Sunday, December 23, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 19


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கம் வெற்றிகரமாக அமைந்ததில் ஏற்பாடு செய்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைவேந்தர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரோடு தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த எங்களுக்கும் மனம் நிறைவளிப்பதாக அமைந்தது.

கருத்தரங்கம் முடிந்ததும் வேறு என்ன செய்யலாம் என திட்டமிடத் தொடங்கியபோது அன்று மாலை வழக்கறிஞர் திரு.மைக்கல் தான் சார்ந்திருக்கும் அமைப்பின் வழி பாலுவின் ஒரு சொற்பொழிவிற்காக ஏற்பாடு செய்திருந்த தகவல் கிடைத்தது. ஆக, அந்த நிகழ்வில் கலந்து  கொள்வது என்று அப்போதே முடிவானது.

பல்கலைக்கழகத்தை விட்டு புறப்பட்டு விருந்தினர் மாளிகை வந்து தயாராகியவுடன் எங்கள் மூவரையும்  மைக்கலும் காளைராசனும் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். காரைக்குடி நகர மையத்திலேயே அமைந்திருந்த ஒரு தங்கும் விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக எங்களுக்கு வயிற்றுக்கு நல்ல உணவை மைக்கலும் காளைராசனும் ஹோட்டலிலேயே ஏற்பாடு செய்ய நாங்கள் அங்கேயே உணவருந்தி விட்டு மண்டபத்திற்கு விரைந்தோம்.



மைக்கல் உரையாற்றுகின்றார்




பாலு உரையாற்றுகின்றார்

பாலுவின் சொற்பொழிவு கடல் சார் அறிவியல் பற்றியது. அதற்கு முன்னராக சில வார்த்தைகள் கூறுமாறு என்னையும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்க சில நிமிடங்கள் பேசினேன். அதற்குப் பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாலுவின் இந்த சொற்பொழிவு அமைந்திருந்தது. வந்திருந்த அனைவருமே சொற்பொழிவை மிகக் கவனமாகக் கேட்பதை நன்கு உணர முடிந்தது. பாலு தயார் செய்திருந்த  பவர் பாவிண்ட் ப்ரிசெண்டேஷன் மிக விளக்கமாக கடல் ஆய்வு, தமிழர் தொண்மை ஆகியனவற்றை விளக்குவதாக அமைந்திருந்தது. நலல்தொரு நீண்ட விளக்கம் மிகுந்த சொற்பொழிவைக் கேட்டதில் எனக்கும் மகிழ்ச்சி.


கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழார்வலர்கள்


ஏற்பாட்டுக் குழுவினருடன் நாங்கள்

ஜனவரி 11ம் நாள் இவ்வகையாக அரியக்குடி பெருமாள் கோயில் தரிசனத்துடன் ஆரம்பித்து பல்கலைக்கழத்தில் கருத்தரங்கத்தை வெற்றிகரமாக முடித்து மாலை அரியதொரு சொற்பொழிவையும் கேட்கும் வகையில் மிகத் திருப்தியாக பயனுள்ள வகையில் அமைந்தது.

இவ்வகையாக காரைக்குடியில் இரண்டு நாட்கள் எனக்கு முழுக்க முழுக்க வெவ்வேறு விஷயங்களாக அமைந்து அலுப்பு என்பதையே மறக்க வைத்து விட்டது என்றே சொல்வேன். மூன்றாம் நாள்.. எனது காரைக்குடி பயணத்தின் இறுதி நாள்.. மூன்றாம் நாள் மாலை  நான் சென்னைக்குப் புறப்பட வேண்டும். ஆனால் அந்த மூன்றாம் நாளும் செய்து முடிக்க சில திட்டங்களைத் தீட்டினோம் நானும் காளைராசனும்.



தொடரும்...

சுபா

Saturday, December 22, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 18


எனது தமிழகத்துக்கானப் பயணங்களை நான் சில மாதங்களுக்கு முன்னதாகவே எற்பாடு செய்து விடுவது வழக்கம். அந்த  வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே இவ்வாண்டு எனது ஜனவரி  தமிழக பயனத்திட்டத்தை ஏற்பாடு செய்தபோது காளைராசன் பணிபுரிகின்ற அழகப்பா பல்கலைக் கழகத்திலும் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த  ஒரு ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்யலாமே என யோசனை தோன்ற அந்த ஏற்பாடுகளில் இறங்கினோம்.

பல்கலைக்கழக துணைவேந்தரின் சம்மதம் கிடைக்கப்பெற்ற பின்னர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் இருக்க வில்லை. பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையிலேயே தங்குவதற்கான ஏற்பாட்டினையும் துணை வேந்தர் அளித்தமையால் தங்குமிடம் தேடுவதிலும் பிரச்சனைகள் ஏற்படவில்லை. த.ம.அ -வை பிரதி நிதித்து நானும் கண்ணனும் பாலுவும் பேசுவது என்று முடிவானது. பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழ்த்துறை, அறிவியல் துறை, கணினித் துறை ஆகியவற்றிலிருந்தும் மேலும் வேறு சில துறைகளிலிருந்தும் பேராசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடானது.

காலையில் 10 மணிக்கு கருத்தரங்கம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குதல், பின்னர் அறிமுக உரை, மதிய உணவு என்றும் அதன் பின்னர் இரண்டு வெவ்வேறு மண்டபங்களில் கருத்தரங்கங்களுமாக ஏற்பாடுகள் செய்தோம். இந்த ஏற்பாட்டில் எல்லா பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டு திறமையாக செயலாற்றி ஏற்பாட்டினை விரும்பிய படியே செய்த காளைராசனை மனமாரப் பாராட்டித்தான் ஆக வேண்டும். அவர் இந்தக் கருத்தரங்கம் சிறக்க நிகழ்ச்சிகளை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் மாற்றி சரியான தலைப்புக்களைத் தேர்ந்தெடுத்து எங்களுக்கு வழங்கியதோடு தமிழ்த்துறை அறிவியல்துறை பேராசியர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொடுத்தார்.

11ம் தேதி காலையில் அரியக்குடி ஆலயத்தில் பூஜையை முடித்துக் கொண்டு நேராக பல்கழகத்திற்குப் புறப்பட்டோம். நேராக எங்களை துணைவேந்தர் அறைக்கு அழைத்துச் சென்று எங்களை துணைவேந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தார் காளைராசன். சிறிது நேரம் அலவளாவிய உடன் அனைவருமாக சேர்ந்து கருத்தரங்கம் நிகழும் மண்டபம் வந்தோம். அங்கே ஏற்கனவே பாலுவும் மைக்கலும் வந்திருந்தார்கள். அவர்களுடன் உரையாடி விட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.

இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்து விளக்கேற்றி வைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.




மண்டபம் நிறைந்த மாணவர்கள், பேராசிரியர்கள். டாக்டர்.வள்ளியும், காளைராசனின் மகளும் கூட வந்திருந்தார்கள். மாணவர் முகங்களில் ஆவல். சொற்பொழிவுகளைக் கேட்டு புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்தது முகத்தில் தெரிந்தது.


சுபா, நா.கண்ணன், துணைவேந்தர், தமிழ்த்துறைத் தலைவர்

துணைவேந்தரின் தொடக்க உரை, நா.கண்ணனின் உரை, பின்னர் எனது உரை ஆகியவை முடிந்து தமிழ்த்துறை தலைவரும் உரையாற்றினார்கள். இனிமையாக அந்தத் தொடக்க விழா நடந்தேறியது.


துணைவேந்தர் தொடக்க உரையாற்றுகின்றார்

மதிய உணவிற்குப் பின்னர் பட்டறைகள் நடைபெற்றன. பாலு கடல் ஆய்வு பற்றி பேச, நான் தற்கால கணினித்துறை தொழில்துறை வளர்ச்சி, தேவைகள் என்ற தலைப்பில் உரையாற்ற நா.கண்ண்ன த,ம.அ மின்னாக்கப் பணிகள் தொடர்பாக உரையாற்றினார்.



மாணவர்களுடன் நான்



நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். மாணவர்களுடன் இருப்பது எனக்கு மிக மிக பிடித்தமான ஒரு விஷயம். பல மாணவர்கள் கருத்தரங்கத்திற்குப் பின்னரும் கேள்விகள் கேட்டும் பேசிக்கொண்டும் என்னை தங்கள் அன்பினால் திக்கு முக்காடச் செய்தனர். பலர் என்னுடன் சேர்ந்து இருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அன்றைய பொழுதின் நினைவுகள் என் மனதில் மகிழ்ச்சியான நினைவுகளைத் தருவதாக அமைந்தது.



இந்த நிகழ்ச்சியின் வழி காரைக்குடி அழகப்பா பல்கலைகழகப் பேராசிரியர்கள் டாக்டர் சந்திரன், டாக்டர்.கண்ணன் இன்னும்பேராசிரியர்கள் பலரது அறிமுகமும் எனக்கு ஏற்பட்டது. அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில் அவர்கள் மாணவர்களுக்காக செய்து வரும் திட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.  இந்த இனிய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த நண்பர் காளைராசனுக்கு எனது நன்றிகளை இப்பதிவில் தெரிவித்துக் கொள்வது கடமைக்காக அல்ல என்பதை அவர் அறிவார்.


தொடரும்...
சுபா

Sunday, December 16, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 17


காரைக்குடியில் இரண்டாம் நாள் தமிழ் மரபு அறக்கட்டளையும் அழகப்பா பல்கலைக்கழகமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் நிகழ இருந்தது. காலை பத்து மணிக்குக் கருத்தரங்கம் தொடங்குவதாக ஏற்பாடாகி இருந்தது. கருத்தரங்கம் செல்வதற்கு முன்னர் கோயில் தரிசனம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் காளைராசன்.



அரியக்குடி பெருமாள் கோயில் தான் அது. பெருமாள் கோயில் என்றாலே நம் கண்ணனுக்கு மகிழ்ச்சி. அவர் முகமெல்லாம் புன்னகையுடன் அரியக்குடி பெருமாளைச் சேவிக்கச் செல்கின்றோம் என்ற பூரிப்பில் அன்று காலை இருந்தார். நான் பாலு, கண்ணன் மூவருமே காலையிலேயே தயாரானவுடன் எங்களை காளைராசன் வாகனத்தோடு வந்து அழைத்துச்  சென்றார்.





அரியக்குடி என்றாலே பெருமாள் கோயிலும் சங்கீத வித்வான் சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரும் ஞாபகத்திற்கு வராமல் இருக்க முடியாது. சங்கீதத்தில் சாதனை படைத்தவர் அவர். (அவரது சாமஜ வரதா என்ற பாடல் சுத்தசாவேரி ராகத்தில் கேட்டுப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=Ibfewrcwbaw )

காலை எட்டு மணி வாக்கிலேயே கோயிலை அடைந்து விட்டோம். பழமையான கோயில். வெளியே தோற்றத்தில் சிறிதாகத் தெரியும் கோயில் உள்ளே செல்ல செல்ல நீண்டு கொண்டும் விரிவாகியும் ப்ரமிக்க வைத்தது. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தைப் ப்ரதிபலிக்கும் வைஷ்ண சின்னங்கள் கோயில் முழுதும் நிறைந்திருக்கின்றன.  இந்தக் கோயில் நிர்மானிப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட செட்டியார்களின் உருவச் சிலைகளும் பதிக்கப்பட்டிருக்கின்றன.



சிறுகுளத்துடையான் முருகன் செட்டியார் மகன் சேவுகன் செட்டியார்

இந்தச் சேவுகன் செட்டியார் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தராக இருந்திருக்கின்றார். இவரே உடையவரால் ஆராதிக்கப்பட்டதிருவேங்கடமுடையான் சிலையை இங்கே கொண்டு வந்து இக்கோயிலை கட்டி அமைத்ததாக தினமலர் பதிவு குறிப்பிடுகின்றது.  

தென் திருப்பதி என்றும் சொல்லப்படும் இந்த ஆலயத்தின் மூலவர் திருவேங்கடமுடையான்; தாயார் அலமேலு மங்கை. கோயிலின் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து ஆலயத்தின் கலை நேர்த்தியுடன் அமைந்திருந்த சிற்பங்களைக் கண்டு ரசித்தோம்.



