Monday, April 27, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -8

விருந்து நிகழ்ச்சியின் போது இடையில் நண்பர் ஒருவர் ஒரு பெரியவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்தான் திரு.செல்வன் கவண்டர். டர்பன் நகரில் இயங்கும் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையின் தலைவராக இயங்கி வருபவர்.

அவரோடு உரையாடியதில் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலை பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த எம்டிடிஎஸ் மண்டபத்தின் வலது புறத்தில் உள்ளது இந்தப் பாடசாலை. கட்டிடத்தின் இரண்டு மாடிகளில் தமிழ்ப்பாடசாலையின் வகுப்புக்கள் இருக்கின்றன.பாடசாலையைச் சென்று பார்க்கலாமா என நான் வினவிய உடன் சற்றும் தயங்காது என்னை அழைத்துக் கொண்டு சென்றார் திரு.செல்வன் கவண்டர்.  மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ஒரு திருவள்ளுவர் சிலையை வைத்திருக்கின்றனர். இந்தப் பள்ளி வகுப்பறையை திரு.நடேசன் ஒடையார் என்பவர் திறந்து வைத்தார் என்ற தகவலை முன்வாசல்பகுதியில் உள்ள அறிவிப்பில் காண முடிந்தது.

மாடியில் ஏறிச்சென்று பள்ளியின் அறைகளை எனக்கு காட்டினார். பிறகு மேல்மாடியில் இருக்கும் அலுவலக அறைக்கும் என்னை அழைத்துச் சென்று அங்குள்ள புகைப்படங்களைக் காட்டி விளக்கினார்.
1936ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையும் அதற்கு அடிப்படையாக இருக்கும் தமிழ்ச்சங்கமும். தொடர்ந்து பல தமிழார்வளர்களின் முயற்சியால் தமக்கென்று ஒரு கட்டிடம், மண்டபம் என மிகச் சிறப்பாக இன்று வளர்ந்திருக்கின்றது இந்த மியர்பேங்க் தமிழ்ச்சங்கமும் தமிழ்ப்பாடசாலையும்.
மீண்டும் விருந்து நடைபெறும் இடத்திற்கு வந்து அங்கு நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்ததில் சில மணி நேரங்கள் கழிந்தன. தமிழிசை பக்திப்பாடல்கள் முடிந்து தமிழ் சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர் இசைக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் பாடிய ஏ.ஆர். ரகுமானின் வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே என்ற பாடல் மிக இனிமையாக இருந்தது. பாடகர்கள் அனைவருமே தமிழ் பேசத்தெரியாத நிலையிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு பாடுகின்றார்கள். ஆனாலும் உச்சரிப்பில் தவறுகளை அதிகமாகக் காணமுடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இத்தகைய இசைக்கலை ஆர்வம் நிறைந்த இளைஞர்களைக் காண்பதில் மனதிற்கு உவப்பாகவே இருந்தது.

தொடரும்..

Wednesday, April 22, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -7

பட்டமளிப்பு விழா மதியம் ஒரு மணி வாக்கில் இனிதே முடிவடைந்தது. அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த எங்களை எம்டிஎஸ் மண்டபத்தின் முன் பக்கத்தில் இருக்கும் பிரமாண்டமான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

உள்ளே நுழையும் போது ஒரு வெள்ளையர்.. கையில் கேமராவுடன் நின்று கொண்டிருந்தவர் என்னைப்பார்த்து நிகழ்ச்சிக்கு வந்த விஐபி யா எனக் கேட்டார். ஆமாம் என்றேன். உடன் இங்கே வாருங்கள் என என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் வாசலில் இருந்தபெரிய விநாயகர் உருவச் சிலைக்கு முன் ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த 3 பேருடன் நிற்க வைத்தார். என்ன செய்கின்றார் என முதலில் புரியவில்லை. பின்னர் அங்கு வந்த திரு.மிக்கி செட்டியின் மகள் நிரன், அவர் உள்ளூர் பத்திரிக்கையான  Post  பத்திரிக்கையின் செய்திக்காக படம் பிடிக்க வேண்டும், அதற்காகத்தான் என் விளக்கினார். விஷயம் புரிந்ததும் நானும் அந்த மூவருடன் இணைந்து  கொண்டு புகைப்படத்திற்கு; புன்னகைத்தேன்.

இது முடிந்து உள்ளே சென்றோம். முதல் பகுதியில் இருந்த பெரிய வட்ட மேசைகளில் விருந்தினர்களைப் பொறுப்பாளர்கள் அமர வைத்துக் கொண்டிருந்தனர். நானும் சென்று அவர்கள் காட்டிய பகுதியில் ஏனைய சில நண்பர்களுடன் அமர்ந்து கொண்டேன்.


