Friday, June 26, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -20

டர்பன் நகரிலிருந்து வடக்கு நோக்கிய பயணமாக N2 சாலையில் 177 எக்ஸிட் எடுத்து Kwamashu H’way (M25) Inanda R102  சாலையில் வந்து இடது பக்கம் தொடர்ந்து பயணிக்கும் போது சாலையின் இருபக்கமும் மகாத்மா காந்தி நினைவு இல்லம் பற்றிய விளம்பர அட்டைகள் விளக்குக் கம்பங்களில் இணைத்திருப்பதைக் காணலாம். வழிகாட்டிப் பலகையைப் பார்த்தே உள்ளே நுழைந்தால் அங்கே சுலபமாக இந்த இடத்தை நாம் அடைந்து விடலாம். ஃபீனிக்ஸ் மக்கள் குடியிறுப்புப் பகுதி என இப்பகுதி அழைக்கப்படுகின்றது.



காந்தி நினைவு இல்லம் காணச் செல்கின்றோம். இந்திய வம்சாவளியினர் நிறைந்த ஒரு இடமாக இது இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் சுற்றிலும் எளிமையான ஒரு ஆப்பிரிக்க இனமக்களின் கிராமம் தான் அது. ஆப்பிரிக்க சூலு இன மக்கள் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் என இருந்தனர்.

​அச்சகம்
உள்ளே செல்லும் போது நம்மை வரவேற்பது மகாத்மா காந்தி ஆரம்பித்த அச்சத்தின் கட்டிடம்.  இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion   என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ம் ஆண்டு இப்பதிரிக்கை முயற்சி நின்று போனது.

காந்தி - கஸ்தூரிபா - பீனிக்ஸ் பகுதியில்


மகாத்மா காந்தி என அறிந்தோரால் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அக்டோபர் மாதம் 2ம் தேதி 1869ம் ஆண்டில் இந்தியாவின் போர்பண்டர் என்ற பகுதியில் பிறந்தார். இளம் பிராயத்தில் உள்ளூரில் கல்வி கற்று திருமணமும் முடித்து பின்னர் 1888ம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தியவர்கள் தென்னாப்பிரிக்காவின் இந்த டர்பன் புறநகர் பகுதியில் இங்கே வாழ்ந்து வந்தார்.


​​

இங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர் அமைந்திருக்கின்றது. இந்த இல்லம் இருக்கும் இடத்தில் முதலில் காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் அமைக்கப்பட்ட இல்லமானது 1985ம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்த இனாண்டா கலவரத்தில் தீயில் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் அதே வகையில் புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதிகள் தீயில் சேதமடையாததால் வீட்டின் மேல் பகுதியை மட்டும் புதுப்பித்து நினைவில்லமாக எழுப்பியிருக்கின்றனர். இந்த இல்லத்தின் உள்ளே மிக எளிமையான வகையில் காந்தியை நினைவூட்டும் பல சம்பவங்களின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.



வீட்டின் முன் புறத்தில் சிறிய பூங்காவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவனத்தின் ஒரு பகுதியில் மிக அழகான சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டு அதில் உள்ளே காந்தியின் சிலை ஒன்றும்நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு சமூக மையம் போன்ற ஒரு  கட்டிடம் உள்ளது. இங்கே காந்தியின் பெரிய உருவப் படங்கள் சில உள்ளன.



மீண்டும் முன் பகுதிக்கு வந்தால் அச்சகத்தை வந்தடைவோம். அச்சகத்தின் உள்ளே உள்ள அறையில் காந்தி வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை வரலாற்றை நினைவூட்டும் ஆவணங்கள். இங்கே விரும்புவோர் காந்தி தொடர்பான நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். வருவோருக்கு இலவசமாக இந்த நினைவு இல்லம் பற்றிய ஒரு சிறு குறிப்பு அட்டையை வழங்குகின்றனர்.




