Tuesday, November 18, 2003

Travelog - Basel, Swizerland 6 [6 - 10 Nov]

முதல் நாள் வெகு நேரம் வேலை செய்த களைப்பு, பூரண சந்திர கிரஹணத்தைக் கண்களாலே தரிசித்த இன்பம் இவையெல்லாம் கலந்திருந்ததில் காலை 8:00 மணி வரை தூங்கிப் போனேன். முதல் நாளே wake-up call 7 மணிக்கு சொல்லி இருந்தாலும் யாரும் அழைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக 8 மணிக்கு எழுந்ததும் மணியைப் பார்த்து திடுக்கிட்டு குளித்துக் கிளம்ப ஆயத்தமானேன். உணவு விடுதியில் பீட்டர் சாப்பிட்டு விட்டு காபி குடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனோடு சேர்ந்து கொண்டு எனது காலை உணவை ஆரம்பித்தேன்.

காளான்களை நெய்யில் வருத்து வைத்திருந்தார்கள்; அதேபோல தக்காளியை சீஸ் கொண்டு அலங்கரித்து அதனை வருத்திருந்தார்கள். காலை உணவுக்கு இது சற்று அதிகம் என்றாலும் எப்போதும் சாப்பிடும் வகையிலிருந்து இது மாறுபட்டிருந்ததால் இதனை எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தேன். காளான் வருவல் நினைத்ததற்கும் மேலாக சுவையாக இருந்தது.இன்று எனக்கும் பீட்டருக்கும் தான் வேலை. டேனியலும் ஸ்டெபானும் அவர்களுடைய
வேலையை முடித்து விட்டதால் எங்களுடைய வேலையை 12 மணிக்குள் முடித்து விடுவதாக திட்டம். அதனை நினைத்துக் கொண்டே கண்ணும் கருத்துமாக வேலைகளில்
மூழ்கிப்போனோம். நினைத்ததைவிட சற்று தாமதித்து 12:30 அளவில் தான் வேலை முடிந்தது. வெற்றிகரமாக அன்றைய வேலை முடிவடைந்ததை நினைத்து எங்கள் இருவருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். அதனைக் கொண்டாட வேண்டும் என நினைத்துக் கொண்டு பாசல் நகருக்குச் சென்றோம். எங்களை 2 மணிக்கு சந்திப்பதாக சுவிஸ் அலுவலக மானேஜர் மார்க்குஸ் சொல்லியிருந்தார். ஆக மீதமிருந்த 1 1/2 மணி நேரத்திற்குப் பாசலைச் சுற்றிப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பிருந்தது.பாசலின் சாலைகளை அலங்கரிக்கும் Tram களில் ஏறிப் பயணிப்போம் என முடிவு செய்து பச்சை நிற Tram -ல் ஏறிக் கொண்டோ ம். சாலைகளின் இரு பக்கங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பெயர் தெரியாத ஒரு பகுதியில் இறங்கிக் கொண்டோ ம். ஞாயிற்றுக் கிழமை; அதிலும் பாசல் நகர விழா வேறு நடந்து கொண்டிருப்பதால் மக்கள் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒரு உணவு விடுதிக்கும் வந்து சேர்ந்தோம். சுவிஸர்லாந்தின் பாரம்பரிய உணவு சாப்பிடலாம் என இருவருமே முடிவு செய்ய மிக அருமையான 'ராக்லெட்' சீஸினால் சமைக்கப்பட்ட ஒரு உணவு பதார்த்தத்தை தேர்ந்தெடுத்தேன். அருமையான தேர்வு. வருக்கப்பட்ட காய்கறிகளோடு மிக நேர்த்தியாக உருளைக்கிழங்குகளை அவித்து 'ராக்லெட்' சீஸினால் அவற்றை அலங்கரித்திருந்தனர்.

ராக்லெட் பற்றி அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Raclette !
ஐரோப்பாவிற்கு வருகின்ற பலர் பயந்து கொண்டு புதிய வகையான உணவுகளை முயற்சிப்பதை தவிர்த்து விடுகின்றனர். பயத்தை விட்டு விட்டு திறந்த மனத்தோடு புதுமையான உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பழக வேண்டும். எத்தனை விதமான சைவ உணவு வகைகள் இங்கிருக்கின்றன என்பதை பட்டியலே போடலாம். அந்த அளவிற்கு பல வகை உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன.

