Saturday, April 26, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 4

பாங்காக்... முதல் அனுபவம்

மாலை 18:35க்குக் பாங்கக்கில் தரையிறங்கியது நான் பீக்கிங்கிலிருந்து பயணித்து வந்த விமானம். பாங்காக் விமான நிலையம் விரிவானதாக, மிகத் தூய்மையாக ஏனைய அனைத்துலக விமான நிலையங்களின் தரத்திற்கு ஈடு செய்யும் அளவில் நன்கு அமைக்கப்பட்டிருக்கின்றது.

உள்ளூர் பயன்பாட்டிற்கு பாட்  தேவைப்படும் என்பதால் விமான நிலையத்திலேயே யூரோ பணத்தை மாற்றிக் கொண்டேன். வெளியில் சென்று மணி சேஞ்சரை தேடுவதில் என்ன சிரமம் இருக்கும் என்பதை நான் அறிந்திராததால் விமான நிலையத்திலேயே அடுத்த சில நாட்களுக்குத் தேவைப்படும் வகையில் தயார் நிலையிலிருக்க இந்த ஏற்பாடு செய்து கொண்டேன். 


பாங்காக் விமான நிலையத்தில்
பாஸ்போர்ட் பரிசோதனை முடிந்து என் பயணப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு அன்று இரவு நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கு செல்ல எப்படி பயணிக்கலாம் என்று யோசிக்கலானேன். எங்களுக்காகச் சுற்றுலா பயண குழுவில் ஏற்பாடாகியிருந்த ஹோட்டல் ஆர்ட்ட்ரியும் ஒரு நான்கு நட்சித்திர ஹோட்டல்.  பாங்காக் நகரின் மையத்திலேயே இது அமைந்திருக்கின்றது. ஆக விமான நிலையத்திலிருந்து இந்த ஹோட்டல் ஏறக்குறைய 25 கிமீ தூரத்தில் இருக்குன்றது என தகவல் மையத்தில் கேட்டறிந்து கொண்டு அங்கு செல்வதற்கு டாக்ஸி எடுப்பதுதான் சரி வரும் என ஆலோசனை கிட்டியதால் பாங்காக் விமான நிலைய டாக்ஸி பகுதிக்குச் என் பைகளை இழுத்துக் கொண்டு சென்று சேர்ந்தேன்.

அங்கு வரிசை வரிசையாக பல வரிசைகளில் உடனுக்குடன் சேவை எனும் வகையில் டாக்ஸிகளைப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர் ஊழியர்கள். நானும் ஒரு வரிசையில் நின்று கொள்ள 3 நிமிடங்களுக்குள் எங்களுக்கு டாக்ஸி ஏற்பாடாகியது. என்னை அழைத்துச் செல்ல வந்த ஒரு டாக்ஸி ஓட்டுனர் ஃபிக்ஸ்ட் ப்ரைஸா அல்லது மீட்டரா என கேட்க நான் மீட்டர் எனக் குறிப்பிட்டேன். மீட்டர் அதிகமாகும்.  ஃபிக்ஸ்ட் ப்ரைஸ் என்றால் 400 பாட் தான் ஆகும்  ஃபிக்ஸ்ட் ப்ரைஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என என்னைச் சற்றி வற்புறுத்தும் தொணியில் குறிப்பிட்டார். வேண்டாம் .. விலை அதிகமானாலும் பரவாயில்லை..மீட்டரே இருக்கட்டும் என சொல்லி விட்டேன் டாக்ஸி ஓட்டினருக்கு என் மேல் கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது வாகனத்தில் நான் அமர்ந்ததுமே என்னால் உணர முடிந்தது.. 

சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஏதேதோ தாய் மொழியில் சொல்லிச் சொல்லி தாமாகவே பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார் அந்த வாகனமோட்டி. கடுகடுவென முகத்தையும் வைத்துக் கொண்டார். இதென்ன வம்பாகப் போயிற்றே.. என எனக்கு சற்று வருத்தமாகிவிட்டது. இந்த நேரம் பார்த்து இடையில் மற்றொரு வாகனம் முன்னே சில நிமிடங்கள் எங்கள் வாகனத்தின் வழியை மறைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை விரட்டும் வகையில் என் டாக்ஸியோட்டி ஹோர்ன் அழுத்தி அழுத்தி அந்த வாகனத்தை விரட்டி விட்டு கையில் ஒரு கில்லியை வைத்து அந்த வாகனத்தை அடிக்க ஒரு சிறு கல்லையும் எடுத்து ஒரு கையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டுஅதே கையில் கில்லியைப் பிடித்துக் கொண்டும் தயார் செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு சண்டைக்கார பேர்வழியாக இருப்பார் போல. என்ன நடக்கப்போகின்றதோ என எனக்கு திகில். நானும்  ஏதும் பேசாமல்அமைதியாக இருந்தேன். 

