Monday, April 14, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் -1

மலேசியாவில் நான் இருந்த காலங்களில் தாய்லாந்து எனக்கு மிக அண்மையில் இருந்த ஒரு நாடு. எனது பள்ளிக் காலத்திலே சக மாணவர்கள் அதிலும் மலாய் இனத்து மாணவர்கள் சிலர் அவ்வப்போது வார இறுதியில் மலேசிய-தாய்லாந்து எல்லை நகரமான பாடாங் பெசார் சென்று வந்ததைப் பற்றியும் அங்கிருந்து அவர்கள் வாங்கி வந்த பொருட்களைப் பற்றியும் சொல்லி சொல்லி பெருமை பட்டுக் கொள்வர். தாய்லாந்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மிக மலிவான விலையில் கிடைப்பதும் உடைகள் விதம் விதமான வர்ணங்களிலும் பேஷன்களிலும் மிக மலிவாகக் கிடைப்பதும், அரிசி அதிலும் குறிப்பாக க்ளூட்டினஸ் ரைஸ் எனச் சொல்லப்படும் ஒரு வித பிரத்தியேக அரிசி இங்கு குறைந்த விலையில் கிடைப்பதாலும் மலேசியர்கள் வாகனங்களிலும் ரயிலிலும் பயணித்து பாடாங் பெசார் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பி வருவர்.

மலேசியர்களுக்கு அதிலும் குறிப்பாக வட பகுதி மானிலங்களில் இருப்பவர்களுக்குத் தாய்லாந்தின் இந்த பாடாங் பெசார் நகர் செல்வதோ அல்லது கூட பாங்காக் செல்வதோ பெரிய ஒரு விஷயமுமல்ல. ஆனால் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு பள்ளி மாணவியாக இருந்த சமயத்தில் வாய்த்ததில்லை. பின்னர் ஆசிரியராக பணிபுரிந்த சமயத்தில் ஒரு முறை அரசாங்க கருத்தரங்கில் கலந்து கொள்ள பாங்காக் செல்லும் வாய்ப்பு ஒன்று அமைந்தது. அப்போது பாங்காக் சென்று கருத்தரங்கில் கலந்து கொண்டு நகரையும் சுற்றிப் பார்த்து தாய் உணவை ருசித்து ஒரு சில சாலைகளில் பயணித்து ஓரிரு புத்தர் ஆலயங்களையும் ஓரளவு மட்டும் பார்த்து வந்தேன். அதற்குப் பிறகு வேறெந்த வாய்ப்பும் தாய்லாந்து செல்ல எனக்கு அமையவில்லை.

ஜெர்மனியில் சுற்றுலா நிறுவனங்களின் பட்டியலில் பலரால் விரும்பப்படும் ஒரு நாடு என்ற வகையில் தாய்லாந்தும் இடம் பெறுகின்றது. குறிப்பிடத்தக்க ஜெர்மானியர்கள் தாய்லாந்தின் பல பகுதிகளில் வாழ்கின்றார்கள் என்பதும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகரித்து வருகின்றது என்பதும் உண்மை.  ஜெர்மானிய ஆண்களில் பலர் அதிலும் வயதில் மூத்தவர்கள் பலர் தாய்லாந்து சென்று அங்குள்ள இளம் பெண்களை மணந்து ஜெர்மனிக்கு கொண்டு வருவதும் நடைமுறையில் இருக்கின்றது. ஜெர்மானியர்கள் தாய்லாந்தில் சுற்றுலா செல்வது என்பதோடு மட்டுமல்லாமல் அங்கே வர்த்தகத்துறையில் ஈடுபடுவது என்பதும் நடைமுறையில் இருக்கின்றது. சுற்றுலாத்துறை மிக நன்கு வளர்ச்சி அடைந்து வருவதால் அதனைச் சார்ந்த வகையிலான தொழில்களிலும் ஈடுபட்டு பல முக்கிய நகரங்களில் இவர்கள் குடியிருப்புக்களை அமைத்திருப்பதையும் காணக்கூடிய அளவில் இருக்கின்றது. பணி ஓய்வு பெற்ற வயதான சிலர் ஜெர்மனியில் சில மாதங்கள் இருப்பது பின்னர் வருடத்தின் பல மாதங்களைத் தாய்லாந்தில் கழிப்பது என்ற ஏற்பாட்டையும் செய்திருக்கின்றனர். இதற்கும் மேலாக ஆல்ஸைமெர் நோய் (alzheimer disease) கண்டோருக்கான மருத்துவமனை, பராமரிப்பு இல்லம், முதியோர் பராமரிப்பு இல்லம் என்றும் மருத்துவ தேவைகளின் அடிப்படையிலான நிலையங்களை அமைத்து அங்கு ஜெர்மானியர்களுக்கென ஏற்பாடுகளை செய்தும் வணிக நோக்கத்தோடு ஜெர்மானியர்களே செய்து வருகின்றனர். ஜெர்மனியை  விட நல்ல கவனிப்பும் குறைந்த செலவும் என நடைமுறையில் இது அமைவதால் இந்த சீதோஷ்ணத்தின் வெயிலை தாங்கக் கூடிய ஜெர்மானியர்கள் தாய்லாந்தில் தங்கள் முதுமை நாட்களை கழிக்க சில ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கின்றனர்.

