெர் கட்டிடக் கலைகள் மிக உயர்ந்த, மிக நுட்பமான, கட்டுமானக் கலைகளுக்கெல்லாம் ஒரு மகுடமாகத் திகழ்கின்றது எனலாம். கோயில் வளாக அமைப்பு, கோபுரங்களின் அமைப்பு, கருவரை அமைப்பு, சுவர் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் அனைத்துமே இக்கோயிலின் பிரமாண்டத்தையே உணர்த்துகின்றன.

இக்கோயிலைக் கட்டிய இரண்டாம் சூரியவர்மனின் புடைப்புச் சிற்பம் இதே கோயிலின் நீண்ட சுவர் ஒன்றில் வரிசையாக அமைக்கப்பட்ட பல நூறு சிற்பங்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது. 2ம் சூரியவர்மன் பல்லக்கில் செல்ல, அவனோடு அவனது அரசியும் ஏராளமான பெண்களும் பல்லக்குகளில் தூக்கிச் செல்லப்படும் வகையில் இப்புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. மற்றுமொரு பகுதியில் 2ம் சூரியவர்மன் யானையின் மீதேரி போரில் ஈடுபட்டிருப்பது போன்றதொரு காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

கோயிலில் கல்வெட்டுக்கள் பல செதுக்கப்பட்டுல்ளன. இவை பல்லவ கிரந்தக் கல்வெட்டுக்கள். ஏனைய கல்வெட்டுக்களும் இருக்கலாம். இக்கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டு ஆராயப்படவேண்டியது அவசியம். இந்தியத் தொல்லியல் துறை ( ASI ) இக்கோயில் புணரமைப்புப் பணியின் ஒரு பகுதியை மேற்கொண்டிருப்பதாகவும் அறிந்தோம். அங்கோர் வாட் மட்டுமன்றி அங்கோர் வளாகத்தில் உள்ள ஏனைய சில கோயில்களின் புணரமைப்புப் பணிகளிலும் ASI தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றது என்பது ஒரு செய்தி. இப்பணிகளின் ஒரு பகுதியாக இக்கோயில்களின் கல்வெட்டுக்கள் வாசிக்கப்படுமானால் அவை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு வரலாற்றையும் இந்தியாவுக்கும் கம்போடியாவுக்குமான உறவையும் நாம் அறிந்து கொள்ள நிச்சயம் உதவும்.

இக்கோயிலை முழுதும் சுற்றி வரவும் ஒவ்வொரு சிற்பங்களையும் நுணுக்கமாக ஆராயவும் ஒரு நாள் போதாது. ஒரு வாரம் இக்கோயிலில் அமர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு பகுதி என ஆராய்ந்தால் தான் இதனை முழுமையாக நாம் அறிந்து கொள்ள முடியும் . அதோடு இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சிற்பிகளின் கலைத்திறனை ரசித்துப் போற்ற முடியும்.

எங்கள் பயணத்தில் குறுகிய நேரமே இருந்தது. ஆயினும் உடன் வந்த நண்பர் திரு.காந்தியின் துணையுடன் இக்கோயிலில் காண வேண்டிய முக்கியப் பகுதிகள் அனைத்தையும் விரைவாகப் பார்த்து அறிந்து, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.










Video :  https://www.facebook.com/subashini.thf/videos/2202733269970058/


தொடரும்..
சுபா

#கம்போடியா
#உலகத்_தமிழர்_மாநாடு_2018

No comments:

Post a Comment