இந்த ஆலயத்தின் மூலைக் கருடன் சின்னம் சிறப்பு வாய்ந்தது. எங்களை அங்கும் அழைத்துச் சென்று மூலைக் கருடனைக் காட்டி வணங்கிக் கொள்ளச் செய்தார் காளைராசன்.

ஆலயத்தின் வாசல் புறத்தில் நேர்த்தியான ஒரு சிறு தோட்டத்தை ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அங்கே செழித்து வளர்ந்திருந்த பச்சை பசேலென்ற புல் தரையும் அங்கு தாய் பசுவிடம் பால் குடித்துக் கொண்டிருந்த கன்றையும் பார்த்து நாங்கள் நால்வருமே எங்கள் மனதைப் பறி கொடுத்தோம். தாய்மை பரிவுடன் அந்தப் பசு தன் கன்றை பார்க்கும் பார்வையில் இறையருளின் கருணையையும் அனபையும் நாங்கள் உணர்ந்து மகிழ்ந்தோம்.



ஆலயத்தின் வெளிப்புறத்தில் தெப்பக்குளம் ஒன்றும் இருக்கின்றது. இயற்கை சூழல் அந்தக் காலை பொழுதில் மனதிற்கு மிக இதமாக அமைந்திருந்தது. அந்த எழில் மிகு சூழலும் இறை தரிசனமும் எங்கள் பணிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாக உணர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தினோம்.


தொடரும்...

அன்புடன்
சுபா

Saturday, December 15, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 16


காரைக்குடிக்கு வந்து விட்டு செட்டி நாட்டு சேலை வாங்கிச் செல்லாமல் போவதற்கில்லை என்று என் மனதிற்குள் முடிவெடுத்து விட்டேன். காரைக்குடியை நெருங்கும் போதே மணி 7க்கும் மேலாகி விட்டது. டாக்டர் வள்ளியிடம் என் மனதில் உள்ள ஆசையை தெரிவித்தேன். அவருக்கும் உடன் வர ஆசை. ஆனால் நேரம் குறைவாக இருக்கின்றதே என்று வருத்தம். எனக்கு 30 நிமிடம் கிடைத்தால் போதும் தேவையான சேலைகளை வாங்கி விடுவேன் என்று சொன்னேன். அவர் நம்பவில்லை. சரி உங்கள் ஆசையை நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று சொல்லி காளைராசனையும் கண்ணனையும் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விட்டு விட்டு அவர்கள் காரிலேயே கடைத்தெருவுக்குச் சென்று வருவது என்று முடிவெடுத்தோம்.

கடைத்தெருவுக்கு அருகிலேயே அவர்கள் வீடும் இருந்ததால் நாங்கள் சாலையில் இறங்கிக் கொண்டு வாகனத்தை திருப்பி அனுப்பி விட்டோம். எங்களுக்காகக் காலையிலிருந்து வாகனமோட்டிய வாகனமோட்டிக்கும் ஓய்வு தேவையில்லையா?

சாலையில் பல கடைகள் அதற்குள் சாத்தி விட்டார்கள். சற்று நடந்து வருகையில் இரண்டு பெரிய கடைகள் இருந்தன. ஒன்றில் நுழைந்தோம். எனக்கு எப்போதுமே பிடித்தது கைத்தறி சேலைகள் தான். அதனால் எனக்கு கைத்தறி சேலைகள் சிலவற்றை காட்டச் சொன்னேன். அவர் சட சட வென்று பல சேலைகளை அள்ளிக் குவித்து விட்டார்.

மனதில் சுங்குடி சேலை வாங்க வேண்டும் என்றும் எண்ணமிருந்தது. ஆனால் எத்தனை சேலைகளைத் தான் வாங்குவது? சுங்குடிச் சேலையை எடுத்துக் காட்டச் சொன்னேன். அதில்  20 வகைகள் எடுத்துப் போட்டார். அதில் மனதைக் கவர்ந்த  ஒரு நீல நிறச் சேலையை உடனே எடுத்துக் கொண்டேன். அடுத்து எனக்கு செட்டி நாட்டு கைத்தறியைக் காட்டுங்கள் அது தான் முக்கியமாக வேண்டும் என்று சற்று அழுத்திச் சொல்ல உடனே சில சேலைகளை எடுத்து வைத்தார்.

என் ரசனைக்கேற்ற சேலைகள். அதில் ஒரே டிசைனில் மூன்று சேலைகள் எடுத்துக் கொண்டேன். எனக்கு ஒன்றும் ஸ்டெல்லாவிற்கு ஒன்றும் டாக்டர்.பத்மாவிற்கு ஒன்றும் என்று மூன்று சேலைகள் ஒரே டிசைனில் வெவ்வேறு வர்ணங்களில். பின்னர் மேலும் ஒரு சேலை என் கண்களை மிகக் கவர்ந்தது. அழுத்தமான நீலத்தில் வெளிர் நீல நிறத்து செட்டி நாட்டுக் கைத்தறி சேலை. அதனையும் எடுத்துக் கொண்டேன். ஒரு சுங்குடி சேலையும், 4 செட்டிநாட்டு கைத்தறிகளும் எடுத்துக் கொண்டு அவரிடம் பில்லை கொடுத்து பணம் கட்டும் போது 20 நிமிடம் தான் ஆகியிருந்தது. டாக்டர் வள்ளிக்கு ஒரே ஆச்சரியம். இவ்வளவு சீக்கிரத்தில் 5 அழகான சேலைகளை தேர்ந்தெடுத்து விட்டீர்களே என்று சொல்லிக் கொண்டிருந்தார். மனதில் என்ன சேலை வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து வைத்திருக்கும் போது அதே வகையில் தென்பட்டால் உடனே எடுத்துக் கொள்ள வேண்டியது தானே..:-)))

செட்டி நாட்டு கைத்தறி சேலைகள் மிக மெண்மையானவை. அழகான வடிவத்திலும் அமைந்தவை. விலையும் மலிவு. சென்னையை விட காரைக்குடியிலேயே இன்னும் குறைந்த மலிவான விலைக்குள் நல்ல சேலைகளை எடுக்க முடிகின்றது.

சேலை வாங்கி வந்தவுடனேயே  டாக்டர்.வள்ளி அங்கேயே ஒரு தெரிந்த ஆட்டோக்காரரை பார்த்து என்னை பத்திரமாக விருந்தினர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார். எனது காரைக்குடி பயணத்தின் முதல் நாள் இப்படி எல்லா வகையிலும் திருப்தி அளிப்பதாக அமைந்ததில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.

ஆசையாக வாங்கி வந்த ஒரே சுங்குடி சேலையை சென்னையில் நீண்ட நாள் சந்திக்காமல் இருந்து திடீரென சந்தித்த ஒரு நீண்ட நாள் தோழிக்கு பரிசளித்து விட்டேன்.


ஸ்டெல்லா, சுபா, டாக்டர்.பத்மா

இந்தக் காரைக்குடி செட்டிநாட்டு கைத்தறி சேலையை  டாக்டர்.பத்மா, ஸ்டெல்லா, நான் மூவருமே கடந்த சென்னை புத்தக கண்காட்சி நாளில் உடுத்தியிருந்தோம். ஆண்டோ பீட்டர் எங்களை ஒரு புகைப்படம் எடுத்தார். எல்லாம் நினைவுகளில் மறையாமல் இருக்கின்றன.

தொடரும்...


அன்புடன்
சுபா

Sunday, December 9, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 15

தமிழ் நாட்டில் களப்பணி அனுவங்கள் என்றுமே மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுப்பவை. இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். தேவகோட்டையில் இருந்த அன்றைய மகிழ்ச்சி என் மணக்கண்ணில் வந்து போகின்றது. 

நீளமான சாப்பாட்டு மேசை. அதில் வந்திருந்த எங்கள் அனைவரையும் கூப்பிட்டு சாப்பிட அமர்த்தி விட்டார்கள். பெரிய வட்டமான சாப்பாட்டு தட்டு எங்களுக்கு. அதில் வரிசையாக ஒவ்வொன்றாக உணவு வகைகள் வந்து சேர்ந்தன. ஜமீந்தார் வீட்டுப் பெண்மணிகள் சட் சட்டென்று அந்த தட்டை நிறைத்ததே கண் கொள்ளா காட்சி. முதலில் கொழுக்கட்டை. அதோடு ப்ரெட் கட்லெட், தோசை, அதற்கு சாம்பார், சட்னி வகைகள், மிளகாய் துவையல், பொடி. இவையெல்லாம் போதாதென்று மக்கரோணி வருவல் வேறு.

Inline image 1

அந்தக் கொழுக்கட்டையின் அழகு இருக்கின்றதே... என்ன சொல்வது? வழு வழுப்பான மேல் பாகம். தயாராகி வந்தவுடன் சொட்டு எண்ணையோ நெய்யோ தேய்த்திருப்பார்கள் போல. பள பளவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளே பருப்பு பூரணம். பாதி வெடித்து தெரிந்த அந்தக் கொளுக்கட்டையைப் பார்த்ததும் முன்னர் எங்கள் அம்மா செய்யும் மோதகம் ஞாபகம் வந்தது. அதில் வட்ட வடிவத்தில் பூரணத்தை உள்ளே வைத்து அம்மா செய்வார்கள். ஆனாலும் இந்தப் பளிச்சிடும் வெள்ளையை நான் பார்த்ததில்லை. அவ்வளவு அழகு.  அந்த கொழுக்கட்டையை சமோசா செய்வது போன்ற வடிவில் செய்து நேர்த்தியாக அதனை மடித்திருந்த விதமும்  கொழுக்கட்டையின் கவர்ச்சியை அதிகரித்தது. நான் எத்தனை கொழுக்கட்டைகள் அன்று சாப்பிட்டேன் என்று தெரியாது. ஆனால் இரண்டுக்கும் மேல் சாப்பிட்டேன் என்பது ஞாபகம் இருக்கின்றது.

Inline image 2

மக்கரோணி இத்தாலியன் உணவு ஆயிற்றே. அது எப்படி காரைக்குடிக்கு வந்தது என்று வியந்து கேட்டால், எங்க செட்டி நாட்டிலே மக்கரோணி 1940லிருந்தே வழக்கத்திலே இருக்கே" என்று ஒரு அதிசய செய்தியை சொல்லி வைத்தார் அந்த வீட்டுப் பெண்மணி. இது எப்படி சாத்தியமானது என்று ஆச்சர்யமாக இருந்தது. பர்மாவுக்கான இவர்களது போக்குவரத்தினாலும், தொடர்ந்த பல கடல் பயணங்களின் தாக்கத்தாலும் இந்த உணவு அவர்கள் உணவு பாரம்பரியத்தில் இணைந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. அதோடு அதை சமைத்திருந்த விதம் மலேசிய மீ கோரெங், சார் கொய் தியாவ் வகை நூடல் பிரட்டல் வகையை ஞாபகப் படுத்துவதாக இருந்தமை இது அவர்களின் வெளி நாட்டு தொடர்பின் விளைவு என்பதை மிகத் தெளிவாகக் காட்டியது.

Inline image 3

சுடச் சுட தோசை தட்டில் வந்து விழுந்தது. நெய்யில் பள பளக்கும் தோசை. அதற்கு சட்னி வகைகளும் சாம்பாரும் என தட்டில் சேர, அதனையும் விடாமல் சாப்பிட ஆரம்பித்தேன். சூடான தோசை அதற்குக் கெட்டியான தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி என்றால் நான் எல்லாவற்றையும் மறந்து  அந்தச் சுவையை ரசிப்பதிலேயே என் மனம் செல்லும். அதிலும் அன்றைக்கோ நல்ல அலைச்சல் வேறு. மதியம் குன்றக்குடியில் சாப்பிட்டிருந்தமையால் முதலில் பசி தோன்றவில்லை. ஆனால் இந்தக் கண்களைக் வரும் வாசனை நிறைந்த உணவு வகைகளைப் பார்த்த பின்னர் பசி ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

Inline image 4

ஜெர்மனியில் இலங்கைத் தமிழர்கள் வீடுகளில் கட்லெட் என்பது பொதுவாக எல்லா விருந்து வைபவங்களிலும் இருக்கும்.  தமிழக நண்பர்கள் வீட்டில் பொதுவாக இதனை நான் சுவைத்ததில்லை.இந்த ப்ரெட் கட்லெட் பொதுவாக நான் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு அல்ல. ஸ்பெயின் மற்றும் அதன் தீவுகளான கனேரி தீவுகளில் இவ்வகை உருளைக்கிழங்கு கட்லெட்கள் சற்று ப்ரசித்தி. எனது லா பல்மா தொடரில் கூட க்ரோக்கெட் பற்றி சொல்லியிருந்தேன். அதுவும் இவ்வகையான ஒரு உணவு வகையே. பல்வேறு நாடுகளில் வழக்கில் உள்ள உணவு வகைகள் மற்ற பிர நாடுகளுக்குச் செல்லும் போது அதில் சில மாற்றங்களுடன் உள்ளூர் உணவு பழக்கத்திலும் சேர்ந்து கொள்கின்றது என்பதற்கு இங்கே நாங்கள் சுவைத்த மக்கரோணியும்  கட்லெட்டும் நல்ல உதாரணம். கண்களுக்குக் கவர்ச்சியாக இருந்த அந்தப் ரெட் கட்லெடில் உதாரணத்திற்கு ஒன்றினை சாப்பிட்டு சுவைத்தேன். நல்ல சுவை. 