விருந்தினர்கள்


கலை நிகழ்ச்சிகளுடன் மதிய உணவு என்ற வகையில் ஏற்பாடாகியிருந்தது. மேடையில் பிரமாண்ட உருவத்திலான நர்த்தன விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சற்றே நேரத்தில் இன்னிசை தொடங்கவிருப்பதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கின. சரி..  கச்சேரி செய்யவிருக்கின்றார்கள் என நினைத்துக் கொண்டு நண்பர்களுடன் பேச எத்தனிக்கையில் இன்னிசை தொடங்கியது. என்ன ஆச்சரியம்.. தேவாரப் பாடலை மிக நேர்த்தியாக தொடங்கினார் இசைக்கலைஞர் திரு.கதிரேசன். அதன் பின்னர் தொடர்ச்சியாக  சீர்காழி கோவிந்தராசனின் பாடல்கள் எனப் பாடி தமிழிசையால் அந்த மண்டபத்திற்குள் இருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவரோடு அவர் துணைவியார் ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கலைஞரான காமினி அவர்களும் பல அருமையான தமிழ் கீதங்களைத் தொடர்ந்து பாடினார்.


இசைக்கலைஞர் திரு.கதிரேசன், திருமதி.காமினி


ஜனவரி மாதத்தில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மானாட்டில் பெயரளவிற்கும் கூட தொடக்க நிகழ்வில் ஒரு தமிழ்ப்பாடல் இல்லையே என வருந்திய எனக்கு இது மாபெரும் வியப்பை அளித்தது. தென்னாப்பிரிக்க தமிழர்களின் தமிழ் உணர்வு என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது என்றே சொல்வேன். இதனை நண்பர்களிடம் சொல்லி என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.


நடனக் கலைஞர்


இதனைத் தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பித்தது. தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாடலுக்கு அபிநயம் பிடித்தார் ஒரு இளம் மங்கை. மிக நேர்த்தியான நடன அசைவுகள்.  முழு நடனமும் ஒரு சிறு குறையும் சொல்ல முடியாத அளவில்  அத்தனை சிறப்பாக இருந்தது.


எம்டிடிஎஸ் தமிழ் சங்கத் தலைவரும் மண்டபத்தின் உரிமையாளரும் குத்து விளக்கு ஏற்றுகின்றனர்


இதற்கிடையே உணவு பரிமாரப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் அன்று மதிய உணவு விருந்து வழங்கப்பட்டது. அன்று அந்த நிகழ்வில் தான் முதன் முதலாக திரு.மிக்கி செட்டியின் மனைவியை சந்தித்தேன். மிக எளிமையாக வந்து பேசினார். அன்று பொதுவாக ஒரு அறிமுகம் என்ற வகையிலேயே எங்கள் அறிமுகம் ஆனது.


திரு.மிக்கி செட்டியின் மகள் நிரன் சான்


சற்று நேரத்தில் சம்போ சிவ சம்போ என்ற பாடல் ஒலிக்க ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் மேடையில் தோன்றினார்கள். நடனமாடிய அந்த இளம் பெண் நண்பர் திரு.சின்னப்பன் கோகி தம்பதியரின் ஒரே செல்ல மகள் சிவானி. அபாரமான முத்திரைகள். முக பாவனைகள் என என்னை மெய்மறக்கச் செய்தாள் சிவானி. முழு நடனம் முடியும் வரை நடனத்திலேயே என் கருத்தும் கவனமும் இருந்தது. அவ்வளவு லயத்துடன் நடனமாடினாள் சிவானி.சிவானி இன்னொரு நாட்டியக் கலைஞருடன்
​​
கலை என்பது வாழ்வில் அற்புதமான ஒரு அம்சம். தமிழ் மொழி என்பது பேச்சு வழக்கில் இல்லையென்றாலும் தமிழ் இசை தமிழ் கலை என்ற அளவில் தென்னாப்பிரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து இருப்பதை அறிந்து அந்த உணர்வில் என்னை சற்றே மறந்தேன்.

தொடர்வோம்.. டர்பனில்....

