Tuesday, June 9, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 16

டர்பன் நகர் தமிழ் மக்கள் பெரும்பாண்மையினர் வாழும் ஒரு பகுதி. இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, ஒப்பந்த தொழிலாலர்களாக தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதிக்கு வந்து சேர்ந்த தமிழர்களில் பலர் மீண்டும் அவர்களது தாயகமான தமிழகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை.

கிடைக்கின்ற ஆவணங்களைப் பார்க்கும் போது, 1860 ஆண்டு, அப்போதைய  மட்ராஸிலிருந்து  நவம்பர் 16ம் நாள் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும்  டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர்.  இப்படி வந்த இவர்கள் மூன்றாண்டு கால ஒப்பந்ததில் கையெழுத்திட்டுக் கொண்டு  தொழில் பார்க்க என்ற காரணத்திற்காக மட்டுமே எனக் கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் தமிழர்கள். இவர்களைப் போல தெலுங்கர்களும் சில வட இந்தியர்களும் வந்து சேர்ந்தனர். ஆரம்பத்தில் உழைத்து பணம் சம்பாதித்து திரும்பிச் செல்ல வேண்டும் என்ற கணவுடன் தான் இவர்கள் வந்தனர். ஆயினும் நாள் செல்லச் செல்ல திரும்பிச் செல்வதை விட தொடர்ந்து பணியாற்றி இந்தப் புதிய இடத்தில் தமக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே இவர்களில் பலர் முடிவெடுத்ததன் விளைவாக பல தடைகள இருந்த போதிலும் திரும்பிச் செல்ல இவர்கள் முன் வரவில்லை.

புலம் பெயர்ந்த மக்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய உளவியல் சிக்கல் இது. அன்னிய நாட்டிற்கு வந்து அங்குள்ள வாழ்க்கை நிலையில் பழக ஆரம்பித்ததும் நம் மனம் புதிய விஷயங்களுக்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றது. தாய்மண்ணின் ஏக்கம் மனதில் இருந்தாலும் புதிய சூழல், புதிய வாழ்க்கை தேவைகள்,  புலம்பெயர்ந்த இடத்தில் கிடைக்கின்ற சில மேம்பாடுகள் ஆகியன மீண்டும் தாயகம் திரும்பும் எண்ணத்தை தாமதப்படுத்திப் போடுவதையே விரும்பும் நிலையைத் தான் பெருவாரியாகக் காண்கின்றோம். கல்விக்காகவோ அல்லது தொழிலுக்காகவோ அல்லது அடிப்படை வாழ்க்கை நலனுக்காகவோ அல்லது அரசியல் சூழல் காரணமாகவோ....... காரணம் ஏதாக இருப்பினும் வந்து விட்ட புதிய சூழலில் வாழ்க்கையைத் தொடர்வதற்கே மனம் தன்னைத் தயார் படுத்திக் கொள்கின்றது. இப்படி நிகழ்ந்தமையால்தான் தென்னாப்பிரிக்கா வந்த தமிழ் மக்களில் பலர் தாயகம் திரும்பிச்செல்லாத நிலையில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் என்ற ஒரு தனி இனமே ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகியது.

இங்கு வந்த தமிழ் மக்கள் தங்கள் பண்பாட்டு எச்சங்களைப் புதிய சூழலில் விட்டுக் கொடுத்து விடவில்லை. தாம் தமிழர்தாம் என்ற நிலையை மறந்து ஒதுக்கித் தள்ளிவிட்டு தென்னாப்பிரிக்க சூழலில் ஆங்கில நாகரிகத்திற்கு தம்மை முழுமையாக விட்டுக் கொடுத்து விடவில்லை. இன்னமும் தங்கள் மூதாதையர்களின் பாரம்பரியம் என்பது தென்னாப்பிரிக்க மண்ணிலும் தொடர்கின்றது.

டர்பன் புற்று மாரியம்மன் ஆலயத்திலிருந்து பயணித்து சில நிமிடங்களில் சிவானியின் வாகனத்தில் முருகன் கோயில் வந்தடைந்தோம். முருகன் கோயிலில் அந்த மதிய வேளையில் பக்தர்கள் யாரும் இல்லை.














கோயிலின் முன் புறத்தில் பொன்னிறத்திலான பிரமாண்டமான முருகன் சிலையை வைத்திருக்கின்றார்கள். உள்ளே மூலஸ்தானத்தில் மத்தியில் வள்ளி தெய்வயானை இணைந்த முருகன், விநாயகர், சிவலிங்கம், பார்வதி சிலைகளும் அமைகப்பட்டுள்ளன. கோயிலில் ஒரு குருக்கள் இருந்து வழிபாட்டு விஷயங்களைக் கவனித்துக் கொள்கின்றார் என்பதையும் அறிந்து கொண்டேன்.

சில நிமிடங்கள் முருகன் ஆலயத்தில் இருந்து விட்டு அங்கிருந்து நாங்கள் திரு.திருமதி.சின்னப்பன் இல்லத்திற்கு பகல் உணவிற்காகச் சென்றோம். அங்கு எங்களுக்ககா விருந்து தயாரித்துக் கொண்டிருந்தார் கோகி.

தொடரும்

சுபா

No comments:

Post a Comment