Inline image 5

இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் இறுதியில் காப்பி வாங்கி குடிக்காமல் எனது சாப்பாடு என்றும் முடியாது. ஆக ஆசைக்கு மீண்டும் ஒரு முறை காப்பியைக் கேட்டு வாங்கி அருந்தினேன். தேவகோட்டை ஜமீந்தார் வீட்டு உபசரிப்பில் மனமும் நிறைந்தது. வயிறும் நிறைந்தது.

அப்போதே ஆறு மணியை நெறுங்கிக் கொண்டிருந்தது. தேவகோட்டையிலிருந்து புறப்பட்டால் தான் தக்க சமயத்தில் காரைக்குடி பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை அடைய முடியும் என்பதோடு மறு நாள் நிகழ்ச்சிகளைப் பற்றி திட்டமிட முடியும். ஆக தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தினரிடம் எங்கள் நன்றியை தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டோம். 

மறு நாள் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் ஏற்பாடாகியிருந்தது. அதற்கு முன்னர் கோயில் வழிபாட்டினை காளைராசன் ஏற்பாடு செய்திருந்தார். மாலை ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியும் வேறு. அதற்கு மறு நாள், அதாவது மூன்றாம் நாள் மற்ற பிற திட்டங்கள் மனதில் இருந்தன. அதோடு மூன்றாம் நாள் மாலை நான்காரைக்குடியிலிருந்து சென்னை புறப்பட வேண்டிய நிலையும் இருந்தது. 

இதில் எப்போது நான் காரைக்குடி கடை தெருவிற்குச் சென்று செட்டி நாட்டு சேலையை வாங்குவது என்ற ஒரு கவலை மனதில் வர ஆரம்பித்தது.எப்படியாகினும் இன்றே அதனையும் முடித்து விட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

தொடரும்.....

சுபா

Saturday, December 8, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 14


தேவகோட்டைக்குச் செல்லும் பாதை மிக அழகானது. குறுகலான ஒரு வாகனம் மட்டுமே செல்லும் சாலை தான் என்றாலும் பயணத்தை ரசிக்கும் படியான சூழல் இருந்தது. சாலையில் அதிகமான வாகணங்கள் இல்லை. சாலையின் இரு பக்கங்களிலும் புளிய மரங்கள். புளிய மரத்தின் இலைகளின் பசுமை மனதில் இருந்த களைப்பை நீக்கின. பாதை நெடுகிலும் இப்படி புளிய மரங்களை நட்டு வைத்த அந்தப் புண்ணியவான்கள் யார் என்று கேட்டபோது சிவகங்கை சமஸ்தானத்தின் ஏற்பாடு அது என்று டாக்டர்.வள்ளியும் காளைராசனும் விளக்கியதில் தெரிந்து கொண்டேன்.

இந்தப் புளிய மரங்கள் மிகப் பழமையானவை. நீண்ட வயதைக் கொண்டவையாக நிச்சயம் இருக்க வேண்டும். மரங்கள் நட்டு வைத்து இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும் என்று அப்போது இருந்த அந்த மனப்பாங்கு இன்று தமிழகத்தில் எங்கே சென்றது? எங்கேயாவது ஓரிருவர் மரங்கள் நட்டு அவ்வப்போது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் உண்டு என்ற நிலையைத் தானே இப்போது காண்கின்றோம். இருக்கின்ற மரங்களைச் சாலையை பராமரிக்கின்றேன் பேர்வழி என்று வெட்டிப் போடாமல் இருந்தாலே போது சாமி என்று எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்ளும் நிலை தானே இப்போது உள்ளது.

அந்த ரம்மியமான சூழலிலேயே பயணித்து தேவகோட்டையை அடைந்தோம். வீட்டை அடைவதற்குள் திரு. ராமகிருஷ்ணன் (ஜமீந்தார்) எங்களுக்கு இடைக்கிடையே தொலைபேசியில் அழைத்து எங்கேயிருக்கின்றோம், ஏதும் ப்ரச்சனையா எனக் கேட்டு நாங்கள் நல்ல படியாக ஜமீன் வீட்டை வந்தடைய உதவினார்.

திரு.ராமகிருஷ்ணன் மிக அன்பான மனிதர். வீட்டில் சில பெண்மணிகளும் ஒரு வேலையாள் ஒருவர் மட்டுமே இருந்தனர்.

நாங்கள் வந்து சேரவும் அங்கே பாலுவும் மைக்கலும் வந்து சேரவும் சரியாக இருந்தது. திரு.மைக்கல் எனக்கு காளைராசன் வழி அறிமுகமானவர். அன்று தான் முதன் முதலில் பார்க்கின்றேன். உடனே அன்புடன் பேசிப் பழகும் நல்ல குணம் கொண்ட மனிதர். பாலு தனது அன்றைய செய்திகளையெல்லாம் என்னிடம் சொல்லி தகவல் பரிமாறிக் கொண்டார். மைக்கலும் பாலுவும் மாத்திரம் நன்கு குளித்து பளிச்சென்று இருக்க எங்கள் களப்பணி கூட்டமோ வேர்த்து  முகமெல்லாம் வாடிப்போய் இருந்தோம். ஒரு ஜமீந்தார் வீட்டிற்கு வரும் கோலத்தில் நாங்கள் இல்லையே என நினைத்து சற்று தயக்கம் மனதில் வரத்தான் செய்தது. ஆனால் அந்தத் தயக்கத்தையெல்லாம் மறக்கும் படி செய்தது திரு.ராமகிருஷ்ணனின் குடும்பத்தாரின் வரவேற்பு.


திரு.ராமகிருஷ்ணன் (வேஷ்டி அணிந்திருப்பவர்), பாலு, மைக்கல், காளைராசன், நா.கண்ணன்

தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி ஏற்கனவே திவாகர் விளக்கியிருந்தமையால் எங்கள் நோக்கம் அறிந்திருந்திருந்தார்கள். நான் வீடு முழுக்கச் சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கினார். வீட்டினை வீடியோ பதிவு ஒன்று செய்து கொண்டேன். இருட்டுவதற்குள் செய்து விடுவது நல்லது என்பதால் வந்த உடனேயே என் வேலையைத் தொடங்கி விட்டேன்.

தேவகோட்டை ஜமீன் மாளிகை பதிவு மண்ணின் குரலில் வெளிவந்த செய்தியை மின் தமிழில் இங்கே வாசிக்கலாம். https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/hNrFWGnZYwQ



சுபா, ஜமீந்தார் வீட்டுப் பெண்மணி, டாக்டர்.வள்ளி

அந்த ஜமீன் வீட்டில் எத்தனை எத்தனையோ அரசாங்க விஷயங்கள் நடந்திருக்கும். பல அரசியல் கூட்டங்கள் நடந்திருக்கும். பல அரச வம்சத்தினர், ஜமீன் வம்சத்தினர் வந்து போயிருப்பர் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது எழுந்த வியப்பும் அங்கு வந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தமையை நினைத்து மன மகிழ்ச்சியும் அத்தருணத்தில் எனக்கு ஏற்பட்டது. இதேபோலத்தான் எட்டயபுர ஜமீந்தாரின் மாளிகையில் நான் சுற்றி வந்த போதும் உணர்ந்தேன். எனது எட்டயபுர பயணக் கட்டுரைப்பதிவுகளை இதுவரை வாசித்திராதவர்கள் இங்கே சென்று அதனை வாசிக்கலாம்.

அன்பான உபசரிப்பு. அதிலும் நண்பர்களோடு கூடி நின்று பேசி மகிழ்வதும் வேறு சேர்ந்து கொண்டதால் எங்களுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை. எனது வீடியோ பதிவு முடிந்தவுடனேயே எங்களுக்கு பலத்த விருந்துபசரிப்பு.

அப்பப்பா.. வியந்து போனேன் அந்த உபசரிப்பில். அதனை ஒரு தனி பதிவாக அடுத்த பதிவில் நாளை சொல்கிறேன்.. காத்திருங்கள்.


தொடரும்...
சுபா

Monday, December 3, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 13


ஆத்தங்குடியை அடையும் போது மணி மதியம்  2க்கு மேல் இருக்கும். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.

செட்டிநாட்டுக்குச் செல்வது என்று முடிவான போதே, அதாவது 2011ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே நான், ராஜம் அம்மா, மீனா, காளைராசன் ஆகியோர் என்னென்ன இடங்களைச் சென்று நாங்கள் பார்க்க வேண்டும் என பட்டியலிட்டபோது, இந்த ஆத்தங்குடிக்கானப் பயணமும் அதில் இணைந்து கொண்டது. ஆத்தங்குடிக்கு நாங்கள் வரக்காரணமாக அமைந்தது அங்கிருக்கும் செட்டிநாட்டு கலையைப் பிரதிபலித்து நிற்கும் ஓர் இல்லம் தான்.




இந்தச் செட்டி நாட்டு வீட்டிற்கு ஏற்கனவே சென்று வந்த டாகடர்.ராஜம்  விவரமாக ஒரு பதிவு ஒன்றினை மின்தமிழில் எழுதியிருந்தார்கள். அதனை இங்கே காணலாம்.  அதனால் இந்த வீட்டிற்குச் சென்று நேரில் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் சற்று அதிகமாக இருந்தது.

ஆக வீட்டு வாசலில் ஓர் ஓரமாக டாக்டர்.வள்ளியின் வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றோம். வீட்டில் யாரும் தற்சமயம் தங்கியில்லை. ஆனால் பாதுகாப்பிற்காக இரண்டு பெரியவரகள் நின்று கொண்டிருந்தனர். வந்த எங்களை வரவேற்று  அருந்த தண்ணீர் வேண்டுமா என்று கேட்டும் உபசரித்தனர். அவர்களுக்கு நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நாங்கள் இந்த வீட்டின் கலை அழகை புகைப்படங்களும் வீடியோ பதிவும் செய்ய வந்திருக்கின்றோம் என்றும் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே சென்று வீட்டை சுற்றிப் பார்த்தோம்.

வீடு முழுக்க பர்மா தேக்கு மரங்களால் செய்யப்பட்ட தூண்கள். ஜப்பான் பளிங்குகள் கூரைப் பகுதியை அலங்கரிக்க இத்தாலிய பளிங்குகள் வீட்டின் தரைப்பகுதியை அலங்கரித்துக் கொண்டிருந்தன.



நீண்ட வாயில் பகுதி. அதனை கடந்து முற்றம். அங்கே ஒவ்வொரு கதவிலும் ஒரு ஓவியம். குழந்தை கண்ணன் பிறந்த கதையின்  வரலாறு ஓவியமாக கதவுகளில் அலங்கரித்துக் கொண்டிருந்தன. நானும் காளைராசனும் கண்ணனும் அவற்றை முடிந்த வரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

வீட்டின் வளவு எனக் குறிப்பிடப்படும் பகுதிக்குச் சென்று அங்குள்ள அறைகள், அறைகளுக்கு முன் உள்ள ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றையும் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக ஆட்டுக்கல், அம்மிக்கல். குடும்பமாக அனைவரும் சேர்ந்தே இருந்தாலும் சமையல் அவரவருக்கு தனித்தனியாகத்தான் நடக்கும் என்று டாக்டர்.வள்ளி விளக்கிச் சொன்னார்.



