Tuesday, July 17, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 25

21.மே.2018
இப்படி ஒரு கோயிலா என யாரும் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத கட்டுமான அமைப்பு.

இன்று இதே போல ஒரு கோயிலை உருவாக்க முடியுமா என்பதும் ஒரு கேள்வி.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் கோயில் கட்டுமானக் கலையுடன் திகழ்வது கம்போடியாவின் அங்கோர் நகரில் வீற்றிருக்கும் பாயோன் கோயில். மன்னன் 7ம் ஜெயவர்மனின் சிந்தனையில் உதித்த ஒரு கலைப்பொக்கிஷம் இக்கோயில்.

பாயோன் கோயில் வளாகத்தை நெருங்கும் போது நமக்கு உடைந்த இக்கோயிலின் கற்களும் புத்தர் சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். தூரத்திலிருந்து பார்க்கும் போதே நீள் செங்குத்து வடிவில் அமைந்த முகங்கள் அமைக்கப்பெற்ற போபுரங்களை முதலில் காண்போம். பாயோன் கோயிலில் இத்தகைய 54 கோபுரங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏறக்குறைய 200 முகங்கள், அனைத்தும் அவலோகிதராக தன்னைப் பாவித்து மாமன்னன் 7ம் ஜெயவர்மன் உருவாக்கியவை.

இக்கோயிலின் சுவர்களில், தூண்களில், சன்னிதிகளில், அடித்தளத்தில், மேற்தளத்தில், படிகளில் என எல்லா இடங்களிலும் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அப்சரசுகள் என அழைக்கப்படும் தேவமங்கையரின் அழகிய பாவனைகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும், கம்போடியாவின் கி.பி.12ம் நூற்றாண்டு சமூக நிலையை வெளிப்படுத்தும் இயல்பான காட்சிகளும், போர் காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பாக 7ம் ஜெயவர்மனின் போர் வெற்றிகளைப் பறைசாற்றும் புடைப்புச் சிற்பங்கள் மிகப்பிரமாண்டமானவை. போர் வீரர்கள் வரிசை வரிசையாக நடப்பது போன்றும், பரிவாரங்கள் சூழ தளபதிகள் செல்வது போன்றும், மாமன்னன் வீரபவனி வருவது போன்றும், போரில் ஈடுபட்டிருப்பது போன்றும், என, போர் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்தார்போல் காட்டும் சான்றுகளாகத் திகழ்கின்றன இப்புடைப்புச் சிற்பங்கள்.

மாமன்னன் 7ம் ஜெயவர்மனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவன் 2ம் இந்திரவர்மன். அவன் ஆட்சியில் அங்கோர் தோம் நகர் வளமுடன் அவன் தந்தையார் விட்டுச் சென்ற புகழ் குறையாமல் ஆட்சி தொடர்ந்தது. பௌத்தம் தொடர்ந்து கம்போடிய அரசின் அதிகாரப்பூர்வ மதமாகத் தொடர்ந்தது. ஆயின், அவனுக்குப் பின்னர் 8ம் ஜெயவர்மனின் ஆட்சியில் அங்கோர் தோம் குறிப்பிடத்தக்கச் சீரழிவை எதிர்நோக்கத்தொடங்கியது என்பதை நமக்குக் கிடைக்கின்ற குறிப்புக்களின் வழி அறிகின்றோம்.

8ம் ஜெயவர்மன் காலத்தில் சிவ வழிபாடு மேலோங்கத் தொடங்கியது. இதுவரை பௌத்த ஆலயங்களாக இருந்த சில கோயில்கள் சிதைக்கப்பட்டன. பாயோன் கோயிலின் கோபுரங்களில் மாற்றங்களை உட்புகுத்தி அவலோகிதரின் முகத்தை பிரம்மாவின் முகமாக மாற்றிய நிகழ்வுகளும் நடந்தன. பாயோன் கோயிலின் மைய தெய்வமாக இருந்த புத்தரின் சிலை பாயோன் கோயிலிலிருந்து நீக்கப்பட்டு அங்கோர் தோம் நகரின் ஒரு மூலைப்பகுதியில் போடப்பட்டது.

ஆயினும் அண்மைய காலத்தில் இந்தப் பிரம்மாண்டமான சிலை மீட்டெடுக்கப்பட்டு, பாயோன் கோயிலின் மேற்குப்புரத்தில் புதிதாக ஒரு கோயில் அமைக்கப்பட்டு அங்கு வைத்து வழிபடப்படுகின்றது.
8ம் ஜெயவர்மன் பிராமண குருக்கள்மாரைக் கோயில்களில் நியமித்து சிவ வழிபாட்டை தொடக்கினான்.புத்தர் சிலைகள் மூலைகளில் ஒதுக்கப்பட்டன. கம்போடிய க்மெர் ஆட்சி தொடர்ந்தது. ஆயினும் படிப்படியாக பல உள்நாட்டுக் குழப்பங்கள் முளைக்கத் தொடங்கின. அவ்வேளையில் கலகம் வெடிக்கவே அதில் 8ம் ஜெயவர்மன் கொல்லப்பட்டான். அரியணையில் ஆட்சியில் அமர்ந்தான் அவனது மருமகன். 3ம் இந்திரவர்மன் என தன் அரச பெயரை அவன் சூட்டிக் கொண்டான்.

அடுத்தடுத்து ஆட்சியில் இருந்து கம்போடிய மன்னர்களின் செயல்பாடுகள் குறித்து கல்வெட்டுக்கள் இதுவரை கிட்டவில்லை. ஆயினும் அங்கோர் தோம் பகுதியிலிருந்த பல பௌத்த சிற்பங்களையும், சிலைகளையும் பர்மிய மற்றும் தாய்லாந்தின் அயோத்தையா பகுதியில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றதாகவும் அறிய முடிகின்றது. அதன் பின்னர் 18ம் நூற்றாண்டு தொடங்கி அங்கோர் தோம் பகுதியைக் காடுகளே முழுமையாக தனதாக்கிக் கொண்டன.

அங்கோர் தோம் நகரின் பல கோயில்களைச் சுற்றி அடர்ந்த காடுகள் வளர்ந்து விட்டன.அவ்வப்போது இப்பகுதிக்கு வந்து சென்ற ஐரோப்பிய மத போதகர்களின் குறிப்புக்களிலிருந்து அக் காடுகளைப் பற்றிய செய்திக் குறிப்புக்களைக்காண முடிகின்றது.

இப்படிக் காடுகள் தனதாக்கிக் கொண்ட கோயில்கள் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
குறிப்புக்கள்:
The Civilization of Angkor by Charles Higham

தொடரும்..
சுபா








No comments:

Post a Comment