நாங்கள் இந்த நினைவில்லத்திற்குச் சென்ற போது உள்ளே ஒரு அதிகாரி மட்டுமே இருந்தார். அவர் ஆப்பிரிக்க சூலு இனத்தைச் சேர்ந்தவர். எங்களுக்கு இந்த நினைவில்லம், அச்சகம், மற்ற ஏனைய பகுதிகள் அனைத்தையும் சுற்றிக் காட்டி ஆங்கிலத்தில் விளக்கமளித்தார். பொறுமையான குணமும் வருவோரை வரவேற்கும் நல்ல குணமும் கொண்டவராக இந்த அதிகாரி தோன்றினார். அங்கு ஏறக்குறைய 1 மணி நேரம் செலவிட்டு விட்டு அங்கிருந்து நாங்கள் என் பட்டியலில் இருந்த அடுத்த இடத்திற்குப் பயணமானோம்.

சூலு இன குழந்தைகளுடன்


எங்கல் வாகன்மோட்டியாக இருந்து உதவியவருடன்


என்னுடன் இணைந்து கொண்ட நண்பர்களுடன்

கஸ்தூரிபா- காந்தி


நினைவு இல்லத்தின் உள்ளே

தொடரும்..

சுபா

Monday, June 15, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -19

மறு நாள் காலையில் தங்கும் விடுதியில் நண்பர்கள் அனைவரும் காலை உணவு வேளையில் சந்தித்துக் கொண்டோம். நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் அன்று வரை எங்கள் தங்கும் விடுதியிலேயே குடும்பத்தாருடன் மிக்கி செட்டியும் அவர் துணைவியாரும் தங்கி இருந்தனர். காலையில் உணவு வேளையின் போது குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.ஜொஹான்னஸ்பெர்க் நகரில் வசிப்பவர்கள் மிக்கி செட்டி குடும்பத்தினர். காலை உணவு முடித்து அனைவருமாக ஜொஹான்னஸ்பர்க் திரும்பிச் செல்ல ஆயத்தமாகி இருந்தார்கள். டர்பனிலிருந்து ஜொஹான்னஸ்பெர்க் ஏறக்குறைய வடக்கு நோக்கி 600 கிமீ தூரம்.


திரு.மிக்கி செட்டியுடன்

தமிழ் பேசத்தெரியாவிட்டாலும் ஏனையோர் பேசுவதை மிக நன்கு புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர் திரு. மிக்கி செட்டி அவர்கள். தீராத தமிழ் தாகம் அவருக்கு இருக்கின்றது. வர்த்தகம் அவரது தொழில் என்ற போதிலும் தமிழ் சங்கங்களில் தம்மை நெடுங்காலமாக ஈடுபடுத்திக் கொண்டு பல தொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர் இவர். இவர்து மனைவியாரும் மிக அன்பான பெண்மணி. சிறு குழந்தைபோல எல்லோருடனும் சிரித்து பேசி மகிழ்பவர். முதல் நாள் சின்னப்பன் குடும்பத்தாருடனும் திருமதி மிக்கியுடனும் சினிமா பார்க்கச் சென்றிருந்த போது என் மாலை நேரம் இவர்களுடன் பேசிக் களித்ததில் மிக மகிழ்ச்சியாகக் கழிந்தது.  மீண்டும் சந்திக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டோம். மிக்கி செட்டியின் குழந்தைகளும் பெற்றோருக்குச் சளைத்தவர்களல்ல. வந்திருந்த எல்லோரையும் அன்புடன் அரவணைத்து வேண்டிய எல்லா உதவிகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்து தம் சொந்தக் குடும்பத்தார் போல பார்த்துக் கொண்டனர்.  இப்போதுதான் சந்திக்கின்றோம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் உறவினர் போல பழகும் தன்மை கொண்டவர்கள்  திரு.சின்னப்பன் குடும்பத்தாரும் திரு.மிக்கி செட்டி குடும்பத்தாரும்.