சுபா

Saturday, April 18, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -6

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள  வந்திருந்த அனைவருக்குமே குதூகலம் மனம் முழுதும் நிறைந்திருந்தது என்றாலும் பட்டச் சான்றிதழை அந்தச் சிறப்பு மிக்க அரங்கில பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பெறக் காத்திருந்த மாணவர்கள் முகத்தில் தான் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும் பூரிப்பும் பெருமையும் குடிகொண்டிருந்தது. எப்போது அந்த பட்டமளிப்பு தருணம் வரும் என அவர்கள் ஆவலுடன் காத்திருப்பதை அவர்கள் முகத்திலேயே உணர முடிந்தது.எங்களுக்கு உள்ளே சென்றதும் VIP  என்று பெயரிட்ட ஒரு அட்டையைக் கொடுத்து கழுத்தில் அணிந்து கொள்ளச் சொல்லி சிறப்பு பிரமுகர்களுக்கு ஒதுக்கபப்ட்ட முன் இருக்கைகளில் அமர வைத்தனர். குறித்த நேரத்தில் சிறப்பு விருந்தினர்களும் வந்து சேர நிகழ்ச்சி ஆரம்பமானது. எஸ்.ஆர்.எம் கல்லூரி வேந்தர், பின்னர் டாக்டர்.பொன்னவைக்கோ, திரு.மிக்கி செட்டி என ஒவ்வொருவராக தங்கள் உரையை ஆற்றினர். தங்கள் உரையில் எவ்வகையில் இந்த ஆசிரியர் பயிற்சி வகுப்பு சாத்தியமானது என்று விரிவாக எடுத்துரைத்தனர்.அடுத்து பேச வந்த தென்னாப்பிரிக்க பாராளுமன்ற சட்ட சபை உறுப்பினர் திரு லூகி செட்டி அவர்கள் தோற்றத்தில் ஆப்பிரிக்க இனத்தவரைப் போல காட்சியளித்தாலும் அவர் தமிழர் தாம் என்பதை அவர் பெயரைக் கொண்டும் அவர் கூறிய தகவல்களைக் கொண்டும் அறிந்து கொண்டேன். இவருக்கு தமிழ் ஒரு வார்த்தையும் தெரியா விட்டாலும் தமிழ் சினிமா பாடல் இவருக்கு தமிழ் மொழி மேல் தீரா காதலையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அவரது பேச்சிலிருந்து உணர முடிந்தது.  பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் தமக்குத் தெரிந்த  ஒரு த மிழ்ப்பாடலையும் பாடினார். எங்கே அந்த வெண்ணிலா என்ற பாடலைப் பாடி அவையில் இருந்த அனைவரின் கைத்தட்டலையும் பெற்றார்.தொடர்ந்து பேச வந்த தென்னாப்பிரிக்காவிற்கான இந்திய தூதர் திரு.ரங்கராஜன் அவர்கள் முதலில் தமிழ் தெரியாதவர் போல பேச ஆரம்பித்து பின்னர் இயல்பான தமிழில் பேசினார். தமிழரான இவரே தென்னாப்பிரிக்காவில் தூதரகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் போதனை நடக்க ஏதாவது உதவிகள் செய்யலாம். ஆனால் செவதாக அறியமுடியவில்லை.
பட்டமளிப்பிற்குப் பின்னர் இலங்கை ​ தமிழ்த்தேசியக் கட்சியின் துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. மாவை சோனாதிராஜா அவர்கள் பேச அழைக்கப்பட்டார். பேச்சின் போது ஒரு மனிதருக்கு எவ்வகையில் ஒழுக்கம் என்பது சிறந்த பண்பாக அமைகின்றது என்று நன்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசுகையில் இலங்கையில் தற்போது தமிழ் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலை பற்றியும் சில தகவல்கள் பேசத் தொடங்கினார். ஆனால் இப்பேச்சினை அவர் தொடர விடாத வகையில் இந்திய தூதர் நிகழ்ச்சி நடத்துனரை சைகை செய்து அழைத்து பேச்சை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளச் செய்ததை மேடையின் கீழ் அமர்ந்திருந்த அனைவருமே பார்த்தோம்.
இலங்கை தமிழ் மக்களின் அகதிமிகாம்களின் நிலை பற்றிய செய்திகளை அவர் தொடர்ந்து சில நிமிடங்கள் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை இருக்கின்றது என நண்பரக்ள் எங்களுக்குள் உரையாடிக் கொண்டோம். உலகின் ஒரு பகுதியில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியான சூழலில் நல்ல நிகழ்வில் பங்கெடுக்கும் அதே வேளை தங்கல் உடமைகளை இழந்து வசிப்பிடங்களை இழந்து தங்கள் தேசத்திலேயே அகதிகள் போல அகதி முகாம்களில்வாழும் தமிழர்கள் பற்றி ஒரு தமிழர்கள் கூடியிருக்கும் மேடையில் சில நிமிடங்கள் பேசக் கூடாதா..?  இந்தியத் தூதரின்  சைகை செய்து நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொண்ட இச்செயல் அவர் மேல்  கீழே அமர்ந்திருந்த பலருக்கு அதிருப்தியை உருவாக்கியது.

தொடர்வோம் டர்பனில்..

Thursday, April 16, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -5

முதல் நாள் குறிப்பிட்டது போல காலை 7 மணி வாக்கில் தயாராகி ஹோட்டலில் காலை உணவுக்கு நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டோம். ஹோட்டலில் தங்கியிருந்த 5 நாட்களும் ஹோட்டல் பணியாளர்கள் மிகப் பணிவுடனும் அன்புடனும் வருகையாலர்களான எங்களுடன் பழகினர். திரு.மிக்கி செட்டியின் நண்பரின் ஹோட்டல் அது என்பதும் கூடுதல் செய்தி. மிகத் தரமான நவீன வசதிகளைக் கொண்ட ஒரு ஹோட்டல் அது.​ஹோட்டல் அறையிலிருந்து,  இந்திய பெருங்கடல், அதிகாலை நேரக் காட்சி

காலை உணவின் போதும் மாலை உணவின் போது பணியாளர்கள் அனைவரும் எங்களின் தேவையைக் கேட்டறிந்து தக்க வகையில் பணிவிடைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் கல்லூரிகளில் படிப்பவர்கள். பகுதி நேரமாக இங்கே பணிபுரிகின்றனர் என்ற விசயத்தையும் அறிந்து கொண்டேன்.


ஹோட்டல் பணியாளர்களுடன் நானும் சாம் விஜயும்

காலை உணவு முடித்து ஏறக்குறைய 9 மணி அளவில் எங்களுக்காகத் தயாராக இருந்த பேருந்தில் அனைவரும் ஏறி டர்பன் நகரின் மையப்பகுதியில் இருக்கும் எம்டிஎஸ் மண்டபத்திற்குப் பயணமானோம். அங்கு தான் தேர்ச்சி பெற்ற தமிழாசிரியர்களுக்கு பட்டமளிப்பு விழா ஏற்பாடாகியிருந்தது.


