அங்கோரில் சில நாட்கள் - 27
22.மே.2018 - இறுதிப் பகுதி
குறுகிய கால பயணம் தான் என்றாலும் முன் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தமையாலும், அங்கோர் வரலாற்று விசயங்கள் பற்றிய தகவல்களை ஓரளவு நான் வாசித்து விட்டு தயார் நிலையில் சென்றதாலும், கம்போடியாவின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களை அதன் சிறப்பினை அறிந்து, நேரில் கண்டு வியக்க முடிந்தது.
கம்போடிய வரலாற்றை விளக்கும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் பல அங்கோரின் க்மெர் பேரரசின் வரலாற்றைப் பற்றியனவாக இருக்கின்றன. அதற்கடுத்தாற்போல அண்மைய காலங்களில் குறிப்பாக கடந்த நூற்றாண்டில் கம்போடியாவின் அரசியல் குறித்தும், கடுமையான போர்க்கால நிலவரங்கள் குறித்தும் தகவல்களை வழங்குவனவாக இருக்கின்றன. இவற்றை வாங்கி வாசிப்பதன் மூலம் ஆசியாவின் வரலாற்றுப் புகழ்மிக்க கலைச்சின்னத்தைக் கொண்டிருக்கும் கம்போடியாவைப் பற்றி நாம் மேலும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கம்போடியாவின் பல விவசாய நிலங்களில் போர்க்காலத்தில் வைக்கப்பட்ட கன்னிவெடிகளினால் தொடரும் துன்பங்களைப் பற்றி சில குறும்படங்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. கடுமையான உள்நாட்டுப் போர் நிகழ்ந்த போது பொது மக்கள் தங்கள் நிலங்களை விட்டு வெளியேறினர். போருக்குப் பின் அமைதி நிலவத்தொடங்கிய பின்னர் திரும்பிய மக்களுக்கு தங்கள் விளை நிலங்களை மீட்டெடுப்பதே இன்று பெரும் சவாலாக இருக்கின்றது. கன்னி வெடிகளை அகற்றி விளை நிலங்களை மீட்கும் சில அமைப்புக்களும் இப்போது செயல்படுகின்றன.
எனது பதிவின் பல பகுதிகளில் கம்போடியாவின் அரச குடும்பத்தினரைப் பற்றியும் மன்னர்களைப் பற்றியும் நான் தெரிவித்திருந்தேன். க்மெர் பேரரசின் ஆட்சி காலம் தொடங்குவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கம்போடியாவில் ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றிய செய்திகள், இன்று கிடைக்கின்ற கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று நாம் அறியக்கூடிய தகவலின் அடிப்படையில் கம்போடியாவில் கி.மு 68 முதல் கி.பி 1ம் நூற்றாண்டு வரை ஃபூனான் பேரரசின் முதலாம் கவுண்டின்யர் கம்போடியாவை ஆட்சி செய்தார் என்பதை அறிகின்றோம். அதன் பின்னர் கி.பி.1ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவரது மனைவி அரசியார் சோமா கம்போடியாவின் தலைமைப்பொறுப்பேற்று அரசியாக முடிசூடிக்கொண்டு ஆட்சி செய்தார். ஃபூனான் பேரரசின் அடுத்தடுத்த மன்னர்களின் பெயர்களை அறிய இயலாவிட்டாலும் கி.பி 434ம் ஆண்டு வாக்கில் 2ம் கவுண்டிண்யன் ஆட்சி செய்தார் என அறிகின்றோம். அவருக்குப் பின் ஸ்ரீந்தரவர்மன், ஜெயவர்மன் கவுண்டிண்யா, ருத்ரவர்மன் போன்றவர்கள் ஃபூனான் பேரரசின் ஆட்சியைத் தொடர்ந்தனர்.
அதன் பின்னர் ஃபூனான் பேரரசின் ஆட்சி மறைகின்றது. கி.பி 550 முதல் சென்லா பேரரசு கம்போடியாவின் ஆட்சியைக் கைப்பற்றி மன்னன் முதலாம் பிராக்வர்மனின் ஆட்சி கி.பி 600 வரையும் அதன் பின்னர் கி.பி 600 முதல் கிபி 615 வரை முதலாம் மகேந்திரவர்மனும் என சென்லா அரசின் ஆட்சி தொடர்கின்றது. இதே காலகட்டத்தில் தமிழகத்தில் பல்லவ பேரரசை ஆட்சி செய்து வருபவன் மாமன்னன் மகேந்திரவர்மப்பல்லவன் என்பதைக் காணும் போது இந்தப் பெயர் ஒற்றுமையும், இந்த ஒற்றுமைக்குக்கான பின்புலத்தையும் தக்க வரலாற்றுச் சான்றுகளுடன் நாம் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைகின்றது.