அந்தக் குட்டி அரண்மனை போன்ற அந்த வீட்டில் இருந்து பார்த்து ரசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். வீட்டின் முழு ஒலிப்பதிவையும் இன்றைய மண்ணின் குரல் வெளியீட்டில் வீடியோ பதிவாக வெளியிட்டிருக்கின்றேன். அதனை இங்கே காணலாம். http://video-thf.blogspot.de/2012/12/blog-post_4.html

வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே பேட்டரி காலியாகிவிட்டதால்` அதிகமாக பதிவு செய்ய இயலவில்லையே என்ற வருத்தம் எனக்கு. புகைப்படங்களை ஏற்கனவே காளைராசன் மின்தமிழில் வழங்கியிருந்தார். நானும் சில படங்களை விரைவில் தனி இழையில் வெளியிடுவேன்.

அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் அடுத்ததாக தேவகோட்டை செல்ல வேண்டும். ஆனால் அதற்குள் வெயிலின் கடுமையால் எங்கள் அனைவருக்குமே கடும் தாகம். அங்கிருந்து சற்று நடந்து அருகில் தென்பட்ட ஒரு சிறு கடையில் குடிக்க குளிர்பானம் கேட்டு வாங்கிப் பருகினோம். ஒரு இளம் பெண் தான் கடையை நடத்திக் கொண்டிருக்கின்றார். அவரோடு கொஞ்சம் பேசினோம். அப்பப்பா.. ஒரே பேச்சு தான். வாயாடிப் பெண். எங்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு அசத்தி விட்டாள். அவளுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி முடிப்பதற்குள் மேலும் தாகம் எடுக்க மறுபடியும் ஒரு குளிர்பானம் வாங்கி அருந்தினேன். சிரித்து சிரித்து பேசி எங்களை வரவேற்று அமரச் செய்து குளிர்பானம் வழங்கிய பெண்ணின் நினைவு இன்று மனதில் இருக்கின்றது.

இனி அடுத்த இடம் தேவகோட்டை. அந்த ஊரை நோக்கி எங்கள் வாகனம் புறப்பட்டது.

இந்தப் பதிவுக்கு மேலும் தகவல வழங்கும் இரண்டு ஒலிப்பதிவு பேட்டிகள் முன்னரே மண்னின் குரலில் வெளிவந்துள்ளன. அவற்றை கேட்க கீழ்க்காணும் வலைப்பக்கம் செல்லலாம்.
நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள் - 2 http://voiceofthf.blogspot.de/2012/02/2_17.html
நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள் - 1 http://voiceofthf.blogspot.de/2012/02/blog-post_04.html


தொடரும்...
சுபா

Saturday, November 24, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 12


சமணப்படுகைகள் அமைந்திருக்கின்ற குகை, அதன் சுற்றுச் சூழல் அனைத்துமே மிக ரம்மியமாக உள்ளன. இதுவே மற்ற ஆசிய நாடுகளாகவோ ஐரோப்பிய நாடுகளாகவோ இருந்தால் இந்தக் குகையைப் பாதுகாத்து சுற்றுச் சூழலையும் பாதுகாத்து இந்த எழில் மிக்க இடத்தை மேலும் கொஞ்சம் சீராக்கி பூங்காவனமாக்கி சுற்றுப் பயணிகள் வந்து செல்லும் இடமாக ப்ரகடனப்படுத்தியிருப்பர். இந்த எண்ணங்கள் அந்த நேரத்தில் மனதில் வந்து போயின.

வெயிலும் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை அடுத்து நாங்கள் மேலும் இரண்டு இடங்களுக்குச் செல்ல வேண்டிய திட்டமும் இருந்தது. எங்களுக்கு மதிய உணவு தாயார் செய்து வைத்திருப்பதாக காலையிலேயே குன்றக்குடி திருமடத்தில் சொல்லியிருந்தார்கள். ஆக உடன் மீண்டும் குன்றக்குடி ஆதீன மடத்திற்குத் திரும்பி அங்கே மதிய உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என புறப்பட்டோம்.

மீண்டும் நடந்தே மடத்தின் உணவு பரிமாறப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் வருவதை கவனித்து எங்களை அன்புடன் வரவேற்று உணவு சாப்பிட அழைத்துச் சென்றார் மடத்தில் நாங்கள் சந்தித்து உரையாடிய புலவர் பரமகுரு அவர்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்தப் பாகுபாடும் இன்றி ஒரே இடத்தில் உணவு பரிமாறப்படுவதைக் கவனித்தேன்.இது  மனதிற்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது.



உணவு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. சாம்பார், கீரை பொரியல்,  காய்கறி பொரியல் வத்தல் குழம்பு, ரசம், தயிர் என விதம் விதமாக உணவு தயாரித்திருந்தார்கள். எங்களுடன் திருமடத்தின் பெரியவர்களும் இணைந்து கொண்டார்கள். மடத்தில் பணிபுரியும் ஒரு வயதான பெண்மனி எங்களுக்கு பரிமாறினார்கள். உணவின் சுவை மிகப் ப்ரமாதமாக இருந்தது. அனைவரும் பேசிக்கொண்டே உணவை சுவைத்து சாப்பிட்டோம்.



இப்படி குன்றக்குடி மடத்தில் அமர்ந்து மடத்தின் பெரியோர்களுடன்  சேர்ந்து சாப்பிடுவதும் இறைவனின் திருவருள் தான் போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். உணவை முடித்து மடத்துப் பெரியோர்களிடம் சொல்லிக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம். இப்போது எங்கள் வாகனம் ஆத்தங்குடி நோக்கி புறப்பட்டது.

தொடரும்....


அன்புடன்
சுபா

Saturday, November 17, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 11


சமணப்படுகைகள் உள்ள பாறையைக் கண்டு வர செல்லும் போது தெப்பக்குளத்தை மீண்டும் கடந்து சென்றோம். தெப்பக்குளத்தில் வானின் நீல நிறமும் அதில் நிறைந்திருக்கும் மேகங்களின் பிரதிபலிப்பும் கண்களுக்கு விருந்தாகிப் போக அதனை எனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன்.

Inline image 2

சமணப்படுகைகள் இருக்கும் பாறை இந்தக் கோயிலிருந்து சற்று தூரம்தான் அதனால் நடந்தே சென்று விடுவோம் என்று சொல்லி நடக்கலானோம். அருகாமையில் தான் இப்பாறைகள் இருக்கின்றன. வெயில் அதிகரித்ததனால் சற்று அயர்ச்சியை தர ஆரம்பித்தது. அதோடு பாறைகளின் மேல் ஏற சற்று சிரமமாகிப்போனது டாக்டர் வள்ளி அவர்களுக்கு. ஆனாலும் எல்லோருமாகச் சேர்ந்தே நடந்து சென்றோம். 

பாறை பகுதியிலிருந்து குன்றக்குடி குடவரைக் கோயில் முழுதுமாக மிக அழகாக தெரிந்தது. சிறிய கோயிலாகினும் எவ்வளவு கலை நயத்துடன் இதனை கட்டியிருக்கின்றனர் என்ற பிரமிப்பு  மனதில் எழுந்தது. 

Inline image 3

பாறையைக் கடந்து மேலே சென்று அக்கோயில் இருக்கும் பகுதியை அடைந்த்தோம். முன்னர் சமணப்பள்ளியாக இருந்த அவ்விடம் தற்சமயம் ஒரு சிறு கோயில் போல இருக்கின்றது. முதலில் தெரிவது ஒரு சிறிய பிள்ளையார் கோயில். இதனைக் கடந்து சென்றால் சமணப்பள்ளி அமைந்துள்ள குகையை அடையலாம்.

வாசலில் பைரவர் சிலை வைத்து வேல் நட்டு வைத்து தற்சமயம் கூட வழிபாடு நடைபெற்று வருவதற்கான தடயங்கள் தெரிந்தன. வாசல் பகுதியைக் கடந்து குகைக்குள் சென்றோம். அங்கே வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் சமணப்படுகைகளைக் காட்டி எனக்கு விளக்கமளித்தார் டாக்டர்.வள்ளி. இந்தப் பதிவை இன்றைய மண்ணின் குரலில் இணைத்து வெளியிட்டிருக்கின்றேன். அதனை http://voiceofthf.blogspot.de/2012/11/blog-post_17.html சென்று கேட்கலாம். முழு பதிவையும் இங்கே காணலாம்.
 
பாறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. கண்ணாடியில் பார்த்தால் வாசிக்கக்கூடிய அமைப்பில் திருப்பி எழுதப்பட்ட எழுத்துக்கள் இவை. பாறையைச் சுற்றி அமைத்திருக்கும் காடி மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருப்பதையும் பார்த்தோம்.

சமணப்படுகைகள் உள்ள பகுதிகளில் பலர் கிறுக்கியும் சேதப்படுத்தியும் வைத்துள்ளனர். இது கண்டிக்கப்பட வேண்டிய செயல். நமது புராதண சின்னங்களின் அருமை பெருமை தெரியாத சிலரது நடவடிக்கைகளால் இந்த வரலாற்றுச் சான்றுகள் தினம் தினம் சேதப்பட்டுக் கொண்டேயிருப்பது வேதனை அளிக்கும் விஷயம். பொது மக்களுக்கும் இவற்றை பேணிக்காக்க வேண்டிய அவசியம் இருப்பதை பல வகையில் தெளிவு படுத்த வேண்டிய கடமை நமக்குண்டு. 

இந்தக் குகை அமைந்திருக்கும் பகுதி சிறு வனமாக காட்சியளிக்கின்றது. பாறைகளில் வளர்ந்திருக்கும் மரங்கள் கொள்ளை அழகாய் சிற்பங்களைப் போலவே அமைந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 

Inline image 1

எனது அனுபவத்தில் நான் முதலில் நேரில் கண்ட ஒரு சமணப்படுகை இது தான். அந்த ஆச்சரியத்திலேயே அங்கே நின்று இயற்கையின்  எழிலை ரசித்துக் கொண்டிருந்தேன்.

தொடரும்...
அன்புடன்
சுபா

Sunday, November 11, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 10

குன்றக்குடி மடத்திலிருந்து இந்தக் குடவரை கோயில் இருக்கும் இடம் வரை செல்லும் வழிகளில் சில வீடுகளைக் கடந்து செல்ல வேண்டும். வழியில் குன்றக்குடி அருள்மிகு ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் தைப்பூசம், சித்திரா பௌர்ணமி  போன்ற விஷேஷ நாட்களில் கோலாகலமாக அலங்கரிக்கபப்ட்டு காவடி எடுப்பவர்கள் இங்கிருந்து காவடிகளைத் தூக்கிச் செல்வதும் வழக்கம் என்றும் கேள்விப்பட்டேன். இக்கோயில் பிள்ளையார்பட்டி கோயிலுடன் ஒப்பிடுகையில் சிறிய கோயில் தான். ஆனாலும் ஆலயத்தின் முன் வாசல் புறத்தில்  அமைந்துள்ள மண்டம் தான் சித்திரக் கூடமாக இருக்கின்றது. இந்த மண்டபத்தில் தீட்டப்பட்டுள்ள சித்திரங்களைப் பற்றிய பதிவு ஒன்றினை அண்மையில் மண்ணின் குரலில் வெளியிட்டிருந்தேன். இதுவரை பார்த்திராதவர்கள் இங்கே சென்று  அப்படங்களைக் காணலாம்.

கோயிலைக் கடந்து  சற்றே நடந்தால் ஒரு பெரிய கோட்டை சுவர் ஒன்றிருப்பதும் அதில் வாசல் கதவு இருப்பதும் காணத்தெரியும். இப்பகுதிக்குள் தான் குன்றக்குடி குடவரை கோயில் உள்ளது.

Inline image 1

கதவைத் திறந்து எங்களுடன் இருந்து  கோயிலை முழுதுமாக சுற்றிக் காட்டவென்று குன்றக்குடி மடத்திலிருந்து எங்களுக்கு  உதவிக்கு ஒருவரை அனுப்பியிருந்தார்கள். அவர் எங்களுடன் கோயில் முழுவதையும் சுற்றிக் காட்டியதோடு இருட்டாக  இருந்த பகுதிகளில் விளக்கை ஏற்றி வைத்து எங்களுக்குச் சிற்பங்கள் நன்கு தெரியும் வண்ணம் உதவியும் செய்தார்.