​மலேசியப் பேராளர்களுடன்

பேருந்தில் செல்லும் போது கனடாவிலிருந்து வந்திருந்த செய்தியாளர் ஒருவர் மிக அருமையாக ரேடியோ ஒலிபரப்பு செய்வது போல மைக்கை வைத்து பக்திப்பாடல், காலைச் செய்தி என நல்ல பொழுது போக்கு அம்சங்களை வழங்கினார். இப்படி இனிமையாக பாடல்களையும் செய்திகளையும் கேட்டுக் கொண்டே 25 நிமிடம் பயணம் செய்தது மிக சுவாரசியமாக இருந்தது. திடீரென்று பொறுப்பாளர் என்னை அழைத்து வந்திருப்போருக்கு நன்றியுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். இந்த திடீர் அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. சிறிய நன்றியுரையை பேருந்திலேயே நான் செய்து முடிக்க, பொறுப்பாளர் இனிமையான வார்த்தைகளைச் சொல்லி என்னையும் மற்றவர்களையும் சிரிக்க வைத்து விட்டார்.

மண்டபத்திற்குள் சென்ற எங்களைச் சிறப்பு விருந்தினர் பகுதியில் அமர வைத்தனர். ஏற்கனவே பட்டம் பெறப்போகும் மாணவர்கள் ஒரு தனிப்பகுதியில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஏராளமான பொது மக்களும் வந்திருந்தனர். தமிழ்ச்சங்கங்களின் பிரதினிதி அரசாங்க அலுவலர்கள், பட்டம் பெறுவோரின் குடும்பத்தினர்  என அரங்கம் நிறைந்திருந்தது.


பட்டம் பெற்ற தென்னாப்பிரிக்க தமிழ் மாணவர்கள்


மேடையில் எஸ்.ஆர்.எம்.கல்லூரியின் வேந்தர், திரு.மிக்கி செட்டி, இந்திய தூதர், மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொறுப்பாலர்கள் என சிலர் அமர்த்தப்பட்டனர்.

தென்னாப்பிரிக்காவில் முறையாக பள்ளிகளில் தமிழ் போதிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத குறையைப் போக்க வேண்டும் என்று திரு.மிக்கி செட்டி தமிழகத்தின் பல கல்லூரிகளை நாடியிருக்கின்றார். ஆயினும் ஒரு சிறப்பு ஆசிரியர் பயிற்சி என்பது சாத்தியப்படாது என்ற நிலையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தராகிய டாக்டர்.பொன்னவைக்கோவை அணுக அவர் ஒரு பிரத்தியேக பாடத்திட்டத்தை இதற்காக உருவாக்கலாம் என நம்பிக்கைக் கூறி அதற்கு டாக்டர்.இல.சுந்தரத்தைப் பொறுப்பாளராக அமைத்து டர்பனில் வகுப்புக்கள் நடைபெற ஏற்பாடு செய்து தந்திருக்கின்றார். ஆசிரியர் பயிற்சி முடித்து தேர்வும் நடைபெற்றதில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு.மேஸ்திரி வரவேற்புரை ஆற்றுகின்றார். மேடையில் சிறப்பு விருந்தினர்கள்

இந்த வகுப்புக்களை ஏற்பாடு செய்வதிலிருந்து மாணவர்கள் கட்டணம் வரை என்று பொருளாதார வகையில் உதவியதோடு இதற்காக சென்னை சென்று பல முறை நேரடியாக பாடத்திட்டம் முறையாக உருவாக்கப்படுவதையும் கண்காணித்தும் ஏற்பாடுகள் செய்தும் உதவியதில் திரு.மிக்கி செட்டியின் பங்கு மிகப் பெரியது.

டர்பன் நகரில் தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழ் பேசுவது என்பது நடைமுறையில் இல்லை. இதனை மாற்ற வேண்டுமென்றால் முறையான தமிழ் வகுப்புக்களை நடத்தும் திறன் பெற்ற தக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை என்பதை நன்கு உணர்ந்து அதனைச் செயல் படுத்தும் நடவடிக்கையில் தன்னை முழுமையாக அர்பப்ணித்துக் கொண்டவர் திரு.மிக்கி செட்டி. டர்பன் நகரில் இருக்கும் தமிழ்சங்கங்கள் ஏனைய தமிழ் சமூக நல இயக்கங்கள் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர் இவர்.திரு.மிக்கி செட்டி தென்னாப்பிரிக்க நகர் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

டர்பனில் பயணத்தைத் தொடர்வோம்..

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -4

டர்பன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் ஆப்பிரிக்க உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் நண்பர்கள் யாராகினும் இருப்பார்கள். ஆக உடனேயே புறப்பட்டு தங்கும் விடுதி சென்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வெளியே வந்து ஏறக்குறைய 10 நிமிடங்களாகியும் அங்கு யாரையும் காணவில்லை. மனதில் மெலிதாக ஒருவித அலுப்பும் எரிச்சலும் படர ஆரம்பித்தது.