நல்ல வேளையாக ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை. அந்த மற்றொரு வாகனம் சற்று நேரத்தில் இடது புறம் திரும்பி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து சென்றதால் நடக்கவிருந்த ஒரு சண்டை தடையானது. எல்லாம் கடவுள் செயல் எனத்தான் நினைக்கத் தோன்றியது.  


ஆர்ட்ரியம் ஹோட்டல்

சற்று நேரத்தில் என் ஹோட்டல் வாசலில் காரை வந்து நிறுத்தி எப்போதும் டாக்ஸி ஓட்டிகள் செய்வது போல கதவைத் திறந்து பைகளை எடுத்து வைக்காமல் தூரம் போய் தள்ளி நின்று கொண்டார் வாகனமோட்டி. ஏனென்றால் வாகனத்தில் மீட்டர் 230 பாட் தான் காட்டிக் கொண்டிருந்தது. நானே என் பயணப்பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியேறி கட்டணத்தைச் செலுத்தி கூடுதலாக 50 பாட் டாக்ஸி ஓட்டிக்கு கொடுத்தேன். இதைப் பார்த்ததும் கொஞ்சம் புன்னகை அவருக்கு. 

ஆர்ட்ரியம் ஹோட்டல், பாங்காக் நகர மத்தியில்  அமைந்திருக்கும் நல்ல ஹோட்டல். ஒரு நாள் இரவு மட்டும் அங்கு தங்குவதாகவும் காலை உணவுக்குப் பின்னர் அங்கு ஏற்கனவே வந்து தங்கியிருக்கும் ஏனைய பயணிகளுடனும் இணைந்து  சுற்றுலா பயணம் ஆரம்பிப்பதாகவும் ஏற்பாடாகியிருந்தது.

ஹோட்டலில் வெளியே நுழைவாசலில் அழகான சுவாமி மாடம் அமைத்திருக்கின்றனர். அங்கே சிவபெருமான் அழகுடன் காட்சியளிக்கும் உருவச் சிலையைப் பார்த்ததும் திகைத்தேன்.


சிவபெருமானுக்கு ஹோட்டல் வாசலில் சிறு மாடம்

தாய்லாந்து மக்களின் சமய வாழ்க்கையில் ஹிந்து கடவுள்களும் இணைந்து விட்டனரா என இதைப் பார்த்த போது எனக்கு எழுந்த வியப்பு அடுத்த சில நாட்களுக்குள்ளேயே தெளிவானது. விநாயகர், சிவபெருமான், பிரம்மா, காளி ஆகிய தெய்வங்கள் தாய்லாந்து மக்களின் தெய்வீக வாழ்க்கையில் இடம் பெரும் வழிபாட்டு தெய்வங்களில் கலந்து விட்டவர்கள். சிவபெருமான் அதிர்ஷ்டம் தரும் தெய்வம் என தாய்லாந்து மக்களால் கருதப்படும் ஒரு தெய்வம். 

அடுத்தடுத்த நாட்களில், மும்மூர்த்திகளில் விஷ்ணுவைக் காணவில்லையே எனத் தேடிய நான், தாய்லாந்தில் புத்தர் விஷ்ணுவின் வடிவாகவும் போற்றப்படுபர் என்று எங்கள் பயண வழிகாட்டி குறிப்பிட்ட போது சிரித்துக் கொண்டேன்.


அயோத்தையாவில் - அனந்தசயனத்தில் புத்தர்

தொடரும்..

Friday, April 18, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 3



சென்ற இடமெல்லாம்...

தாய்லாந்தின் பூகோள அமைப்பை பூமிப் பந்தின் வரைபடத்தில் பார்க்கும் போது அது தெற்கில் மலேசிய நாட்டை எல்லையாகவும், மேற்கில் மியன்மார் நாட்டை எல்லையாகவும், கிழக்கே கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளை எல்லையாகவும் கொண்டிருக்கும் ஒரு நாடு என்று அறிந்திருப்போம்.  ஒரு வகையில் கிழக்காசிய நாடுகளின் மையப் புள்ளியாக தாய்லாந்து அமைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடலாம்.