குடவரை கோயிலின் அழகு வெளியிலிருந்து பார்த்தாலும் கூட உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்ததாக உள்ளது. என்ன கலை நயம் என்று சொல்லி சொல்லி வியந்து வெளியிலேயே சிறிது நேரம் இருந்து ரசித்துக் கொண்டிருந்தோம். 

உள்ளே செல்லச் செல்ல  வியப்பு அதிகரித்தது. அவ்வளவு ப்ரமாண்டமான சிற்பங்கள். ஒரே கோயிலுக்குள் மூன்று கோயில்கள் இருக்கின்றன. துர்க்கை, சிவன், விஷ்ணு, ஹரிஹரன்  போன்ற தெய்வங்களுக்கும் சுவர்களிலேயே செதுக்கிய ப்ரமாண்டமான சிலைகள். மூலப் ப்ரகாரத்தில் சிவ லிங்க வடிவம். 

Inline image 2

இக்குடவரைக் கோயிலின் சுவர்கள் முழுக்க கல்வெட்டுக்கள் இன்றும் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. 

இக்கோயில், சுற்றுப்புறம். தெய்வ வடிவங்கள், சிற்பங்கள் கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் படங்களோடு மேலும் டாக்டர் வள்ளி அவர்கள் தரும் ஒலிப்பதிவு விளக்கமும் இவ்வாண்டின் தொடக்கத்தில் நமது வலைப்பக்கத்தில் மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்பட்டது. அவற்றைக் காணவும் ஒலிப்பதிவைக் கேட்கவும் இங்கே செல்க!

Inline image 3

கோயிலை முழுதுமாகச் சுற்றிப் பார்த்து பதிவுகளையும் மேற்கொண்ட பின்னர் நாங்கள் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு அருகாமையில் அமைந்திருக்கும்  சமணப்படுகைகளைப் பார்வையிட புறப்பட்டோம். பாறைகளைக் கடந்து நடக்க வேண்டும். வெயிலும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அனைவரும் சற்றே வேகமாக அப்பறைகள் உள்ள பகுதி நோக்கி நடக்கலானோம்.

தொடரும்..

Thursday, November 1, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 9


குன்றக்குடி திருமடத்தில் இருந்த சில மணி நேரங்களில் அத்திருமடம் செய்து வரும் பணிகள் குறித்து அறிந்து கொண்டதில் எனக்கு மனம் நிறைவாக இருந்தது. பொதுவாகவே நமது சமூகத்தில் ஹிந்து சமய திருமடங்கள் வெறும் பூஜைக்கும் சடங்குகளுக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்ற ஒரு வித பொதுமைப்படுத்தும் உண்மையற்ற மாயை பலர் மனதில் நிலைத்திருக்கின்றது. சில சாமியார்களின் சுயநலப்போக்கும் ஏமாற்றுத்தனமான நடவடிக்கைகளும் இவ்வகையான எண்ணத்தைப் பலர் மனதில் உருவாக்கி வைத்திருப்பதில் வியப்பில்லை. இதற்கு மாற்றாக சமூகப்பணிகளையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் பல ஹிந்து சமய மடங்களும் தமிழகம் மட்டுமன்றி உலகின் பல இடங்களில் இயங்கி வருகின்றன என்ற உண்மையையும் அனுபவத்தில் பார்க்கும் போது பகிர்ந்து கொள்ள வேண்டியது நமது கடமையாகின்றது. இதற்கு எடுத்துக் காட்டாகத் திகழும் குன்றக்குடி மடத்தையும் அவர்களின் சேவையையும் நாம் பரவலாக சொல்லி மகிழ்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

குன்றக்குடி திருமடத்தின் வரலாறு நூலை எனக்கு அளித்து இதனை த.ம.அ. வலைப்பக்கத்திலும் இணைத்துக் கொள்ள அனுமதி அளித்தார் அடிகளார். இதனை மின்னூலாக்கி நமது சேகரத்தில் இணைத்திருப்பதோடு இதனை முழுதுமாக தட்டச்சு செய்து நமது வலைப்பக்கத்திலும் இணைத்திருக்கின்றோம். இந்த முழு நூலையும் தட்டச்சு செய்து கொடுத்த கீதாவை நாம் பாராட்ட வேண்டும். இந்த நூலை முழுதாக இங்கே காணலாம்.

அங்கிருந்து புறப்பட்டு அருகாமையில் அமைந்திருக்கும் குன்றக்குடி குடவரை கோயிலுக்குச் சென்று வர கிளம்பினோம். மதிய உணவுக்கு மீண்டும் திருமடத்திற்கு வந்து விட வேண்டுமென்று அன்புக் கட்டளை கிடைத்திருந்ததால் உணவுக்குக் கவலையின்றி நடந்து சென்று சுற்றிப் பார்த்து விட்டு வருவோம் எனப் புறப்பட்டோம்.

இடையில் திரு.திவாகரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. காரைக்குடியில் இருக்கும் சமயத்தில் தேவகோட்டை சென்று வர வேண்டுமென்றும் அங்கு நண்பர் வெங்கடேஷின் தகப்பானாரின் வீட்டிற்குச் சென்று அதனையும் பதிவு செய்து வர வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கான ஏற்பாடுகளையும் தானே செய்து விடுவதாகவும் குறிப்பிட்டார். இதுவும் நல்ல யோசனையாக இருக்கவே மாலையில் தேவகோட்டை சென்று வருவோம் என முடிவெடுத்தோம்.

மடத்திலிருந்து குடவரை கோயில் செல்லும் பாதையில் ஒரு அழகிய தெப்பக்குளம் அமைந்திருக்கின்றது.


Inline image 3

தெப்பக்குளம் நிறைய தண்ணீர் நிறைந்திருந்தது. பச்சை பசேலென பாசி படிந்த நீர்... ஆனாலும் அங்குள்ளோர் தேவைக்குப் பயன்படுகின்றது என்பதை அங்கே சில பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதையும் துணி துவைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. குளத்தின் அழகை மிக ரசித்ததால் நாங்கள் அங்கு இருந்து படம் எடுத்துக் கொண்டோம்.


Inline image 1


"எங்களையும் போட்டோ எடுங்களேன்" என்று ஒரு பெண்மணி சொல்ல அவரிடம் சென்றோம். "போட்டோ எடுத்தால் பரவாயில்லையா,இண்டெர்னெட்டில் போடுவேன் பரவாயில்லையா" என்று கேட்க.. "எடுங்க எங்களைப் போல வருமா..? சிவகங்கை பெண்கள் தான் இந்த நாட்டிலேயே உசத்தி" என்ரறு சொல்லி எங்களிடம் சிரித்துப் பேசினார். 

Inline image 2

அந்த அம்மாளுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு நாங்கள் குடவரைக் கோயிலை நோக்கி புறப்பட்டோம்.

தொடரும்...

அன்புடன்
சுபா

Sunday, October 21, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 8

டாக்டர் வள்ளியைப் பற்றி நான் காரைக்குடிக்குச் செல்லும் வரை அதிகமாக அறிந்திருக்கவில்லை. மின்தமிழில் காளைராசன் வழங்கும் சில பதிவுகளில் மட்டுமே ஓரளவிற்கு அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டிருந்தேன். அதனால் அவரது ஆர்வம் ஈடுபாடு போன்றவை பற்றிய அடிப்படை விஷயங்கள் ஏதும் அறியாமல் இருந்தேன். அவரை சென்று காணும் போது நிச்சயம் பல விஷயங்களைக் குறிப்பாக அவரது துறை, அவரது ஆய்வு அனுபவம், சில குறிப்பிடத்தக்க சாதனைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்னியிருந்தேன். 

காலையில் வாகனத்தோடு வந்து சேர்ந்த அவரிடம் த.ம.அ பற்றி சொல்லிக் கொண்டே பேச ஆரம்பித்து நான் காரிலேயே பதிவு செய்து கொள்ளவா என்று கேட்டவுடன் என்னைப் போலவே ஆர்வத்துடன் சம்மதித்து பேசிக் கொண்டே வந்தார்கள். சில வேளைகளில் நாம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமோ என்று எனக்குத் தோன்றும் பொழுது கேட்ட்டாலும் மறுத்து விட்டு ஆர்வத்துடன் தகவல்களை வழங்கிக் கொண்டே வந்தார்கள். பேட்டியில் மாத்திரமல்ல. எங்கள் பயண திட்டத்தை வளப்படுத்தும் வகையில் முழுதுமாக ஈடுபாட்டுடன் திட்டத்தை செப்பனிட உதவியதோடு நான் அங்கிருந்த மூன்று நாட்களும் என்னுடன் முழுமையாக இருந்தார்கள். நாங்கள் செல்லும் இடங்கள் எல்லாவற்றிற்கும்.. அது காடாக இருந்தாலும்.. பாறையாக இருந்தாலும் சிறு குன்றாக இருந்தாலும் அலுக்காமல் நடந்து வந்து விளக்கம் சொல்லி என்னை மலைக்க வைத்தார் டாக்டர் வள்ளி. சாந்தமான அவரது முகமும் கணிவான பேச்சும், இனிய புன்னகையுடன் கூடிய விளக்கமும் மட்டுமன்றி என் மேல் அவர் காட்டிய அன்பும் என்னை அதிகம் கவர்ந்தன.

Inline image 1

நாங்கள் பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம் முடித்து அங்கிருந்து புறப்பட்டு குன்றக்குடி அடிகளாரைச் சந்திக்க குன்றக்குடி மடம் வந்து சேர்ந்தோம். மடத்தின் அருகாமையில் இருக்கும் மடத்திற்குச் சொந்தமான சில கட்டிடங்கள், அருகாமையில் உள்ள சில தனியார் வீடுகள் போன்றவற்றைக் காட்டி அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்து அளித்துக் கொண்டே வந்தார் டாக்டர். வள்ளி. இதனைப் பற்றிய பதிவை மண்ணின் குரலில் இங்கே வெளியிட்டுள்ளேன். http://voiceofthf.blogspot.de/2012/02/blog-post_05.html 

குன்றக்குடி மடத்தில் மடத்தைச் சார்ந்தோர் எங்களை வரவேற்று அடிகளாரிடம் அழைத்து சென்றனர். முன்னரே காளைராசன் மடத்தில் எங்கள் வருகையைக் குறிப்பிட்டு அறிவித்திருந்தமையால் அடிகளாரைச் சந்தித்து உரையாடுவதில் எந்தச் சிரமமும் எங்களுக்கு ஏற்படவில்லை. 

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருப்போம். அடிகளார் மடத்தின் செயல்பாடுகள், சமூகப்பணிகள் போன்றவற்றை மிகுந்த நட்புடனும் அன்புடனும் எங்களுடன் பரிமாறிக்கொண்டார்கள்.  த.ம.அ பணிகள் பற்றி நாங்கள் விவரித்தோம். நமது பணிகளைப் பாராட்டியதோடு மேலும் வளர்ச்சி பெற்று இப்பணிகளை நாங்கள் தொடர வேண்டும் என்றும் ஆசி கூறினார்கள். 

Inline image 2
இதில் த.ம.அ விற்காகப் பிரத்தியேகப் பேட்டி ஒன்று வேண்டும் என்று கேட்ட போது தயங்காமல் பேட்டியளித்தார். அதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்து மண்ணின் குரலில் வெளியிட்டிருக்கின்றேன். 

முதல் பகுதி:  http://voiceofthf.blogspot.de/2012/01/blog-post.html
இரண்டாம் பகுதி: http://voiceofthf.blogspot.de/2012/03/blog-post_10.html

குன்றக்குடி சைவத்திருமடம் சமூகப் பணிகளில் தன்னை முற்றும் முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் நலனுக்காக இயங்கும் ஒரு இயக்கமாகத் திகழ்கின்றது. இதன் சேவைகள் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் போது மனம் மகிழ்ந்தேன். பொது மக்கள் கல்வி மேம்பாடு, கல்வி மையம்,  சிறு தொழில், விவசாயம், தொழில் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் மக்களின் வாழ்க்கை தேவையறிந்து செயல்படும் ஒரு நிறுவனமாகத்தான் இத்திருமடம் உள்ளது.  