திருமதி. மிக்கி செட்டியுடன்


அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். அடுத்து 2 நாட்கள்.. மீதமிருந்த நண்பர்களுக்கு நான் தான் பயண ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டி. இது ஒரு புதிய பொறுப்பு. இதனை ஏற்றுக் கொண்டதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

நான் இணையத்தில் தேடிப்பார்த்து டர்பனில் எந்தெந்த இடங்கள் செல்லலாம் என சில குறிப்புக்களைத் தயாரித்து வைத்திருந்தேன். அதில் சில அருங்காட்சியகங்கள், முக்கிய வரலாற்று இடங்கள், ஆலயங்கள் என்று இருந்தன. புற்று மாரியம்மன், டர்பன் முருகன் ஆகிய கோயில்கள் சென்று விட்டதால் ஏனைய பகுதிகளுக்கு செல்வது என திட்டமிட்டிருந்தேன். முதல் நாளே எங்களை அழைத்துச் செல்ல இரண்டு டாக்ஸிகளையும் தொலைபேசியில் அழைத்து ஏற்பாடு செய்து கொண்டேன். தங்கும் விடுதியில் நல்ல டாக்சி தொடர்பு ஏற்படுத்திதருமாறு கேட்டுக் கொண்டதால் அவர்கள் நம்பிக்கையான ஒரு டாக்ஸி ஓட்டுனரின் எண்ணை கொடுத்திருந்தார்கள். ஆக அவரை தொலைபேசியில் அழைத்து  ஒரு நாள் முழுதும் சுற்றிப் பார்க்க என்ற வகையில் மொத்தமாக எங்கள் அனைவருக்கும் ஒரு தொகையை நிர்ணயம் செய்து கொண்டேன். பயணச் செலவை அனைவரும் பகிர்ந்து கொள்வோம் என்றும் முடிவாகியது.

என்னுடன் இணைந்து கொண்டவர்களில் என்னுடன் ஜெர்மனியிலிருந்து வந்த இந்து, பிரான்சிலிருந்து வந்த நண்பர் சாம் விஜய், மலேசிய நண்பர்கள் சண்முகம், பொன்னி, ராமச்சந்திரன், அமுதா, ஜெயராமன், கனடா ராஜரட்னம் ஆகியோர் இருந்தனர்.  என்னுடன் சேர்த்து ஒன்பது பேர் இந்த சுற்றுலாவில். இரண்டு வாகனங்களில் பாதியாக பிரிந்து கொண்டோம். சரியாக காலை 9.30க்கு புறப்பட வேண்டும் என அனைவரிடமும் சொல்லியிருந்தேன். எல்லோரும்  குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விட்டார்கள்.




டாக்சியோட்டிகள் இருவரும் டர்பன் தமிழர்களே. ஆனால் தமிழ் பேசத்தெரியாத தமிழர்கள். அந்த முழு நாள் பயணத்தையும் மிக்க அன்புடனும் அக்கறையுடனும் எங்களுடன் பேசி நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று வழிகாட்டியாக இருந்து உதவினர்.

எங்கள் டர்பன் நகர பயணம் தொடங்கியது.
என் பட்டியலில் முதலில் இருந்தது மகாத்மா காந்தி 20 ஆண்டுகள் டர்பன் நகரில் வாழ்ந்த போது  அவர் தங்கியிருந்த இல்லம்.

தொடரும்...

சுபா

Friday, June 12, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -18

இந்த கேளிக்கை விடுதி டர்பன் நகரின் மையப் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இருப்பது.  இதன் உள்ளே சில திரையரங்குகள், கேசினோ, ரெஸ்டாரண்டுகள், விளையாட்டு பகுதிகள் என பல்தரப்பட்ட கேளிக்கை அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.



எங்களுக்கான டிக்கட்டை கோகி வாங்கிக் கொள்ள நாங்கள் தியேட்டருக்குள் செல்லும் முன்னர் கோகியின் நண்பர்கள் சிலரை அங்கு பார்த்து விட அவர்களுடன் பேசிக் கோண்டிருந்து விட்டு சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு பின்னர் திரையரங்குக்குள் சென்றோம். ஏறக்குறைய அரங்கம் நிறைந்திருந்தது.