தென்மேற்குப் பகுதியானது அந்தமான் கடலை ஒட்டி அமைந்திருக்கின்றது. பாங்கோக்  அமைந்திருக்கும் பகுதியோ தென் சீனக் கடலில் தாய்லாந்து வளைகுடா பகுதில் என அமைந்திருக்கின்றது. மொத்டம் 513,000sq km  நிலப்பரப்பைக் கொண்ட ஒரு நீண்ட அகன்ற அளவினைக் கொண்ட நாடு இது. ஏறக்குறைய 75மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

தாய்லாந்தில் மக்கள் தொகை மிக அதிகமாக மையம் கொண்டிருக்கும் பகுதி எனச் சொல்வதென்றால் அது பாங்கோக் நகரில் தான். பாங்கோக் நகரை விட்டு மேலே வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல மலைப்பிரதேசங்கள் சூழ்ந்திருப்பதையும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையையும் இங்கு வட பகுதிகளில் உணரலாம்.

என் பயணத்தில் பாங்காக் நகரில் இறங்கிய நாங்கள் அங்கு முன்னரே நான் பதிவு செய்திருந்த ஜெர்மானிய சுற்றுலா குழுவினர்களுடன் இணைந்து 13 நாள் பயணத்தை மேற்கொண்டேன். பாங்காக்  நகரிலிருந்து(A)  சா ஆம்(N)  வரை இக்குழுவினருடன் பயணம் அமைந்திருந்தது. அதன் பின்னர் சொந்தமாக நானே சா ஆம் நகரிலிருந்து பயணித்து கோ சாமூய் சென்று மீண்டும் பாங்காக் நகர் திரும்பினேன். கீழ்க்காணும் பட்டியலில் நான் பயணம் சென்ற ஊர்களின் பெயர்களை வரிசை படுத்தியுள்ளேன்.




இப்பட்டியலின் படி கூகள் வரைபடத்தில் நான் இப்பயணத்தில் முழுதும் சுற்றிப் பார்த்து வந்த பகுதிகளை கீழ்க்காணும் வரைப்படம் காட்டும்.



தலைநகர் பாங்காக்கில் புறப்பட்டு சியாங் ராய் நகர் வரை சென்று மியான்மார் எல்லையை அடைந்தேன். அங்கே புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டேன். எல்லையைத் தாண்டி செல்ல விசா அனுமதி தேவை என்பதால் நான் எல்லைப்பகுதியைத் தாண்டிச் செல்லவில்லை. அதோடு வட கிழக்கில் தங்க முக்கோணம் (Golden Triangle)  பகுதி வந்து போட் எடுத்து பயணித்து அறை நாள் பயணமாக லாவோஸ் நாட்டிற்கும் சென்று ஓரளவு சுற்றி விட்டு திரும்பினேன். கீழே தெற்கில் கோ சாமூய் பகுதி வரை வந்தாலும் கூட மலேசியாவிற்குச் செல்லவில்லை. கோசா மூய் பகுதியிலிருந்து மலேசிய எல்லை மானிலமான பெர்லிஸை 3 மணி நேரங்களில் வாகனத்தில் சென்று அடையலாம். ஆனாலும் நேரம் அமையாததால் மலேசியா செல்வதைத் தவிர்த்து விட்டேன்.

தாய்லாந்து எனும் போது  பலருக்கு மனதில் உடன் எழுவது இங்கு வணிகமயமாக்கப்பட்டிருக்கும் விபச்சாரத் தொழிலும் அது தொடர்பிலான அம்சங்களும் என்பதில் சந்தேகமில்லை. வியட்நாம் போர் காலத்தில் அமெரிக்க வீரர்களின் தாக்கத்தால் மிக அதிகமாக பரவிய செக்ஸ் தொழில் இன்றளவும் எண்ணிக்கையில் வளர்வதாகவே இன்னாட்டில் உள்ளது. நாட்டு மக்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 2 மில்லியன் அல்லது குறைந்த பட்ஷம் 250,000 மக்கள் செக்ஸ் தொழில் செய்பவர்கள் என்று சுற்றுலா பயண வழிகாட்டி நூல் குறிப்பிடுகின்றது. விபச்சாரம் தாய்லாந்தில் சட்டத்திற்கு விரோதமான ஒரு தொழிலாக இல்லாத நிலையிலிருந்து தற்சமயம் சில சமுதாய நலன் கருதிய முன்னேற்ற வழிகள் நடைமுறைபடுத்தப்பட்டு செக்ஸ் தொழிலில் ஈடுபடுவோரை மாற்று வழியில் செலுத்தும் முயற்சிகள் கையாளப்பட்டும் வருகின்றன. விபச்சாரம் எனும் போது வயது வந்த பெண்கள் என்று மட்டுமல்லாது இந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு செக்ஸ் தொழிலாளர்கள் ஆண்கள் என்பதுவும் உண்மை.