3 மணி அளவில் தான் எங்களின் கணினி அறைக்குத் திரும்பிச் சென்றோம். நாங்கள் சற்றுதாமதமாகத்தான் திரும்புவோம் என அவருக்கு அறிவித்திருந்தாலும் எங்களுக்காக மார்க்குஸ் வந்து காத்திருந்தார். மீதமிருந்த அறிக்கை தயாரிப்பு வேலைகள், குறிப்புக்கள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடிவிட்டு 5 மணி அளவில் பாசலிலிருந்து புறப்பட்டோம். ரைன் நதியைக் கடந்து எங்கள் ஓப்பல் வெக்ட்ரா பயணிக்கும் போது மனதில் அலாதியான ஒரு சந்தோஷம் வந்து சேர்ந்தது. வெற்றிகரமாக எங்கள் திட்டம் நிறைவேறிய ஒரு சந்தோஷம்; இனிமையாக பாசலை சில மணி நேரங்களாவது சுற்றிப்பார்க்க கிடைத்த வாய்ப்பு; இவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள். 15 நிமிடத்தில் சுவிஸ் எல்லையைத் தாண்டி ஜெர்மனிக்குள் நுழைந்தோம்; மனதில் இனிமையான நினைவுகளைச் சுமந்து கொண்டு.

முற்றும்

Saturday, November 15, 2003

Travelog - Basel, Swizerland 5 [6 - 10 Nov]சுவிஸர்லாந்து அதன் சுற்றிலும் இருக்கும் ஸ்பெய்ன், ப்ரான்ஸ் ஜெர்மனி ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் ஒரு சிறிய நாடுதான். சிறியதாக இருந்தாலும் அரசாங்க மேளாண்மைக்காக இதை 23 சிறிய கண்டோ ன்களாகப் ( ~மாநிலங்கள்) பிரித்திருக்கின்றனர். அந்த வகையில் பாசலும் ஒரு தனி கண்டோ ன் என்றே குறிப்பிடப்படுகின்றது. பாசல் நகரத்தின் மொத்த சுற்றளவு 555km. இந்த கண்டோ னின் தேசிய மொழி ஜெர்மன். [சுவிஸர்லாந்தில் ஜெர்மன், ப்ரெஞ்ச், இத்தாலி அதோடு மேலும் சில எனக்குப் பெயர் தெரியாத மொழிகளும் தேசிய மொழிகளாக அந்தந்த கண்டோன்களினால் தேசிய மொழிகளாகக் கொள்ளப்படுகின்றன.]

பாசலைப் பொருத்தவரை இது மேலும் இரண்டு சிறிய கண்டோ ன்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி தனித்தனியாக செய்யப்பட்டு வருகின்றது. Basel Stadt என்ற ஒன்றும் Base Land என்ற மற்றொன்றும் தான் அவை. இந்த வகையில் சிறிய சிறிய அமைப்புக்களாகப் பிரிக்கும் போது மேளாண்மை, ஆட்சி அமைப்புக்கள், சட்ட திட்டங்கள் போன்றவை சற்று எளிமையாகவே கடைபிடிக்கப்பட முடிகின்றது.

பாசலின் மிக முக்கிய சாலையான Freier Strasse-வில் தற்பொழுது 10 திரையரங்குகளைக் கொண்ட ஒரு மிகப் பெரிய கட்டடம் கட்டப்படுவதற்காக பாசல் கண்டோன் முயற்சியில் இறங்கியிருக்கின்றதாம். ஆனால் Basel Stadt மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெரிந்து கொண்டேன். சுவிஸர்லாந்தில் எனக்குத் தெரிந்தவரை மக்கள் தீர்ப்புத்தான் மகேசன் தீர்ப்பு. அரசாங்கம் எந்த ஒரு காரியத்தையும் மக்கள் ஒப்புதல் இன்றி செய்துவிட முடியாது.