படம்  ஆரம்பிக்கும் போது கவனித்தேன். ஆங்கிலத்தில் சப்டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது. பலருக்கும் தமிழ் மொழிப்பேச்சு புரிவதில் சிரமம் இருப்பதால் ஆங்கிலத்தில் சப்டைட்டில் அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் பார்க்கும் திரைப்படம். படத்தின் ஆரம்பமே கோரமான வன்முறை காட்சி. கொலை. ராமநாதபுரத்தில் பதிவாக்கப்பட்டது என்று அறியமுடிந்தது. அகா.. இந்த வருடம் த.ம.அ களப்பணிக்காக ராமநாதபுரம் செல்லவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோமே.. இந்த ஊரில் வன்முறை அதிகமாக இருக்குமோ என்ற எண்ணமே மனதில் தோன்றியது.  படத்தில் கதாநாயகியை அறிமுகப்படுத்தும் போதே உழைக்கும் தந்தைக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் ஒரு கதாபாத்திரம். தந்தையைப் புரிந்து கொண்ட பெண் என்றுகாட்டும் அதே வேளை சாராயத்தை நியாயப்படுத்த கதாசிரியர் மேற்கொண்ட முயற்சி வெறுப்பையே உருவாக்கியது.  நான் தான் தமிழ் சினிமாவே பார்க்கவேண்டாம் என நினைத்திருந்தேனே. இப்போது வந்து பார்த்து இப்படி மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா என எண்ணம் மனதில் எழாமல் இல்லை. இன்னொரு வகையில் இதையெல்லாம் பார்த்தால் தற்காலத் தமிழகச் சூழலை ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனையும் மனதில் எழாமல் இல்லை.

கதை சுவாரசியமாக இருந்தது. பாடல் ஒன்று அப்போது மனதைக் கவர்ந்தது. ஆனால் மீண்டும் நினைத்துப் பார்த்தால் வரிகள் மனதில் நிற்காமல் மறைந்து விட்டன. படத்தில் கதாபாத்திரங்கள் மிக இயற்கையாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் படத்தில் காட்டப்பட்ட வன்முறை சம்பவங்கள் இது எவ்வகை மனிதத்தன்மை என்ற கேள்வியை என் மனதில் எழுப்பாமல் இல்லை.


படம் பார்த்து மனம் முழுக்க டென்ஷனை நிரப்பிக் கொண்டு வெளி யே வந்து ஒரு ரெஸ்டாரண்டில் காப்பி அருந்தினோம். பின்னர் கேளிக்கை விடுதியைச் சுற்றிப் பார்த்தோம். கேசினோவிற்குள் சென்று அதனுள்ளே உள்ள நிலைமையை அறிந்து கொள்ள ஆவல் தோன்றவே உள்ளே சென்றோம். கேசினோவிற்குள் ஏறக்குரைய 70 விழுக்காட்டினர் இந்திய வம்சாவளியினர் தாம் நிறைந்திருந்தனர். அதிலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மிக அதிகம். பணத்தை ஆயிரம் ஆயிரமாகக் கொண்டு வந்து  பல வேளைகளில் தொலைப்பதும் சில வேளைகளில் பணம் ஈட்டுவதும் இங்கு நடக்கின்றது. ஒவ்வொருவரும் வரிசையாக அமைக்கபப்ட்ட கேசினோ பாரில் அமர்ந்து தங்கள் முழு கவனத்தையும் கேசினோ மெஷின் மேல் வைத்துக் கொண்டு  அமர்ந்திருந்தனர். அங்கிருந்தோரில் பெரும்பாண்மையோர் மிகப் பருமனான உடல் அளவைக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே உள்ளூர் கருப்பர் இனத்தவர்களும் இருப்பதையும் காணமுடிந்தது. கேசினோவிற்குள்ளேயே உணவு பரிமாறும் ரெஸ்டாரண்டும் இருக்கின்றது. அங்கே பெர்கர் போன்ற துரித உணவு பரிமாறப்படுவதையும் பார்த்தேன்
.