அத்துடன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறுவர் சிறுமியர் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுகின்றனர் அல்லது ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதுவும் இங்கு நடக்கும் ஒரு அவலம். தாய்லாந்தில் விபச்சாரத் தொழிலுக்குப் புகழ் வாய்ந்த நகரங்கள் என்றே சிறப்பு அடையாளம் காட்டப்ப்டும் நகரங்களாக பட்டாயா, ஹட்ஜாய், கோசாமூய், பாங்காக் ஆகிய நகரங்களைச் சொல்லலாம். எயிட்ஸ் நோயினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் செக்ஸ் தொழிலில் ஈடுபடுவதானால் ஏற்படும் ஏனைய பிற உள உடல் சிக்கல்களை மனதில் கொண்டு பெருமளவிலான விபச்சாரத்தை தடுக்கும் பிரச்சாரங்களும் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன.

விபச்சாரத் தொழிலினால் இந்த நாட்டின் புகழுக்கு மாசு ஏற்பட்டிருக்கின்றது என்பது மிக உண்மை. ஏனெனில், தாய்லாந்தின் வரலாற்றுச் சிறப்பு, கலையழகு, மக்கள் பண்பு, எளிமை, இயற்கை வளம், தொழில் துறை முன்னேற்றம், உணவின் சிறப்பு என்பவை இதனால் புறம் தள்ளப்பட்டு தாய்லாந்து என்றாலே விபச்சாரம், தாய் உடல் மஸாஜ் செர்விஸ் என்ற ஒன்று மட்டுமே பலருக்கு தென்படும் நிலைக்கு இது ஆளாக்கி உள்ளது.


அயோத்யா- வாட் சாய்மோன்கோல்


தாய்லாந்தை அறிந்து அதனைச் சொல்லி மகிழ பல விஷயங்கள் இருக்கின்றன. பிரமாண்டமான கோயில்கள், வீரம் மிக்க அரசர்களின் ஆட்சி, லங்காசுக்கா,பட்டானி, அயூத்தியா, சுக்கோத்தை,  கைமர், லானா என பல பலம் பொருந்திய பண்டைய பேரரசுகள் இப்பகுதியை ஆட்சி செய்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகளுக்கு முன் சக்ரி பரம்பரையினரின் கீழ் வந்த பாங்காக் அதன் பின்னர் இன்றைய தாய்லாந்து என முழுமையாக அரச வம்சத்தினரின் ஆட்சியில் மக்களாட்சியுடன் கூடிய அரசாட்சியை கொண்டிருக்கின்றது.

இந்த பிராந்தியத்தில் ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் வசப்படாத ஒரு நாடு என்ற பெருமையையும் கொண்டிருக்கும் ஒரு நாடு தாய்லாந்து என்ன்பதையும் குறிப்பிட வேண்டும். இன்று அரசியல் நிலைத்தன்மை, நேர்மை  என்பது இங்கு கேள்விக்குறியாக்கப்பட்டு அரசியல் பிரச்சனைகள் எழுந்திருப்பதும் உண்மை.


மன்னர் பூமிபோல் 

தாய்லாந்து மக்களின் மனதில் மிகச் சிறப்பான இடத்தை பெற்றிருப்பவர் இந்த நாட்டின் மாமன்னர் பூமிபோல். 9ம் ராமா என்ற சிறப்பு பெயரையும் கொண்டவர் இவர். 86 வயதை அடைந்து விட்ட இவர் கடந்த ஏறக்குறைய 60 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டை ஆண்டு வரும் மாமன்னர். தாய்லாந்தை பழமைவாத சிந்தனையிலிருந்து மீட்டெடுத்து புதிய பாதையில் இட்டுச் சென்ற முன்னேற்றத் தந்தை இவர் என்பது உண்மை.

இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன தாய்லாந்தைப் பற்றி சொல்லிச் செல்ல.. ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.


