Thursday, October 11, 2007

இத்தாலி - Sardinia - Sept 02-09, 2007



விடுமுறைக்காக நான் எங்காவது செல்லும் போது அதிலும் குறிப்பாக புதிய நாடு அல்லது புதிய இடங்களுக்குச் செல்லும் போது மறக்காமல் குறிப்புக்களைச் சேகரிப்பது வழக்கம். புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் சேகரித்தலும் இதில் அடங்கும். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக் குறிப்புக்களை நோக்கும் போது விடுமுறையின் இனிய நினைவுகள் மனதில் நிழலாடுவது ஒரு தனி சுகம்.


அந்த வகையில் கடந்த வாரம் 7 நாட்கள் கிடைத்த விடுமுறையில் இத்தாலியின் தீவுகளில் ஒன்றான சார்டீனியாவிற்கு சென்றிருந்தேன். இந்த அழகிய தீவின் சில புகைப்படங்களும் தகவல்களும் இதோ.



முதலில் இந்த தீவைப்பற்றிய சிறு குறிப்பு:
தீவின் பெயர் - சார்டீனியா
மக்கள் தொகை - 1,700,000
பயன்பாட்டு மொழி - இத்தாலி, சார்டீனியா



இது இணையத்தில் சுட்ட படம்..:-)

இயற்கையின் அழகு.

தூய்மையான கடற்கறைகள் தான் இந்த தீவிற்கு அதிகமான ஐரோப்பிய சுற்றுப் பயணிகளை கவர்கின்றன.

கால்கியரி (காலியரி என்று சொல்ல வேண்டும்) - இந்த தீவின் தலைநகரின் மையப் பகுதி.



நகரின் மத்தியில் அமைந்திருக்கும் வர்த்தக நிலையங்கள்.




எலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூனை. அதிசயம் தானே!



எலியோடு சேர்ந்து பூனையும் உணவு உண்ணும் காட்சி. (இது பயிற்சி அளிக்கப்பட்ட பூணை தான்.)

பெக்கரீனோ மற்றும் பியோரே சார்டோ சீஸ் வகைகள் இந்த தீவின் சிறப்பு.




ஆலீவ் மரங்களில் ஆலீவ் காய்கள். இந்த தீவு முழுவதும் எல்லா இடங்களிலும் ஆலீவ் மரங்கள் செழித்து வளர்வதை காணலாம்.




ஆலீவ், ஆலீவ் எண்ணெய் மற்றும் உள்நாட்டு வைன். சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வதற்காக.





இந்த தீவின் பழங்குடியினர் நூராகியர்கள். கி.மு.1800லிருந்து கி.மு 500 இந்த மக்களின் நாகரிகம் இந்த தீவில் செழிப்பாக இருந்துள்ளது. அதன் சில சுவடுகள் இப்போதும் இந்த தீவின் பல இடங்களில் அகழ்வாராய்ச்சியின் வழி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படம் ' சு நுராசியி' கிராமத்தைக் காட்டுவது. இங்கே ஒரு அகழ்வாராய்ச்சி நிலையமும் அங்கு கண்டு பிடிக்கப்பட்ட பல தடயங்களும் தொல் பொருள் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.



அகழ்வாராய்ச்சி நிலைய அதிகாரி விளக்கம் தருகின்றார். பின் புறத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோட்டையின் சில பகுதிகள். இந்த அதிகாரி நான் அடிப்படையில் மலேசிய நாட்டைச் சேந்த்தவர் என்று தெரிந்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டார். குறிப்பாக இந்த அகழ்வாராய்ச்சி நிலையத்திற்கு வருகை புரியும் முதல் மலேசியர் நான் என்று கூறி மகிழ்ந்தார். எனக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.



மேலேயுள்ள இந்த வகை சிறிய குட்டி வாகனங்கள் இங்கு பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இவை 3 சக்கரங்களைக் கொண்டவை. பொதுவாக பச்சை மற்றும் நீல நிறத்திலும் ஒரு சில இப்படி பல வர்ணங்களிலும் உள்ளன.



இந்த தீவில் முக்கிய உணவு பீஸாவும் கடல் உணவுகளும் தான். எல்லா சிறிய பெரிய நகரங்களிலும் pizzaria உணவு அங்காடிகள். தொடர்ந்து சில நாட்கள் பீஸா சாப்பிட்டதில் அடுத்த ஒரு மாதத்திற்கு பீஸாவைப் பற்றி நினைக்கக் கூடாது என்றே முடிவெடுத்துவிட்டேன்.




தலைநகரின் ஒரு முக்கிய சாலையில் உள்ள உடைந்த சாலை விளக்கு. ம்ம்ம்.. இங்கேயும் இப்படிச் சில அசம்பாவிதங்கள் !




இங்கு கத்தரிக்காய்கள் நிறையவே கிடைக்கின்றன. அதிலும் பெரிய மாங்காய் அளவில் சில கத்தரிக்காய்கள்.




இந்த தீவின் சீதோஷ்ணத்திற்கு காக்டஸ் செடிகள் நன்றாக வளர்கின்றன. காக்டஸ் மரத்தில் இவ்வளவு அதிகமாக காய்கள் காய்ப்பதை நான் இதுவரை பார்த்ததில்லை. கனேரியத் தீவுகளில் பல வகையான காக்டஸ் பூக்களைப் பார்க்கலாம். ஆனால் இங்கு இந்த காய்கள் ஆச்சரியமாக மிக அதிகமாக வளர்கின்றன. இந்த காகய்களை இந்த தீவு மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த காய்களை பறிப்பதற்காக நீண்ட ஒரு கருவி இருக்கின்றது. இதனைக் கொண்டு இந்த செடியை தீண்டாமலேயே அவர்கள் பரித்துப் பழங்களை வெட்டி அதன் உள்ளிருக்கும் பகுதியை சாப்பிடுகின்றார்கள்.



இவை மிருகக்கட்சிசாலையில் உள்ள பிளாமிங்கோக்கள் அல்ல. சாலை ஓரங்களில், ஏரிக்களில் ஒற்றைக் காலில் நிற்கும் சுதந்திரப் பறவைகள்.



படங்கள்:சுபா