ஆக மொத்தம் மனதிற்கும் உடலுக்கும், தாமே பணத்தைக் கொட்டி தெரிந்தோ தெரியாமலோ, தானே தனக்கு பாதிப்பைத் தேடிக் கொள்ள விரும்புபவர்கள் தாம் இவ்வகை இடங்களுக்குச் செல்கின்றனர் என்பதைக் காணமுடிந்தது.  மேலும் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு பின்னர்  புறப்பட்டோம். ஹோட்டலுக்கு வரும் போது இரவு மணி 12ஐ தாண்டியிருந்தது. ஆயினும் என் அறையில் பொன்னி ஏனைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் திரும்பியதும் மறு நாள் செல்ல வேண்டிய இடங்களைப் பற்றி கலந்தாலோசித்தோம். நான் தான் பயண வழிகாட்டி. ஆக எனது பட்டியல் படி செல்வோம் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மறு நாள் செல்ல வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டு பயண ஏற்பாட்டை செய்து முடித்த திருப்தியில் உறக்கம் தானாகவே வந்து என்னை அழைத்துக் கொண்டது.

தொடரும்..
சுபா

Thursday, June 11, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 17

டர்பன் நகர் வந்த நாள் முதல் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தங்கும் விடுதியிலேயே உணவு சாப்பிட எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தமையினால் வெளியே சென்று உணவகங்களில் சாப்பிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. தென்னாப்பிரிக்க தமிழ் மக்கள் வீட்டு சமையல் எப்படி இருக்கின்றது என்று அறிந்து கொள்ளவும் அதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. வந்து சேர்ந்த முதல் மூன்று நாட்களிலுமே நிகழ்ச்சிகளிலேயே நாட்கள் கழிந்ததால் அதுவரை வெளியே சென்று இயல்பானவாழ்க்கையை அறிந்து கொள்ள முடியாமலேயே இருந்தது. இந்த நிலையை போக்கும் வகையில் கோகி அவர்கள் இல்லத்தில் வந்து எல்லோரும் மதிய உணவு சாப்பிட்டு செல்லும் படி அழைத்திருந்தார்.

​சமையலில் மும்முரமாக கோகி

முருகன் கோயிலில் வழிபாட்டை முடித்திக் கொண்டு திரு.சின்னப்பன், கோகி வீட்டிற்கு மதிய உணவிற்குச் செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. வாகனத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாது என்பதால் முதலில் சிலர் சென்று விட்டனர். நானும் ஏனைய சில நண்பர்களும் முருகன் கோயிலில் கொஞ்சம் நேரத்தை கழித்து விட்டு  பின்னர் சிவானியின் காரில் அவர்கள் இல்லத்தை வந்தடைந்தோம். வீட்டிற்குள் நுழையும் போதே இந்திய உணவு வகைகளின் வாசம் எங்களுக்கு பசியைத் தூண்டுவதாகவே இருந்தது.

புளியஞ்சாதம், சப்பாத்தி, குருமா, சாதம், காரக் குழம்பு அப்பளம் என பலவகையான பதார்த்தங்களை கோகி அந்த குறுகிய நேரத்தில் எங்கள் எல்லோருக்கும் சமைத்திருந்தது ஆச்சரியம் தருவதாக இருந்தது. உணவை முடித்து கோகி செய்திருந்த பால் பாயசத்தையும் சுவைக்க நான் தவறவில்லை.

​சிவானி

திரு,சின்னப்பன் கோகி இருவரின் ஒரே புதல்வி சிவானி ஒரு பரதக்கலைஞர். டர்பன் நகரில் நடனப்பள்ளி நடத்தி வரும் இவர் வக்கீலாகும் லட்சியத்துடன் இறுதியாண்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர். வீட்டில் அவரது நேர்த்தியான நாட்டியப் புகைப்படங்கள் வீட்டின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.