Wednesday, April 16, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 2

பயணம் ஆரம்பம்


டிசம்பர் 13ம் தேதி மதியம் இல்லத்திலிருந்து பயணப்பட்டு வாகனத்தை ஏர்ப்போர்ட் பார்க்கிங் பகுதியில் வைத்து அதற்கான பாதுகாப்பு கட்டணத்தையும் செலுத்தி அங்கிருந்து ஷட்டல் பேருந்தில் ஏறி ப்ராங்க்பர்ட் விமான நிலையம் வந்து சேர்ந்தேன். டிசம்பர் மாதம் வேறு என்பதால் குளிர் ஏறக்குறை 3டிகிரி செல்ஸியஸ் என இருந்தது. இந்தக் குளிர் பிரதேசத்திலிருந்து தப்பித்து மூன்று வாரங்கள் நன்கு வெயிலில் காயப்போகின்றேன் என்பதில் எனக்கு அலாதியான சந்தோஷம்.

தாய்லாந்தில் அரசியல் சூழல் இந்த வேளையில் கவலை தரும் வகையில் வேறு அமைந்திருந்தது. எதிர்க்கட்சி அணியினரின் தலைவர் தலைமையில் முக்கிய சாலையில் மக்கள் பேரணி, எதிர்ப்பு போராட்டம் என வேறு நிகழ்ந்து கொண்டிருந்தது.    ஆக தினம் தினம் தொலைக்காட்சி செய்திகளை நான்   உன்னிப்பாக கவனித்து, செல்லலாமா.. இல்லை இறுதி நேரத்தில் தடை செய்து விடுவோமா என  யோசித்துக் கொண்டிருந்தேன்.  பயண நாளும் நெருங்க கவலையையெல்லாம் தூக்கி போட்டு விட்டு பயணத்துக்கு ஆயத்தமாகி விட்டேன்

ப்ராங்க்பர்ட்டிலிருந்து ஏர் சைனா எடுத்து தாய்லாந்து செல்வதாக நான் பயண டிக்கட் போட்டிருந்தேன். எங்கள் பயணத்தில் 13ம் தேதி புறப்பட்டு மறு நாள் 14 மாலை தாய்லாந்து அடைவது என்றும் அதற்கு மறு நாள் காலை அதாவது 15ம் தேதி காலை ஒரு ஜெர்மானிய சுற்றுலா குழுவுடன் இணைந்து 13 நாட்கள தாய்லாந்து சுற்றுலா மேற்கொள்வது என்றும் ஏனைய நாட்களை நானே  சொந்தமாக திட்டமிட்டு கழிப்பது என்றும் முடிவாகியிருந்தது.

ப்ராங்பர்ட் ஏற்போர்ட்டில் ஏர் சைனா கவுண்டர் பகுதிக்கு வந்தால் அங்கே நீண்ட க்யூ. அதிலே பொறுமையாக நின்று   டிக்கட்டை எடுக்கும் போதே  கொஞ்சம் சந்தேகம் தோன்றியது. சீனர்கள் எல்லோரும் அளவில் சிறியவர்களாக இருக்கின்றனரே. விமான பயணிகள் சீட்டும் குட்டி குட்டியாக இருக்குமோ.. ஏறக்குறைய 9 மணி நேரம் முதலில் பீக்கிங்கிற்குப்  பயணிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து அடுத்த விமானம் எடுத்து பாங்கோக் வந்து சேர வேண்டும். ஆக விமான இருக்கைகள் எப்படி இருக்குமோ என்ற கவலை மனதில் எழுந்தது.


பீக்கிங் நகரை நெருங்கும் சமயம், விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்


உள்ளே வந்து பார்த்தால் ஆச்சரியப் பட வைக்கும் வகையில் நல்ல தாராளமான இருக்கைகள்  ஏர் சைனாவில். விசாலமான இருக்கை கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம். அத்துடன் இதுவரை நான் சீனா சென்றதில்லை என்பதால் இந்த பயணத்தின் வழி பீக்கிங் நகரைக் கடந்து போகவிருக்கின்றோம் என்ற மகிழ்ச்சியும் ஒரு புறம்.


பீக்கிங் நகரை நெருங்கும் சமயம், விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்
கீழே தெரியும் கட்டிடங்கள்