சரி.. அதிக நேரம் காத்திருக்க வேண்டாம் என நினைத்து எனது தொலைபேசியில் கொடுக்கப்பட்டிருந்த தொடர்பாளர் ஒருவரது எண்ணை அழைத்தேன். அவரிடம் பேசியபோது யாரும் விமான நிலையம் வரவில்லை எனச் சொல்லி டாக்ஸி எடுத்து வந்து விடுங்கள் என்று ஒரு அதிர்ச்சியை தெரிவித்தார். அவரிடம் தொடர்பை துண்டித்து விட்டு ஏற்கனவே ப்ரான்ஸிலிருந்து வந்திருந்த நண்பர் சாம் விஜய்க்கு தொலைபேசியில் அழைத்து நாங்கள் வந்து விட்டதையும் விமான நிலையத்தில் யாரும் இல்லை என்ற விபரத்தையும் தெரிவித்தேன். அவர் உடன் ஏற்பாட்டளர்களைத் தொடர்பு கொண்டதில் ஏற்கனவே ஒருவர் வந்து காத்திருப்பதாக எனக்குச் செய்தியைச் சொன்னபோதுதான் சற்று மனம் அமைதி அடைந்தது. பேசிக் கோண்டிருக்கும் போதே ஒருவர் எங்கள் அருகில் வந்து எங்கள் பெயரைச் சொல்லி தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

ஏற்பாட்டுக் குழுவில் இருக்கும் நண்பர் அப்துல்லா தான் அவர். மிக அன்பான மனிதர். அவரிடம் நடந்ததைச் சொன்னேன். அவருக்கு சற்றே குழப்பமாகிவிட்டது. பின்னர் நான் அழைத்த எண்ணைப் பார்த்து அது ஜொஹான்னஸ்பர்க் தொலைபேசி எண் என்றும் அவர்களுக்கு இந்த ஏற்பாட்டு விஷயம் தெரியாதென்றும் கூறினார்.

பின்னர் தாம் வேறொரு  பகுதியில் கனடாவிலிருந்து வந்திறங்கிய கனடா பேராளர்கள் உதயன் பத்திரிக்கை ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம், திரு.துரைராஜ் ஆகியோரை தேடி அழைத்துக் கொண்டு வருவதில் தாமதமாகி விட்டது எனத் தெரிவித்து எங்களை வாகனத்திற்கு அழைத்துச் சென்றார்.

டர்பனில் அப்போது ஏறக்குறைய மாலை 6.50 எட்டியிருந்தது. மெலிதான இருள் படர்ந்திருந்தது. சீதோஷ்ணம் ஏறக்குறைய 26 டிகிரி இருக்கலாம் என்ற வகையில் இதமான வெப்பம்.. மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கனடாவிலிருந்து வந்த நண்பர்களிடமும் திரு.அப்துல்லாவிடமும் பேசிக் கொண்டே நாங்கள் தங்க வேண்டிய விருந்தினர் தங்கும் விடுதிக்கு வந்தடைந்தோம். உம்ஷ்லாங்கா பகுதியில் கடற்கரை அருகே அமைந்திருக்கும் ஒரு 4 நட்சத்திர ஹோட்டல் அது.முகப்பிலேயே பிரமாண்டமான அலங்காரம்.
மேலே வரவேற்பறைக்குச் செல்வதற்குள் திரு.மிக்கி செட்டியும் வந்து விட்டார். எங்கள அனைவருக்கும் வரவேற்பு கூறி அழைத்துச் சென்றார். எங்கள் அறைகள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டபின் நேராக உணவு இருக்கும் பகுதிக்குச் சென்று வந்திருக்கும் நண்பர்களைச் சந்தித்து விட்டு பின்னர் அறைக்குச் செல்லலாம் என எனக்குத் தோன்றியது. இந்துவிடம் சொல்ல அவருக்கும் சம்மதம். இருவருமாக மாலை விருந்து நடந்து கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றோம்.

அங்கே ஏற்கனவே முன்னர் அறிமுகமான சில நண்பர்களும் புதிய நண்பர்களும் இருந்தனர். என்னைப் பார்த்ததும் வந்து அழைத்துச் சென்ற மலேசிய பிரதினிதியும் கழகத்தின் துணைத்தலைவருமான திரு,ப.கு.சண்முகம் இருந்த  மேசையிலேயே அமர்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் அங்கு வந்த பாரத் பல்கலைக்கழக் துனை வேந்தர் டாக்டர். பொன்னவைக்கோவும் எங்களுடன் இணைந்து கொண்டார்.


திரு.ப.கு.சண்முகம், சுபா, டாக்டர்.பொன்னவைக்கோ, புலவர்,சேதுராமன், இந்து


மாலை உணவை சுவைக்கத் தொடங்கினோம். மிதமான காரத்தில் நல்ல சுவையுடன் உணவு இருந்தது. இந்திய வகை உணவையே நான் எடுத்துக் கொண்டேன்.  சேமியா பாயசம் மிக கெட்டியாக இனிப்புச் சுவை தூக்கலாக இருந்தது.

ஏறக்குறைய 3 மணி நேரம் அங்கேயே இருந்து நணபர்களுடன் பேசி விட்டு இயக்கத்தின் மகளிர் பகுதி தலைவி பொன்னி வீரப்பனுடன் அவர் அறையில் தங்கிக் கொள்ளச் சென்றேன். மறு நாள் காலை 7 மணிக்கெல்லாம் உணவை முடித்து 9 மணிக்கெல்லாம் பேருந்தில் பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல தயாராகவேண்டும் என்று கட்டளை இருந்தது. அதை நினைத்துக் கொண்டு சிறிது கதை பேசி விட்டு பயணக் களைப்பும் அதிகரிக்க உறக்கம் வந்து விட்டது.