அவர்களின் விருந்தோம்பலை பாராட்டி மீண்டும் தங்கு விடுதி வந்து சேர்ந்தோம்.அங்கு நாங்கள் வரும் போது இலங்கையிலிருந்தும் ஏனைய சில நாடுகளிலிருந்தும் வந்திருந்த பிரதினிதிகள் புறப்படுவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அவர்களை வழியனுப்பிவைத்து விட்டு காத்திருக்கையில் டர்பனின் இந்தியத் தூதரகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரியும் மாலாவும் அவர் தோழி ப்ரேமியும் அங்கிருக்க அவர்களோடு சற்று உரையாடிவிட்டு மாலாவை  அவர் நடத்தும் தமிழ்பள்ளி, அங்குள்ள மக்கள் நிலை ஆகியன பற்றி குறிப்பிடும் வகையில் ஒரு பேட்டி ஒன்றினைப் பதிவு செய்தேன்.

மதியம் ஐந்து மணி வாக்கில் நண்பர்கள் விடைபெற்றுச் சென்று விட மாலை நேரம் எங்களுக்கு எந்த திட்டமும் இல்லாததால் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் வேலைகளை முடித்து விட்டு திரு.திருமதி சின்னப்பன் எங்களை சந்திக்க மீண்டும் நாங்கள் இருந்த தங்கும் விடுதிக்கு வந்திருந்தனர்.

​திரையரங்கு அமைந்திருக்கும் கேளிக்கை விடுதி

டர்பன் நகரில் உள்ள திரையரங்கில் புதிதாக கொம்பன் என்ற திரைப்படம் வந்திருப்பதாகவும் என்னை அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறவே அன்றைய மாலைப் பொழுதை கழிக்க இது நல்ல வழி தான் என நானும் சம்மதித்து விட்டேன். கடைசியாக தமிழகத்தில் ஒரு திரையரங்கில்  நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த தமிழ்ப்படம் ராவணன். அதற்குப் பின் மீண்டும் ஒரு தமிழ்ப்படம் பார்க்க வாய்ப்பும் நேரமும் அமையவில்லை. அதோடு டர்பன் நகர திரையரங்குகளையும் இரவு நேர சிறப்புக்களையும் அறிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் தோன்றியதால் கொம்பன் படம் பார்க்க நான் திரு.சின்னப்பன் கோகியுடனும் எங்களுடன் இணைந்து கொண்ட திரு.மிக்கி செட்டியின் மனைவியுடனும் அவர் பேரனுடனும் புறப்பட்டு விட்டேன்.

தொடரும்..
சுபா

Tuesday, June 9, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 16

டர்பன் நகர் தமிழ் மக்கள் பெரும்பாண்மையினர் வாழும் ஒரு பகுதி. இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, ஒப்பந்த தொழிலாலர்களாக தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதிக்கு வந்து சேர்ந்த தமிழர்களில் பலர் மீண்டும் அவர்களது தாயகமான தமிழகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை.

கிடைக்கின்ற ஆவணங்களைப் பார்க்கும் போது, 1860 ஆண்டு, அப்போதைய  மட்ராஸிலிருந்து  நவம்பர் 16ம் நாள் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும்  டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர்.  இப்படி வந்த இவர்கள் மூன்றாண்டு கால ஒப்பந்ததில் கையெழுத்திட்டுக் கொண்டு  தொழில் பார்க்க என்ற காரணத்திற்காக மட்டுமே எனக் கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் தமிழர்கள். இவர்களைப் போல தெலுங்கர்களும் சில வட இந்தியர்களும் வந்து சேர்ந்தனர். ஆரம்பத்தில் உழைத்து பணம் சம்பாதித்து திரும்பிச் செல்ல வேண்டும் என்ற கணவுடன் தான் இவர்கள் வந்தனர். ஆயினும் நாள் செல்லச் செல்ல திரும்பிச் செல்வதை விட தொடர்ந்து பணியாற்றி இந்தப் புதிய இடத்தில் தமக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே இவர்களில் பலர் முடிவெடுத்ததன் விளைவாக பல தடைகள இருந்த போதிலும் திரும்பிச் செல்ல இவர்கள் முன் வரவில்லை.