இது மட்டுமன்றி இளைஞர்களுக்கும் நடுத்தர வயதுடையோருக்கும் கூட தாய்லாந்து ஒரு சுற்றுலா பேரடைஸ். இங்கு அமைந்திருக்கும் பிரமாண்டமான ஹோட்டல்கள், கடற்கறையின் எழில் நிறைந்த சூழல், இயற்கை வளம், குறைந்த விலையிலான சுவையான உணவு, அன்புடன் பழகும் மக்கள் எளிமையான நடைமுறைகள் என்ற அம்சங்கள் பலரைக் கவர்வதால் எல்லா வயதுடையோரும் தாய்லாந்திற்குச் சுற்றுலா செல்வது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தாய்லாந்து சென்று வரவேண்டும்.. என்ற ஆர்வம்.. அதிலும் குறிப்பாக வரலாற்று விஷயங்களில் தீவிர நாட்டம் எனக்கு ஏற்பட ஆரம்பித்த பின்னர், குறிப்பாக கிழக்காசிய வரலாற்று சான்றுகளை முடிந்த வரையில் நேரில் சென்று பார்த்து வரவேண்டும் என்ற தாகம் ஏற்பட ஒரு முறையாவது தாய்லாந்து சென்று நன்கு சுற்றிப் பார்த்து வர வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தேன். ஆசிய நாடுகளுக்கு தூரம் பயணம் செல்வதென்றால் மூன்று வாரங்களாவது செல்ல வேண்டும் என்பது என்  விருப்பம். விமானப் பயணமே ஒரு முழு நாளை எடுத்துக் கொள்வதால் ஓய்வெடுத்துக் கொண்டு சுற்றிப் பார்க்க மூன்று வாரங்கள் சரியாக இருக்கும். அதற்காக தகுந்த வேளை வருட இறுதியில் கிறிஸ்மஸ் பண்டிகை நீண்ட விடுமுறை வரும் நாட்களில் அமைவதால் டிசம்பர் மாதத்திற்கு என திட்டமிட்டு மூன்றரை வார தாய்லாந்து பயணத்தை  சென்ற ஆண்டு இறுதியில் மேற்கொண். நல்லதொரு பயணமாகவும் இது அமைந்தது.

தாய்லாந்து நாட்டையும் எங்கள் பயண அனுபவத்தையும் நினைத்துப் பார்க்க எத்தனிக்கும் போது முதலில் ஞாபகத்திற்கு வருவது.. புத்தர்... புத்தர்..புத்தர்.. எங்கெங்கு காணினும் எல்லா இடங்களிலும் புத்தரே இங்கு ஆட்சி செய்கின்றார்.

புத்தர் சிலைகள், புத்தர் கோயில்கள், அதில் பழைய கோயில்கள் புதிய கோயில்கள் என எங்கெங்கு பார்த்தாலும் புத்த விகாரைகள் தாம்.
தியான நிலையில் புத்தர்
அமர்ந்த நிலையில் புத்தர்
நின்ற நிலையில் புத்தர்
அனந்த சயனத்தில் புத்தர்
அருளாசி வழங்கும் புத்தர்
யோக நிட்டையில் புத்தர்
எலும்பும் தோலுமாக வற்றிப் போன தேகத்துடன் புத்தர்
எழிலே உருவமாக அன்ன நடை பயிலும் புத்தர்

இப்படி வித்தியாசமான வடிவங்களில் புத்தர் வடிவங்களைப் பார்த்து பார்த்து ரசித்தேன். புகைப்படங்களையும் ஏராளம் எடுத்து வைத்தேன்.

அவையெல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் குறிப்பிட்ட சில விஷயங்களையும் சில புகைப்படங்களையும் இத்தொடரின் வழி பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

எங்கள் பயணம் 19.12.2013 தொடங்கி 6.12.2014 வரை அமைந்திருந்தது. பயணத்தின் ஒவ்வொரு நாளும் புது அனுபவங்களை எனக்கு வழங்கின. அவை மனதில் மகிழ்வைத் தரும் நினைவுகள்.

அந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நான் புறப்பட்டு விட்டேன். நீங்களும் வரத்தயார் தானே..?

தொடரும்....

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பயணத்தொடர்..பாராட்டுக்கள்..!

Ranjani Narayanan said...

ஒரு வருட காலம் பயணம் செய்தீர்களா. சுபா? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடன் (இன்றே மற்ற பகுதிகளையும் படித்துவிட்டு) தொடர்ந்து வருகிறேன்.
எல்லா நாட்டினரும், எல்லா வயதினரும் தாய்லாந்து வரும் காரணங்கள் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் இந்தப் பகுதியில். முடிந்த அளவிற்கு புகைப்படங்களைப் போடுங்கள்.

Post a Comment