அழகானப் பணிப் பெண்கள் வந்து ஓரளவு உபச்சாரம் என்ற வகையில் சில பணிகளைச் செய்து விட்டு போயினர். கொடுமையான ஆங்கிலம் இவர்கள் பேசுவது. என்ன சொல்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் அடுத்து கேள்வியே கேட்க வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். என் கையில் DK Thailand Travel Guide  இருந்தது. அத்துடன் எனது iPadல் சில பிடிஎஃப் நூல்களையும் தரவிறக்கி வைத்திருந்தேன். இவற்றை எடுத்து கையில் வைத்துக் கொண்டேன். வாசித்துக் கொண்டே சென்றால் தாய்லாந்து வந்ததும் பயணத்தில் நன்கு பங்கெடுத்துக் கொள்ளலாம் என்ற முன் யோசனையுடன். தாய்லாந்துக்குச் செல்கின்றோம் எனும் போது ஓரளவு அந்த நாட்டையும், அதன் வரலாற்றையும், அதன் சிறப்புக்களையும் வாசித்து முன்னரே அறிந்து கொள்வதும் நம்மை தயார் படுத்திக் கொள்ள மிக உதவும் என்பது என் எண்ணம். எந்தத் தயாரிப்பும் இல்லாமல் செல்வதை நான் விரும்புவதில்லை. செல்லும் ஊர், அதன் சிறப்பு அம்சங்கள், அங்கு எதனை முக்கியமாகக் காண வேண்டும் என அறிந்து செல்லும் போது பயணம் பயனுள்ளதாக அமைவதை அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன்.



பீக்கிங் நகரை நெருங்கும் சமயம், விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்
ஆங்காங்கே தெரியும் சில உயர்ந்த நிலப்பரப்புகள்


விமானத்தில் கொடுத்த ஒரு உணவை சாப்பிட்டு பார்த்து அடுத்து விமானப் பணிப்பெண் எதைக் கொடுத்தாலும் சாப்பிடக் கூடாது என முடிவு செய்து கொண்டேன். ருசியற்ற ஒரு உணவு இவர்கள் தருவது.

குளிர் காலத்தில் ஜெர்மனிக்கும் சீனாவிற்கும் 7 மணி நேர வித்தியாசம். மாலை 19.15க்கு ப்ராங்பர்ட்டில் கிளம்பிய விமானம் 8900 கிமீ தூரம் பயணித்து  பீக்கிங் நகரில் உள்ளூர் நேரம்  காலை மணி 11.45க்கு தரையிறங்கியது. மனதில் குதூகலம் தான் என்றாலும் விரைந்து சென்று கனெக்டிங் ப்ளைட்டை எடுக்க வேண்டும் என்ற அவசரத்துடன் நான்  அவசரம் அவசரமாக ஓட்டமும் நடையுமாக சென்றேன். நான் மட்டுமல்ல தாய்லாந்து செல்பவர்கள் என்பதை என்னோடு ஓடிவந்த ஏனையோரையும் பார்த்த போது தெரிந்து கொண்டேன். அதில் ஒரு மகிழ்ச்சி.

​​
பீக்கிங் நகரை நெருங்கும் சமயம், விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்
கீழே தெரியும் வயல் பகுதிகள், ஆறு.


பீக்கிங் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் கவுண்டரில் நின்று அங்கு விசா அனுமதி பெற்று செக்கீயூரிட்டி பகுதிக்கு ஓடிச் சென்று நின்றால் அங்கு நம்மை நிற்கவைத்து வீடியோவிலும் கேமராவிலும் புகைப்படமும் பதிவும் செய்து கொண்ட பின்னரே அங்கிருந்து அடுத்த விமானம் எடுக்க அனுமதிக்கின்றனர். ஆக சீனாவிற்கு வந்து சென்றோர் பயணிகள் ஆவணத்தில்  என்னுடைய புகைப்படமும் வீடியோ பதிவும் இணைந்து விட்டது என்பதும் ஒரு மகிழ்ச்சியான் விஷயம் அல்லவா? :-)

மதியம் 13.40க்கு பீக்கிங் நகரிலிருந்து நான் பயணித்த விமானம் தொடங்கி பாங்காக் நகரில் மாலை 18.35க்கு தரையிறங்கியது. விமானத்தில் கொடுத்த உணவை தவிர்த்து விட்டேன். பாங்கோக் சென்றதும் அங்கு தாய் உணவை ருசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்.

பாங்காக் வந்திறங்கியதும் ஒரு இனம் புரியாத குதூகலம் என் மனதில் ..

என் தாய்நாடான மலேசியாவுக்கு அருகில் வந்து விட்டோம் என்பது தானோ அது..!

தொடரும்..