சென்லா மன்னர்களின் ஆளுமை 8ம் நூற்றாண்டின் மத்தியில் குறையவே, க்மெர் பேரரசு பிறக்கின்றது. மாமன்னன் 2ம் ஜெயவர்மனின் ஆட்சி காலமே க்மெர் பேரரசின் தொடக்கக் காலம். க்மெர் பேரரசின் ஆளுமை கி.பி 14ம் நூற்றாண்டு வரை தொடர்கின்றது. பின்னர் சயாமிய (தாய்லாந்து) ஊடுறுவல் க்மெர் பேரரசின் அழிவிற்குக் காரணமாகின்றது.
அதன் பின்னர் தொடர்ச்சியான பல போர்களினால் கம்போடியாவும், குறிப்பாக அங்கோர் பகுதி தமது வளத்தையும் பலத்தையும் இழந்து போன வரலாற்றை இன்று காண்கின்றோம்.
இன்று கம்போடியா வளர்ந்து வரும் ஒரு ஏழை நாடு. குறைந்த மக்கள் தொகை. வளமான விளை நிலம். தொழில் தொடங்கவும் நாட்டின் வளத்தை மேம்படுத்தவும் கம்போடிய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கம்போடியாவில் தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆயினும் இன்று தொழில் செய்வதற்க்காகவும், வியாபாரத்திற்காகவும் அங்கு தமிழர் குடியேற்றம் மிகச் சிறிய அளவில் தொடங்கியுள்ளது.
கம்போடியாவின் வரலாற்றைக் காணும் போது தமிழர்களுடனான கம்போடிய மக்களின் உறவு நீண்ட கால தொடர்பு என்பதை உணர முடிகின்றது. ஆயின் கம்போடிய மன்னர்கள் தமிழ் மன்னர்களே எனச் சொல்வது தவறான கூற்றாகவே அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்களின் கம்போடியத் தொடர்பைப் பற்றிய முக்கியத் தகவல்களை ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, ஆ.கி.பரந்தாமனார் ஆகியோரது நூல்களின் வழி அறிய முடிகின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டும் கல்வெட்டு, செப்புப்பட்டயம், இலக்கிய ஆதாரங்களைக் கொண்டும் மேலதிக ஆய்வுகள் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாகின்றது.
பல்லவ மன்னர்கள் மட்டுமன்றி சோழ மன்னர்களின் காலத்திலும் கம்போடிய க்மெர் பேரரசிற்கும் சோழப் பேரரசிற்கும் இருந்த தொடர்புகள் நமக்குக் கிடைக்கின்றன. கம்போடிய இளவரசி சோழ நாட்டிற்குச் சென்று சோழ மன்னரை மணந்த செய்தியையும் அறிகின்றோம். அங்கோரிலிருந்து பரிசுப் பொருட்களும் தேரும் முதலாம் சூரியவர்மன் கம்போடியாவை ஆண்டு கொண்டிருந்தபோது சோழ நாட்டிற்குச் சென்றதாகவும் அறிகின்றோம். ஆக, தமிழக மன்னர்களுக்கும் கம்போடிய மன்னர்களுக்குமான் நட்பு ரீதியான, உறவு முறை ரீதியான தொடர்பு நீடித்திருந்தது என்பதில் ஐயமில்லை. ஆயினும் பல தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கிடைக்கின்றமையினால் முழுமையான வரலாற்றுச் சான்றுகளின் ஆதாரங்களோடு இத்தொடர்பினை விவரிக்க இயலாத சூழலே நிலவுகின்றது.
ஆகவே, கம்போடியாவிலும், தமிழகத்தின் பெரும்பகுதியிலும் கல்வெட்டு வாசிப்புக்கள் பெருமளவில் நிகழ்த்தப்பட்டு அவற்றின் வழி கிடைக்கக்கூடிய செய்திகள் பதிப்பிக்கப்படும் போது மேலும் தெளிவான வெளிச்சம் இதற்குக் கிடைக்க வாய்ப்புண்டு.
கம்போடியர்களும் சரி தமிழக மக்களும் சரி, கடல்வழி பயணித்து இரு நாடுகளுக்குமான உறவினையும் வணிக நட்பினையும் வளர்த்திருக்கின்றனர். அவற்றைப் பற்றிய தரவுகளும் சான்றுகளும் சேகரிக்கப்பட வேண்டியது ஆய்வுலகில் முன் நிற்கும் மிகப்பெரிய ஒரு பணியாகும்.
தமிழக தொல்லியல் துறையும், தமிழக பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள், செம்மொழி ஆய்வு நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை தமிழ்ச்சங்கம் போன்ற அரசு சார்ந்த அமைப்புக்களும் தமிழகத்திற்கும் கம்போடியாவிற்குமான வரலாற்றுத் தொடர்புகளை முன் வைத்து ஆய்வுத் திட்டங்களை உருவாக்கிச் செயபடுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் அவசியமும் கூட.
முற்றும்!
சுபா
குறிப்புக்கள்https://en.wikipedia.org/wiki/
No comments:
Post a Comment