எனது இளம் வயதில் ஒரு இலக்கிய விழாவில் குன்றக்குடி அடிகளார் (இப்போதைய சுவாமிகளுக்கு முந்தியவர்) அவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அவரது நீண்ட இனிய தமிழ் சொற்பொழிவை கேட்டது இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது. அவ்ரைப் போலவே தற்போது மடத்தினை நிர்வாகிக்கும் சுவாமிகளும் தமிழ் புலமை நிறைந்த சிறந்த தமிழறிஞராக இருந்து கல்விக்கும் மக்களின் சமூக நலனிற்கும் தொண்டாற்றி வருகின்றார். 

தொடரும்...

அன்புடன்
சுபா

Saturday, October 6, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 7

அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை விட்டு புறப்பட்டு பிள்ளையார்பட்டிக்குப் பயணிக்கும் போதே அன்றைய நாளின் திட்டங்களை நானும் காளைராசனும் பட்டியலிட்டுக் கொண்டோம். பிள்ளையார்பட்டிக்குச் சென்று பின்னர் அருகில் உள்ள குன்றக்குடி மடம் சென்று விட்டு பின்னர் ஆத்தங்குடி வந்து அங்குள்ள செட்டி நாட்டு கலைச்சின்னமாக விளங்கும் ஒரு இல்லத்தைப் பார்த்து விட்டு பின்னர் திருப்பத்தூர் அல்லது திருமயம் சென்று வரலாம் என்பது திட்டமானது. 

இதுவே ஒரு நாள் முழுமைக்கும் போதுமானதாக இருக்கும் என்று மனதில் தோன்றியது. இடையில் வாய்ப்பமைந்தால் செட்டி நாட்டு சேலைக்கடைக்குச் சென்று எனக்கும் நண்பர்களுக்கும் சில சேலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. காளைராசனிடமும் டாக்டர்.வள்ளியிடமும் தெரிவித்திருந்தேன். இடையில் நேரம் அமைவதைப் பொறுத்து சேலைக் கடைக்கும் சென்று வரலாம் என்று திட்டமானது.


Inline image 2
பிள்ளையார்பட்டிக் கோயில்

பிள்ளையார்பட்டிக் கோவிலைப் பற்றி மலேசியாவில் இருந்த காலங்களிலேயே நான் கேள்விப்பட்டதுண்டு. மனதில் இக்கோயிலைப் பற்றி இவ்வளவு ப்ரமாண்டமாக இருக்கும் என்று நான் யோசித்துப் பார்த்ததில்லை. கோயிலைப் பார்த்து பின்னர் வழிபாடுகளை முடித்து விட்டு பின்னர் அருகில் இருந்த பிள்ளையார்பட்டி விடுதிக்குச் சென்று அங்கு காலை உணவு அருந்தி மகிழ்ந்து அங்குள்ளோரிடம் பேசிக் கொண்டிருந்தோம். இவற்றை நான் இவ்வருட ஆரம்பத்திலேயே மண்ணின் குரலில் பதிவுகளாக வெளியிட்டிருந்தேன். இதுவரை பார்த்திராதவர்கள் அவற்றைப் பார்த்தும் கேட்டும் மகிழலாம்.

1. https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/Vspj54APc4w - மண்ணின் குரல்: ஜனவரி 2012 - பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில்.

2.பிள்ளையார்பட்டி விடுதி - இங்கே எங்கள் காலை உணவை அருந்தினோம். பதிவைக் காண இங்கே செல்க.

Inline image 1

விடுதியின் வாசலில்: டாக்டர் நா.கண்ணன், டாக்டர் வள்ளி, சுபா

பிள்ளையார்பட்டிக்குச் செல்லும் வழியிலேயே டாக்டர்.வள்ளியை நகரத்தார்கள் பற்றியும் அவர்கள் வரலாறு பற்றியும், அவர்கள் கடல் கடந்து சென்று மலேசியா சிங்கை பர்மா என பல நாடுகளில் கால்பதித்து அங்கே நிறைந்த மதிப்புடனும் செல்வ வளத்துடனும் வாழ்ந்து வரும் செய்திகள் பற்றியும் கேள்விகள் கேட்டு அவரது பதில்களை ஒலிப்பதிவாகாப் பதிந்து கொண்டேன். வாகனத்தில் போகும் போது இறைச்சல் இருந்தாலும் பேசுவதற்கு மேலும் நேரம் கிடைக்குமோ என்ற சந்தேகம் வேறு எனக்கு மனதில் இருந்ததால் இப்படி பயணத்திலேயே பதிவு செய்வது என்று முடிவெடுத்துக் கொண்டேன்.  இடையிடையே வரும் தொலைபேசி அழைப்புக்களும், சாலையின் சத்தங்களும் இந்த முயற்சிக்கு தொல்லையாகத்தான் இருந்தன ஆனாலும் ஒரு வகையில் சில விஷயங்களைப் பதிவு செய்தோமே என்ற மன திருப்தி இருந்தது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலய தரிசனம் நிறைந்த மன நிறைவை எனக்கு அளித்தது. அக்கோயிலில் அமைந்துள்ள கற்பக விநாயகரின் புடைப்புச் சிற்பம் மனதை கொள்ளைக் கொள்ளும் ஒரு சிறந்த வடிவம். தெய்வ தரிசனம் முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் குன்றக்குடி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம்.

சில படங்கள் உங்களுக்காக..!

Inline image 3
கோயிலின் முன் புறத்தில் அமைந்துள்ள கடைகளில் கற்பக விநாயகர் படங்களும் சிலைகளும்


Inline image 4
பூக்கள் மாலைகளாகத் தயாராகின்றன


Inline image 5
காளைராசன் 

தொடரும்..

சுபா

Sunday, September 30, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 6


காரைக்குடியில் நான் 3 நாட்கள் இருப்பதாக திட்டமிட்டிருந்தேன். முதல் நாள் பிள்ளையார்பட்டி கோயிலுக்குச் சென்று அதன் பின்னர் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் வரலாறு பற்றி டாக்டர் வள்ளியுடன் பேசி அதனை ஒலிப்பதிவு ஆக்குதல்,  அதன் பிறகு குன்றக்குடி மடம் சென்று குன்றக்குடி அடிகளாரின் பேட்டியை தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீட்டிற்காகப் பதிவு செய்தல் என்பன அன்றைய திட்டங்களில் அடங்கியிருந்தன.

மறுநாள் தமிழ் மரபு அறக்கட்டளையும் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி இருந்தது. மூன்றாம் நாள் அருகாமையில் உள்ள சில சிற்றூர்களில் இருக்கின்ற குடவரைக் கோயில்களைச் சென்று காண்பது என்று காரைக்குடி வருவதற்கு முன்னரே நானும் காளைராசனும் இந்த மூன்று நாள் பயணத்திற்கு சில விஷயங்களைத் திட்டமிட்டிருந்தோம்.

பல்கலைக்கழக விருந்தினர் தங்கும் விடுதியில் எங்களுக்குக் காலையிலே காபிக்கு ஏற்பாடாகியிருந்தது. அந்த விருந்தினர் மாளிகையைப் பார்த்துக் கொள்ளும் ஊழியர் மிக நல்ல மனம் படைத்தவர். காலையில் கதவைத் தட்டி காபி கொடுத்து விட்டு குளிக்க சுடுநீர் சரியாக அமைந்ததா.. என எல்லாம் சௌகரியமாக எனக்கு அமைந்ததா என கேட்டு சரி செய்து கொண்டார். நான் இருந்த மூன்று நாட்களுமே என்னைப் பார்க்கும் போதெல்லாம் இவற்றை விசாரித்து எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்கும் வகையில்  பார்த்துக் கொண்டார்.

விருந்தினர் மாளிகையின் வாசலில் அமைந்துள்ள வேப்பமரமும் அந்த இளம் காலை வெயிலும் சற்றே வெயிலின் சூடு கலந்த அந்த காற்றையும் அனுபவிப்பதில் ஆர்வம் இருந்ததால் காபி சாப்பிட்டு நான் தயாரானவுடன் விரைந்து கீழே வந்து விட்டேன். சற்று நேரத்தில் பாலு தயாராகி வர அவரைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காளைராசனும் டாக்டர் வள்ளியும் வந்து சேர்ந்தனர். டாக்டர் வள்ளியும் நானும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். முகம் நிறைந்த புன்னகை கொண்டவர். தொல்லியல் அகழ்வாய்வில் மிகுந்த ஆர்வமும் களப்பணிகள் பலவும் மேற்கொண்ட அனுபவம் வாய்ந்த தமிழ் பேராசிரியர் இவர். அந்த மூன்று நாட்களும் டாக்டர் வள்ளியுடன் பல மணி நேரங்கள் பேசியிருப்பேன். எங்கள் இருவருக்குமே அவை மிக மகிழ்ச்சியான தருணங்கள்.



பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணனும் தயாராகி வர அனைவரும் டாக்டர் வள்ளியின் வாகனத்திலேயே பிள்ளையார் பட்டிக்குப் புறப்பட்டோம்.

தொடரும்...

சுபா

Friday, September 28, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 5


நாங்கள் திருச்சி பஸ் நிலையம் வந்து சேரும் போது ஏறக்குறைய இரவு பத்தரை மணியாக இருக்கலாம். பஸ் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போதே காளைராசன் கொடுத்திருந்த மாணவரின் எண்ணில் தொடர்பு கொண்டு திருச்சி வந்து விட்டமையைத் தெரிவித்துக் கொண்டேன்.

பஸ்ஸை விட்டு இறங்கும் போதே அந்த மாணவர் ஓடிவந்து உதவி செய்து எனது பெரிய பெட்டிகளை இறக்கி  உதவினார். கண்ணனும் முன் இருக்கையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டார். கீழே இறங்கியவுடனேயே எனக்கு காரைக்குடி செல்லும் பஸ் எங்கே இருக்கின்றது என்ற எண்ணம் வந்து விட்டது. ஆக தாமதிக்காமல் அந்த மாணவரிடம் சொன்னேன். அவர். கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் இருவரும் இங்கே சாப்பிட்டு விட்டு நிதானமாகச் செல்லலாம். பஸ் இருக்கும் என்றார். எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் அந்த  மாணவரிடம் உணவு வேண்டாம். நாம் உடனடியாக அடுத்து புறப்பட இருக்கும் பஸ்ஸை எடுத்து விடுவோம் என்று அவருக்கு எனது அவசரத்தை விளக்க முயற்சித்தேன். அவருக்கு உள்ளூர காளைராசன் மேல் பயம் இருக்கும் போல. சார் நீங்கள் இருவரையும் மன நிறைவுடன் சாப்பிட வைத்துத்தான் திருச்சியிலிருந்து காரைக்குடி பஸ்ஸில் ஏற்றி அழைத்து வர வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். அதனால் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்க முயன்றார்.

சுற்றிலும் பார்த்தால் ஆங்காங்கே சில பஸ்கள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. கண்ணனும் சரி. காளைராசன் பிறகு மன வருத்தப்படுவார். ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டு விட்டுச் சொல்வோம் என்று அவர் பங்கிற்குச் சொல்லி வைத்தார். எனக்கோ எப்போது முதலில் காரைக்குடி பஸ் வரும். முதலில் அந்த பஸ்ஸை எடுத்து காரைக்குடிக்குச் சென்று சேர்ந்து கொஞ்சம் படுத்துத் தூங்கினால் நன்றாக  இருக்குமே என்பதே மனதில் வந்து வந்து போய் கொண்டிருந்தது. அதனால் மிக உறுதியாக அந்த மாணவரிடம் காளைராசன் சாரிடம் நான் பேசி விளக்கிவிடுகின்றேன். அவர் வருத்தப் படமாட்டார் நாம் முதலில் காரைக்குடிக்குச் சென்று சேர்வோம். அங்கே இருக்கும் நாளில் திருப்தியாகச் சாப்பிட்டுக் கொள்ளலாம். என்றேன். அதற்கு அந்த மாணவர் சரி மேடம் .. வாழப் பழங்களாவது வாங்கி வந்து விடுகின்றேன், இருங்கள் என்று சொல்லி விட்டு காத்திராமல் ஓடி விட்டார். பயணம் செய்யும் நாங்கள் பசியால் வாடக்கூடாது என்ற மனத்துடன் எங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் காளைராசனின் அன்பை நினைத்து மனம் நிறைந்தது.