Monday, April 14, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் -1

மலேசியாவில் நான் இருந்த காலங்களில் தாய்லாந்து எனக்கு மிக அண்மையில் இருந்த ஒரு நாடு. எனது பள்ளிக் காலத்திலே சக மாணவர்கள் அதிலும் மலாய் இனத்து மாணவர்கள் சிலர் அவ்வப்போது வார இறுதியில் மலேசிய-தாய்லாந்து எல்லை நகரமான பாடாங் பெசார் சென்று வந்ததைப் பற்றியும் அங்கிருந்து அவர்கள் வாங்கி வந்த பொருட்களைப் பற்றியும் சொல்லி சொல்லி பெருமை பட்டுக் கொள்வர். தாய்லாந்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மிக மலிவான விலையில் கிடைப்பதும் உடைகள் விதம் விதமான வர்ணங்களிலும் பேஷன்களிலும் மிக மலிவாகக் கிடைப்பதும், அரிசி அதிலும் குறிப்பாக க்ளூட்டினஸ் ரைஸ் எனச் சொல்லப்படும் ஒரு வித பிரத்தியேக அரிசி இங்கு குறைந்த விலையில் கிடைப்பதாலும் மலேசியர்கள் வாகனங்களிலும் ரயிலிலும் பயணித்து பாடாங் பெசார் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பி வருவர்.

மலேசியர்களுக்கு அதிலும் குறிப்பாக வட பகுதி மானிலங்களில் இருப்பவர்களுக்குத் தாய்லாந்தின் இந்த பாடாங் பெசார் நகர் செல்வதோ அல்லது கூட பாங்காக் செல்வதோ பெரிய ஒரு விஷயமுமல்ல. ஆனால் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு பள்ளி மாணவியாக இருந்த சமயத்தில் வாய்த்ததில்லை. பின்னர் ஆசிரியராக பணிபுரிந்த சமயத்தில் ஒரு முறை அரசாங்க கருத்தரங்கில் கலந்து கொள்ள பாங்காக் செல்லும் வாய்ப்பு ஒன்று அமைந்தது. அப்போது பாங்காக் சென்று கருத்தரங்கில் கலந்து கொண்டு நகரையும் சுற்றிப் பார்த்து தாய் உணவை ருசித்து ஒரு சில சாலைகளில் பயணித்து ஓரிரு புத்தர் ஆலயங்களையும் ஓரளவு மட்டும் பார்த்து வந்தேன். அதற்குப் பிறகு வேறெந்த வாய்ப்பும் தாய்லாந்து செல்ல எனக்கு அமையவில்லை.

ஜெர்மனியில் சுற்றுலா நிறுவனங்களின் பட்டியலில் பலரால் விரும்பப்படும் ஒரு நாடு என்ற வகையில் தாய்லாந்தும் இடம் பெறுகின்றது. குறிப்பிடத்தக்க ஜெர்மானியர்கள் தாய்லாந்தின் பல பகுதிகளில் வாழ்கின்றார்கள் என்பதும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகரித்து வருகின்றது என்பதும் உண்மை.  ஜெர்மானிய ஆண்களில் பலர் அதிலும் வயதில் மூத்தவர்கள் பலர் தாய்லாந்து சென்று அங்குள்ள இளம் பெண்களை மணந்து ஜெர்மனிக்கு கொண்டு வருவதும் நடைமுறையில் இருக்கின்றது. ஜெர்மானியர்கள் தாய்லாந்தில் சுற்றுலா செல்வது என்பதோடு மட்டுமல்லாமல் அங்கே வர்த்தகத்துறையில் ஈடுபடுவது என்பதும் நடைமுறையில் இருக்கின்றது. சுற்றுலாத்துறை மிக நன்கு வளர்ச்சி அடைந்து வருவதால் அதனைச் சார்ந்த வகையிலான தொழில்களிலும் ஈடுபட்டு பல முக்கிய நகரங்களில் இவர்கள் குடியிருப்புக்களை அமைத்திருப்பதையும் காணக்கூடிய அளவில் இருக்கின்றது. பணி ஓய்வு பெற்ற வயதான சிலர் ஜெர்மனியில் சில மாதங்கள் இருப்பது பின்னர் வருடத்தின் பல மாதங்களைத் தாய்லாந்தில் கழிப்பது என்ற ஏற்பாட்டையும் செய்திருக்கின்றனர். இதற்கும் மேலாக ஆல்ஸைமெர் நோய் (alzheimer disease) கண்டோருக்கான மருத்துவமனை, பராமரிப்பு இல்லம், முதியோர் பராமரிப்பு இல்லம் என்றும் மருத்துவ தேவைகளின் அடிப்படையிலான நிலையங்களை அமைத்து அங்கு ஜெர்மானியர்களுக்கென ஏற்பாடுகளை செய்தும் வணிக நோக்கத்தோடு ஜெர்மானியர்களே செய்து வருகின்றனர். ஜெர்மனியை  விட நல்ல கவனிப்பும் குறைந்த செலவும் என நடைமுறையில் இது அமைவதால் இந்த சீதோஷ்ணத்தின் வெயிலை தாங்கக் கூடிய ஜெர்மானியர்கள் தாய்லாந்தில் தங்கள் முதுமை நாட்களை கழிக்க சில ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கின்றனர்.