தொடரும்..

Sunday, April 12, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -3


​எத்தியோப்பிய  விமான நிலையத்தில் ஜொஹான்னாஸ்பர்க் நகர் நோக்கி எங்கள் விமானம் புறப்பட்டது.அடிஸ் அபாபா.. விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்அடிஸ் அபாபா.. விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்​

எனக்கும் தோழி இந்துவுக்கும் இடையில் இருந்த இருக்கையில்  ஒரு ஆப்பிரிக்க இளம் பெண் வந்து அமர்ந்தார். ​கையில் தொலைபேசி.. அதில் பாட்டுகேட்டுக் கொண்டு தன்னை மறந்து தலையசைத்து ரசித்து அந்த  மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தார் அந்தப் பெண்.


​அடிஸ் அபாபா.. விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

நான் என் கையோடு எடுத்துச் சென்றிருந்த ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.  நூலின் பெயர் பண்டைய தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்பது.  இது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஒரு தரமான வெளியீடு. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் இராசு.பவுன் துரையின் நூல். நூலாசிரியர் பல ஆண்டுகளாக தொல்வடிவங்களின் குறியீடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் எனபதனை நூலின் அறிமுகப் பகுதியிலிருந்து தெரிந்து கொண்டேன்.

இந்த நூலில் குறியீடுகளை ஆய்வு செய்யும் முறை, தமிழக நிலப்பரப்பில் காணப்படும் பாறை வரைவுகள், குறியீடுகள் பற்றிய செய்திகள்,  தொல்வடிவங்களின் குறியீடுகள், மட்பாண்ட வரைவுகள்  சிந்துவெளி நாகரிக குறியீடுகளுடன் தமிழக நிலப்பரப்பில் காணப்படும் குறியீடுகளின்  தன்மை ஒப்பீடு, குறியீடுகள் அவை பேசும் மொழி என்ற வகையில் நூல் செல்கின்றது.

ஏறக்குறைய 6 மணி நேர பயணம் என்பதால் வாசிப்பில் மூழ்கியிருந்தேன். இடையில் விமானத்தில் வீடியோ பார்க்க இந்துவுக்கு உதவி தேவைப்பட்டதால் அவர் என்னை உதவி கேட்க சட்டென்று எங்கள் இடையில் அமர்ந்திருந்த அப்பெண் எந்தத் தயக்கமும் காட்டாது தானே வீடியோ ஆரம்பித்து சினிமா படம் தென்பட உதவினார். அந்தப் பெண்ணிற்கு இயற்கையாகவே உதவும் மணப்பாண்மை. அதிலும் பிறர் ஏதும் நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்பி தானே முன் வந்து உதவினாள். இந்து மகிழ்ச்சியாக ஒரு ஹிந்தி படத்தை பார்த்து ரசிக்கத் தொடங்கி விட்டார்.

இடையில் மீண்டும் எங்களுக்கு உணவு கிடைத்தது. ஆப்பிரிக்க உணவு. சாதமும் மொச்சை, கீரை சேர்த்த கெட்டிக் குழம்பும். ரசித்து சாப்பிட்டேன். கொஞ்சம் சீரகம் சோம்பு மிளகு சேர்த்திருந்தால் சுவை தூக்கலாக இருந்திருக்கும். ஆனாலும் ஆப்பிரிக்க உணவு இதுதான் என்பதை அறிந்து கொண்டு சுவைக்கவும் வேண்டும் அல்லவா..?

 சாப்பிட்டுக் கொண்டே அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். தான் நைஜீரியாவில் இருந்து வந்த பெண் என்றும் ஜொஹான்னஸ்பெர்கிற்கு கல்லூரி படிப்பு முடித்து இண்டர்ன்ஷிப் செய்ய செல்வதாகவும் கூறினார். என்னைப் பற்றி விசாரித்தார். தொடர்ந்து சிறிது நேரம் பேசி விட்டு நான் என் நூலில் மூழ்கினேன்.


​காபி கடையில்

ஜொஹான்னஸ்பெர்கில் தரையிறங்கிய பின்னர் ஒரு காபி கட்டாயம் தேவை என்று தோன்றியது.  விமான நிலையத்தில் ஒரு உணவகத்தில் நானும் இந்துவும் காபி ஆர்டர் செய்து அருந்தினோம். அந்த உணவகத்தில் எக்ஸ்ட்ரா லார்ஜ் அளவில் மஃப்பின் விற்பனை செய்து கொண்டிருந்தனர். திரும்பி வரும் போது கட்டாயம் வாங்கி சாப்பிட வேண்டும் என்று நானும் இந்துவும் சொல்லிக் கொண்டோம்.


நாங்கள் பயணம் செய்த குலுலா விமானம்
​ஜொஹான்னஸ்பெர்க்  - விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

சில மணி நேரங்களில் நாங்கள் அடுத்து பயணம் செய்ய வேண்டிய குலுலா விமானம் தயாராக, அதில் ஏறி டர்பன் நகருக்குப் பயணமானோம். ஏறக்குறைய 1 மணி நேர பயணம் அது.


