Sunday, July 15, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 24

21.மே.2018
கம்போடியாவின் கோயிற்கலைகளை வியந்து பேசும் பலர் அங்கோர் வாட் கோயிலை மட்டுமே பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஆனால், அங்கோர் பகுதியில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு கொண்டவை. எனது பயணத்தில் அங்கோர் வாட் முடித்து அடுத்து எங்கள் பயணம் அங்கோர் தோம் நோக்கி இருந்தது.

அங்கோர் தோம் நகர் கி.பி.12ம் நூற்றாண்டில் மாமன்னன் 7ம் ஜெயவர்மனால் உருவாக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் விரிந்த க்மெர் பேரரசின் மாபெரும் நகரமாக அங்கோர் தோம் நகரம் திகழ்ந்தது. மதில் சுவரால் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்ட ஒரு நகரமாக இது அமைக்கப்பட்டது. 8 மீட்டர் உயரமும் 12 கிமீட்டர் நீளமும் கொண்ட சுவரால் சூழப்பட்ட நகராக இது அமைக்கப்பட்டது. அந்த மதில் சுவறுகளின் சில பகுதிகளை இன்றும் நாம் காண முடிகின்றது. கற்களால் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நுழைவாயில்களைக் கடந்து தான் இந்த நகருக்குள் செல்ல முடியும். இன்றும் பசுமை குறையாத காட்சி இங்கு நாம் நடந்து செல்லும் போதே நமக்கு பண்டைய வரலாற்றுச் செய்திகளை மணக்கண்ணில் கொண்டுவருவதாக அமைகின்றது.

ஐந்து வாயில்களுடன் அங்கோர் தோம் நகரின் மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதில் தெற்கு வாயில் பகுதி மட்டுமே இன்றும் அதன் கட்டுமானம் சிதையாமல் காட்சி தருகின்றது. இந்தத் தெற்கு நுழைவாயிலைக் கடந்து செல்லும் போது வரிசை வரிசையாக சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே சொல்லலாம். இறைவடிவங்களாக 154 கற்சிலைகள் இங்கே செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தெய்வங்களின் சிற்பங்களோடு அசுரர்களின் பெரிய சிற்பங்களும் ஏழுதலைகள் கொண்ட நாக வடிவங்களும் இந்த மதில் சுவற்றைச் சேர்ந்தும் அதன் அருகாமைப் பகுதிகளிலும் காணக்கிடைக்கின்றன.

அங்கோர் தோம் வளாகத்தில் பல கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுமே பிரம்மாண்டமான கட்டுமான அமைப்புடன் கூடியவை. நாங்கள் குழுவாக இந்தக் கோயில்வளாகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தோம். பாயோன் கோயிலைப் பார்த்து விட்டு அங்கிருந்து சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே மற்றொரு வழியாக வெளியே வந்து பின்னர் உள்ளே செல்வதற்கு வழி தெரியாமல் அங்கோர் தோம் வளாகத்தின் வேறொரு பகுதிக்கு வந்துவிட்டோம். என்னுடன் சுவிஸர்லாந்திலிருந்து வந்திருந்த திருமகளும் என்னுடன் ஓட்டமும் நடையுமாக ஓடிவர எதிர்பாராத விதமாக நாங்கள் வந்தடைந்த கோயில் பிமீயானாக்காஸ் அரச மாளிகை வளாகம் (Phimeanakas).

பிமீயானாக்காஸ் அரச மாளிகை வளாகம் கி.பி10ம் நூற்றாண்டில் க்மெர் மாமன்னன் 2ம் ராஜேந்திரவர்மனால் கட்டப்பட்டது. இதனை மேலும் விரிவாக்கினான் பின்னர் அங்கோர் தோம் நகரை உருவாக்கிய 7ம் ஜெயவர்மன். இந்த வளாகத்தில் நாகர் வழிபாட்டின் குறியீடுகள் நிறைந்திருக்கின்றன. விண்வெளி, அண்டம் என விரிவான பூளோகவியலை மையப்படுத்திய கோயில் அமைப்பினை இங்கே அமைத்திருந்தான் மாமன்னன் 2ம் ராஜேந்திரவர்மன். இந்த மாளிகைப்பகுதியில் தங்கக்கோபுரம் ஒன்று இருந்ததாகவும் இங்கு வழக்கில் உள்ள கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. அந்த தங்கக் கோபுரம் அமைந்த மாளிகையில் ஒரு ஒன்பது தலை நாகம் வாழ்ந்ததாகவும், அது மன்னனின் கண்களுக்கு அழகிய ஒரு பெண்ணாகக் காட்சியளித்ததாகவும், மன்னன் வேறு ராணிகளுடன் பழகச் செல்வதற்கு முன் இந்த மாயப்பென்ணுடன் உறவு கொண்டபின்னரே செல்ல முடியும் என்றும் அதற்கு மாறாக மன்னன் சென்றால் அவன் இறந்து விடுவான் என்றும் இந்தக் கதை சொல்கின்றது.

இதேபோல இந்த வளாகத்தினுள் உள்ள எல்லா கோயில்களையும் பார்த்து வருவதற்கு ஒரு நாள் கட்டாயமாகப் போதாது. ஆய்வுக் கண்கொண்டு ஆராய்வோருக்கு ஒவ்வொரு பகுதிகளையும் ஆராந்து குறிப்பெடுத்து பதிந்து வர தோராயமாக ஒரு மாத காலம் கட்டாயமாகத் தேவை.

மாமன்னன் 7ம் ஜெயவர்மன் அங்கோர் தோம் கோயில் நகரை உருவாக்கிய மாபெரும் சிற்பி என்பதை அறிந்து கொண்டோம். இதே மன்னன் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு வாடினான் என்ற குறிப்புக்களும் நமக்குக் கிடைக்கின்றன. இந்த மன்னனைப் பற்றி அடுத்த பதிவில் மேலும் சில தகவல்கள் தருகிறேன்.
















குறிப்புக்கள்:
Cambodia and Laos, DK- Eyewitness Travel
தொடரும்..
சுபா

No comments:

Post a Comment