புலம் பெயர்ந்த மக்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய உளவியல் சிக்கல் இது. அன்னிய நாட்டிற்கு வந்து அங்குள்ள வாழ்க்கை நிலையில் பழக ஆரம்பித்ததும் நம் மனம் புதிய விஷயங்களுக்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றது. தாய்மண்ணின் ஏக்கம் மனதில் இருந்தாலும் புதிய சூழல், புதிய வாழ்க்கை தேவைகள்,  புலம்பெயர்ந்த இடத்தில் கிடைக்கின்ற சில மேம்பாடுகள் ஆகியன மீண்டும் தாயகம் திரும்பும் எண்ணத்தை தாமதப்படுத்திப் போடுவதையே விரும்பும் நிலையைத் தான் பெருவாரியாகக் காண்கின்றோம். கல்விக்காகவோ அல்லது தொழிலுக்காகவோ அல்லது அடிப்படை வாழ்க்கை நலனுக்காகவோ அல்லது அரசியல் சூழல் காரணமாகவோ....... காரணம் ஏதாக இருப்பினும் வந்து விட்ட புதிய சூழலில் வாழ்க்கையைத் தொடர்வதற்கே மனம் தன்னைத் தயார் படுத்திக் கொள்கின்றது. இப்படி நிகழ்ந்தமையால்தான் தென்னாப்பிரிக்கா வந்த தமிழ் மக்களில் பலர் தாயகம் திரும்பிச்செல்லாத நிலையில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் என்ற ஒரு தனி இனமே ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகியது.

இங்கு வந்த தமிழ் மக்கள் தங்கள் பண்பாட்டு எச்சங்களைப் புதிய சூழலில் விட்டுக் கொடுத்து விடவில்லை. தாம் தமிழர்தாம் என்ற நிலையை மறந்து ஒதுக்கித் தள்ளிவிட்டு தென்னாப்பிரிக்க சூழலில் ஆங்கில நாகரிகத்திற்கு தம்மை முழுமையாக விட்டுக் கொடுத்து விடவில்லை. இன்னமும் தங்கள் மூதாதையர்களின் பாரம்பரியம் என்பது தென்னாப்பிரிக்க மண்ணிலும் தொடர்கின்றது.

டர்பன் புற்று மாரியம்மன் ஆலயத்திலிருந்து பயணித்து சில நிமிடங்களில் சிவானியின் வாகனத்தில் முருகன் கோயில் வந்தடைந்தோம். முருகன் கோயிலில் அந்த மதிய வேளையில் பக்தர்கள் யாரும் இல்லை.














கோயிலின் முன் புறத்தில் பொன்னிறத்திலான பிரமாண்டமான முருகன் சிலையை வைத்திருக்கின்றார்கள். உள்ளே மூலஸ்தானத்தில் மத்தியில் வள்ளி தெய்வயானை இணைந்த முருகன், விநாயகர், சிவலிங்கம், பார்வதி சிலைகளும் அமைகப்பட்டுள்ளன. கோயிலில் ஒரு குருக்கள் இருந்து வழிபாட்டு விஷயங்களைக் கவனித்துக் கொள்கின்றார் என்பதையும் அறிந்து கொண்டேன்.

சில நிமிடங்கள் முருகன் ஆலயத்தில் இருந்து விட்டு அங்கிருந்து நாங்கள் திரு.திருமதி.சின்னப்பன் இல்லத்திற்கு பகல் உணவிற்காகச் சென்றோம். அங்கு எங்களுக்ககா விருந்து தயாரித்துக் கொண்டிருந்தார் கோகி.

தொடரும்

சுபா