​ஜொஹான்னஸ்பெர்க்  - விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

எனக்கும் இந்துவுக்கும் இடையில் ஒரு தமிழ்பெண். 16 வயது உள்ள பெண் வந்து அமர்ந்தார். அவர் எங்களுடன் இடைக்கிடையே பேசிக்கொண்டேயிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. தாம் குடும்பத்தாருடன் டர்பன் நகரில் ஓய்வை கழிக்கச் செல்வதாகவும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தாம் தமிழர் என்பது தெரியும் ஆனால் ஒரு சில வார்த்தைகளைத் தவிர  தமிழ் பேசத் தெரியாது என்று சொன்னார். தமிழ்படம் பார்ப்பார்களாம். இந்திய உடைகளை அணிந்து கொள்வார்களாம். தமிழ் மொழி பேச்சு மட்டும் வழக்கத்தில் இல்லாமல் மறைந்து விட்டது என்று சொன்னார். தமிழ் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளதா எனக் கேட்டேன். இருக்கின்றது என மிக நளினமாக தலையாட்டினார். தொடர்ந்து என்னைப்பற்றியும் என் தொழில், நான் டர்பன் செல்லும் நோக்கம் என பேசி தெரிந்து கொண்டார்.

விமானத்தின் மேலிருந்து டர்பன் நகரை பார்த்து ரசித்துக் கொண்டே டர்பனில் மாலை 6.10 வாக்கில் தரையிறங்கினோம். எங்கள் பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது எங்களை அழைத்துச் செல்ல ஏற்பாட்டாளர்கள் காத்திருப்பர் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வெளியே வந்தபோது ஒரு சிறு அதிர்ச்சி..

​​தொடர்வோம் நம் பயணத்தை,  டர்பனுக்கு....

Saturday, April 11, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -2

எத்தியோப்பிய விமானப் பணிப் பெண்களும் ஆண்களும் தமிழர்களை ஒத்த முகச்சாயலிலும்  உடல் சாயலிலுமே தென்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள். இவர்களுக்கு இந்திய ஆடைகளை உடுத்தி சாலையில் நடக்கச் சொன்னால் தமிழ் பெண்கள் என்றே எல்லோரும் ஒத்துக் கொள்வர். தலைமுடி வகையில் மட்டும் ஒரு சிறு வித்தியாசத்தைக் காண்கின்றேன். அடர்த்தியான கூந்தல் வகை இவர்களது. பெரும்பாலானோர் தோலின் நிறம் கருமையாகவும் ஒரு சிலருக்கு நிறம் மாநிறமாகவும் இருக்கின்றது. இது தென்னிந்தியர்களின் தோலின் நிரத்தை ஒத்த வகையிலேயே இருக்கின்றது.
விமானத்தில் நான் சைவ உணவு பதிந்திருந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்தபோது அதிசயப்பட்டேன். பாஸ்மதி அரிசி போல ஆனால் இன்னமும் நீளமான வடிவில் அரிசி.


பயிற்றங்காய் வருவல் அதற்கு மொச்சை, மேலும் சில கடலை வகைகள் சேர்த்த குழம்பு. உணவின் சுவையும் மலேசிய இந்திய உணவு சுவையை ஒத்ததாக அமைந்திருந்தது. நான் ஸ்டுட்கார்ட் நகரில் சாப்பிட்டு பழகிய மடகாஸ்கர் அல்லது தென்னாப்பிரிக்க உணவின் சுவையை விட இது மிக நன்றாக நமது இந்திய உணவு போல இருந்தது.

எத்தியோப்பிய மக்களின் உணவும் உடல் தோற்றமும் தென்னிந்திய மக்களின் உடல் தோற்றத்தை ஒத்திருப்பது போலவே அவர்களது அங்க அசைவுகளும் முக பாவனைகளும் கூட நமக்கு பரிச்சயமான வகையிலேயே இருந்தன. மிகுந்த சுவாரசியத்துடன் என் கண்ணில் தென்படும் ஒவ்வொரு எத்தியோப்பியர்களையும் நான் என மனதில் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன்.

விமானத்தின் கேப்டன் நடந்து வந்து ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். நான் இருக்கும் பகுதிக்கு வந்த போது இரவு வணக்கம் சொல்லிவிட்டு சிறிது நேரம் இருந்து கதை பேசிச் சென்றார். நலல் உயரமான உருவம். எனக்கு ஒரு தமிழரிடம் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்ற உணர்விலேயே பேசினேன் என்று தான் சொல்வேன். எங்கள் பயண நோக்கம் பற்றி அறிந்து கொண்ட பின்னர் எத்தியோப்பிய நாட்டிற்கு  ஒரு முறை வந்து சுற்றிப் பார்த்துச் செல்லுமாறு கூறினார்.