பெட்டிகளை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு எப்போது அந்த மாணவர் வருவார் என பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பஸ் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அதில் மேலே காரைக்குடி என்று பெயர் போடப்பட்டிருந்தது. ஆஹா.. காரைக்குடிக்கு பஸ் புறப்படுகின்றதே என்று சொல்லி கண்ணன் எங்கே என்று தேடினால் அவரைக் காணவில்லை. இந்த மாணவரையும் காணவில்லை. அந்த பஸ்ளில் பயணம் செய்யக் காத்திருந்த சில பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த கண்டக்டரிடம் சென்று முதலில் இது காரைக்குடிக்குச் செல்கின்றதா எனக் கேட்டுக் கொண்டேன். அவர் உறுதி செய்தவுடன் எனது பெட்டி, கண்ணனின் பெட்டி எல்லாவற்றையும் ஏற்றி  வைத்துக் கொண்டிருக்கும் போதே கண்ணன் வந்து சேர்ந்தார். அவசரம் அவசரம் என கண்டக்டர் விரட்ட நான் அந்த மாணவரைத் தேடிக் கொண்டே பஸ்ஸில் ஏறி விட்டேன். கண்டக்டரிடம் இன்னும் ஒருவர் வந்து விடுவார் கொஞ்சம் பொருங்கள் என்று சொன்னால் அவருக்கு பஸ் செல்ல வேண்டுமே என்ற ஆதங்கம். அவர் புலம்ப ஆரம்பிக்கும் நேரத்தில் நல்ல வேளையாக அந்த மாணவர் ஓடி வந்து சேர்ந்தார். எங்களைப் பார்த்து அவரும் பஸ்ஸிற்குள் ஓடி வந்து ஏறிக் கொள்ளவும் பஸ் புறப்பட்டது.

சரியான நேரத்தில் வந்து சேர்ந்தாரே இந்த மாணவர் என்று நினைத்து மனதிற்குள் திருப்தி. இல்லையென்றால் ஏற்றி வைத்த பெட்டிகளையெல்லாம் இறக்கி விட்டு மீண்டும் 1 மணி நேரம் அடுத்த பஸ்ஸிற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

பஸ்ஸில் ஏறிய உடனேயே விருந்தோம்பல் ஆரம்பித்து விட்டது. அந்த மாணவர் கொடுத்த வாழைப் பழங்களை வாங்கி சாப்பிட்டுக் கொண்டோம். அப்போது கண்ணனுக்கு பவளா கொடுப்பதாகச் சொல்லியிருந்த வெஜிடபிள் பிரியாணி ஞாபகத்திற்கு வந்து விட்டது போலும். என்னிடம் பவளா சொன்ன மாதிரி அந்த வெஜிடபிள் பிரியாணியைக் கொண்டு வந்திருக்கலாம். இல்லையா என்று கேட்டு வைத்தார். கண்ணணை அந்த பிரியாணி ஏங்க வைத்து விட்டது என்பது தெரிந்தது.

பழங்களைச் சாப்பிட்டு அந்த மாணவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவுடன் சற்று தூங்க வேண்டும் என்று தோன்றியதில் கண்ணயர்ந்து விட்டோம். ஆனால் தூங்குவது சாதரண காரியமாக இல்லை. பஸ் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தது. கட கட கட என பயங்கர சத்தம். பஸ்ஸில் இருந்த ஓரிரண்டு கண்ணாடி ஜன்னல்கள் எப்போது நொருங்கி விழப்போகின்றன என்ற பீதி வந்து விட்டது. சாலைகளில் பாதை சரியாக இல்லை என்பதை அந்த இரவிலும் பஸ் ஓடும் நிலையைப் பார்த்தே புரிந்து கொள்ள முடிந்தது. அப்படி ஒரு சத்தத்துடனான பஸ் பயணத்தை என் வாழ் நாளில் இதுவரை நான் அனுபவித்ததில்லை. பயணங்களில் எனக்கு ஏற்படாத ஒரு வித பயம் என மனதை வந்து பற்றிக் கொண்டு விட்டது. ஆனாலும் வேறு வழியில்லை. பஸ்ஸில் ஏறிவிட்டோம். இறங்க முடியாது. பஸ் காரைக்குடி செல்கின்றதோ வேறு எங்கே செல்கின்றதோ.. அங்கே  போய் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மனதிற்குள் சமாதானம் சொல்லிக் கொண்டு தூங்க முயற்சித்து தோல்வி கண்டு கொண்டிருந்தேன். இப்படியே சில மணி நேரங்கள் அவை பல மணி நேரங்களாக எனக்கு மனதில் தோன்றின.

அந்த நீண்ட நெடிய பயணத்தில் ஒரு வழியாக பஸ் காரைக்குடிக்கு வந்து விட்டது. பஸ் நிறுத்தம் வருவதற்கு முன்னரே அந்த மாணவரே காளைராசனுக்குத் தொலைபேசியில் அழைத்து நாங்கள் வருவதை அறிவித்து விட்டார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் இறங்கிக் கொண்டோம். அங்கே காளைராசனும் பின்னர் எங்களுக்கும் நண்பராகிப் போன அவரது கல்லூரி நண்பர் முனைவர் சந்திர மோகனும் ஒரு வாகனத்துடன் எங்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் இருவரையும் அந்த 4 மணி காலை வேளையில் சந்தித்து சிறிது நேரம் பயணம் பற்றி பேசி அங்கிருந்து அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். அங்கே எங்களுக்காக நல்ல அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய கட்டிடம். மிக நேர்த்தியான அறைகள். எங்களுக்கு முன்னரே பாலுவும் வந்து விட்டதாகவும் அவரும் அங்கு தங்கியிருப்பதாகவும் அறிந்து கொண்டோம். எனக்கு களைப்பு அதிகமானதால் நான் எல்லோரையும் மறு நாள் சந்திப்பதாக்ச் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன்.

திருச்சியிலிருந்து காரைக்குடி பயணம் பயங்கரமானதாக அமைந்து அந்த வேளையில் எனக்கு மனதில் பீதியை ஏற்படுத்தினாலும் இப்போது நினைக்கும் போது மிக்ச சுவாரசியமான ஒரு நிகழ்வாகத்தான் தோன்றுகின்றது. அந்த கட கட கட எனும் பஸ் சத்தம் கூட நினைத்துப் பார்க்கும் போது அன்று கேட்டது போலவே மனதில் இப்போதும் ஒலிக்கின்றது.

தொடரும்...

சுபா

Saturday, September 22, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 4


அவ்வப்போது சத்தமாகப் பேசுவதும் அதனை பஸ் கண்டெக்டர் வந்து கண்டிப்பதும் என்ற வகையில் போய் கொண்டிருந்தது.  நாங்கள் பின் இருக்கையில் மூன்று பேர் மட்டுமே. குடிகாரரின் மனைவி என்னிடம் பேச ஆரம்பித்தார். ஒரு உறவினர் வீட்டுச் சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு வருவதாகவும் அவரோடு  இவர்களது பெண் குழந்தைகள் இருவருமாக, ஆக நான்கு பேரும் இப்போது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உறவினர் இல்லத்தில் நண்பர்கள் உறவினர்கள் கூடிவிட்டதால் அளவுக்கு மீறி குடித்து விட்டாராம். அதனால் அவரை பஸ்ஸிற்குள் கொண்டு வந்து ஏற்றி உட்கார வைத்ததே பெரிய பாடாகி விட்டது என்று விபரம் தெரிவித்தார். அவரது 2 பெண் குழந்தைகளும் சில இருக்கைகளுக்கு முன்னால் அமர்ந்திருப்பதாகவும் இந்த 3 பெண்களும் சேர்ந்து தான் இந்த மனிதரை பஸ்ஸில் ஏற்றியதாகவும் சொன்னார். பஸ்ஸிலிருந்து இந்த மனிதர் எழுந்து ஓடிவிடக்கூடாதே என்பதற்காக அவரை இருக்கையின் மூலைக்குத் தள்ளிவிட்டு இந்தப் பெண்மணி உட்கார்ந்து கொண்டார் என்பதை அவர் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிந்தது. இந்த மனிதரால் மனைவிக்கு மட்டுமல்ல மகள்களுக்கும் அவமானம்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த போது அந்த மனிதரை அவர் மனைவி எழுப்பிப் பார்த்தார். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. கண்டக்டர் வந்து விட்டார். அவர் அவருக்கே உரிய சத்தமான தொணியில் அவரை விரட்ட மனிதர் ஒரு வகையாக தனக்குத்தான் இந்த  அழைப்பு என்பதைப் புரிந்து கொண்டு எழுந்தார். எழும்போது அவர் கட்டியிருந்த வேஷ்டி கழன்று விழப் போக அவர் மனைவி உடனே அதனை சிரமப்பட்டு சரி செய்து வைத்தார். என் அருகில் இருந்த இளைஞர் உடனே எழுந்து அவரை திட்டிக்கொண்டே  உடையை சரி செய்து படிகளில் கைத்தாங்கலாக அக்குடிகாரரின் மனைவிக்கு உதவியாக அம்மனிதரை கீழே இறக்கி விட்டார். இரண்டு பெண்களும் முன் பகுதியிலிருந்தவர்கள் இவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது தான் பார்த்தேன் 14 அல்லது 15 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தைகள். தலையைக் குனிந்து கொண்டே அந்தப் பெண்கள் கீழே இறங்கிய தங்கள் தந்தையை கைகளைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றனர். அந்த அம்மாள் ஏதோ பேசிக் கொண்டே செல்வது பஸ் புறப்படும் வரை கேட்டது.

இப்போது நானும் அந்த இளைஞரும் மட்டுமே அந்தக் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தோம். அவர் இந்த மனிதரைப் பற்றி சொல்லி என்னுடன் பேச ஆரம்பித்தார். அப்படியே எங்கள் பேச்சு குடிகாரர் கதையிலிருந்து மாறி எங்களைப் பற்றியதாக அமைந்தது. நான் த.ம.அ பற்றியும் மின் தமிழ் பற்றியும் எனது தமிழக வருகைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னேன். அந்த இளைஞர் ஆர்வத்துடன் வலைப்பக்க முகவரிகளைக் குறித்துக் கொண்டார். தான் ஒரு அச்சகம் வைத்திருப்பதாகவும் அதன் தொடர்பாக திருச்சி சொல்வதாகவும் தெரிவித்து விட்டு, அச்சகத் தொழில் பற்றி சில விபரங்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். அவரும் திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. பஸ்ஸோ குலுங்கி குலுங்கி ஆடிக் கொண்டே போய்கொண்டிருந்தது. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. பஸ்ஸிலிருந்து கேட்பதற்கு பலத்த சத்தமாக அது இருந்தது. ஆனாலும் பயணம் அலுப்புத்தருவதாக இல்லை.

திருச்சி வரும் வரை சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த இளைஞர் எனது தமிழ் கொங்கு நாட்டுத் தமிழ் போல இருப்பதாகச் சொல்லியது எனக்கு ஆச்சரியம் தந்தது. எல்லாம் ஆரூரனின் இண்டென்ஸிவ் ட்ரெய்னிங் பண்ணிய வேலைதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.  “ங்க” , என்று போட்டு வார்த்தைகளை முடிக்கும் பழக்கம் கொஞ்சம் தொற்றிக் கொண்டு விட்டது எனக்கு. ஆரூரன் பேசப் பேச கேட்டு கொஞ்சம் பேசியும் பயிற்சி செய்திருந்தேன்.  கொங்கு நாட்டுத் தமிழ் இனிமையானது. கேட்டுக் கொண்டேயிருக்கலாம். கொங்குத்தமிழை ஒலிப்பதிவு செய்து பதிய வேண்டும் என்று நினைத்து சென்ற என் முயற்சி இந்த ஈரோடு பயணத்தில் பலனளிக்கவில்லை. ஆனாலும் அடுத்த முறை நிச்சயம் சில முயற்சிகளைச் செய்வோம் என்று பவளாவிடம்  சொல்லியிருக்கின்றேன். அடுத்த பயணத்தில் இது சாத்தியமாகலாம். ஆரூரன், கதிர் போன்றவர்கள் இந்தத் திட்டத்திற்கு உதவினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என நினைக்கின்றேன்.

தொடரும்...