எங்கள் வேலை எதிர்பார்த்ததை விட சற்று சிரமமாகித்தான் போனது. 7 மணி அளவில் டேனியலும் ஸ்டெபானும் தங்களின் வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டனர். நானும் பீட்டரும் தொடர்ந்து எங்கள் வேலையில் மூழ்கிப் போனோம். அன்றைய வேலையை முடிப்பதற்கு இரவு 12:15 ஆகிவிட்டது. பாசல் சாலைகளில் உணவுக்கடையைத் தேடி நடக்க ஆரம்பித்தோம். பல கடைகள் அந்த இரவு வேளையிலும் திறந்திருந்தன. சற்று வித்தியாசமாகப் பட்ட ஒரு கடைக்குள் நுழைந்தோம். லெபனானினிய உணவு விடுதி அது. மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட சுவர்கள்; இந்திய பாரம்பரியத்தோடு ஒட்டியது போன்ற கலைப்பொருட்கள் எல்லா மூலைகளிலும் வைக்கப்படிருந்தன.

மெனுவைப் பார்த்தால் எந்த உணவுமே புரியாத ஒன்றாகவே இருந்தது. சைவமாக எதையாவது செய்து கொடுங்கள் என்று எனது கோரிக்கையை வைத்து விட்டு காத்திருக்க புழுங்கல் அரிசி சாதமும் சாலட்டும் தயிர் பச்சடியும் கிடைத்தது. லெபனானிய உணவு வகையிலும் தயிர் முக்கிய அங்கமாக இருப்பதை நினைத்து சற்று ஆச்சரியமாக
இருந்தது.வேலை செய்த களைப்பும் பசியும் இருந்ததால் மிகச் சாதாரணமான அந்த உணவும் அப்போது அமிர்தமாகவே எனக்குத் தோன்றியது. சாப்பிட்டு விட்டு எங்கள் தங்கும் விடுதியை நோக்கி நடந்து வருகையில் சாலையின் மூலைகளில் மக்கள் கூட்டம் நின்று கொண்டு வானத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தைக் காண முடிந்தது. என்ன அதிசயம் வானத்தில் என்று பார்த்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.
சந்திர கிரகணம் தோன்றியிருந்தது. இதுவரை நான் நேராக சந்திர கிரகணத்தைப் பார்த்ததில்லை. நிலவில் ஒரு சிறு பகுதியே தெரிந்திருக்க மற்ற பகுதிகளெல்லாம் மறைந்து மிக மிக மிக அழகான, அற்புதமான ஒரு காட்சியை கண்டேன். என் வாழ்க்கையில் இதுவும் ஒரு மறக்க முடியாத நாளாகிப் போனது!

Thursday, November 13, 2003

Travelog - Basel, Swizerland 4 [6 - 10 Nov]முதல் நாள் இரவு 2 மணி வரை வேலை நீடித்து விட்டாலும் காலையில் 8:00 மணிக்கு வேலையைத் தொடங்கவேண்டும் என்பதால் காலையிலேயே ஆயத்தமானேன். தங்கும் விடுதியின் உணவகத்தில் காலை உணவு சாப்பிட நுழைந்த போது எனக்கு முன்னரே பீட்டர் வந்திருந்தான். அவனோடு நானும் சேர்ந்து கொண்டேன். சுவிஸர்லாந்தின் எல்லா பகுதிகளிலும் இலங்கைத் தமிழர்களைக் காணமுடியும். பாசலும் அதற்கு விதிவிலக்கல்ல. எங்களுக்குத் தேநீர் வழங்க வந்த இளைஞர் ஒரு இலங்கைத் தமிழர். இந்திய முகச் சாயலோடு இருந்ததால் எனக்கு கொஞ்சம் அதிகமாகவே புன்னகையையும் தெரிவித்து கொண்டார்.