அடிஸ் அபாபா விமான நிலையம் மிகச் சிறியது. நாங்கள் வந்திறங்கிய சமையம் அதிகாலையாக இருந்தமையால் பயணிகள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியோதயம் ஏற்பட்டதில் மிகத் தெளிவாக பகல் வெளிச்சத்தில் நகரை பார்க்க முடிந்தது.இந்த நாடு பாலைவனப்பகுதிக்கும் கீழே அமைந்திருப்பதால் வெயில் இருந்தாலும் மிக அதிகமான் வெப்பத்தை நான் உணரவில்லை. ஏறக்குறைய 24லிருந்து 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம். வெளியே சென்று பார்க்க வாய்ப்பு அமைந்திருந்தால் மேலும் எத்தியோப்பியா பற்றி அறிந்து கொள்ள முயற்சித்திருப்பேன். ஆனால் ஒரு முறைபிரத்தியேகமாக இந்த நாட்டிற்கு சென்று வர வேண்டும் என்று மனதில்  ஆவல் வந்துள்ளது.. வாய்ப்பு அமைந்தால் எத்தியோப்பியா பற்றியும் இம்மக்கள் பற்றியும் மேலும் நேரில் அறிந்து கொள்ள அது உதவலாம்.

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 1


​காந்தி வாழ்ந்த இடத்தில் .. ஷுலு இனக்குழு மக்களின் குழந்தைகளோடு

​உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர் திரு.மிக்கி செட்டி அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி வந்திருந்த பொழுதில்,  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள தமிழாசிரியர் பட்டமளிப்பு விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள செயலவைக் குழு தேர்தல் நிகழ்விலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அலுவலக பணிகளுக்கிடையேயும் எனது முனைவர் பட்ட ஆய்வுக்கிடையேயும் இதனை சாத்தியப்படுத்த முடியுமா என்ற ஒரு அய்யம் மனதில் இருந்து கொண்டிருந்தது. ஆயினும் இந்த இயக்கத்தின் செயலவைக் குழுவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பயணத்திற்கு திட்டமிட்டேன்.

இந்த இயக்கத்தில் பல ஆண்டுகள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், நான் ஜொஹான்னஸ்பெர்க் நகருக்கு டிக்கட் போடவேண்டுமென்று தகவல் சொல்லிவிட்டார். ஆக அங்கு செல்ல விமானத்தை தேடிய போது எத்தியோப்பியன் விமானத்தில் குறைந்த நேர இடைவெளி.  அத்தோடு பயணக்கட்டணமும் கணிசமான விலை என்ற வகையில் டிக்கட் அமைந்தது. நானும் தோழி இந்துவும் பயணத்திற்கு டிக்கட்டை பதிந்து கொண்டோம். இதைப் பற்றி அந்த பொறுப்பாளரிடம் குறிப்பிட்ட போது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில் சென்றால் இபோலா காய்ச்சல் வந்து இறந்து விடுவீர்கள் என்று கூடுதல் 'இன்மொழி' கூறினார்.

என்ன செய்வது ..? இப்படியும் சில மனிதர்கள்!

எத்தியோப்பியன் விமான பயண விபரங்களைப் பார்த்தபோது தினம் ஒரு விமானம் எத்தியோப்பியா செல்வதை அறிந்து கொண்டேன். ஜெர்மனியில் கணிசமான எண்ணிக்கையில் எத்தியோப்பியர்களும் ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகளைச் சேர்ந்தோரும் இருக்கின்றனர். விமானத்தில் பயணித்தாலே இபோலா நோய் வரும் என நினைப்போரை என்ன செய்வது? எல்லாம் அறியாமை தான் காரணம். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என வருந்திக் கொண்டதோடு மட்டுமல்லாது அந்த நபருக்கும் இபோலா பற்றியும் அனைத்துலக விமானப்பயணத்தில் கடைபிடிக்கப்படும் சுகாதார முறைகள் பற்றியும் சற்று விளக்கியும் கூறினேன்.


​விமானப் பயணத் தகவல்

ஆனால் பின்னர் டர்பனில் தான் நிகழ்வு என்று உறுதியானதும் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு ஒரு பயண டிக்கட் கூடுதலாக பதிவு செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. குலுலா விமான சேவையகத்தில் இதற்கான  டிக்கட்டை  எனக்கும் இந்துவிற்கும் பதிந்து கொண்டேன்.

எங்களின் பயணம் 4 விமான நிலையங்களில் உலாவும்  வகையில் 3 விமானங்களில் பயணம் என்ற வகையில் அமைந்தது. இப்படி ஒரு பயணத்தை இது நாள் வரை நான் என் வாழ் நாளில் செய்த்தில்லை. எல்லாம் புது அனுபவம் என நினைத்து பயண ஏற்பாட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டேன்.

  • ஃப்ராங்பர்ட் நகரிலிருந்து எத்தியோப்பிய விமானத்தின் வழி முதலில் அதன் தலைநகரான அடிஸ் அபாபாவிற்குப் பயணம்
  • அடிஸ் அபாபாவிலிருந்து ஜொஹான்ன்ஸ்பெர்க்
  • பின்னர் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு 

என பயணம் இருந்தது.


​ஃப்ராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எஹ்ட்தியோப்பிய விமானம்

எனது வாகனத்தில் ஃப்ராங்பர்ட் விமான நிலையம் வரை பயணம் செய்து அங்கு விமான நிலைய கார் பார்க்கில் வாகனத்தை விட்டு விட்டு எத்தியோப்பிய விமானத்தில் நானும் இந்துவும் அடிஸ் அபாபா நோக்கி புறப்பட்டோம்.​

தொடர்வோம் நம் பயணத்தை டர்பனுக்கு....

சுபா