சுபா

Friday, September 21, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 3


பஸ்ஸின் பின் இருக்கையில் நான் குறிப்பிட்ட ஐவரோடு நானும் அமர்ந்திருந்தேன். எனது பெரிய பயணப் பெட்டியை எப்படியோ சமாளித்து பஸ் சீட்டின் கீழ் தள்ளி வைத்து விட்டு எனது பேக் பேக்கை மட்டும் கையில் வைத்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் ஒருவர், 50வயது மதிக்கத்தக்கவர். ஒல்லியான மனிதர்.அவர் அருகில் ஒரு பெண்மணி அவருக்கும் அதே வயதுதான் இருக்கும். நடுத்தர அளவு. இருவரும் ஏதோ அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்பவர்கள் போல.

இருவரும் இடைவிடாது அலுவலகத்தில் உள்ள நபர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மாறி பேச்சு அந்தப் பெண்மணியின் பிள்ளைகள் குடும்ப விஷயம் என்று போய் கொண்டிருந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் கேட்பார்களே என்ற தயக்கம் இல்லாமல் கவலையிலாமல் தொடர்ந்து இந்தப் பேச்சு சுவாரசியமாகப் போய்கொண்டிருந்தது. திடீரென்று யாரையோ கைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த மனிதரின் கைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  சில முறை முயற்சி செய்து பார்த்தார்.  நான் சற்று முன்னர்தான் காளைராசன் கொடுத்திருந்த எண்ணில் திருச்சி மாணவருக்கு என் கைபேசியில் பேசினேன். இதனைக் கவனித்திருப்பார் போல அந்த மனிதர். உடனே என்னிடம் சற்று தொலைபேசி தரமுடியுமா. ஒரு நபருக்கு போன் பேச வேண்டும் என்று கேட்டார். என்னுடைய கைபேசியைக் கொடுத்தேன். அவர் பேச ஆரம்பித்தார். ஏதோ ஒரு விஷயமாக யாரையோ ஓரிடத்தில் மறு நாள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பது பற்றி அந்தப் பேச்சு.

ஏறக்குறைய 10 நிமிஷங்கள் பேசி முடித்த பின் என்னிடம் என் கைப்பேசியை அவர் திருப்பி தரவில்லை. தன் கையிலேயே வைத்திருந்தார். எனக்கு திருப்பி தரவேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல மீண்டும் அந்தப் பெண்மணியிடம் தொடர்ந்து பேச ஆர்மபித்தார். அவராகத் திருப்பித் தரமாட்டார் என்பது தெரிந்து விட்டது. ஆக நானே அவரைக் கூப்பிட்டு என் கைபேசியைத் தரும் படி கேட்டேன். அவர் மீண்டும் அவர் நண்பர் அவரை என் கைபேசியில் கூப்பிடுவார். அதனால் தான் தானே கையில் வைத்திருப்பதாக எனக்கு விளக்கம் அளித்தார். அப்படி போன் அழைப்பு வந்தால் நான் அவருக்குத் திரும்பத் தருவதாகச் சொல்லி என் கைபேசியை நான் வாங்கிக் கொண்டேன்.அந்த பெண்மணியில் அருகில் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது இளைஞன் நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார் போல. அவருக்கு முகத்தில் புன் சிரிப்பு.

இடைக்கிடையே எங்களின் நீளமான பின் இருக்கையில் இறுதியில்  அமர்ந்திருந்த ஒரு மனிதர் அவ்வப்போது புலம்பிக் கொண்டு இருந்தார். அவர் அதிகமாகக் குடித்திருந்தார். உடம்பில் போட்டிருந்த சட்டை ஒழுங்காகப் போடப்படவில்லை. மெதுவாக ஏதாவது உளறுவார். திடீரென்று சத்தமாகக் கத்துவார். தன் குடும்பத்துப் பெண்மணிகளைப் பற்றி மிக மோசமான விவரணைகள்; கெட்ட சொற்களில் பெண்களைத் திட்டிக் கொண்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். ஆனால் கண்களைத் திறந்து அந்த மனிதர் யாரையயும் பார்த்ததாகத் தெரியவில்லை. அவர் அருகில் இருந்தவர் அவர் மனைவி. அவர் கத்தும் போது அவரை திட்டி அடக்கி அமைதியாக வைத்திருக்க பெரிய முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் அதிகமாக கவலை, வருத்தம் அவமானம் எல்லாம் தெரிந்தது.

நாங்கள் ந்தக் குடிகாரர் கூறும் மோசமான சொற்களைக் கேட்டு கோபப்படுவோமோ என்ற பயம் போலும். எங்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர் அதிகமாகக் குடித்து விட்டு உளறுவதாகச் சொல்லி வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு எங்களிடம் சொல்லி வைத்தார். அவர் நிலை பரிதாபம்.

அது ஏன் குடித்து விட்டால் மிகக் கேவலமாகப் பேச வேண்டும்? அதிலும் பெண்களை ? மனதிலே அவ்வளவு வெறுப்பும் குரோதமும் ஏன். அந்தக்  குடிகாரனை அழைத்துக் கொண்டு செல்லும் அந்த மனைவியை அவன் தெய்வமாக அல்லவா கருத வேண்டும். அப்படிப்பட்ட அந்த மனிதனையும் சகித்துக் கொண்டும் இருக்கின்றாரே என நினைக்கும் போது அப்பெண்ணின் நிலை நினைத்து மனம் கலங்கியது எனக்கு.

தொடர்ந்து அவனது பேச்சும் உளறலும் குறையவில்லை. திடீரென்று எழுந்து நின்று போகப் பார்த்தார் அந்தமனிதர். பஸ் ஆடிய ஆட்டத்தில் தலையில் முட்டிக் கொண்டு விழுந்தார். பஸ் கண்டக்டர் வந்து நன்றாகத் திட்டித் தீர்த்தார். எல்லாமே நாடகம் போல இருந்தது எனக்கு.

எத்தனை விஷயங்கள் ஒரு பஸ்ஸிற்குள்ளேயே நடக்கின்றன. எத்தனை கதைகளுக்கான கரு பஸ்ஸிலேயே கிடைக்கின்றன என்று நினைத்தபோது சுவாரசியமாகவும் இருந்தது. ஆனால் கதை எழுதும் திறனே எனக்கு இல்லாததால் இதனை ஒரு பதிவாக மட்டும் இங்கே பதிகிறேன்.

ஏறக்குறைய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்த நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது. என் அருகில் இருந்த அந்த இருவரும் வழியில் இறங்கி விட்டனர். பஸ்ஸில் என் அருகில் இப்போது மூவர் மட்டுமே. அந்த இளைஞன். அவர் அருகில் குடிகாரரின் மனைவி, அந்தக் குடிகாரர். பஸ்ஸிலும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

தொடரும்....

சுபா

Saturday, September 15, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 2


காரைக்குடி செல்வதாக ஏற்பாடாகியிருந்த நாள் காலை திருச்செங்கோடு சென்று முருகன் ஆலயம் தரிசித்து விட்டு பவளா வீட்டில் வயிறு நிறைய நிறைய வெஜிடபள் பிரியாணி சாப்பிட்டு விட்டு மீண்டும் ஆரூரனின் காரில் புறப்பட்டு கொடுமுடி வந்து அங்கிருந்து எங்களைக் காரைக்குடிக்கு அனுப்பி வைப்பதாக திட்டமாகியிருந்தது. கொடுமுடி வந்து சேர்ந்து அங்கே சுவாமி தரிசனம் முடித்து விட்டு புறப்படும் சமயம் சற்றே தாமதமாகிவிட்டதால் கரூர் சென்று அங்கிருந்து எங்களைத் திருச்சிக்கு பஸ்ஸில் ஏற்றிவிடுவதாக ஆரூரன் திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே முனைவர்.காளைராசன் திருச்சியில் இருக்கும் அவரது மாணவர் ஒருவருக்கு சொல்லியிருந்தமையால் அவர் திருச்சி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து என்னையும் கண்ணனையும் காரைக்குடிக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்ல வருவதாக இருந்தது. மறுநாள் காலை காரைக்குடியில் நிகழ்ச்சிகள் காலை 6 மணியிலிருந்து என்று ஏற்கனவே  முனைவர்.காளைராசன்  வேறு குறிப்பிட்டிருந்தார். ஆக  மனதில் எப்படியும் பஸ்ஸை விடாமல் சரியான நேரத்தில் எடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

கரூரை அடைந்து பஸ் நிலையம் சென்று காரைக்குடி செல்லும் பஸ் எப்போது புறப்படும் என்று ஆரூரனும் கண்ணனும் தேடிக் கொண்டு சென்றனர். ஒரு பஸ் அப்போதுதான் கிளம்பியிருப்பதாகவும் அந்த பஸ்ஸை 10 நிமிஷத்தில் காரில் விரட்டிக் கொண்டு போனால் நிச்சயமாகப் பிடித்து விடலாம் என்று பஸ் நிலையத்தில் யாரோ சொல்ல அதை நம்பிக் கொண்டு ஆரூரனும் கண்ணனும் காருக்கு ஓடி வந்தனர்.

அந்த நேரத்தில் பவளாவிற்கு எங்களுக்கு கையோடு உணவு கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற கொள்ளை ஆசை. எனக்கோ மதியம் சாப்பிட்டதே வயிறு முழுக்க நிறந்திருந்தது. சொல்லக்கூடாது. பவளாவின் வீட்டு வெஜிடபள் பிரியாணி அபாரமான சுவை. சமையல் மன்னி என்று பட்டம் கொடுத்து விடலாம் பவளாவிற்கு.

கொங்கு நாட்டு பெண்களே சமையல் கலையில் தேர்ந்தவர்களாகத்தான் நிச்சயம் இருக்க வேண்டும்.

கரூர் பஸ் நிலையத்திலிருந்து ஆரூரனின் வாகனம் திருச்சி செல்லும் பஸ்ஸைத் தேடிக் கொண்டு வேகமாக பயணித்தது. நாங்களும் பஸ் கண்ணில் தென்படுமா என முன்னால் செல்லும் ஏதாவது ஒரு பஸ்ஸை நோக்கி எங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தோம். சில இடங்களில் ஆரூரனின் வாகனம் முன்னே செல்லும் வாகனங்களை எல்லாம் முந்திக் கொண்டு சென்று கொண்டேயிருந்தது. 15 நிமிடங்கள் பயணித்தும் அந்தத் திருச்சி சென்று கொண்டிருந்த பஸ்ஸைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.


ஆரூரன்


இப்படியே தேடிக்கொண்டே போனால் திருச்சிக்கே போய் சேர்ந்துவிடுவோம் என்பது வாகனத்தில் இருந்த எங்கள் நால்வருக்குமே தெரிந்தது. சரி. மீண்டும் கரூர் பஸ் நிலையத்துக்கே திரும்பி அங்கிருந்து திருச்சி செல்லும் அடுத்த பஸ்ஸை பிடித்துச் செல்வோம் என்று சொல்லிக் கொண்டு திரும்பினோம். வந்து சேர்ந்த நேரம் சரியாக ஒரு பஸ்ஸும் கிளம்பிக் கொண்டிருக்கவே அதில் அவசர அவசரமாக எங்கள் பொருட்களை ஏற்றி வைத்துக் கொண்டு பவளாவிடமும் ஆரூரனிடமும் விடை பெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறினோம்.

மிகச் சாதாரண பஸ் அது. அதில் பலர் அமர்ந்திருந்தனர். கண்ணன் ஆக முன் வரிசையில் ஒரு இடம் இருக்க அங்கே சென்று விட்டார். அவரிடம் மிகச் சிறிய ஒரு பெட்டி மாத்திரம் இருந்தது. என்னிடம் எனது பெரிய பயண ட்ரோலியோடு கணினி கேமரா மற்ற ஏனைய பொருட்கள் வைத்திருந்த பேக் பேக் ஒன்றும் கையில். இவை இரண்டையும் வைத்துக் கொண்டு கடைசி இருக்கையிலேயே இருந்து விட்டேன். என் அருகில் ஒரு இளைஞர், ஒரு பெண்மணியும் ஒரு நபரும், மேலும் ஒரு பெண்மனி அவர் கணவர் ஆகிய ஐவர் அமர்ந்திருந்தனர். திருச்சி சென்று செல்லும் வரையில் நல்லதொரு நாடகம் பார்த்த அனுபவத்தை இவர்களுடன் நான்  சேர்ந்திருந்த  அந்த சில மணி நேரங்களில் அனுபவித்தேன். அந்தக் கதையை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடரும்..

சுபா