உணவை முடித்துக் கொண்டு கணினி அறைக்குச் செல்வதற்கு சற்று தாமதமாக ஆகிவிட்டது. எங்களுக்கு முன்னராகவே டேனியலும் ஸ்டெபானும் வந்திருந்தனர். அவர்களோடு பேசிக் கொண்டே ஒரு வழியாக நேரம் போவது தெரியாமல் வேலையில் மூழ்கிப் போனோம். திட்டமிட்டபடி வேலையை முடிக்க மதியம் 3 ஆகிவிட்டது. பாசல் நகருக்குள் சென்று சீன உணவு சாப்பிடலாம் என டேனியல் கூறியிருந்தான். டேனியலுக்கு இந்தப் பகுதி மிகவும் பழக்கமான ஒரு பகுதி. அவனது அலுவலகம் ஏறக்குறைய 5 km தூரத்தில் தான் இருப்பதனாலும் அவனது வேலைகள் பெரும்பாலும் இந்த கணினி அறையிலேயே அமைந்து விடுவதாலும் அவனுக்கு பாசல் ஒரு புதிய இடமில்லை தான்.

Mr.Wong சீன உணவகம் Freier Strasse-விலேயே இருக்கின்றது. உள்ளே நுழைபயும் போதே மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று நம்மை வரவேற்கின்றது. மலேசியாவில் உடனுக்குடன் செய்து தரப்படும் மீ கோரேங் மாதிரி இங்கேயும் உடனுக்குடன் உணவு தயாரித்துத் தருகின்றார்கள். உணவின் தரமும் சுவையும் ஜெர்மனியை விட வித்தியாசமாக இருந்தாலும், விலையைப் பொருத்தவரை ஜெர்மனி எவ்வளவோ மேல் என்றே சொல்ல வேண்டும். எந்த வகை உணவை எடுத்துக் கொண்டாலும் 20 சுவிஸ் ப்ராங்கிற்கு கீழ் கிடைக்காது என்றே சொல்லலாம் (Golden M இதில் அடக்கம் இல்லை.. )சாப்பிட்டு விட்டு, சற்று நேர ஓய்விற்காகச் சாலையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கேளிக்கை விழா நடந்து கொண்டிருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தோம். திருவிழா என்று சொன்னால் பொதுவாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் கொண்டாட்டம். அதனை இங்கும் காண முடிந்தது.
பாசல் நகரம் வர்த்தகத்துறையில் மேம்பட்ட நவீன நகரங்களில் ஒன்றாக இருந்த போதிலும் பழங்கால சின்னங்களை நினைவு கூறும் வகையில் பழைய கட்டிடங்கள் தேவாலயங்கள் போன்றவற்றை பாதுகாப்பதிலும் குறை வைக்கவில்லை. சாலைகளின் பல மூலைகளில், 400 ஆண்டுகளுக்கும் மேம்பட்ட சில கட்டிடங்களை இன்றளவும் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். பழைய மாதிரிகளிலான இல்லங்களையும் ஆங்காங்கே காண முடிகின்றது. சாலையில் எங்கே பார்த்தாலும் மரங்கள்; இலையுதிர் காலமாகையால் இலைகளெல்லாம் மஞ்சளாகவும், சிகப்பாகவும் மாறிக் காட்சியளித்துக் கொண்டிருந்தன. கோடை காலத்தில் பச்சை பசேலென அழகாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். Industrialisation, modernisation என்ற பெயர்களில் காடுகள் அழிக்கப்பட்டாலும் எல்லா இடங்களிலும் இயற்கைச் சூழலை திட்டமிட்டு உருவாக்கி பாதுகாத்து வரும் பாசல் நகர அரசாங்கத்தைப்
பாராட்டத்தான் வேண்டும்.

Wednesday, November 12, 2003

Travelog - Basel, Swizerland 3 [6 - 10 Nov]ஜெர்மனியில் ஆங்கிலப்படங்களை ஆங்கில மொழியிலேயே பார்க்க வாய்ப்பு கிடைப்பது குறைவு. காரணம் இங்கு வருகின்ற அனைத்து மொழி படங்களையும் மொழி மாற்றம் செய்து அதனை ஜெர்மானிய மொழியில் பேச வைத்து விடுவார்கள். திரைப்படங்களுக்கு மாத்திரம் இந்த கொடுமை இல்லை; மாறாக தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகின்ற எல்லா மொழி படங்களுக்கும் இதே நிலைதான். Harrison Ford-ன் வாயசைவுக்கு ஜெர்மானியர் ஒருவர் குரல் கொடுத்துக் கொண்டிருப்பார். இந்த பிரச்சனைகள் பொதுவாகவே சுவிஸர்லாந்தில் இல்லை; மாறாக எல்லா மொழிப் படங்களிலும் அதன் மொழியிலேயே தான் திரையிடப்படுகின்றன என மார்க்குஸ் சொல்லிக் கொண்டே எங்களை Freier Strasse வழியாக அழைத்து வந்தார். இந்த சாலையில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கின்றன. பார்க்கின்ற இடங்களிலெல்லாம், ஆங்கில, ப்ரான்ஸ், இத்தாலிய, ஜெர்மானிய படங்களின் விபரங்கள் போடப்பட்டிருந்தன.


