Friday, June 15, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 14


17.மே.2018

ஒரு விசயத்தில் தீவிர நாட்டம் இருப்பவர்களுக்கு அந்த விசயத்தைச் செய்து முடித்து விட்டால் ஒரு நிம்மதி பெருமூச்சு வரும் அல்லவா? அப்படித்தான் அன்று மாலை எனக்கும் இருந்தது. 

கம்போடியாவின் சியாம் ரீப் வரப்போகின்றோம் என முடிவெடுத்தவுடன் நான் கட்டாயம் பார்க்கவேண்டும் எனத் தயாரித்து வைத்த  பட்டியலில் முதலில் இருந்தது அங்கோர் தேசிய அருங்காட்சியகம். ஆக முதல் நாளே இதனைப் பார்த்து நீண்ட நாள் ஆவலைப் பூர்த்தி செய்து விட்டோம் என்ற மகிழ்ச்சி எனக்கு அன்று மாலை மனதில் நிறைந்திருந்தது. எல்லோருமாக முதலில் கட்டுமரம் உணவகத்திற்குத் திரும்பினோம். 

நண்பர் ஒரிசா பாலுவும் அவர் துணைவியார் ராஜியும் சியாம் ரீப் வந்து விட்டார்கள் என்ற செய்தி கிட்டியது.   அவர்கள் தங்கியிருந்த   தங்கும் விடுதிக்கு டுக் டுக் வண்டியிலேயே நாங்கள் புறப்பட்டோம்.  அங்கே வாசலிலேயே எனது பேஸ்புக் நண்பர்களில் ஒருவரான  பத்திரிக்கையாளர் பொன்ரங்கன் தன் நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தார். உடனே எனது பேட்டி ஒன்று அவர்கள் நடத்தும் இணையத் தொலைகாட்சிக்கு வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.   

நண்பர் ஒரிசா பாலுவையும், அவர் துணைவியார் ராஜியையும் பார்த்துப் பேசி அலவளாவிவிட்டு தேநீரும் அருந்தினோம். கம்போடிய உலகத்தமிழர் மாநாட்டில் ஒரிசா பாலு அவர்களின் பங்கு மகத்தானது. இத்தகைய ஒரு மாநாடு உருவாக வேண்டும் என்ற கருத்தை ஏற்படுத்தி அது பற்றி விரிவாக உலகம் முழுதும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளையும் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருபவர் அவர். ஐயை, தென்புலத்தார் என்ற பெயர்களில் வாட்சப் குழுமங்களை ஏற்படுத்தி உலகளாவிய  தமிழர் கூட்டமைப்பு முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் செயல் வீரர்.

நண்பர் பொன்ரங்கன் கேட்டுக் கொண்டபடி ஒரு 30 நிமிட தொலைக்காட்சி பேட்டி ஒன்றினை அங்கேயே தங்கும்விடுதியில் வழங்கினேன்.  எங்கள் அருகிலேயே இசைக்கருவியை வாசித்துக் கொண்டு ஒரு இளம் கம்போடியப் பெண் அமர்ந்திருந்தார். அவர் வாசித்த இசைக்கருவி எழுப்பிய இசை மனதை வருடிச் செல்லும் இனிய இசை. இந்த இசைக்கருவியின் பெயர் கிம் என்பதாகும்.

கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பண்பாட்டில் கலந்துவிட்ட ஒரு இசைக்கருவிதான் கிம். மூங்கில் குச்சிகளால் நரம்புக்ளை மீட்டி இசைக்கப்படுவது. நாம் அறிந்த சந்தூர் இசைக்கருவி போன்றது.    பண்டைய பெர்ஷியாவில் இந்த இசைக்கருவி பயன்பாட்டில் இருந்ததாகவும் பின்னர் 14ம் நூற்றாண்டு வாக்கில் சீனாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் பின்னர் சீனா வழியாக கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அறிமுகமாகியது என்றும் குறிப்புக்கள் சொல்கின்றன.

கம்போடியாவின் சியாம் ரீப் நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு நகரம். எனது முதல் நாள் பயணத்தில் பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டதும், நேரில் சென்று பார்த்து வந்ததும் மனதிற்கு நிரைவளிப்பதாக இருந்தது. மறுநாள் காலை தங்கும் விடுதியில் காலை உணவருந்திவிட்டு எங்கள் சுற்றுப்பயணத்திற்கு காலை எட்டு மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று திரு.ஞானம் கூறியிருந்தார். மறுநாள் பார்க்கப்போகும் இடங்களைப் பற்றி யோசித்தவாறே முதல் நாள் இரவு கம்போடியாவின் அங்கோர் நகரத்தில் இனிதே கடந்து கொண்டிருந்தது.







தொடரும்..
சுபா

2 comments:

Post a Comment