இது மட்டுமன்றி இளைஞர்களுக்கும் நடுத்தர வயதுடையோருக்கும் கூட தாய்லாந்து ஒரு சுற்றுலா பேரடைஸ். இங்கு அமைந்திருக்கும் பிரமாண்டமான ஹோட்டல்கள், கடற்கறையின் எழில் நிறைந்த சூழல், இயற்கை வளம், குறைந்த விலையிலான சுவையான உணவு, அன்புடன் பழகும் மக்கள் எளிமையான நடைமுறைகள் என்ற அம்சங்கள் பலரைக் கவர்வதால் எல்லா வயதுடையோரும் தாய்லாந்திற்குச் சுற்றுலா செல்வது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தாய்லாந்து சென்று வரவேண்டும்.. என்ற ஆர்வம்.. அதிலும் குறிப்பாக வரலாற்று விஷயங்களில் தீவிர நாட்டம் எனக்கு ஏற்பட ஆரம்பித்த பின்னர், குறிப்பாக கிழக்காசிய வரலாற்று சான்றுகளை முடிந்த வரையில் நேரில் சென்று பார்த்து வரவேண்டும் என்ற தாகம் ஏற்பட ஒரு முறையாவது தாய்லாந்து சென்று நன்கு சுற்றிப் பார்த்து வர வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தேன். ஆசிய நாடுகளுக்கு தூரம் பயணம் செல்வதென்றால் மூன்று வாரங்களாவது செல்ல வேண்டும் என்பது என்  விருப்பம். விமானப் பயணமே ஒரு முழு நாளை எடுத்துக் கொள்வதால் ஓய்வெடுத்துக் கொண்டு சுற்றிப் பார்க்க மூன்று வாரங்கள் சரியாக இருக்கும். அதற்காக தகுந்த வேளை வருட இறுதியில் கிறிஸ்மஸ் பண்டிகை நீண்ட விடுமுறை வரும் நாட்களில் அமைவதால் டிசம்பர் மாதத்திற்கு என திட்டமிட்டு மூன்றரை வார தாய்லாந்து பயணத்தை  சென்ற ஆண்டு இறுதியில் மேற்கொண். நல்லதொரு பயணமாகவும் இது அமைந்தது.

தாய்லாந்து நாட்டையும் எங்கள் பயண அனுபவத்தையும் நினைத்துப் பார்க்க எத்தனிக்கும் போது முதலில் ஞாபகத்திற்கு வருவது.. புத்தர்... புத்தர்..புத்தர்.. எங்கெங்கு காணினும் எல்லா இடங்களிலும் புத்தரே இங்கு ஆட்சி செய்கின்றார்.

புத்தர் சிலைகள், புத்தர் கோயில்கள், அதில் பழைய கோயில்கள் புதிய கோயில்கள் என எங்கெங்கு பார்த்தாலும் புத்த விகாரைகள் தாம்.




தியான நிலையில் புத்தர்
அமர்ந்த நிலையில் புத்தர்
நின்ற நிலையில் புத்தர்
அனந்த சயனத்தில் புத்தர்
அருளாசி வழங்கும் புத்தர்
யோக நிட்டையில் புத்தர்
எலும்பும் தோலுமாக வற்றிப் போன தேகத்துடன் புத்தர்
எழிலே உருவமாக அன்ன நடை பயிலும் புத்தர்

இப்படி வித்தியாசமான வடிவங்களில் புத்தர் வடிவங்களைப் பார்த்து பார்த்து ரசித்தேன். புகைப்படங்களையும் ஏராளம் எடுத்து வைத்தேன்.

அவையெல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் குறிப்பிட்ட சில விஷயங்களையும் சில புகைப்படங்களையும் இத்தொடரின் வழி பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

எங்கள் பயணம் 19.12.2013 தொடங்கி 6.12.2014 வரை அமைந்திருந்தது. பயணத்தின் ஒவ்வொரு நாளும் புது அனுபவங்களை எனக்கு வழங்கின. அவை மனதில் மகிழ்வைத் தரும் நினைவுகள்.

அந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



நான் புறப்பட்டு விட்டேன். நீங்களும் வரத்தயார் தானே..?

தொடரும்....