பாசல் நகரத்தில் கேளிக்கைகளுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை என்பது தெரிந்தது. மக்கள் இரவு நேரத்திலும் 2 டிகிரி குளிரையும் பொருட்படுத்தாது நடந்து செல்வது எனக்கு போப்லிங்கனில் காணக்கிடைக்காத ஒரு காட்சியாகவே பட்டது. மாலை 9 மணிக்கெல்லாம் தூங்கி விடும் நகரம் போப்லிங்கன். பாசலை அதோடு நிச்சயமாக ஒப்பிட முடியாது. இரவு 12 மணிக்கும் இளைஞர்களும் சரி பெரியவர்களும் சரி சாலையோரங்களில் வேடிக்கைப் பார்த்து கொண்டு செல்கின்றனர்.
பொருளாதார ரீதியிலும் சுவிஸர்லாந்தின் மிகவும் முக்கியமான ஒரு நகரமாக பாசல் அமைந்திருக்கின்றது. கணினி தொழில் நுட்பம் மற்றும் ரசாயணப் பொருட்கள் உற்பத்தி போன்றவற்றில் ஐரோப்பாவிலேயே மிகப் புகழ்பெற்ற ஒரு நகரமாகத் திகழ்கின்றது பாசல். 1460ல் தொடங்கப்பட்ட பாசல் பல்கலைக்கழகம் இந்த நகரத்திற்குக் கிடைத்திருக்கும் மேலும் ஒரு சிறப்பு. மருத்துவம், சட்டம், உளவியல் போன்ற துறைகளில் மாணவர்களை உருவாக்கும் கூடமாகவும் இது அமைந்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

பாசல் நகரில் மட்டுமே 40க்கும் மேற்பட்ட தொல்பொருள்கூடங்கள் இருக்கின்றன. நகரின் மையைப் பகுதியிலும் சரி சற்று தள்ளிய பகுதியிலும் சரி பண்டைய நாகரிகத்தை விளக்கும் கூடங்கள், கலாச்சார மையங்கள் என சுற்றுப்பயணிகளைக் கவரும் பல இடங்களும் இங்கே இருக்கின்றன. சிவிஸர்லாந்திற்கு சுற்றுப்பயணம் வருபவர்கள் கட்டாயம் வருகை தரவேண்டிய ஒரு நகரம் பாசல்.

இப்படி பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே எங்களின் Data Center வந்து சேர்ந்தோம். மறு நாள் காலையில் செய்ய வேண்டிய வேலைக்கான ஏற்பாடுகளைச் செய்யலாமே என எங்கள் மடிக்கணினியை ஆரம்பிக்க மார்க்குஸ் எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார். சிறிய ஏற்பாடுகள் தானே என கணினியில் கையை வைத்த எங்களுக்கு ஏன் மாட்டிக் கொண்டோ ம் என சொல்லும் அளவுக்கு தொடர்ந்து நள்ளிரவு வரை வேலை அமைந்து விட்டது. எதிர்பார்க்காத நேரத்தில் தானே புதிய புதிய வேலைகள் தோன்றும்!

Tuesday, November 11, 2003

Travelog - Basel, Swizerland 2 [6 - 10 Nov]

Basel நகரம் ஜெர்மனிக்கு மட்டுமல்லாமல் ப்ரான்ஸுக்கும் மிக அருகில் இருக்கின்ற ஒன்று. இங்கு சுவிஸ் ஜெர்மானியர்களுக்கு அடுத்தார் போல மிகப் பெரிய எண்ணிக்கையிலான இஸ்ரேலியர்கள் இருக்கின்றனர். பார்ப்பதற்குச் சிறிய ஒரு நகரமாகத் தோன்றினாலும் ஐரோப்பாவின் மையப் பகுதியில் இது அமைந்திருப்பதால் வர்த்தகத்திற்கு மிகச் சிறந்த இடமாக Basel அமைந்திருக்கின்றது.

காலை 8 மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்கி விட்டோ ம். எங்கள் இருவரோடு மேலும் Stefan, Daniel என்ற இரண்டு வன்பொருள் பொறியியலாளர்களும் சேர்ந்து கொண்டனர். 5 மணிக்கெல்லாம் வேலையை முடித்து விட்டு மாலையில் நகரைச் சுற்றிப்பார்க்கலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் இந்த ஆசையையெல்லாம் கனவாக்கும் வகையில் எதிர்பாராத பிரச்சனைகளை வரிசையாக கணினி கொடுக்க ஆரம்பித்தது. ஒரு வழியாக ஏழு மணியளவில் வேலை ஒரு முடிவுக்கு வந்தது. மதியம் நல்ல உணவு சாப்பிட வாய்ப்பு கிடைக்காததால் நல்ல இரவு உணவுக்காக காத்திருந்தோம். எங்களது சுவிஸ் அலுவலக மானேஜர் மார்க்குஸ் எங்களுக்கு இரவு உணவு விருந்தளிப்பதாக காலையிலேயே கூறியிருந்தார்.

அன்றைக்கான வேலை திருப்திகரமாக திட்டமிட்டபடி முடிவடைந்த திருப்தியில் மார்க்குஸோடு Basel நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். எங்களின் நல்ல நேரம்; அப்போது மிகப் பெரிய திருவிழா Basel-ன் மிக முக்கிய நகரான Freier Strasse முழுதையும் ஆக்கிரமித்திருந்தது. பல விதமான கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுகின்ற மக்கள் கூட்டத்தில் புகுந்து ரைன் நதிக் கரையை அடைந்தோம். ரைன் நதியை ஒட்டியது போல Munster என்று அழைக்கப்படும் தேவாலயம் ஒன்றும் இங்கு இருக்கின்றது. அதனை ரசித்து விட்டு, ராட்டினத்தில் ஏறி மூன்று பேரும் ஒரு சுற்று வந்தோம்.

சுவிஸர்லாந்தில் புகழ் பெற்ற உணவு வகைகளின் Fondue மிக முக்கியமானது. இந்த உணவை தயாரிப்பது எளிமையான காரியம் அல்ல. இதனைக் கேள்விப்பட்டிருக்கின்றேனே தவிர இது வரை சாப்பிட்டதில்லை. ஆக Fondue சாப்பிடுவோம் என்ற எனது ஆலோசனையைப் பீட்டரும் மார்க்குஸும் ஏற்றுக் கொள்ள பாரம்பரிய உணவுகளை விற்கும் உணவு விடுதிக்குச் சென்றோம்.Fondue என்பது முக்கியமாக சீஸ் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு உணவு. கூடை நிறைய சிறிய துண்டுகளிலான ரொட்டித் துண்டுகளை தருகின்றனர். அதோடு தொட்டுக் கொள்வதற்குச் சிறப்பான முறையில் தயாரித்த கொதித்துக் கொண்டிருக்கும் சீஸ். இதனை சாப்பிடுவதற்கென்றே தனிப்பட்ட ஒரு நீளமான கரண்டியும் இருக்கின்றது. பல வகையான சீஸ் வகைகளை நான் ஜெர்மனியில் சாப்பிட்டிருக்கின்றேன். ஆனால் இந்த சீஸில் இருக்கும் புளிப்புத்தன்மையை இது வரை அனுபவித்ததில்லை. சாப்பிட்டு முடிக்கும் வரை இந்த சீஸ் கொதித்துக் கொண்டே இருக்கும் வகையில் ஒரு குட்டி அடுப்பையும் கொடுத்து விடுகின்றனர். வித்தியாசமான இந்த உணவு வகையை சுவிஸர்லாந்து வருகின்ற அனைவருமே முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

தொடரும்...

Monday, November 10, 2003

Travelog - Basel, Swizerland 1 [6 - 10 Nov]சுவிஸர்லாந்தின் Basel நகரம் ஜெர்மனியின் எல்லையருகே உள்ள நகரங்களில் ஒன்று. அலுவலக வேலை காரணமாக நான் அங்கு சந்திப்புக்களுக்காகச் செல்வதுண்டு. சென்ற வியாழனன்று நான்கு நாட்களுக்கு Basel சென்றிருந்தேன். அலுவலக வேலையாக இருந்தாலும் இந்த நகரைச் சுற்றிப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பையும் வீணாக்க மனமில்லாமல் கிடைத்த நேரங்களில் நகர் வலம் வந்தேன். அந்த அனுபங்கள் இதோ சில நாட்களுக்கு.

எனது மேற்பார்வையில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு Storage Area Network என சொல்லப்படும் அதிநவீன தகவல் சேகரிப்பு தொழில்நுட்பத்தை அமைத்துக் கொடுக்கும் ஒரு திட்டத்திற்கு மேளாளராக பொறுப்பேற்றிருந்ததால் Basel நேரடியாக சென்று இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம். ஸ்டுட்கார்ட் நகரிலிருந்து Basel செல்வதற்கு ஏறக்குறைய 3 மணி நேரங்கள் தான் பிடிக்கும். எனது அலுவலகத்தின் Heidelberg கிளையில் வேலை செய்யும் நண்பன் பீட்டரும் இந்த திட்டத்தில் சில வேலைகளுக்குப் பொறுப்பேற்றிருந்ததால் அவனையும் Karlsruhe நகருக்குச் சென்று அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது இலையுதிர் காலம் அல்லவா? சாலைகளின் இரண்டு புறங்களிலும் கண்களை வலிக்கச் செய்யும் சிகப்பு நிறத்தில் மரங்களின் தோற்றம். காற்றின் வேகத்தில் இலைகள் பறந்து கண்ணாடியில் மோதும் போது கொஞ்சம் தடுமாறவும் வைத்தது.

3 மணி நேரத்தில் ஜெர்மனியின் எல்லையை தொட்டுவிட்டோம். இந்த எல்லைப்பகுதியில் ஒரு புறத்தில் ஜெர்மானிய எல்லை அதிகாரிகள் பாதுகாப்புக்காக நிற்கின்றனர். ஏறக்குறைய 1 km தூரத்திலேயே சுவிஸர்லாந்து அதிகாரிகள் கையில் துப்பாக்கியோடு நிற்கும் காட்சியை காண முடியும். ஏற்கனவே எனது மானேஜர் இந்தப் பகுதியில் 20 km/p மேல் காரை செலுத்தக் கூடாது என்று எச்சரிக்கைச் செய்திருந்தார். ஆக மனதில் சற்று எச்சரிக்கையோடே இந்த இடத்தைக் கடந்தோம். எங்களை சந்தோஷமாக வரவேற்பது போல ரைன் நதி அழகாக தென்பட்டது.

ரைன் நதியின் தொடர்ச்சியை ஜெர்மனியின் பல இடங்களில் ரசித்திருக்கிறேன். இந்தப்பகுதியிலும் சுவிஸர்லாந்தின் தனித்துவத்தோடு இந்த ஆற்றை ரசிக்க முடிந்தது. Basel ஒரு தொழில்துறை நகரம். எங்கு பார்த்தாலும் வர்த்தக நிறுவனங்கள். ஒரு வகையாக சற்று நேரத்தில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தோம். Basel நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் Data Center என்று அழைக்கப்படும் கணினி அறைக்கு எங்களை அழைத்துச் செல்ல நண்பர்கள் காத்திருந்தனர்.
போப்லிங்கனில் பார்க்க முடியாத Tram பேருந்துகளை இந்த Basel நகரில் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது. வேலையை முடித்த பிறகு இந்த பேருந்தில் ஏறி சுற்றி வர வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன். கணினி அறையின் எல்லா பாதுகாப்பு விபரங்களையும் எங்கள் இருவருக்கும் தெரிவித்துவிட்டு எங்களுக்குத் தரவேண்டிய அடையாள அட்டைகளையும் கொடுத்து விட்டு கணினி அறை அதிகாரிகள் சென்றவுடன் எங்கள் வேலையில் மூழ்க ஆரம்பித்தோம். தொடரும்...